விடுதலை-2 திரைப்பட விமர்சனம்
நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் புத்தக வெளியீட்டு விழா
திரைவிமர்சனம்: 19(1)(a) – மலையாள மொழி திரைப்படம் – இரா. இரமணன்
ஜூலை மாதம் 2022ல் ஹாட் ஸ்டாரில் வெளிவந்த மலையாள திரைப்படம். வி. எஸ். இந்து அவர்கள் எழுதி இயக்கிய முதல் படம். நித்யா மேனன், விஜய் சேதுபதி, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடித்துள்ளனர். மனேஷ் மாதவன் ஒளிப்பதிவு. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆன்டோ ஜோசப்பும் நீட்டா பின்ட்டூவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
நகலகம் நடத்தும் ஒரு பெண்ணிடம் எழுத்தாளர் கவுரி சங்கர் என்பவர் தன்னுடைய புதினத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றை தந்துவிட்டு செல்கிறார். அன்று இரவே அவர் சுடப்பட்டு இறக்கிறார். சாதி மதப் பிரச்சனைகளை தீவிரமாக விமர்சிக்கும் எழுத்தாளர் அவர். சாதாரணப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கும் நித்யா மேனன் கவுரி சங்கர் வந்து சென்றது, அவரது வாழ்க்கை, அவரது இறப்பு ஆகியவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார். தன் தோழியிடம் திருமணம் குறித்த அவரது விருப்பத்தை எப்போதாவது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறாரா என்று கேட்கிறார். பாதியில் விட்ட படிப்பை தொடர முடிவு செய்கிறார். எழுத்தாளரின் கையெழுத்துப் பிரதியை வெளியிட்டாளரிடமோ கவுரிசங்கரின் சகோதரியிடமோ கொடுக்க சென்று பின்வாங்கிய அவர் இறுதியில் அதை அவர்களுக்கும் ஊடகவியலாளர், காவல்துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்புகிறார். இதுதான் கதை.
முதல் படம் என்பது தெரியாமல் சிறப்பாக இயக்கியுள்ளார். சுற்று சூழல், சாதி மதப் பிரச்சினை, பெண்கள் திருமணம் ஆகியவற்றை திரைப்படத்தின் போக்கில் காட்டுகிறார். நித்யாமேனன் வகிக்கும் பாத்திரத்திற்கு பெயர் கூறப்படுவதில்லை. ஆகவே அது சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு பொதுவான பிரச்சனையாகவும் அதே சமயம் சில சமயம் அவற்றால் உணர்வு ரீதியாக பாதிக்கப்படும் சிலராகவும் எடுத்துக் கொள்ளலாம். வெளியீட்டாளருக்கும் எழுத்தாளருக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் ‘நீ ஏன் சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்து எழுதுகிறாய்? சாதாரண கதை, கட்டுரைகள் எழுதேன்’ என்ற கேள்வியை பல முன்னணி எழுத்தாளர்கள் சந்தித்திருப்பார்கள்.
பெண் சம்பாதித்து தந்தை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் கதைகள் தேய்வழக்காக போய்விடும். ஆனால் இதில் அந்த தந்தையின் வறுமைக்குப் பின் உள்ள சோகம், மகள் இரவு வராதபோது கடை வாசலில் காத்திருப்பது என அந்த பாத்திரம் சற்று வேறுபட்டு சமைக்கப்பட்டுள்ளது. தோழியின் திருமணத்தின்போது தந்தையும் மகளும் பரிமாறிக்கொள்ளும் பார்வைகள் பல விஷயங்களைச் சொல்வது போல் தோன்றுகிறது.
கவுரிசங்கர் கையெழுத்துப் பிரதியாக கொடுக்கும் கதையில் ஒரு பெண் பிணமாக குளத்தில் மிதக்கிறாள். அவளை தேடி செல்லும் ஒன்பது பேரும் பிணமாக இறந்து கிடக்கின்றனர். இது ஒரு காட்சியாக மட்டுமே காட்டப்படுகிறது. இதற்கும் அவரது கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை சுடும் இருவரைப் பார்த்து அவர் புன்னகைக்கிறார். அதன் பொருள் என்ன? நீங்கள் என்னை சுடலாம். ஆனால் என் எழுத்தை அழிக்க முடியாது என்று சொல்கிறாரா? அவரது இறுதி செய்தியும் அதுவே. ’நான் இறந்த பின்னும் என் எழுத்துகள் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்.’
கவுரி லங்கேஷை நினைவுபடுத்தும் இந்தப் படம் சமூக உணர்வுள்ளவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். 19(1)(a) என்கிற தலைப்பும் பொருத்தமான ஒன்றே.
– இரா. இரமணன்
திரைவிமர்சனம்: கடைசிவிவசாயி பேசும் பண்பாட்டு அரசியல் – பாவெல்பாரதி
கதைக்கரு:
ஊரில் இடி விழுந்து மரம் ஒன்று பட்டுப்போக, அதனைக் கெட்ட சகுனமாகக் கருதி, நீண்டநாளாகக் கும்பிடாமல் கிடக்கும் ஊர் தெய்வத்தைக் கும்பிட்டால் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து ஊர்மந்தையில் கூடி முடிவு செய்து, அதற்கான ஏற்பாடு நடக்கிறது. அந்தத் திருவிழாவைக் கொண்டாடினார்களா என்பதுதான் கதையின் கரு.
கதைக்கரு வழக்கமாகத் தமிழ் சினிமாவிலும் கதைகளிலும் பேசப்பட்ட ஒன்றுதான். ஆனால் கதையை நகர்த்தத் தேர்ந்து கொண்ட , கதைக்களம் கதை மாந்தர், திரைக்கதை, வசனம், காட்சிப்படுத்திய முறைமை, ஒளிப்பதிவு, ஏற்றுக்கொண்ட பாத்திரங்களின் இயல்பான நடிப்பு என அனைத்திலும் தனித்தன்மையைக் கொண்டுள்ளது படம். தமிழ் சினிமாவில் ஒரு புதிய கோணம்.
கதைக்களம்:
மழைப்பொழிவு குறைவான, வறண்ட கரடுகள் சூழ்ந்த, வானம் பார்த்த கரிசல்மண் கரட்டுக் காடும், கொஞ்சம் கிணற்றுப் பாசனமும் நடக்கும் எளிமையான விவசாயம், பிழைத்துக் கெட்டவர்களின் பழமையான வீடு, காரை பேய்ந்த சுவர்கள், மண்ணும் கல்லும் கலந்து கட்டிய மண் சாந்துச்சுவருடன் தகர வீடுகள், மாட்டுக் கொட்டத்துடன் அறண்டு கிடக்கும் வீடுகள் இருக்கும் தெருக்கள், தெருவோரப் பனியாரக்கடை , டீக்கடை என்று நவீனம் எட்டிப் பார்க்காத மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் ஒன்றுதான் கதைக்களம்.
கதை நாயகர் :
கொஞ்சம் நிலம், ஒரு பம்பு செட்டு, செவலைக்காளை வெள்ளைக்காளை என ஒரு சோடி உழவு மாடு, கோழி, காடுகரை இவற்றைத் தவிர எதுவும் அறியாத, மின்சாரமே இல்லாத வீட்டில் வாழும் ஏறத்தாழ எண்பது வயது எளிய சம்சாரியான மாயாண்டிதான் கதையின் மையம். நவீனத்தின் எந்த வெளிச்சமும் படாதவர். ஒற்றையாளாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு விவசாயம் என்பதைத் தொழிலாக அல்லாமல் வாழ்க்கையாக வாழ்பவர்.
கதைப்போக்கு:
ஊர்ப்பெரியவர்கள், ஊர்த்திருவிழாவுக்காக சாமிக்குப் படைக்கும் முதல் நெல் மணிகளை 15 ஏக்கர் நிலம் வைத்துள்ள ஊரின் பெரிய சம்சாரியான தனபாண்டியிடம் கேட்டுச்செல்ல, அவரோ 15 ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டு, யானை வாங்கித் தொழிலை மாற்றிக்கொண்டதால் நெல்மணிகள் கொடுக்கமுடியாது போக, பெரியவர் மாயாண்டியிடம் கேட்டுச் செல்கிறார்கள். அவர், கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும், படையலுக்கான நெல்மணிகளை விளைவித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்கிறார். நெல் நாற்றுநட்டு வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில் மயிலைக் கொன்று புதைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்படுகிறார் மாயாண்டி.
நெல் நாற்றை வளர்த்தல், மயில் புதைத்தது தொடர்பான வழக்கு ஆகிய இரண்டு மையச்சரடைப் பிண்ணித்தான் கதை நகர்கிறது.
மயிலைப் புதைத்தலும் பண்பாட்டு எதிர் உரையாடலும்:
இரண்டு பெண் மயில்கள், ஒரு ஆண் மயில் என இறந்து கிடந்த மூன்று மயில்களையும் தம் நிலத்தில் மூன்று குழிகளைத் தோண்டி முருகன் வள்ளி தெய்வானையைப் பிரதிசெய்வதாய்
நடுவில் ஆண் மயிலையும் இரண்டு பக்கமும் பெண் மயில்களையும் இட்டுப் புதைத்தார் பெரியவர் மாயாண்டி.
இறந்தவர்களைப் புதைக்கத் தொடங்கியதுதான் மனித சமூகம் அடைந்த நாகரீகத்தின் முக்கியமான கட்டம் என்றும், அதனைப் பெருங்கற்கால நாகரீகம் என்றும், தொல்லியல் ஆய்வுகள் சிறப்பிக்கின்றன. இறந்த மனிதனை மட்டுமல்ல, தம் வாழ்வோடு ஒன்றிய கால்நடைகள், விலங்குகள் அனைத்தையும் புதைத்துள்ளதை அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றும் இறந்த கோயில் மாடுகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டுப் புதைக்கப்படுகின்றன. அப்புதைத்தல் பண்பாட்டு அறம் குற்றமாக மாறுகிற கலாச்சார அரசியலைப் பேசுவது புதுமையானது.
மயிலின் அகவல் கதை முழுவதும் வருவதும், மயில் சாவதும் ஒரு முக்கியமான குறியீடாகப் படத்தில் வருகிறது. சிந்துவெளி அகழாய்வில் H என்ற ஈமக்காட்டில் உள்ள ஈமக்குழியில் எடுத்த பானை ஓட்டில் மயிலின் உருவமும் மயிலின் வயிற்றுக்குள் படுத்த நிலையில் மனிதனின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
மயில் பிணத்தை உண்ணும் வகையைச் சேர்ந்தது இல்லை. மனிதனுக்கு நெருக்கமான பறவையினம். ஆறு, பேச்சு, தாய், தெய்வம், சரஸ்வதி ஆகியோரைக் குறிக்கும் சின்னமாக சிதிகண்டா என மயில் அழைக்கப்படுவதாக டி.டி.கோசாம்பி கூறுவார். புதைத்தல் என்பதே மீண்டும் கருவறைக்குள் செல்லுதல் என்பதன் தாந்திரக்குறியீடுதான். மயில் வயிற்றுக்குள் மனிதன் கிடத்தப்பட்டிருப்பதும் ஈமச்சின்னத்தில் வரையப்பட்டிருப்பதும் மயிலின் தாய்மைத்தன்மையைக் குறிப்பதாகவே கருதலாம். சங்ககால வள்ளல் பேகனின் குலச்சின்னம் மயில் எனவேதான் மயிலுக்குப் போர்வை ஈந்தான். முருகனின் வாகனமாக மயில் சிறப்பிக்கப்படுகிறது.
சிந்து வெளிக்குறியீடு குறித்து இயக்குநர் அறிந்திருக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. சிந்து வெளிக்குறியீட்டில் மயிலின் வயிற்றில் மனிதன். ஆனால் இங்கு மண்ணின் வயிற்றில் மயிலைப் புதைக்கிறான் மனிதன். மயிலின் இறப்பும் மண்ணுக்குள் புதைக்கப்படுவதும் ஒரு எதிர் உரையாடலாகப் படைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. காட்டு வேளாண்மை மிகுந்த பகுதிகளில் மயிலின் நடமாட்டம் மிகுதியாக இருக்கும். இங்கு மயிலின் அழிவை மண்ணின் அழிவாக; மயிலின் அழிவை, காட்டு வேளாண்மையின் அழிவாகக் காட்சிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது.
கதை நடைபெறும் இடம் இடைக்காலத்தில் தென் முட்ட நாடு என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை ஊடறுத்துத்தான் திருச்செந்தூர், தென்காசி, ராஜபாளையம், உசிலம்பட்டியைக் கடந்து கள்ளர் மடம், கண்ணாபட்டி, செக்காபட்டி வழியாக கொடைக்கானல், பழனி, கொங்குப்பகுதிக்குச் செல்லும் பெருவழி சென்றது. படத்தின் இயக்குநர் இப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பழனிக்குச் செல்லும் முருகபக்தர்களின் பாதயாத்திரை அவரின் பால்யத்தில் தாக்கம் செலுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
நீதிமன்ற விசாரணயும் பண்பாட்டு எதிர் உரையாடலும் :
சட்டம், நீதி, காவல், சிறைக்கூடம் போன்ற பண்பாட்டு மேல்கட்டுமானங்கள், நிலவும் சமூகப் பொருளியல் உற்பத்தி முறையைக் காப்பதற்காக உடைமையாளர்களால் உற்பத்திசெய்யப்பட்டவையாகும்.
கடந்தகால வேளாண் பொருளுற்பத்தி முறையின் எச்சமாக வாழ்கிற கடைசி விவசாயி மாயாண்டி காலனியத்தால் உற்பத்தி செய்யப்பட்டு அதன் நீட்சியாக நிலவுகிற இன்றைய நவீன காவல், சட்டம், நீதிமன்றத்தை எதிர்கொண்ட முறையும், அவை மாயாண்டிக்கு முகம் கொடுத்த விதத்தையும் பேசுவது முக்கியமான பண்பாட்டு அரசியலாகும். சட்டம், நீதி, ஒழுங்கு என்ற அறங்களின் வழி நின்று சமூகத்தைக் காட்டியதற்கு மாற்றாக மாயாண்டியின் பக்கம் நின்று சட்டம், நீதி, ஒழுங்கு ஆகியவற்றைப் பகடி செய்கிறது படம்.
பண்பாட்டுக் கூறுகள் எனும் மேல் கட்டுமானம் மாறும் பொழுது
சரி × தவறு
உண்மை × பொய்
நல்லது × கெட்டது
நாகரீகம் × அநாகரீகம்
நியாயம் × அநியாயம் போன்ற சமூக அறம் குறித்த மதிப்பீடுகளும் மாறுகின்றன.
மாயாண்டியின் பார்வையில் இறந்த மயிலைப் புதைப்பது அறம். சட்டத்தின் பார்வையில் குற்றம். வனத்தை நம்பி வாழும் பழங்குடி மக்களும், நிலத்தை நம்பி வாழும் விவசாயிகளும் யாரையும் விட வனத்தையும் நிலத்தையும் நேசிப்பவர்கள். ஆனால் அரசு இவர்களிடமிருந்து அவற்றைக் காக்க சட்டமியற்றுகிறது. மாட்டையும் மயிலையும் பயிரையும் சக உயிராகப்பார்க்கும் ஒருவரைச் சட்டம் தண்டிக்கிறது.
ஒரு உயிர் செத்ததுக்காகத் தன்னை விசாரிக்கும் நீதிபதியிடம், மாடு, கன்று, கோழிக்குத் தண்ணி வைக்கனும், நெற்பயிர் கருகிவிடும் நீர்பாய்ச்சனும் ஆயிரம் உயிர் சாகப்போகிறது என்று சொல்லும் பெரியவரின் சொல் சுரீரென உரைக்கிறது.
* பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய காவல்சட்டம் கொண்டு வந்த போது காவல் கூலி வாங்குவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. இச்சட்டம் வந்ததே தெரியாமல் பாரம்பரிய காவல்காரர்கள் காவல் கூலி வாங்குகிறார்கள். எனவே பிணையில் வரமுடியாத குற்ற வழக்காகக் கருதி குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். மதுரை எஸ்.பி அலுவலகத்தைக் காவல் காத்ததற்கு போலிஸ் எஸ்.பி யிடமே காவல் கூலி பெற்றதாக எஸ்.பி. பவுல்ட்ரி எழுதி வைத்துள்ளார்.
* பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய வனச்சட்டம் கொண்டு வந்த போது, வனத்திற்குள் நுழைவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. வனச்சட்டத்தை அறியாத பழங்குடிகள் வாழ்வாதாரத்திற்குக் காடுபடு பொருட்களைச் சேகரிக்கிறார்கள். அதனைப் பிணையில் வரமுடியாத குற்ற வழக்காகக் கருதி குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தண்டிக்கிறார்கள்.
* பிரிட்டிஷ் ஆட்சியில் உப்புச்சட்டம் கொண்டு வந்த போது, உப்பு காய்ச்சுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கிறது. சட்டத்தின் தன்மையறியாத நெய்தல் நிலத்தவர் உப்புக்காய்ச்சிய பொழுது பிணையில் வரமுடியாத குற்ற வழக்காகக் கருதி குற்றப்பரம்பரைச் சட்டத்தில் தண்டிக்கப்படுகிறார்கள்.
* இங்கு மயில் இறந்ததைப் புதைத்தல் குற்றம் என்று அறியாத மாயாண்டியும் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுகிறார். ( நீதிபதியின் கருணையால் விடுவிக்கப்ப்டுகிறார்)
* இதே கதையில் மண் பானை செய்ய குளத்தில் களிமண் எடுத்தல் குற்றமாகவும், அதனைத்தடுக்க போலிஸ் காவல் இருப்பதும் பேசப்படுகிறது.
* வரப்போகும் வேளாண் சட்டத்தில் வீட்டில் விதை நெல் இருந்தால் தண்டனைக்குரிய குற்றமாகலாம்.
* வரப்போகும் நீர் மேலாண்மைச் சட்டத்தில் அனுமதி இல்லாமல் ஒரு குடம் தண்ணீர் இருந்தால் குற்றமாகலாம். நெல் நாற்று வளர்த்தல் பேசும் வேளாண் அரசியல்: கோயில் சடங்குக்கான நெல் நாற்று வளர்த்தல் என்ற சரடு பேசும் வேளாண் அரசியல் முக்கியமானது.
* விவசாயிகள் விளை நிலங்கள் விற்றல்.
* ஆர்கானிக் பாம் என்ற பெயரில் உருவாகும் கார்ப்பரெட் விவசாயம்
* மான்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் உருவாக்கும் விதையில்லா விதை ( seedless)
* நிலத்தை மலடாக்கும் ரசாயன உரங்கள்
* 100 நாள் வேலைத்திட்டத்தின் செயற்பாடு
* விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், விவசாயிகள் அடைந்த பாதிப்பு. இவ்வளவு முக்கியமான அரசியலை அழகியலோடு, நகைச்சுவையாகச் சொல்லியிருப்பது தனித்துப்பேசப்படவேண்டியுள்ளது.
இனவரைவியல் பார்வை :
ஒரு கிராம வாழ்வியலை இனவரைவியல் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறது படம்.
குலதெய்வ வழிபாடு, மக்கள் இடப்பெயர்வு, புதிய இடத்தில் குடியேறும் தொன்மம், ஊர் தெய்வ வழிபாடு குறித்து ஊர் மந்தையில் முடிவெடுத்தல், ஊர்ப் பெரிய மனிதர்களின் பங்குபாத்திரம், கிராமக் கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும் முறைமை, ஊரில் சாதிய இருப்பு, சாதிய மறுப்பு என்ற இரட்டைத்தன்மை, திருவிழாவில் முளைப்பாரி, கும்மி, சேத்தாண்டி வேசம், பச்சை போடுதல் போன்ற வளமைச்சடங்கு, சாமியாடுதல், பறை இசைக்கலைஞர் அழைப்பு, புரவி எடுப்புக்கான வேளாரின் பங்கு பாத்திரம் கண் திருஷ்டிக் கயிற்றில் கட்டப்பட்டுள்ள எலுமிச்சை, பட்டவத்தல், சீனிக்கல், கத்தாழை ஆகியவற்றின் அடிப்படையைப் பெரியவர் கூறுவது, நெற் பயிரைப் பூச்சிக்கடியிலிருந்து காக்க வேம்பு, நிலவேம்பு, ஆடாதோடா, எருக்கலை, கோமியம் கலந்து தயாரிக்கும் இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தல், வேளாண்மை முறை, உழவு, தொழி உழவு, பருத்திக்கொட்டை ஆட்டுதல், புண்ணாக்கைத் தின்றுன்பார்த்து வாங்குதல், கிலோ கணக்கில் விலை கேட்காமல் 5 ரூபாக்கு தக்காளி, கத்திரிக்காய் கேட்பது, குளத்துத் தொட்டியில் ஆண்களின் பொதுக்குளியல், பெண்களின் ஒப்பாரி ஆகியவை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விளக்குத்தூண் குலதெய்வமாக வணங்கப்படுவது, ஐயன், அய்யனார், ஐய்யப்பன் மூவரும் ஒன்றே என்ற கருத்து, முருக வழிபாடு என வைதீகம் வந்து சேரமுடியாத சமயம், வழிபாடு குறித்த உரையாடல் அறிவார்த்தமானது.
மக்களின் வரவேற்பைப் பெற்ற உரையாடல்கள் சில தனித்துப் பேசப்பட வேண்டும். (இவை குறித்து நிறையவே எழுதியுள்ளதால் குறைத்துக் கொள்கிறேன்).
மரபான சம்சாரியான மாயாண்டி உரம், பூச்சி மருந்துக்கடைக்காரரிடம் விதையில்லா விதை (கொட்டையில்லா ஆண்பிள்ளை – seed less) குறித்துப் பேசும் உரையாடல், விவசாய நிலத்தை விலைக்குக் கேட்ட தரகரிடம் பேசும் உரையாடல், நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசும் உரையாடல், அறிவு வளராததால் பெரியவரை ஏமாற்ற முடியவில்லை என்று பெரியவரைக் கூறும் வசனம் எது அறிவு என்று செவுட்டில் அறைந்து கூறுகிறது.
படத்தில் நெடுக பாத்திரங்களே நகைச்சுவையை ஏற்று நடித்துள்ளனர்..
* போலிஸ்காரருக்கும், மின் துறை வயர்மேனுக்கும் ஆட்டோக்காரருக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுவது.
* வழுக்கைத் தலையில் முடி முளைக்கச் செய்ய எடுக்கும் பெருமுயற்சி.
* உயரம் குறைவான பெண்ணின் நகைச்சுவை.
இப்படத்தில் நீதிபதியின் கரிசணையான அணுகுமுறையைப் பொதுமைப்படுத்திப்பார்க்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.
முருகபக்தராக வரும் விஜய் சேதுபதி பாத்திரம் ஒரு எதிர் உரையாடல்தான், உண்மையான மனப்பிறழ்வும், சூதும், வாதும் யாருக்கு என்ற கேள்வியை எழுப்புகிறது. யோகிபாபுவும் யானையும் விவசாயக் கொள்கையைப் பகடி செய்கின்றன. நடிகர்கள் அனைவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு வார்த்தை, ஒரு காட்சி கூட உபரி என்றில்லாமல் வசனம் கையாளப்பட்டிருப்பதும், வண்டுருட்டிப்பழத்தைக்கூட (மலத்தை உருட்டும் வண்டு) ஒளிப்பதிவு செய்த இயக்குநர் மணிகண்டனுக்கும் படக்குழுவிற்கும் பாராட்டுகள். பூச்சிக்கண்ணு ஏட்டுவாக நடித்திருக்கும் அன்புத்தோழர், செயற்பாட்டாளர் குன்னாங்குன்னாங்குர் செல்வம் Selvam Maya அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.
தோழமையுடன்
பாவெல்பாரதி
திரை விமர்சனம்: கடைசி விவசாயி – தமிழில் வந்திருக்கும் ஓர் உலகத்திரைப்படம் – இரா.தெ.முத்து
கடைசி விவசாயி திரைப்படத்தின் ஒன்லைன் கதைச்சுருக்கம் என்ன என கேட்டால், இன்னது என சொல்லி விட முடியாது.பல ஒன்லைன்கள் உள்ள திரைப்படம் கடைசி விவசாயி.
சொந்த மண்ணின் வேர்களை பற்றிய ஓர் அழகியல்சித்திரம் இந்தப்படம்.
மதுரைமாவட்டத்தின் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த ஏதாவதொரு சின்னப் பட்டியின் கதையைப் பேசுகிறது.இதன் வழி ஓர் இந்திய கிராமத்தை ஓர் உலக கிராமத்தை அதன் சவால்களைப் பேசுகிறது கடைசி விவசாயி.
ஊர் குலதெய்வம் கோவிலுக்கு திருவிழா நடத்தணும் என்று பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த பெரியவர் அருந்ததி பிரிவுப் பெரியவரைப் பார்த்து வேண்டுகோள் விடுக்கிறார்.நல்லா நடத்துவோம்.பழைய மாதிரி நடக்க கூடாது என்ற கண்டிப்பு மேல் நின்று அருந்ததியர் பேச வாய்ப்பளிக்கிற படமாக வந்திருக்கிறது.
ஊரில் இணக்கம் வேண்டுமென்று சாதியம் பேசுபவரை எதிர்த்து பஞ்சாயத்தில் வாதிடுகிற பூசாரி இளைஞர்கள் என நம்பிக்கை அளிக்கிறது கடைசி விவசாயி. கிராமத்து பாம்படக்காது ஆத்தாக்களும் இணக்கத்தை விரும்புகின்றனர்.கிடாமீசைக்காரர்கள்தான் சண்டைக்கு சலங்கை கட்டுகின்றனர்.
வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, மேற்குலகத்திற்கு தேவையான பணப்பயிர் இதர தேவைகளுக்காக, சுற்றுப்பட்டி விவசாய நிலங்களெல்லாம் விற்கப்பட, பம்புசெட் கிணற்றடி நிலத்தை வைத்து தனி ஆளாக வேளாண்மை செய்து, கன்று காலிகளை பாதுகாக்கிற இயற்கை விவசாயி மாயாண்டி அவருக்கு இழைக்கப்படுகிற அநீதி, அம்பலமாகும் உள்ளூர் அரச முகங்கள் என்று பிரதான கதையொன்று ஆணிவேர் போல ஒடுகிறது.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்று டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் வழி தொடங்குகிறது படம்.படத்தை பார்த்து முடிக்கையில் இந்த தொடக்கக் காட்சி அச்சத்தை ஊட்டுகிறது.எத்தனை இள உயிர்களை காதல் எனும் பெயரில் காவு வாங்கிய மலை என அச்சத்தை ஏற்றுகிறது.
மலையில் இரண்டடி உயரத்தில் ஊர்மக்களின் குலசாமியாக நிறுவப்பட்டிருக்கும் அரூபமான கருந்தூண் வழிபாடு கொண்ட, பெருந்தெய்வ வழிபாடு ,கும்பாபிசேகம் இல்லாத சிற்றூர் அது. தமிழ்நாட்டின் உழைப்பாளி மக்கள் மதம், அது சார்ந்த அரசியல் வெறியூட்டுகள் இல்லாத சிவனே என்று சித்தநெறிப் போக்கில் வாழ்கிற ஊரின் மானுடவியலை அழகியலான கலைமொழியில் உணர்த்தி இருக்கிறது.
மாயாண்டியிடம் மட்டும் இயல்பாக பேசும் , பொது விசயங்களை அறிந்து வைத்திருக்கும் , பைத்தியம் என ஊரில் பலரால் புறக்கணிக்கப்படும், முருகபக்தனாக சித்தம் பிறண்டு காட்டு வழியாகவே ஒவ்வொரு ஊரைக் கடந்து திரியும் அலைகுடியான ராமையா பாத்திரம் வழியாக, வடபுலத்து வைதீகத்திற்கு மறுப்பான முருகவழிபாடு , இயற்கை மீது கானுயிர்கள் மீதான நேசம் கொண்ட பாத்திரம் என்ற புரிதலை படம் உருவாக்குகிறது.
முருகபக்தன் ராமையா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி மாறுபட்ட தோற்றம் நடிப்பை தந்து தன் திரைப் பயணத்தில் வகை வகையான நடிப்பை தருகிறார் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி.
கிளைமாக்சின் முன்னதான காட்சிகளில் எச்சில் தொட்டி இலைகளில் சிதறிய உணவுகளை சாப்பிடும் சிவனடிக்கு சாப்பிட உணவுப் பொட்டலம் தரும் ராமையாவின் (விஜய்சேதுபதி) நெற்றியில் சிவனடி திருநீறு பூசி விட்டு, கையில் அள்ளிக் கொடுக்கும் விபூதியை வாங்கி ராமையா மலைக்கும் போது சிவனடி பள்ளத்தாக்கை காட்டி , அங்க ஒருத்தி இருக்கா, அவளுக்கு வெச்சு விடு என்கிறார்.
சிவனடி சொல்லின் அர்த்தம் புரிந்து, அசரீரியான மயில் அகவும் குரல் கேட்டு ராமையா கண்களைச் செருகி, மலையுச்சி சென்று தன்னை மாய்த்துக் கொள்ளும் கணம் பொடேரென்று கன்னத்தில் அறைந்து , ஏதோ ஒரு பெண்ணின் ராமையாவின் காதலியாகக்கூட இருக்கலாம் என்ற புரிதலில் ,ஆணவக்கொலக்களத்தை உணர்த்துகிறது இந்தக் காட்சிகள்.
செத்துக் கிடக்கும் மூன்று மயில்களை தன் நிலத்தில் புதைத்து அஞ்சலி செலுத்திய கானுயிர் நேசனான மாயாண்டியை போலீஸ் ,கோர்ட் ,ஒரு மாத நீதிமன்ற காவல் என அலைக்கழித்து, நிலக்கொள்ளையர்களுக்கு விவசாய நிலத்தை விற்க மறுத்தால் ஏற்படும் விளைவுகளை பழிவாங்கல்களை படம் சொல்கிறது.
யோகிபாபுவின் பாத்திரம் மனதை கசிய வைக்கும் துயரம் கொண்டதாக இருக்கிறது.நிலக்கொள்ளையர்களுக்கு பதினைந்து ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு, யானை ஒன்றை வாங்கி அக்கம் பக்கம் ஊரில் யானையோடு அலைந்து அதனால் கிடைக்கும் பணத்தில் வாழ்வை ஓட்டும் அந்த துயரம் நிலமிழந்த விவசாயிகளின் விரியுமொரு துயரக்காதையாக இருக்கிறது.
விவசாயி மாயாண்டியை வழக்கு, நீதிமன்றம் என அலைய விடுகிறார்கள்.ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைக்க ஆளில்லை.பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீதிமன்றக்காவல் நீள்கிறது. பயிர்களை எல்லாம் ஒவ்வொரு உயிராகப் பாவிக்கும் காது கேட்காத மாயாண்டி, மயில்களை கொன்றிருக்க வாய்ப்பில்லை என வழக்கை விசாரித்து, வழக்கிற்கும் மாயாண்டிக்கும் இடையில் இழுபடும் மனசாட்சி உள்ள இளம் மாஜிஸ்ரேட்டாக ராய்ச்சல் ரெபக்கா பிலிப் மனம் கவர்கிறார்.
இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக மாயாண்டி பாத்திரம்
தன் சொல்லை செயலை செய்து கொண்டே போகிறது.மலட்டு விதை, எண்ணெய்சத்து இல்லாத புண்ணாக்கு போன்றவைகளை இயல்பான வேளாண்மொழியில் விமர்சித்துப் பேசி, பசுமைப்புரட்சியின் எதிர் விளைவுகளை நிலத்தை மலடாக்கும் கார்ப்பரேட் பூச்சிக்கொல்லி நிறுவனங்களை அக்கம் பக்கமாக களையெடுக்கிறது.
எண்பது வயது மாயாண்டியாக உண்மையான விவசாயி நல்லாண்டி திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். விஜய்சேதுபதி, யோகிபாபு , ராய்ச்சல் ரெபக்கா தவிர, அனைத்துப் பாத்திரங்களும் உசிலம்பட்டி சுத்துப்பட்டி மக்களே பாத்திரங்களாக மாயாண்டியோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
கலைகள் யாவற்றிற்கும் அடிப்படை உழைப்புதான். உழைப்பைத் தருகின்ற உழைப்பாளி மக்களே கலைகள் யாவற்றிற்கும் தாய் நிலமாக இருக்கிறார்கள் எனும் மார்க்சிய அணுகுமுறைக்கு ஏற்ப, மொத்த ஊரே கடைசி விவசாயி திரைப்படத்தில் தன் கலைநேர்த்தியை நிரூபித்திருக்கிறது. இயக்குநர் மணிகண்டன் உசிலம்பட்டி என்பதால் மண்ணின் நிறத்தை வாசனையை படத்தில் கொண்டு வந்துவிட்டார்.
காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை படங்களை தந்த இயக்குநர் ம.மணிகண்டன் இந்த திரைப்படத்தின் இயக்குநர் மட்டுமல்ல; கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என பொறுப்பேற்று படத்திற்கான உயிரும் ஒளியுமாக இருக்கிறார். வசனத்தின் நக்கல்,கலாய்ப்பு வழியாக எதுவொன்றையும் விமர்சிக்கிறார். எள்ளல் உத்தி சிறப்பான விமர்சன உத்தியாக மணிகண்டனிடம் மாறி வந்திருப்பது சிறப்பு.
சந்தோஷ் நாராயணன்-ரிச்சர்ட் ஹார்வி இசை படத்திற்கு பெரும்பலமாக இருக்கிறது.தோட்டாதரணியின் கலை இயக்கம் இயலான அசலான நேர்த்தியோடு கை கூடியிருக்கிறது.மொத்த ஊர் நடிக்கும் பொழுது, ஒலிக்கலவை இயற்கையாக வரும் பொருட்டு அஜயன் அடாட் மெனக்கெட்டிருக்கிறார்.
ஆரஞ்சுமிட்டாய், மேற்கு தொடர்ச்சிமலை படங்களை தயாரித்த விஜய்சேதுபதி, கடைசி விவசாயி படத்தை தயாரிக்க மணிகண்டனிற்கு உதவி இருக்கிறார்.
தமிழில் வந்திருக்கும் ஓர் உலக திரைப்படம் கடைசி விவசாயி.
விவசாயகுடிகளின் சக்தியை.. கூட்டு உழைப்பை உயர்த்திப் பிடிக்கிறது..*லாபம்* – கருப்பு அன்பரசன்.
விவசாயிகள் ஒன்றுபடும் பொழுது அவர்களைப் பிளவுபடுத்த உழைப்பை, அதன் வியர்வையினை நக்கி ருசிகண்ட அதிகாரவர்க்கம் எல்லாவித திருட்டு வேலையையும் செய்யும் என்கிறது லாபம்..
எல்லா சமூகத்திலும் மாற்றம் என்பது பெரும் மக்கள் கூட்டு சக்தியாலேயே நடைபெற்றிருக்கிறது..
மக்கள் சக்தி நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று உரக்கச் சொல்கிறது லாபம்.
தனிமனித ஹீரோயிசத்தை தவிர்த்து மக்கள் சக்தியின் மேன்மையை உயர்த்திப் பிடிக்கிறது லாபம்.
விவசாயிகள் ஒன்று சேர்வது மட்டுமே தங்களது நிலத்தில் விளைந்த விளைச்சலுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க முடியும் என்று விவசாயிகளின் ஒற்றுமையை பேசுகிறது லாபம்.
இந்தியா முழுவதிலும் விவசாயிகள் ஒன்றுபட்டு ஒரு மிகப் பெரிய போராட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதே இன்றைக்கு ஆண்டுகொண்டு இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் விவசாயிகளை இதுவரையிலும் நியாயமான பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது. அனைவரும் உணர வேண்டிய தருணத்தில் இந்த படம் வந்து இருப்பது நம் உழைக்கும் சமூகத்திற்கு லாபம்
களப்பலியான கம்யூனிஸ்டுகளை கொண்டாடுகிறது லாபம்..
விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற.. ஆதிக்க சாதித் திமிருக்கு எதிராக “அடித்தால் திருப்பி அடி” என்று உரக்க முழக்கமிட்டு.. பட்டியலினத்து விவசாய தொழிலாளிகளை.. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஓரணியில் திரட்டிய தோழர் சீனிவாசராவ் அவர்களின் பெயரை உச்சரிக்க செய்கிறது லாபம்..
ரவுடிகளை எதிர்த்து களப்பலியான லீலாவதியை கொண்டாடுகிறது படம்.. பலியான இன்னும் பல போராளிகளை.. கம்யூனிஸ்டுகளை கொண்டாடுகிறது.. நம்மை கொண்டாடச் செய்கிறது லாபம்.
இந்தியாவின் கிராமங்கள் பலதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் புதியதாக தொழிற்சாலை அமைக்கப்போவதாக கூறி.. பல தில்லாலங்கடி திருகு தாளங்களை நடத்தி தொழிற்சாலையை அமைத்து இயற்கையின் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
அருகில் இருக்கும் கிராமங்களின் விவசாயிகள் இரத்தத்தையும் சேர்த்தே..
இதற்கு உடந்தையாக ஆளும் அரசுகளும்.. அடிவருடிகளும் அவர்களுக்கு மானியமாகவும் இலவசமாகவும் பல உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச காலத்தில் இங்கே தமிழகத்தின் செங்கல்பட்டில், பெரிய கார்பரேட் நிறுவனம் ஒன்றின் கார் தொழிற்சாலை மூடப்படவிருக்கிறது.. வேலை பார்க்கும் 7000 தொழிலாளர்களும் அந்த ஆலையை சார்ந்து நிற்கும் 30 ஆயிரம் தொழிலாளர்களும்.. மொத்தமாக முப்பத்தி ஏழு ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் நடுவீதியில் தள்ளப்படவிருக்கிறார்கள். அந்த தொழிற்சாலை மூடப்படுவதால் அந்தத் தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்களை தயார் செய்யக்கூடிய சிறு குறு தொழிற்சாலைகள் பலவும் மூடப்படவிருக்கிறது. நீங்களும் நானும் என்ன செய்யப்போகிறோம் என்று பார்ப்போம் எதிர்காலத்தில்.
படத்திலும் கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளி கிராமத்து மொத்த விவசாய நிலங்களையும் விலைபேசி தொழிற்சாலை அமைக்க முற்படும் நேரமதில் கார்ப்பரேட்டின் அயோக்கியத்தனத்தை உணர்ந்து.. புரிந்து.. அறிந்து.. வெகுண்டெழும் மக்கள் ஆயுதங்களோடு களத்தில் இருக்கிறார்கள்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான நிஜ வரலாறுகள் ஏராளம் நம் கண் முன்னே. ஆயுதங்கள் கைகள் மாறத் தொடங்கி விட்டால் என்னவாகும் என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறது லாபம்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறி என்பது
சிறிய தொழிற்சாலைகளையும் விட்டுவைக்காது என்பதற்கு உதாரணம் கோவையும்.. திருப்பூரும்.. சென்னையும் தமிழகத்தில்.
இந்தியா முழுவதிலும் மூடப்பட்டிருக்கும் சிறு குறு தொழிற்சாலைகள் பல ஆயிரம் உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வெறியினை அதன் கூட்டுக் கயவாளித்தனம் உலகம் முழுவதும் எப்படி நீண்டு இருக்கிறது என்பதனை
பேசுகிறது லாபம்.
சாதிகளைக் கடந்து உழைக்கும் தொழிலாளர் வர்க்கமாக இணைவதால் மட்டுமே நாம் நினைக்கும் நிஜமான விடுதலையும் வாழ்வும் கிடைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமும் அதுவே என்பதற்கு லாபம்..
கூட்டுப்பண்ணை விவசாய வடிவத்திற்குள் ஒரு கிராமத்தின் எல்லா குடிமக்களும் இணைய முடியும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறது லாபம்.
நடக்கப்போகும் எதிர்காலத்தை இன்று கனவுத் தொழிற்சாலையின் தயாரிப்பில் காட்சிகளாக நிஜப்படுத்தி இருக்கிறது லாபம்.
படத்தில் அழகியல் இல்லை எடிட்டிங் சரியில்லை.. வெறும் வசனங்களாகவே இருக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களுக்கு உழைக்கும் மக்களுக்கு ஆதரவான இந்த படம் எரிச்சலைக் கூட்டும்தான்.. மூட்டும்தான்.!
வரலாறுகளை.. போராட்டங்களை எதிரிகளுக்கு எதிரான திட்டமிடுதல்களை..
மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய..
புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வசனங்களால் பேசித்தான் ஆகவேண்டும்.
பல தலைமுறைகளாக ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வாழ்ந்து வரும் நமது மக்களின் வாழ்வியல் குறித்தான தரவுளை விவரங்களை வசனங்களாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.. அதனை மிகச் சரியாக பேசியிருக்கிறது லாபம்.
நமது உரிமையான.. நமக்குச் சொந்தமான.. நமக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அனைத்தும் இன்று எவரிடம் இருக்கிறது என்பதை.. அது எப்படி வந்தது என்பதை ..
அது எப்படி களவு போனது என்பதை..
அந்த மண்ணை எவர் வழியாக எவரெல்லாம் விழுங்கினார்கள் என்பதை வசனங்களாக தான் சொல்ல வேண்டியிருக்கும்.
விஜய் சேதுபதி பேசிக்கொண்டே இருக்கிறார் என்று “நீங்கள்” பேசினால் பேசிக் கொண்டே தான் இருப்பார்..
அவர் வரலாற்றினை நிஜங்களை அப்படியே பேசியிருக்கிறார். உண்மைகளைப் மெய்யான உண்மையாக பேசி இருப்பது உங்களுக்கு “காண்டாகும்” என்றால் ஆகட்டும்.
அதில் ஒன்றும் தவறு இல்லை.. இந்தக் “காண்டு” நாங்கள் எதிர்பார்த்தது தான்.
இப்படியான படங்களை உங்களுக்கு கொண்டாடுவதை விட.. நடித்தவர்கள் மீதும் இந்த படத்தை தயாரித்தவர்கள் மீதும்
வன்மம் இருக்கும்.. வன்மம் கலந்த உரையாடல் இருக்கும்.. ஏனென்றால் அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட டார்கெட்.
அதுதான் உங்களின் அடையாளம் என்பதை நாங்கள் அறிவோம்.
உழைக்கும் மக்களுக்கு எந்த அடையாளம் தேவை என்பதை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறார் மறைந்த அருமை தோழர் எஸ் பி ஜனநாதன் அவர்கள். மக்களை அணிதிரட்டும் பொழுது மக்களை ஒருங்கிணைக்கும் பொழுது கலைகளின் வேலைகள் எப்படி இருக்க வேண்டும்.. அது தானாக முன்வந்து எதைச் செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
ஏற்றத்தாழ்வற்ற சமூகம் வேண்டுமென்பவர்கள்.. அதற்காக நிதமும் பந்தலை அர்ப்பணித்துக் கொண்டு போராட்டங்கள் பலதை நிகழ்த்தி கொண்டிருப்பவர்கள்
கொண்டாடப்பட வேண்டிய படம் லாபம்.
பலராலும் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களை உள் வைத்து இருக்கும் படம் லாபம்.
கொண்டாடுவோம் விவாதிப்போம்
வெகு மக்களை பார்க்க வைப்போம்.
லாபம்.
கருப்பு அன்பரசன்.
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய *லாபம்* திரை விமர்சனம் – ப. பிரசாந்த்
மன உறுதி பெறுவதிலே
ஜெகமதையே ஜெயித்திடலாம்
சிவப்பே வழியாய் கொள்வோமய்யா..
தனி ஒருவன் தலைமையில
விடுதலையும் வருவதில்ல
இணைந்தே எதையும் வெல்வோமய்யா…
தோழர் யுகபாரதி அவர்களின் அற்புத பாடல் வரிகள் அந்த வரிகள் தான் படத்தின் ஒட்டு மொத்த கதையும் அடங்குகிறது
லாபம் திரைப்படத்தின் சில காட்சிகள் ராஜபாளையத்தில் கடந்த இரண்டு வருடங்கள் முன்பு துவங்கியது. அன்றுதான் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு படப்பிடிப்பில் தோழர் எஸ்பி ஜனநாதன் அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்பு உணவு இடைவேளையில் அறிவிக்கிறார். இன்று லெனின் அவர்களின் பிறந்தநாள் இன்று தான் நமது படத்தை தூங்குகிறேன் என்று அறிவித்தார். பின்னர் நான் அறிமுகம் ஆகினேன், அன்றைய தினம் எந்த எதிர்பார்ப்போடு இந்த படம் வருமென்று இருந்தேனோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் லாபம் திரைப்படம் இருந்தது.

ஒரு கிராமத்தின் சாதாரண ஏழை எளிய மக்களின் நிலங்களைப் பிடுங்கி தான் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை எளிதாக அனைத்துப் பகுதிகளிலும் சென்றடையும் வகையில் எட்டு வழிசாலை உட்பட தங்க நாற்கர சாலை பொருள்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கக்கூடிய கிடங்குகள் அவற்றின் மூலம் பொருளின் விலை ஏற்றத்தின் போது அதை விற்பனை செய்வதற்கான ஒட்டுமொத்தமாக லாப வெறியை மையமாக வைத்து இயங்கும் கூடிய அந்த கார்ப்பரேட் முதலாளி அவர்களுக்கு அடிமையாக உள்ளுரில் நான்கு சிறு அடிமை முதலாளிகள் இவர்களை எதிர்த்து பக்கிரி சாமியாக விஜய் சேதுபதி அவர்கள் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வில்லனை அழித்தொழித்து இதேபோன்று உழைக்கும் மக்களுக்கு எதிராக அடுத்த கிராமத்தின் நடக்கக்கூடிய பிரச்சனையை எதிர்த்து இறுதியில் கிளம்புகிறார் விஜய்சேதுபதி. இப்படியாக ஒட்டுமொத்த படத்தின் கதை அமைகிறது.
படத்தில் லாபம் குறித்து எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய காட்சி அமைப்புகள், அதேபோன்று சங்கத்தின் மூலம் தங்களின் உரிமைகளை கேட்க ஒன்றிணைய வேண்டும் என்பது விவசாய நலன் காக்க மாபெரும் மக்கள் பணியை செய்த தோழர் சீனிவாச ராவ் அவர்களின் பெயரில் கூட்டு பண்ணை திட்டம் துவங்குவது.
லாபம் குறித்து சிறுமிக்கு விஜய் சேதுபதி அளிக்கும் விளக்கம், ஊருக்குப் புதிதாக வந்தவர் சங்கத்தில் வந்து சீனிவாச ராவ் பற்றிக் கேட்பது சேகுவேராவைப் போன்று விஜய் சேதுபதியின் பாத்திர வார்ப்பு புல்லட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல நூறு பக்கங்கள் மேலும் படம் முடிந்ததும் கடைசியில் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் லாபம் குறித்தான இரண்டு நிமிட வீடியோ அந்த இரண்டு நிமிட வீடியோவை ஒரு முழுநீள படமாக புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக படம் மக்கள் ஜாதி மதங்களை கடந்து தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டும்.
என்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக லாபம் மட்டுமே குறிக்கோளாக இயங்கும் கார்ப்பரேட் முதலாளிகள் இந்த சமூகத்தின் சாபம் என்று பறைசாற்றுகிறது.
ப. பிரசாந்த் எம்ஏ.பிஎட்
முன்னாள் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர்
விருதுநகர் மாவட்டம்
9543058686