Mazhaiyin Sayal Poem By Vijayabharathi Sivasami மழையின் சாயல் கவிதை - விஜயபாரதி சிவசாமி

மழையின் சாயல் கவிதை – விஜயபாரதி சிவசாமி




1
அடித்துப்பெய்கிற பெருமழையில்
கோணிச் சாக்கு தலையோடு
முடைந்த கொல்லைமட்டையைக்
கையிலேந்தியபடி
பேரனை அழைக்க
பள்ளிக்கு வரும்
அம்மாயிக்குள் பெய்வதும்
ஒரு பெருமழைதான்.

2
சடசடத்துப் பெய்கிற மழையில்
கும்மாளமிட்டு நனைந்த மெல்லினா
அதட்டலுக்குப் பின்
அருகில் வந்து
குறுநகையுடன் தலை சிலுப்ப
தெறித்த துளிகள்
அவளின் நடன பாவத்தில் இறங்குகின்றன
என் கோபத்தைக் கரைத்தபடி

3
சாலைகளில் வழிந்தோடி
ஆக்கிரமிப்பை இடம்பெயர்த்து
வீடுகளுக்குள்ளும் நுழைகிற
மழைநீருக்கு
நிலம் மீட்ட அகதியின் சாயல்