நூல் அறிமுகம் : விஜயானந்த லட்சுமியின் தேனி மகரந்தக் கருவூலம் தேடி (தேனி என்னும் தேனடை கட்டுரை) – பாவண்ணன்

நூல் அறிமுகம் : விஜயானந்த லட்சுமியின் தேனி மகரந்தக் கருவூலம் தேடி (தேனி என்னும் தேனடை கட்டுரை) – பாவண்ணன்



தேனி என்னும் தேனடை
பாவண்ணன்

01.01.1997 அன்று மதுரையிலிருந்து பிரிக்கப்பட்டு தேனி மாவட்டம் உருவானது. தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், சின்னமனூர் போன்ற பல ஊர்கள் அந்த மாவட்டத்தில் உள்ளன. அனைத்தும் காடும் மலையும் சூழ்ந்த ஊர்கள். முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை, மேகமலை, வெள்ளிமலை, போடிமெட்டு, கும்பக்கரை அருவி, சுருளி நீர்வீழ்ச்சி போன்ற இயற்கைக்காட்சிகள் நிறைந்த இடங்கள் இங்கே நிறைந்துள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் அடிவாரமெங்கும் நிறைந்துள்ளன.

இவையனைத்தும் தேனி என்னும் ஊரைப்பற்றிய புவியியல் சார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களைச் சேகரித்து தேனியின் வரலாற்றை எளிதாக எழுதிவிட முடியும். ஆனால் கவிஞர் விஜயானந்தலட்சுமி அப்படிச் செய்யவில்லை. ஊர்வரலாறு என்பதை மனிதர்களின் வரலாறாகப் பார்க்கும் மனம் கொண்ட அவர், வரலாறாக வாழ்ந்து மறைந்த ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் தேடித்தேடி இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவிஞர்கள், விடுதலைப்போராட்டத் தியாகிகள், மொழிப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மருத்துவமனை கட்டியவர்கள், நோய்நொடிகளிலிருந்து காப்பாற்றி ஊராரை வாழவைத்தவர்கள் என யாரேனும் ஒருவரைப்பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ஆளுமைகளின் கொடிவழியில் வாழும் இன்றைய தலைமுறையினரைத் தேடிச் சென்று சந்தித்து உரையாடி, அவர்கள் வழியாகவே தகவல்களைப் பெற்று தொகுத்திருக்கிறார். இந்த நூலை ஒரு புனைகதைக்குரிய சுவாரசியத்துடன் வாசிப்பதற்கு விஜயானந்தலட்சுமியின் தொகுப்பாக்கம் ஒரு முக்கியமான காரணம்.

ராணி மங்கம்மாள் 1689 முதல் 1704 வரை மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். கணவரான சொக்கநாதரின் மறைவுக்குப் பிறகு மகன் குழந்தைப்பருவத்தில் இருந்ததால், அவரே ஆட்சிப்பொறுப்பேற்று நடத்தினார். அக்காலத்தில் அவருடைய பாதுகாப்பாளராக இருந்தவர் சின்னமநாயக்கர். அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருடைய பெயரால் ஓர் ஊர் உருவாக்கப்பட்டு சின்னமநாயக்கனூர் என்று பெயர் சூட்டப்பட்டது. காலப்போக்கில் அந்த ஊரின் பெயர் சின்னமனூர் என்று மருவியது. அங்கே இந்துக்களுடன் ராணி மங்கம்மாள் அவர்களால் குடியமர்த்தப்பட்ட இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்ந்தார்கள். இரு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்தோடு அப்பகுதியில் வாழ்ந்தார்கள். ஏட்டில் எழுதப்பட்ட வரலாறு அந்தத் தகவலோடு நின்றுவிடுகிறது. இன்று வரலாற்றை எழுதுபவர்கள் இப்படி தகவல்களை மட்டும் திரட்டி அளித்தால் போதாது. அத்தகவல்களை வரலாற்றின் பின்னணியில் வைத்து நிறுவவேண்டும். கவிஞர் விஜயானந்தலட்சுமி தன் இயல்பான ஊக்கத்தின் காரணமாக மெனக்கிட்டு அலைந்து, அப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டி, அந்த வரலாற்றை நிறுவியிருக்கிறார். மங்கம்மாள் காலத்து நல்லிணக்க வாழ்க்கைமுறை நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இன்றளவும் நீடித்திருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

விஜயானந்தலட்சுமி அளிக்கும் ஹாஜி கருத்த ராவுத்தர் பற்றிய தகவல்கள் அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலை அளிக்கின்றன. கருத்த ராவுத்தர் என அவர் அழைக்கப்பட்டாலும் அவருடைய இயற்பெயர் மீரான் ராவுத்தர். பிளேக் நோயால் மக்கள் மரணமடையத் தொடங்கியதும், தன் சொந்தச் செலவில் பஞ்சாபிலிருந்தும் லாகூரிலிருந்தும் மருந்துகளை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். ஏழைகளைக் காத்த அவருடைய வரலாற்றை அந்தோணிமுத்துப்பிள்ளை கவிதைகளாக எழுதியுள்ளார். அந்த வட்டாரத்தில் முதன்முதலாக மகப்பேறு மருத்துவமனையையும் தன் சொந்தச் செலவில் ராவுத்தரே தொடங்கிவைத்தார். மக்கள்நலம் சார்ந்த சிந்தனை அவரை விடுதலைப் போராட்ட வீரராக மாற்றியது. காந்தியடிகளின் வழியில் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைபுகுந்தார். கள்ளுக்கடை மறியலிலும் கதர்ப்பிரச்சாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டார். அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி உருவாக தனக்குச் சொந்தமான நிலத்தையே அன்பளிப்பாக அளித்தார்.

தேனி பகுதிகளில் வாழ்ந்த பாரதி நாராயணசாமி, க.அருணாசலம் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. ஏலம் மணக்கும் தேவாரம் என்னும் ஊரைச் சேர்ந்த பாரதி நாராயணசாமி 1934இல் சின்னமனூர், கம்பம், தேவாரம் போன்ற பகுதிகளுக்கு காந்தியடிகளை அழைத்துவந்து மக்களிடையே உரையாடவைத்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். க.அருணாசலம் ஓவலாபுரத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் புதுமைப்பித்தனுடன் வகுப்புத்தோழராக படித்தவர். மதுரை அரிசனசேவா சங்கத்திலும் பெரியநாயகன்பாளையத்தில் பள்ளியாசிரியராகவும் பணியாற்றினார். பூசாரிக்கவுண்டன்பட்டியில் குடும்பத்தினரிடமிருந்து தன்னுடைய பங்காகத் தனக்குக் கிட்டிய வீட்டை சர்வோதயப்பணிகளுக்காக அன்பளிப்பாக அளித்துவிட்டார். காந்தியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் சில நூல்களை எழுதி வெளியிட்டார்.

காந்தியக்கொள்கைகளால் கவரப்பட்ட மற்றொரு கவிஞர் கம்பம் பீர்முகம்மது பாவலர். 1921இல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு, கல்லூரியை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியில் இருந்தபோதும் சுதந்திரப்போராட்டத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் தன்னுடைய வேலையை உதறினார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு பெல்லாரி மாவட்டத்தில் அலிப்பூர் சிறையில் ஓராண்டு தண்டனையை அனுபவித்தார். 1934இல் கம்பம் நகருக்கு வந்த காந்தியடிகளிடம் மூன்றாயிரம் ரூபாய் திலகர் நிதியாகத் திரட்டியளித்தார். கம்பத்தில் வாழ்ந்த மற்றொரு தியாகி டி.சையது முகம்மது. அவர்கள் இருவரும் சேர்ந்து கம்பம் கோட்டை மைதானத்தில் பெரிய மேடையை அமைத்து காந்தியடிகளை உரையாற்றவைத்தனர். 1935இல் தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது நிலச்சுவான்தார்களிடமிருந்து தானியங்களைத் திரட்டி ஏழைக்களஞ்சியத்தை உருவாக்கினர். பாவலர் பீர்முகம்மதுவின் வீரம் செறிந்த பாடல்கள் இன்றளவும் கம்பம் பகுதியில் பாடப்படுகின்றன.

மக்கள் அனைவரும் அறிந்த நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து தேன்மொழிதாஸ் போன்ற கவிஞர்களுக்கு அப்பால் பலருடைய நினைவிலிருந்தே மறைந்துபோன சில கவிஞர்களைப்பற்றியும் ஏராளமான தகவல்களைத் திரட்டி பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அவர்களில் முக்கியமான கவிஞர் அந்தோனிமுத்துப்புலவர். பாரதியார் வாழ்ந்த காலத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமந்தப்பட்டி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர். மதுரகவி சீனிவாச ஐயங்காரின் உதவியால் தமிழில் புலமை பெற்று இசையோடு பாடல்களை எழுதினார் அவர். சிந்து, திரிபு விருத்தங்கள், சித்திரக்கவி புனைவதில் வல்லவராக இருந்தார். அந்தக் காலத்தில் பல நாடகங்களையும் நாடகங்களுக்கான பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிய இரட்சணிய சிந்தில் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தின் எல்லா மெட்டுகளும் காணப்படுகின்றன. அனுமந்தன்பட்டி தேவாலயம் பற்றியும் அக்காலத்தில் மக்களைத் தாக்கிய பிளேக் நோய்க்கு மறைத்திரு சாந்தப்பநாதர் என்பவர் அளித்த மருந்துகளைப்பற்றியும் அவர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பிளேக்குகளில் ஐந்துவகை இருப்பதையும் ஒவ்வொரு வகை பிளேக்குக்கும் உரிய குணத்தையும் வரிசைப்படுத்தி ஒரு பாட்டாகவே பாடிவைத்திருக்கிறார் அந்தோனிமுத்துப்புலவர்.

அனல்போல் சுரங்காண்பது அக்கினி பிலேக்கு
அசையாமல் கிடப்பது எருமைப் பிளேக்கு
நினைவின்றி இறப்பது நித்திரைப் பிளேக்கு
ரத்தமாய்க் கழிவது ரத்தப் பிளேக்கு
வெறிகொளல் நொந்து வெறிப்பிளேக்கு

தேனி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் வரலாற்றையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களும் பற்றாக்குறையும் மக்களை வறுமையில் ஆழ்த்தியது. மக்களைக் காக்கும் வழி தெரியாமல் அரசு திணறியது. ஜார்ஜ் பேரிஸ் என்பவர் வைகையின் துணைநதியான சுருளி ஆற்றுநீரை அதிகப்படுத்தினால் வைகை நீரைப் பெருக்கலாம் என்று முதலில் தெரிவித்தார். அவரே பெரியாறு நீரைத் தமிழகத்துக்குத் திருப்பும் ஆய்வறிக்கையை முதலில் தயாரித்தார். ஆய்வு செய்யும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்ததால், அதற்குரிய அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஐந்தாண்டு காலம் தொடர்ந்த ஆய்வின் விளைவாக 172 அடி உயரத்துக்கு அணையை எழுப்பி, 433 அடி நீளமுள்ள சுரங்கப்பாதையை அமைத்து, அதன் வழியாக நீரைக் கொண்டுவந்து நிரப்பும் திட்டம் உருவானது.

முதன்மைப்பொறியாளராக 1884இல் பென்னி குவிக் பொறுப்பேற்றுக்கொண்டார். பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற கட்டுமானப்பணியின் விளைவாக இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஒரு மாத அளவுக்கு தொடர்ச்சியாக பொழிந்த மழையின் காரணமாக உருவான வெள்ளத்தில் அணையின் பெரும்பகுதி சிதைந்தது. மனம் தளராத குவிக் மீண்டும் வேலைகளைத் தொடங்கினார். அணையின் உயரம் குறைக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் தொடர்ச்சியாக கட்டுமான வேலைகள் நடைபெற்றன. 1895இல் அணைக்கட்டு வேலை முடிந்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு அந்த நீர்ப்பாசனத்தால் பயனடைந்தது. உலகிலேயே முதன்முதலாக ஏரியில் நீரைச் சேமித்து, மலையைக் குடைந்து சேமித்த நீரை அணையின் எதிர்ப்புறம் திருப்பும் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக நிறைவேறியது. பென்னி குவிக்கின் நினைவைப் போற்றும் விதமாக, கிராமத்து மக்கள் தெய்வங்களை வணங்குவதுபோல அவருடைய உருவச்சிலைக்கு பொங்கல்வைத்து வழிபடுகிறார்கள் என்னும் செய்தி மெய்சிலிர்ப்பூட்டுகிறது..

பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழிபாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா

என்று நாடக மேடையில் பாட்டு பாடி ஆங்கிலேயர் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் விஸ்வநாத தாஸ். நடத்துவது புராணநாடகமாக இருந்தாலும், பாடுவது புராணப்பாத்திரங்களுக்குரிய பாடல்களாக இருந்தாலும், நாடகத்தின் காட்சிகளுக்கு இடையிடையே இப்படி ஆங்கிலேய எதிர்ப்புப் பாடல்களைப் பாடி சுதந்திர வேட்கையை ஊட்டி வந்தார் அவர். சிவகாசியில் பிறந்து சென்னையில் மறைந்த அவருக்கு, தேனி மக்கள் சின்னமனூர் சாலையில் சிலையொன்றை நிறுவி உரிய முறையில் மரியாதை செலுத்துவருகிறார்கள். அதற்கான காரணத்தை விசாரித்து விரிவாகவே எழுதியிருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அயலூர்க்காரர் என்றபோதும் அவருடைய ஆங்கிலேய எதிர்ப்பு நாடகங்களுக்கு தேனிவாழ் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. விஸ்வநாததாஸ் மக்களின் மதிப்புக்குரிய கலைஞராக விளங்கினார். அவரை கைது செய்ய காவலர்கள் தேடி அலையும்போதெல்லாம் அவருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தனர் சின்னமனூர் மக்கள். குறிப்பாக விடுதலைப்போராட்ட வீரரான ராவுத்தர் அவருக்கு ஆதரவாக இருந்தார். இருபத்தொன்பது முறை மேடையிலேயே காவலர்கள் அவரை கைது செய்தனர். அப்போதும் விஸ்வநாததாஸ் தன் ஆங்கிலேய எதிர்ப்பில் உறுதியாகவே இருந்தார்.

அடிக்கடி சிறைக்குச் சென்றுவிடுவதால், விஸ்வநாததாஸுடைய குடும்பம் வறுமையில் வாடியது. அவருடைய வீடு ஏலத்துக்கு வந்தபோது, அவருக்கு உதவுவதற்காக சென்னை ராயல் அரங்கில் ஐந்து நாட்களுக்கு நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. எதிர்பாராத விதமாக உடல்நலம் குன்றியதால் முதல் மூன்று நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. நான்காவது நாள் வள்ளி திருமணம் நடைபெற்ற போது ஒரு பாடலைப் பாடும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்தார் விஸ்வநாததாஸ். அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றிய கலைஞர் என்ற அன்பின் வெளிப்பாடாக அக்கலைஞருக்கு சின்னமனூர் சாலையில் ஒரு சிலையை நிறுவி ஊர்மக்கள் கெளரவித்து வருகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றலுக்கும் ஊராரின் அன்புக்கும் அடையாளமாக விஸ்வநாததாஸின் சிலை நின்றிருக்கிறது.
ஒருவரோடொருவர் அண்ணன் தம்பிகள் போலப் பழகும் இயல்புடைய மக்கள் வசிக்கும் சின்னமனூரில் ஒரு காலத்தில் தீண்டாமைச்சுவர் இருந்தது என்னும் கசப்பான உண்மையையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அவர் விரும்பியிருந்தால், தேனியின் ஒளிமிக்க பகுதிகளை மட்டுமே இப்புத்தகத்தில் முன்வைத்துவிட்டு, இருளடர்ந்த பகுதியை விலக்கிவைத்திருக்கலாம். ஆயினும் விஜயானந்தலட்சுமியின் சமநிலை நோக்கும் நேர்மையுணர்வும் அவரைச் சார்புநிலை அற்றவராக நிலைத்திருக்க வைத்திருக்கிறது.

சின்னமனூரில் வசித்த மேல்சாதிக்காரர்கள் தாம் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது என்கிற எண்ணத்தில் 1946இல் கற்சுவர் எழுப்பித் தடுத்துவிட்டார்கள். அப்போது விடுதலைப்போரில் ஈடுபட்ட பல தியாகிகளில் ஒருவர் கோம்பை டேவிட் வில்லியமும் ஒருவர். அவர் மனக்குமுறலுடன் மதுரை ஆட்சியரைச் சந்தித்து ஒரு புகாரளித்தார். அச்சுவரை இடிப்பதற்கு ஒப்புதல் அளித்து ஆட்சியர் உடனடியாக ஓர் ஆணையை பிறப்பித்தார். ஊருக்குத் திரும்பிய வில்லியமுடன் ஒத்துழைக்க ஒருவரும் தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் ஒரு கடப்பாறையோடு மரக்கம்புகளைப்பற்றி சுவர் மீது ஏறி அவரே சுவரை இடிக்கத் தொடங்கினார். ஆட்சியரின் ஆணை என்பதால் மேல்சாதியினர் இயலாமையுடன் அமைதியாக நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் தாழ்த்தப்பட்டோரும் துணிவு வரப்பெற்று அவருடன் சேர்ந்து சுவரை இடித்துத் தள்ளும் வேலையில் இணைந்துகொண்டனார். தெருக்களுக்குக் குறுக்கில் நின்றிருந்த தீண்டாமைச்சுவர் மொத்தமாக இடிந்து வீழ்ந்தது. அந்த சுவர் நின்றிருந்த இடத்தின் மீதுதான் சின்னமனூர் முக்கியச்சாலை இன்று நீண்டு செல்கிறது என்னும் தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார் விஜயானந்த லட்சுமி.

சின்னமனூரில் பழமையான பாண்டியர் காலச் செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன. வட்டெழுத்துகள் அடங்கிய அந்தச் செப்பேடுகள் வழியாக பாண்டியர் சந்ததியினரைப்பற்றிய குறிப்புகளையும் அவர்கள் ஆற்றிய செயல்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. சதிக்கல் என்பது கணவனோடு உடன்கட்டையேறி உயிரை மாய்த்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு எழுப்பப்படும் நடுகற்கள். வீரக்கல் என்பது போரில் வீரமுடன் போரிட்டு உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்படும் நடுகற்கள். இவ்விரண்டு நடுகற்களும் கம்பம் அருகில் உள்ள புதுப்பட்டியில் கிடைத்த செய்தியையும் பதிவு செய்திருக்கிறார் விஜயானந்தலட்சுமி. அரசனின் முன்னிலையில் காற்சிலம்பை உடைத்து, தன் கணவன் கோவலன் மீது விழுந்த பழியை அகற்றிய கண்ணகியின் நீண்ட நடைப்பயணம் முடிவுற்று விண்ணேறிய இடமாக விண்ணேத்திப்பாறை சுருளியாகிய நெடுவேள்குன்றத்தில் இருப்பதையும் அங்கு ஆண்டுதோறும் கண்ணகிக்கு வழிபாடு நடப்பதையும் பதிவு செய்துள்ளார். இத்தகு பதிவுகள் தமிழக வரலாற்றில் தேனி நகரத்தின் பகுதிகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இந்தப் புத்தகத்தில் நாற்பத்துநான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓர் ஆளுமையை அல்லது பழைய வரலாற்றில் புதைந்துபோன செய்தியை அறிமுகப்படுத்துகிறார் விஜயானந்தலட்சுமி. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாவலின் சுருக்கத்தைப் படித்ததுபோல இருக்கிறது. இந்த நூலை வாசித்த பிறகு தமிழ்ச்சூழலில் தேனியின் இடம் என்ன என்பதை நாமே உணர்ந்துகொள்ளலாம். விஜயானந்தலட்சுமி அடிப்படையில் கவிஞராக இருப்பதால் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கவித்துவம் ததும்பும் தொடக்கத்தையும் முடிவையும் வழங்கியிருக்கிறார். தேனீக்கள் தினமும் மலர்களைத் தேடித்தேடி அலைந்து பூந்தேனை உறிஞ்சியெடுத்து கொஞ்சம்கொஞ்சமாக உருவாக்கும் தேனடையைப்போல இப்புத்தகத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.

(தேனி : மகரந்தக் கருவூலம் தேடி. விஜயானந்த லட்சுமி, சந்தியா பதிப்பகம், 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83.
விலை ரூ.340)

Vijayananda Lakshmi Poems Collection Udanpaattu Veil (உடன்பாட்டு வெயில்) Book Review By Writer Pavannan. Book Day And Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: பேறு பெற்ற இலைகள் – பாவண்ணன்



கேட்டுக்கேட்டுப் பழகிய கைவிடப்பட்டவர்களின் குரலாகவோ, ஏமாந்தவர்களின் குமுறலாகவோ, சீற்றம் கொண்டவர்களின் அறைகூவலாகவோ, சாபமாகவோ, அழுகையாகவோ இல்லாத ஒரு புத்தம் புதிய குரலாக இருக்கிறது, விஜயானந்தலட்சுமியின் கவிதைக்குரல். அது ’உடன்பாட்டு வெயில்’ தொகுதியெங்கும் குயிலோசையென சீராக ஒலித்தபடி இருக்கிறது. அந்தக் குரல் வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களில் கண்ட காட்சிகளை முன்வைக்கிறது. தான் அடைந்த பரவசத்தைப் பகிர்ந்துகொள்கிறது. தனக்குள் எழும் பெருமூச்சையும் கேள்விகளையும் முன்வைக்கிறது. குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் கூட எடுத்துரைக்கிறது. கச்சிதமான கவிமொழியில் அனைத்தையும் நவீனவாழ்வின் தரிசனங்களாகவும் சாரமாகவும் உருமாற்றிக் காட்டுகிறது. அதுவே விஜயானந்தலட்சுமியின் முதன்மைச்சிறப்பு. சங்கச்செய்யுளின் சாயலில் மிக எளிமையான அழகுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் விஜயானந்தலட்சுமியின் தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் தேடலையும் பார்க்கமுடிகிறது. நவீன தமிழ்க்கவிதையுலகில் சிறப்பானதோர் இடம் விஜயானந்தலட்சுமிக்காகக் காத்திருக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அலைத்தேன் அருந்தும்
நிலாவண்டு
மலர்ந்து தளும்பும்
கடற்பூ

தலைப்பில்லாத இக்கவிதையைப் படிக்கும்போது, விஜயானந்தலட்சுமி தன்னைப்பற்றி தானே எழுதிக்கொண்ட கவிதையோ என எண்ணத் தோன்றுகிறது. எல்லாக் கவிஞர்களும் ஒருவகையில் மலர்களைத் தேடித்தேடி தேனெடுத்து உண்ணும் வண்டுகளே. கவிஞர்கள் மட்டுமன்றி, சுவைநாட்டம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் இத்தகைய தேடல் உள்ளவர்களே. ஆனால் விஜயானந்தலட்சுமிக்கு தேனுண்ணும் வண்டாக மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்வது மனநிறைவை அளிக்கவில்லையோ என தோன்றுகிறது. அவருக்கு அந்த வழக்கமான வண்டின் வடிவம் போதுமானதாக இல்லை. மேலும் துளியளவு தேனை மட்டுமே தன்னகத்தே கொண்ட மலர்களும் போதுமானவையாக இல்லை. அதனால் எளிய வண்டுகள் பறக்கும் எல்லைக்கு அப்பால் வெளியில் மிதக்கும் நிலவென்னும் வண்டாக உருமாற்றிக்கொள்கிறார். தேனருந்த, சாதாரண மலர்களைக் கடந்து, கடலென மலர்ந்திருக்கும் மலரை நாடிச் செல்கிறார். நிலவென மாறி அந்த மலரில் அவர் அருந்திக் களித்த தேன்துளிகளே கவிதைகள்.

உதிரும் அளவுக்கு
லேசாகியிருந்தது சிறகு
உதிர்க்க முடியாதபடி
வலுவிழந்திருந்தது பறவை

சுருக்கமான வடிவில் இப்படி ஒரு கவிதை. இதுவும் தலைப்பில்லாதது. இங்கு சிறகென நீடித்திருப்பது எது? நினைவின் இனிமையா, துயரமா, அனுபவமா, ஞானமா? சிறகை உதிர்க்கக்கூட வலிமையற்று கூட்டிலிருக்கும் பறவையென இங்கே அமைதியுடன் அமர்ந்திருப்பவர் யார்? காதலனா? காதலியா? ஞானியா? அசடனா? உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை தொன்றுதொட்டு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள உறவின் வழியாக தொடர்புப்படுத்துவதன் நீட்சியாக இக்காட்சியைக் கருதவும் ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது.

தூரப்பயணம் செய்து
தன்னை அடைந்த பறவைக்கு
நெடுங்கனவொன்றின் முனையை
கொத்தத் தருகிறது நீர்நிலை

இக்கவிதை வழியாக மீண்டும் ஒரு பறவையின் காட்சியை முன்வைக்கிறார் விஜயானந்தலட்சுமி. இது இங்கிருக்கும் நீர்நிலையைத் தேடி எங்கிருந்தோ வலசை வந்த பறவை. கடந்த வலசைப்பயணத்தில் கண்டும் களித்தும் பறந்தும் கரையோரத்தில் நடந்தும் கொத்தியும் பழகிய நீர்நிலைக்கு, இந்தப் பயணத்திலும் நேரமும் காலமும் பிசகாமல் வந்து சேர்ந்திருக்கிறது பறவை. பறவையையும் நீர்நிலையையும் முன்வைத்து யுகயுகமாக காலம் நிகழ்த்தும் ஆடல் அது. நீர்நிலைக்கு அருகில் நடந்தும் தாவியும் தன் வருகையை உணர்த்துகிறது பறவை. இதோ வந்துவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறது. கடந்த வலசைப்பயணத்திலிருந்து இந்த வலசைப்பயணம் வரைக்கும் சிறுகச்சிறுக உருவாக்கித் திளைத்திருந்த தன் நெடுங்கனவைத் தீண்டிப் பார்க்க அனுமதிக்கிறது நீர்நிலை. வலசைப்பயணமே காதல் பயணமாகிறது.

நிறுத்தம் தாண்டியதும்
வளைவில் நின்றிருந்த மரங்கள்
நிழலசைத்து விடை கொடுக்கின்றன

நின்ற மரங்களை வழியனுப்பி
கையசைத்துக் கடக்கிறது பேருந்து

விடை பெறுவதா, கொடுப்பதா
என்று
புரியாமலேயே பயணிக்கிறது
போகிற போக்கில் உதிர்ந்து
இருக்கையில் அமர்ந்த இலைகள்

புன்னகைக்க வைக்கும் ஒரு காட்சியை அழகானதொரு சொல்லோவியமாக தீட்டிக் காட்டியிருக்கிறார் விஜயானந்தலட்சுமி. பேருந்து தன் போக்கில் மரத்தைக் கடந்துசெல்லும் ஒற்றைக் கணத்தில் நிகழ்ந்துவிடும் மாயத்தைச் சித்தரிக்கிறது கவிதை. இலைகள் மரக்கிளையிலிருந்து உதிர்ந்து, தன் போக்கில் பேருந்துக்குள் பறந்தலைந்து வந்து அமரும் கணம், அற்புதமானதொரு கணம். அந்த இலைகளுக்கு நம் விருப்பம்போல பல உருவங்களைக் கொடுக்கலாம். ஒவ்வொரு உருவமும் அக்கவிதையின் அழகையும் ஆழத்தையும் அதிகரிக்கவே செய்கின்றன. அது உணர்த்தும் பரவசத்தவிப்பு ஈடு இணையற்றது.

Vijayananda Lakshmi Poems Collection Udanpaattu Veil (உடன்பாட்டு வெயில்) Book Review By Writer Pavannan. Book Day And Bharathi Puthakalayam.

ஒரு கோடி சொற்களிலிருந்து ஒரே ஒரு சொல் மந்திரத்தன்மை அடைவதைப்போல, ஓராயிரம் கற்பாறைகளில் ஒரு பாறையிலிருந்து சிற்பம் எழுவதுபோல, எண்ணற்ற கடற்பாறைக்குவியலில் ஒரு குவியல் பாறை பவழமென்றாவதைப்போல, கிளைதோறும் இலைகொண்ட மரத்திலிருந்து ஒன்றிரண்டு இலைகள் மட்டும் உதிர்ந்து பறந்துசென்று பேருந்தின் இருக்கையில் அமர்கின்றன. அது ஒரு வாய்ப்பு. தனித்துப் பிரிந்து செல்லும் பேறு பெற்றவை. தன் வாழ்க்கைக்கான இலக்கென வேறொன்றைக் கொண்டவை. பிரிந்து செல்லும் இலைகளையும் பிறிதொருமுறை பார்க்க இயலாத மரத்தையும் ஒரே காட்சித்துண்டாக முன்வைக்கிறார் விஜயானந்தலட்சுமி. விடை கொடுப்பதா, விடை பெறுவதா என்ற கணநேரத்துக் குழப்பமும் அக்காட்சியில் இணைந்துகொள்கிறது.

இரைகவ்வி வந்த பறவையின்
வெற்றுக்கூட்டில்
ஒலித்துக்கொண்டே இருக்கும்
இல்லாத குஞ்சுப்பறவைகளின்
கதறலைப்போல
நீ விட்டுச் சென்ற பொழுதுகள்

குஞ்சுகளுக்காக இரைதேடிச் சென்ற பறவை திரும்பிவரும்போது குஞ்சுகளைக் காணவில்லை. கூடு மட்டுமே இருக்கிறது. குஞ்சு எப்படி மறைந்தது என்பது அந்தத் தாய்ப்பறவைக்குப் புரியவில்லை. பருந்துகளின் பார்வையில் சிக்கி இரையாகிவிட்டதோ என்பதும் தெரியவில்லை. உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதும் தெரியவில்லை. தன்னிச்சையாகப் பறந்துவிட்டதா என்று அறிந்துகொள்ளவும் வழியில்லை. குழம்பித் தவிக்கும் தாய்ப்பறவையின் நெஞ்சில் கூட்டின் வெறுமை தகிக்கவைக்கிறது. இல்லாத குஞ்சுகளின் குரல்கள் பேரோசையோடு அதன் காதில் அறைகின்றன. விஜயானந்தலட்சுமி கவிதையை அத்துடன் நிறுத்தவில்லை. அதற்கு ஒரு மானுட இருப்பை அளிக்கிறார். ஒருவர் பிரிந்துவிட, இன்னொருவர் அடையும் தனிமையின் வெறுமையோடு அந்தப் பேரோசையை இணைத்துக் காட்டுகிறார். குஞ்சுகள் எப்படி மறைந்தன என்பது எப்படி புதிராக விடப்பட்டதோ, அதேபோல விலகிச்சென்றவரின் பிரிவும் புதிராகவே விடப்பட்டுவிட்டது. அவர் வேறு ஏதேனும் சூழலின் நெருக்கடிக்கு இரையானவரா அல்லது ஆணவக்கொலைக்குப் பலியானவரா என்பதெல்லாம் புதிராகவே உள்ளது. அவர் பெண்ணா, ஆணா என்பதும் புதிராகவே உள்ளது. மொத்தத்தில் அவர் இல்லை. அது மட்டுமே உண்மை. அவர் காதுகளில் எதிரொலித்தபடி இருக்கும் இன்மையின் பேரோசையை ஒருவகையில் உண்மையின் பேரோசை என்றே சொல்லவேண்டும். விஜயானந்தலட்சுமி அக்கவிதைக்கு ஒரு மானுட இருப்பை வழங்கும்போது, அக்கவிதைக்கு ஒரு சமகாலத்தன்மை வந்துவிடுகிறது.

மின்சாரம் நின்று போனதும்
குளிர்பதனியிலிருந்து சொட்டுகிற நீர்
தரைமுழுதும் படரும்முன்
கோட்டுத்தடம் கிழித்து
வடிகாலுக்கு அனுப்பும் உத்தேசம் இருந்தது
நினைவுகளை எரித்துவிட்டு
புகையை
குடுவையில் அள்ளிக்கொண்டிருந்தவளின்
அம்மாவுக்கு

இன்மையின் வழியாக இருப்பை நினைத்துக்கொள்ளும் மற்றொரு கவிதை. தடம்வழி ஓடும் நீர் வடிகாலின் நீருடன் கலந்துவிடலாமே ஒழிய, அது ஒருபோதும் இல்லாமலாகாது. எங்கோ இன்னொரு வடிவில் இருந்துகொண்டுதான் இருக்கும். நினைவுகளும் அத்தகையவையே. அவை எரியூட்டப்படலாம். கரியாகலாம். சாம்பலாகலாம். இன்னொன்றுக்கு உரமாகலாம். அந்த உரத்தில் வேறொன்று வளர்ந்து நிற்கலாம். எதுவாக இருந்தாலும் அது ஆதிவடிவத்தின் மற்றொரு வடிவமாகவே நிற்கும். ஆதிவடிவம் என்பது அழிவற்றது. நிலையானது. அழிக்கும் முயற்சிகளைக் கடந்து உருமாறி நிலைத்திருப்பது. அதுவே இயற்கையென்னும் பேரிருப்பின் இயங்குவிதி.

தலைச்சுமையை இறக்கிவைக்க
ஒரு கல்லும்
இடுப்புப் பிள்ளையைத் தூளியாட்ட
ஒரு மரமும்
கிடைத்துவிட்டன
பிள்ளை எழுந்துவிடாமல்
சுமைக்குத் தூரம் போகாமல்
மனதை இறக்கிவைக்க
கண்ணுக்கெட்டும் வரைக்கும்
நீண்டு கிடக்கிறது காட்டுவெளி

அதிக விளக்கங்களோ குறிப்புகளோ எதுவும் தேவைப்படாத கவிதை. மனபாரத்தை இறக்கிவைக்க வழியற்ற நிராதரவான புள்ளியை நோக்கி விரையும் எளிய கவிதை என்றாலும், முடிவேயின்றி காலம்காலமாக இம்மண்ணில் தொடரும் அத்துயரம் எப்போது இல்லாமலாகும் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

பனியின் கதவுகள் திறந்ததும்
நழுவக் கிடைத்த நொடியில்
தலைகீழாக வழிகிறது நீர்
அது தன்னிலிருந்து விடுபடும் பேருவகையை
அசையாமல் பார்க்கிறது மலை

ஒரு மலை. அதன் மீது வழியும் அருவி. அருவியைப் போர்த்தியிருக்கும் பனி. ஒரு குழந்தையின் துள்ளலையும் ஆடலையும் பார்த்து மெய்மறந்து ரசிப்பதுபோல தாயென பனி விலகி வழிந்தோடும் அருவியின் நடனத்தைக் கண்டுகளிக்கிறது மலை. அந்தக் களிப்புதான் கவிதை. அது தாய்மையென்றும் சொல்லலாம். தந்தைமை என்றும் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு அழகான தருணம். அந்தத் தருணத்தில் தன்னையிழந்து வியந்து நிற்கிறார் கவிஞர்.. வியப்பின் வழியாக தாய்மையையும் தந்தைமையையும் உணர்ந்து ஒரு புள்ளியில் இறைமையையும் தொட்டுவிடுகிறார். இது அவர் பெற்ற பேறு. அவர் வழியாக வாசகர்களும் பேறு பெற்றவர்களாகிறார்கள்.

(உடன்பாட்டு வெயில் – கவிதைகள்.
விஜயானந்தலட்சுமி.
சந்தியா பதிப்பகம்,
53 வது தெரு,
9 வது அவென்யு,
அசோக் நகர்,
சென்னை -83.
விலை. ரூ.100)

Eleven Poems by Vijayananda Lakshmi in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

விஜயானந்த லட்சுமியின் பதினொன்று கவிதைகள்



1) இங்கேதான் நான் இருந்தேன்
என்பதற்காக
ஒரு கூடு கட்டிவைத்துவிட்டுப் பறக்கிறேன்

என் அடையாளம் அதுவல்ல என்பவர்கள்
கண்டு கொள்வதற்காகவே
இறகுகளை அசைக்கிறேன்
வானின் கீழ்

நம்புங்கள்..
நானே என்னை
அப்படித்தான் கண்டு கொண்டேன்.

2) கதவுகளில்லாது
வெறும் கண்காட்சிக்காக
அந்தச்சிறை
சில நாட்கள் ஒரு உறவு
அங்கே தங்கியிருந்ததை
சுவரின் கிறுக்கல்கள் மட்டுமே
சொல்லிக்கொண்டிருக்கும்

3) குளம்புகளால் மட்டும் சுவைக்கப்படும்
கடிவாளமில்லா
நடைபாதை சிறு செடிகள்

கொம்புகளோடு பிணைத்திருந்த
புற்கட்டுகள்
பச்சைவாசத்தோடு
பசியின் தொடுவானம்

தலைகளை
அவசர அவசரமாக
வண்டியில் பூட்டிக்கொள்கின்றன
மாடுகள்

தார்க்குச்சி தீண்டலில்
அளக்கப்படுகிறது
தீர்வையாகாத
ஆசையின் கனபரிமாணம்

Eleven Poems by Vijayananda Lakshmi in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

4) மின்சாரம் நின்று போனதும்
குளிர்பதனியிலிருந்து சொட்டுகிற நீர்
தரைமுழுதும் படரும் முன்
கோட்டுத்தடம் கிழித்து
வடிகாலுக்கு அனுப்பும் உத்தேசம் இருந்தது..
நினைவுகளை எரித்துவிட்டு
புகையைக்
குடுவையில் அள்ளிக்கொண்டிருந்தவளின்
அம்மாவுக்கு

5) நகரும் கூட்டினை யார் திறந்ததோ
தலைகீழாய் விழும் பறவைகளைத்
தெறிக்கவிடுகிறது நிலம்

நீந்தும் சிறகுகளுக்கு
நதியை அடையாளம் தெரிகிறது
நதி அறியாதவர்களுக்கு
சிறகுகளே வழிகாட்டும்

போதும்
நீங்கள் தாழ்வாரங்களில்
பாத்திரங்களை நிரப்பியது
நுழைந்து செல்லுங்கள்
மழைக்கென்ன கதவா இருக்கிறது?

6) கரைந்துவிட்ட நிலவொளி உண்டு
சுருங்கிவிட்ட சூரியச்சருகும் உண்டு
கரையும் இல்லாத
அலையும் இல்லாத
கடலுக்குச் சொந்தக்காரி நான்
என் உள்ளங்கையில் இருக்கிறது
ஓர் உப்புக்கல்

Eleven Poems by Vijayananda Lakshmi in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

7) தூரப்பயணம் செய்து
தன்னை அடைந்த பறவைக்கு
நெடுங்கனவொன்றின் முனையைக்
கொத்தத்தருகிறது நீர்நிலை

8) தீமுகில் உதிர்த்த ஆறெனப் பரந்த
பாலைப் பெருமணலில்
கொடூரத்திற்கு எதிராகப்
பாலைச் சுரந்து பூத்திருக்கும் கள்ளிக்கு
இனித்துக் கிடக்கின்றன முட்கள்.

9) அப்பாவின் போதையைவிட
அம்மாவின் ‘சகிப்பு’ நாற்றம்
அவன் தூக்கத்தை
இடறிக் கொண்டே இருக்க
நாளைய உறக்கத்திற்கு
அவனுக்கும் அகப்படலாம்
ஏதேனுமொரு போதை
அம்மாவுக்கும் வாய்க்கும்
வெட்டியான் நுகர்வு.

Eleven Poems by Vijayananda Lakshmi in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

10) எரியும் ஓவியத்தை
வரைந்த தூரிகைக்கு
அதன் கீழேயே
சிலை வைக்கிறது நெருப்பு

11) நெருப்பின் நாவால்
நனைந்து மருண்டு
அலமந்து பறக்கும்
தேனீக்களின்
கடைசிப் புகலிடம்
கொடுக்குகள்