தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
ஒரு பாடலை எழுத எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என ஒவ்வொரு பாடலாசிரியரிடமும் கேட்கப்படும் கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொன்ன பதில் அழகானது அதே நேரம் ஆச்சரியமானது. அதிக பட்சம் அரை மணி நேரம் என்கிறார். சில பாடல்களை பத்து நிமிடங்களில் எழுதியதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் பேராற்றல். நானெல்லாம் பாடல்களை எழுதுகிற அவஸ்தையை அருகில் இருந்து நீங்கள் பார்த்தீரேயானால் என் தெரு இருக்கும் திசையைக் கூட திரும்பிப் பார்க்க மாட்டீர்கள். காரணம், எழுதும் பாடலுக்குள் ஓர் எழுத்தும் எனக்குப் பிடிக்காமல் இருக்கக் கூடாது என்கிற எனது தீவிரம், மற்றும் குப்பைத் தொட்டியில் போடுவதற்கொரு பாடல் வேண்டும் என்று கேட்டாலும் அதை அழகான பாடலாகவே எழுதித்தரும் பழக்கம் என்னிடம் உண்டு. அதனால் அந்த அவஸ்தையை நான் விரும்பியே ஏற்றிருக்கிறேன்.
எழுதி மெட்டமைப்பதில் மெட்டுக்கொரு பரிமாணமும், மெட்டுக்கு எழுதுவதில் எழுத்துக்கொரு பரிமாணமும் உண்டு. இதை அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மெட்டுக்கு எழுதும் போது எனக்கு நேரம் கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறது. மெட்டில்லாமல் எழுதுகிறபோது நேர மிச்சமும் சுதந்திரமும் கிடைக்கிறது.
ஒரு பாடல் எப்படி எழுதப் பட்டாலும் அதற்கு இசை அத்துணை முக்கியம். இசை தான் எழுத்துக்களை தேனில் ஊறவைத்து தேரேற்றுகிறது. இசை தான் எழுத்துக்களுக்கு போதை ஊற்றிக் கொடுக்கிறது, அதன் தள்ளாட்டமே நடனமாகிறது. இதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்,
“கவிதை
மொழிக்கு ஆடை கட்டுகிறது
இசை தான் றெக்கை கட்டுகிறது” என்பார்.
திரைப்படங்களில் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது பலருக்கும் பிடித்தமான விசயமாக உணர்கிறேன் காரணம், நான் கல்லூரிகளுக்கு விருந்தினராகப் போகிற போதும், நண்பர்கள் வட்டாரத்திலும் நான் பாடலாசிரியரான காலந்தொட்டே கேட்டு வருகிறார்கள் இந்தக் கேள்வியை.
கதையை உருவாக்கும் போதே ஒரு இயக்குநர் பாடலுக்கான இடங்களையும் முடிவு செய்து விடுகிறார். தயாரிப்பாளரிடத்திலும் கதாநாயகன் கதாநாயகியின் முன் கதை சொல்லும்போதும் பாடல் வருகிற இடங்களைக் குறிப்பிடுகிறார். பின்னர் இசை அமைப்பாளரிடம் கதை சொல்லி முடித்து பாடலுக்கான சூழலையும் சொல்லுகிறார். இசையமைப்பாளர் இயக்குநர் திருப்தி கொள்ளும்படியான அளவுக்கு மெட்டுக்களைப் போட்டுக் காட்டுகிறார். இறுதியாக ஒரு படத்திற்கு ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கான மெட்டுக்களைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பாடலையும் யார் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கவிஞர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல்களை வைத்துக்கொண்டு திட்டமிடுகிறார்கள். அதன்படியே ஒவ்வொரு மெட்டையும் அந்தந்த கவிஞர்களுக்குக் கொடுத்து எழுத வைக்கிறார்கள்.
இன்று நீங்கள் கேட்கும் பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அனைத்தும் முதன் முதலில் கேட்கும்போது பாடலை எழுதப்போகிறவர்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்று இருக்கும் . ஆரம்ப காலத்தில் தத்தகாரம் புரியாமல் அண்ணன் இயக்குநர் அருள்ராஜன் அவர்களிடம் அவரின் படப்பிடிப்பிற்கு நடுவில் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். அதன் பின் என் நண்பர் இசையமைப்பாளர் செல்வ தம்பியிடம் சந்தேகத்தை கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.
இப்படி அல்லல்பட்டு தத்தகாரத்தை உள்வாங்கி பின் சொன்ன சூழலுக்கு மீட்டர் பிசகாமல் எழுதவேண்டும். ஒரு பாடலுக்கு ஒன்பது பாடல் எழுத வேண்டும். அப்போது தான் ஒரு பாடல் உருவாகும். இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு பல்லவியிலும் ஒவ்வொரு சரணத்திலும் இரண்டு இரண்டு வரிகளாகப் பொறுக்கி ஒன்று சேர்த்து ஒரு பாடல் உருவாகும். அப்படித்தான் “பீமா” படத்தின் “மெகு மெகு” பாடலுக்கு நண்பர் நா. முத்துக்குமார் 20 பல்லவி நாற்பது சரணம் வரை எழுதினார். ஆடுகளம் படத்தின் “ஒத்த சொல்லால” பாடலுக்கு நண்பர் வெற்றிமாறன் அவர்கள் கேட்காமலேயே 15 பல்லவி, 15 சரணம் எழுதிக் கொடுத்தேன். அவர்களுக்கு எல்லாம் பிடித்துப் போய் எதை வைப்பது எதை ஒதுக்குவது என்பதில் சிரமம் இருந்ததாக இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமார் சொல்லியிருக்கிறார்.
ஒரு பாடலுக்குத் தேவையான ஒரு பல்லவி இரண்டு சரணங்களை எடுத்துக் கொண்டு இயக்குநரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரிடம் செல்ல, அங்கே வரிகளை இசையமைப்பாளர் அந்த மெட்டிற்குப் பாடிப் பார்ப்பார். எங்காவது மீட்டர் இடித்தால் பாடலாசிரியரை அதை சரிசெய்து கொண்டு பின் ட்ராக் சிங்கர் வைத்து அல்லது இசையமைப்பாளரே ட்ராக் வாய்ஸ் பாடி வைத்துக் கொள்வர். அவசரமாகப் படப்பிடிப்பிற்குக் கிளம்பும் இயக்குநர்கள் ட்ராக் வாய்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு செல்வதுண்டு. அவசரமில்லையெனில் இந்தப் பாடலுக்குத் தேவையான பாடகரைத் தேர்வு செய்து குரல் பதிவு நடத்தி தேவையான இசைக் கோர்வைகளைச் செய்து மிக்ஸிங் மாஸ்டரிங் செய்யப்பட்டு பாடல் இறுதி நிலை அடைகின்றது.
ஒரு பொறுப்பு மிக்க பாடலாசிரியராக நான் பாடல் பதிவின் போது பாடகரின் மொழி உச்சரிப்பை மிக உற்று கவனிக்கிறேன். மொழி சிராய்ப்பு நடக்கவிடாமல் முடிந்த அளவு சரி செய்கிறேன். பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று எழுபது சேனலுக்கு பேட்டி கொடுக்கிறோனோ இல்லையோ, பாடல் பதிவில் கலந்து கொள்ள பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. எனக்கு அதைவிட இதுதான் முக்கியம், காரணம் பாடல் பதிவின் போதுகூட பாடலின் மெருகேற்றலுக்காக சில வார்த்தைகளை மாற்றம் செய்வேன். இப்படித்தான் நண்பர்களே ஒரு பாடல் உருவாகிறது.
எழுதுகிற எல்லா பாடல்களும் ஒலிக்கூடத்தின் பதிவுவரை செல்வதில்லை. ஒலிப்பதிவு செய்த எல்லா பாடல்களும் திரைக்கு வருவதில்லை. திரைக்கு வரும் எல்லா பாடல்களும் வெற்றி பெறுவதுமில்லை. அதே போல் வெற்றிபெறும் பாடல்கள் எல்லா நல்ல பாடல்களும் அல்ல வெற்றி பெறாத பாடல்கள் எல்லாம் மோசமும் அல்ல. ஏனெனில் பெரிய ஹீரோக்களுக்கு எழுதப்படுகிற சுமாரும் சூப்பராகிவிடும். புது முகங்களுக்கு எழுதப்படுகிற சூப்பரும் சுமாராகிவிடும்.
திரைப்படப் பாடல்களைப் பொறுத்தவரை பல்லவியின் முதல் இரண்டு வரிகள், மக்கள் முணுமுணுப்பதாக இருக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்வது வழக்கம். என்னைப் பொருத்தவரை எல்லாவரிகளுக்கும் மெனக்கிடுகிறேன். ஆனாலும் மக்கள் பாடலின் முதல் இரண்டு வரிகளைத் தாண்டி அந்தப் பக்கம் போகமாட்டார்கள். பாடல்களை மனனம் செய்துவந்து பாராட்டுகின்ற சில ரசிகமணிகள் இந்த லிஸ்டில் அடங்கார். ஒரு பாடலின் சரணங்களுக்கே இந்தக் கதி என்றால், “ராக்கமா கையத் தட்டு” பாடலின் இடையே வரும் ‘குனித்த புருவமும்” போன்ற துண்டு வரிகளைப் பிழைக்க வைப்பது பெரும் பாடு. ரஜினி படம் என்பதால் நாவுக்கரசர் எழுதிய தேவாரம் தப்பித்தது. அப்படியான பாடல்கள் எனக்கும் பல அமைந்ததுண்டு அவற்றில் சில உங்களுக்காக.
“ஈட்டி” படத்தில் ‘பஞ்சு மிட்டாய் மேல தீயப் பத்த வச்சாடா”‘ எனும் பாடலின் நடுவே, இளம் பெண்கள் குழுவாகக் கூடி மையத்தில் நின்றாடும் நாயகியின் அழகைப் பாடுவதாக,
“பேரழகாள் வருகின்ற
தெருவை அறிவானோ
கார்முகிலாள் தருகின்ற
அமுதம் குளிப்பானோ
கூர் விழியால் ஒருநாளிவன்
குத்திச் சரிவானோ”
“மதயானைக் கூட்டம்” படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய “கொம்பு ஊதி கொட்டடிச்சு கெளப்புங்கடா சக்க” என்கிற ஒரு திருமண விழா பாடலில், மணமக்களுக்கு திருமணம் முடிந்து முதலிரவுக்கு அனுப்பி வைக்கும் போது மணமகனின் நண்பர்கள் பாடுவதாக அமைந்த வரிகள்,
“சாமந்திப் பூவா
சக்கரப் பாகா
பாத்திட்டு வந்துதான்
சொல்லுங்க…
மூச்சுல வெயில்
கொட்டுறா குயில்
எதுக்க ஆம்பள
நில்லுங்க…
ஒத்தடம் போலத்தான்
நடந்தாள்
ஒருத்தரும் பாக்காத
தடந்தான்
தாழம்பூ அவளோட
நெறந்தான் – அவன்
தன்னையே மறந்து
கெடந்தான்”
நண்பர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், தர்புகா சிவா இசையில் “கிடாரி” படத்தில் மூன்று பாடல்கள் எழுதியுள்ளேன், அதன் முழு அனுபவத்தை வேறொரு கட்டுரையில் சொல்ல இருக்கிறேன், அதற்கும் முன்னதாக அந்தப் படத்தில் வரும், “வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும்” எனும் நண்பர் அந்தோனிதாஸ் பாடிய பாடலின் குறுக்காக, சசிக்குமாரும் அவரது காதலி நிகிதா விமலும் ஒரு சிறு வீட்டிற்குள் திட்டமிட்டுச் சந்தித்துக் கொள்கிறார்கள். அவள் முழு மூர்க்கத்தில் காதலனை சுவற்றில் சார்த்தி முத்தம் வைத்து முதலடி எடுத்து வைக்கையில் மனதின் தவிப்பை மருகலாய் எழுதினேன்.
“விரல் தொடும் தூரத்தில்
வர மிருக்கு
போதும் போதுமே நா வாழ
விடிய மறந்திடு ராத்திரியே
வேற எதுவும் வேணா
உருவம் பாத்தே
உசுரு போதே
என்ன மாயந்தான் நீ செஞ்ச
யாத்தே தாங்கல
தூத்தக் காட்டுல
போத ஏத்துதே மீச
தீபம் ஊமையா
போக சாபந்தான்
நானும் போடத்தான் ஆச
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 6: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 7: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி