நூல் அறிமுகம்: மீனா சுந்தரின் புலன் கடவுள் (சிறுகதை) – ஜனநேசன்
தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன் தொடங்கி நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். இத்தகு படைப்பு கண்ணிகளில் எழுத்தாளர் மீனா சுந்தரும் சேருகிறார்.
பழநியில் உள்ள கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் மீனா சுந்தரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “புலன் கடவுள் “ . கீழத்தஞ்சையில் பிறந்த கதாசிரியர் ,பழநியில் பேராசிரியராக இருக்கிறார் . புலம்பெயர்வு இவரது கதைகளிலும் எதிரொலிக்கிறது .பேராசிரியராக இருப்பினும் இத்தொகுப்பிலுள்ள இவரது படைப்புகள் பெரும்பாலானவை தமிழகத்துக்குள்ளே பிழைப்புக்காக புலம்பெயர்ந்த அடித்தட்டு மக்களைச் சுற்றியே அமைந்துள்ளதை உணரமுடிகிறது..
‘செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை ‘ எனும் கதை , அலுவலகத்தில் நிலவும் , லஞ்ச ஊழல் சூழலின் முடைநாற்றத்தை எடுத்துரைத்து காறி உமிழச் செய்கிறார். இக்கதையை வாசிப்பவர் எவரும் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவாராயின் அவரது மூக்கிலும் மலம் நாற்றத்தை உணர்ந்து ஒதுங்குவார். அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. ஆனால் மஞ்சள்கொன்றைப் பூவைப் பார்க்கும்போதும் இந்தக் கதையை நினைவுக்கு வரும் ஆபத்துமுண்டு.
‘ பெருகும் வாதையின் துயரநிழல் ‘எனும் இரண்டாவது கதை தாயையும், தங்கையையும் ஸ்கூட்டர் விபத்தில் இழந்த சிறுவனின் எதிர்வினையும், அதன் விளைவாய் தந்தை படும் வாதையையும் , வாசக நெஞ்சுருக எடுத்துரைக்கிறார்.. அடுத்துவரும் , ‘மிதவை’ கிராமத்துப் பண்ணையார், கிராமத்து பொதுக்குளத்தை ஆக்கிரமித்து செய்யும் அக்கிரமத்திற்கு எதிராகப் போராடும் முதிய விவசாயியின் கதை.கீழத் தஞ்சையின் ஈரம் மணக்கிறது. ‘நியதி ‘ கதை, கொய்யாப்பழம் விற்கும் முதிய தம்பதி, அனாதைக் குழந்தைகளைத் வளர்த்து படிக்க வைத்து மேம்படுத்தும் சீலத்தையும் , அவர்கள் இருவரும் கொய்யாபழம் விற்கும் நியதியையும் சொல்கிறது. வாசக மனம் ஆயக்குடி கொய்யப்பழத்தைப் போல இனித்து மணக்கிறது.
இக்கதையைப் போலவே பழநி நகரப்பேருந்து நிலையத்தைக் களமாக வைத்து இயங்கும் இன்னொருகதை ‘ சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று…’ செருப்புத் தைக்கும் தொழிலாளி, தனது மகனைப் படிக்க வைத்து தனது பால்ய நண்பனைப் போல பெரிய அதிகாரியாக உயர்த்தவேண்டும் என்ற லட்சிய ஆவேசத்தில் தனது நண்பனின் நினைவாக இருக்கிறார். ஆனால் சென்னையிலிருந்து வரும் உயரதிகாரியான நண்பன் .பால்யத்தில் உதவிய தன்னையே மதிக்காமல் உதாசினப்படுத்துவதும் அல்லாமல் குடியும் கூத்துமாய் இருக்கிறார். தடமாறிய நண்பனைக் கண்டு சினந்தெழும் வீராவேசம் தான் கதை. ஒடுக்கப்பட்டவரெல்லாம் மனத்தால் ஒடுங்கியவரல்ல என்று சுருக்கென்று சொல்லும் கதை.
‘ உயிர்வேலி’, ‘ நெகிழ் நிலச்சுனை ‘ போன்ற கதைகள் கிராமாந்திர தாய்மார்களின் தாய்மையை இருவேறு கோணங்களில் உருக்கமாகச் சொல்லும் கதைகள். இதேபோல, ‘தீய்மெய் ‘, ‘பாத்தியம் ‘ என்ற இருகதைகளும் தந்தை பாசத்தையும், அர்ப்பணிப்பையும் இரு மாறுபட்ட கோணங்களில் வாசகமனம் நெகிழ எடுத்துரைப்பன . ‘தவிப்பின் மலர்கள் ‘ கதையும் தந்தை மகனுக்கிடையே நிகழும் பாசப்போராட்டத்தை நாகசுரக் கலைஞர் குடும்பத்தைக் களமாகக் கொண்டு சொல்வது. நாகசுரக் கலைஞர் , நாகசுரம் வாசிக்கும்போது அவரது மெய்ப்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மீனாசுந்தர்.
‘புலன் கடவுள் ‘கதை, தேநீரை ரசனையோடு அருந்தும் இளைஞனின் அனுபவத்தை அவனுக்கு அமையும் முரண்பட்ட குடும்பச் சூழலை மெல்லிய நகைச்சுவை மிளிர சுவையாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ’தருணம்’ கதை ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவனது பெற்றோரின் துயரங்களை நெகிழ்வாய் வாசகமனதுக்கு இடம்பெயர்க்கும் கதை.
கதாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் , செய்யுள் வழக்கு, நாடகவழக்கு, உலக வழக்கு என்று சொல்லும்முறை அறிந்தவர் . அவற்றை கதைச்சொல்லும் நடையில் அங்கிங்கெனாதபடி கலந்திருக்கிறார் . காவியத் தன்மையான வர்ணிப்புகளோடு கதைகளைத் தொடங்கினாலும், வாசிப்பை இடறாமல் கதைநிகழ்வுகளை அடுக்கி வாசிப்பை இயல்பாக நகரச் செய்கிறார். கவித்துவமான கதைத் தலைப்புகள் கதையின் உயிர்ப்பான முதன்மை பாத்திரங்களுக்கு முரண் நிலையிலிருந்து அணுகச் செய்கின்றன.இதற்கு ‘மாமிச வெப்பம் ‘ போன்ற கதைகளைச் சுட்டலாம்.
கதையில் சொல்லப்படும் உவமைகளும் ,படிமங்களும் கூட முரண் அழகோடு மிளிர்கிறது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் , ‘வராக பேரரசன் படைசூழ ஆட்சி செய்வதாகச் சொல்கிறார்.’ கண்ணகி அவிழ்த்த கூந்தலாக விரிந்து நீண்டு செல்கிறது முத்துப்பேட்டை சாலை,’என்கிறார் . ‘கிராமத்து தெருக்கள் மண்புழுக்களாக உழண்டு கிடக்கின்றன ’ ; ‘அதிர்ச்சியின் சவ்வூடுபரவல் ‘ இப்படி நீண்ட பட்டியலிடலாம். எனினும் கதையின் உணர்ச்சிவேகம் குறையாமல் நகர்த்துகிறார் கதைசொல்லி.
மீனாசுந்தர் கல்லூரி பேராசிரியர் என்பதால் , இவர் இன்னும் சிறப்பான கதைகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தர வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை இக்கதைத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.
– ஜனநேசன்
நூல் : புலன் கடவுள் “ – சிறுகதை
ஆசிரியர் : மீனா சுந்தர்
விலை : ரூ.₹190/-
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை – தமிழில்: ரமணன்
முகநூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் ஜார்கண்ட் மாநில கவிஞர் ஜெசிண்டா கெர்க்கெட்டா அவர்களின் கவிதை வரிகளை பகிர்ந்திருந்தார். அவற்றை தமிழாக்கம் செய்திருக்கிறேன். இவர் ஓரோன் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். ‘anger’ மற்றும் ஜடோன் கி ஜமீன் என்கிற இரு மொழி கவிதை தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது கவிதைகள் ஆதிவாசிகளை இழைக்கப்படும் அநீதிகளையம் அவர்களது போராட்டங்களையும் சித்தரிக்கின்றன.
*****************
நாங்கள் நாகரீகத்திற்கு மாற
அவர்கள் காத்திருந்தார்கள்.
நாங்களோ
அவர்கள் மனிதர்களாக காத்திருந்தோம்.
[They are waiting for us to become civilised,
and we, for them to become human.]
——————————
ஆதிவாசி கிராமத்தின்
ஊடாக செல்லும் கவிதையில்
ஆற்றில் குளிக்கும் ஆதிவாசிப் பெண்ணின்
வெற்றுடம்பையோ
அல்லது
ஒற்றை ஆடையில் உடல் மறைத்து
ஈரம் உலராமல் வீடு திரும்பும்
இளம்பெண்ணையோ
சிலர் தேடினர்.
கவிதையில் ஆதிவாசிப் பெண்களை
தேடுவதை நிறுத்துங்கள்.
[In poetry that passes through an Adivasi village,
some people search
for the bare back of an Adivasi woman bathing in a river.
Having draped her body in a single piece of cloth
a still-damp young girl returning home.
Stop searching for Adivasi girls in poetry. ]
——————————
ஒரு கோயிலோ மசூதியோ அல்லது தேவாலயமோ
இடிக்கப்படும்போது
ஆழப்பதிந்த உங்கள் வேதனையில்
காலம் காலமாக பழிவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால்
காடுகளே புனிதமாய் கொண்ட அவர்களுக்கு
அதன் அழிவிற்கு யார் பதில் சொல்வார்கள் ஐயா?
[When a temple, mosque or church is broken
your pain is so deep
that you keep avenging it for centuries.
But they for whom the forest is sacred
who will pay them back for the destruction, sir? ]
—————————
ஒரு நாள் கடவுள்
எனக்கு பழக்கமானார்.
இப்போது
புகையிலை சுவை போல
அவர் வழக்கமான பழக்கமானார்.
[One day, God
became a habit for me.
Now God was a matter of habit
Like tobacco was a matter of habit.]
—————————
எங்களுக்கு
அவர்களின் கடவுளை அளித்தனர்.
‘உங்கள் பாவங்களிலிருந்து
அவர் விடுவிப்பார்’ என்றனர்.
‘நாங்கள் என்ன பாவம் செய்தொம்?’
என்று திருப்பிக் கேட்டோம்.
[They offered us their god
said he will free you of sins,
we asked
what sins have we committed?]
– ரமணன்
சாதி மயிர் அகவி கவிதை – விநாயக மூர்த்தி
மனிதர்களுக்குள் கோயில் எல்லை
வேறுவேறாய்
கட்டப்பட்டது
அப்பட்டமாய் புலப்படும்
கிராமத் திருவிழாக்களில்
அரசாங்கக் கவனிப்பில்
அசலூர்களில்
பெருங்கோயில்களில்
குடும்ப சகிதமாய்ப் போய்
மொட்டை போட்டு
கவுரவமாய் செலுத்துவர்
காணிக்கை
அங்கெல்லாம் மொட்டை போடும் மயிர்
எந்த சாதியென
எவனுக்கும் தெரியாது
திருவிழா வரும்போதெல்லாம்
பூஜை போக்குவரத்து
வெற்றுச் செயல்தான்
அர்த்த ராத்திரி
ஆடல் பாடலே
பிரதானம்
நன்கொடை
கொடுக்க விரும்பினாலும்
வாங்குவதில்லை நம்மிடத்தில் அவர்கள்
மாடி வீடு படிப்பு பதவி
நிலபுலம்
வளர்ந்து நிற்பவனையும்
பொருட்படுத்துவதில்லை
நாளுக்கொரு நாட்டியம் வகையறாக்களின் பங்களிப்பு
கச்சேரி
கரகாட்டம் கதா காலட்சேபம்
சனங்களும்
ஊரில் திருவிழா என்று
கறிகாய் ஆக்கி
அருகாமை உறவுகளை அழைக்கின்றனர்
போன மாதந்தான் முயல்வேட்டை திருவிழா கொண்டாடினாலும்
பெரிய தெரு திருவிழா என்றால்
சனங்களுக்கும் இருப்பு கொள்ளாது
நீலா அண்ணி
நெற்றி நிறைய நீருடன்
சும்மாடு கோலி
சடச்சுட பொங்கல் பானையை
தூக்கி வருவதைப்பார்த்து
நான் தான் கேட்டேன்
கோயிலுக்குள் போகலாமா நாம் என
நமக்குஅங்க வேலை இல்ல
‘நமக்கு இடம் இருக்கு தம்பி’
கோயிலத் தள்ளி
சனங்க அங்க தான் பொங்க வைக்கும்’
கோயிலுக்குள் மட்டுந்தான்
உடமாட்டாங்க
தெருவுக்கு சாமி வராதே ஒழிய
அங்கனையே ஒதுங்கி நின்னு
படைக்கலாம்’
மாரியாத்தா அருள் ஒளிர
அண்ணி சொன்னார்கள்
‘முயல் வேட்டை மாரியம்மனை
கும்புட்டதோட நிக்க வேண்டியதுதானே
திரும்ப என்ன
பெரிய தெரு மாரியம்மன் மயிறு தெரு மாரியம்மன்’
என்று சொல்ல
வாய் வரைக்கும்
வார்த்தை வந்தது சொல்லவில்லை
இந்த ஊரில்
மாவட்டம்
ஒன்றியம்
சட்டமன்றம்
பாராளுமன்றமென
அரசியல் மயிருக்குக்
குறையொன்றுமில்லை.
– விநாயக மூர்த்தி
கிராமத்தின் ஒரு மூலையில் கவிதை – ஆதிரன் ஜீவா
சூரியன் மறைந்தாலும் அதன்
ஒளி மறையாத அந்திமாலை
வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள்,
கூடுதிரும்பும் இணை மைனாக்கள்,
இளம்தென்னை உரசலோசை,
முந்தாநாள் முடிந்துபோன
சண்டையை மீளக்கொணர
வாசலில் அமர்ந்து
வசைபாடும் பக்கத்துவீட்டு அம்மா,
காற்றிலாடும் வேம்பின் கிளைகளில்
கொஞ்சிப் பேசிடும் பூனைக் குருவிகள்,
நாள்பூரா உழைத்துத் திரும்பும்
தாயின் அன்பிற்காய்க் காத்திருக்கும் சீருடைச் சிறுமி,
தூரத்துக் குளமொன்றில்
பெருந்துணியொன்றை அடித்துத் துவைக்கும்
‘தொப்’ ‘தொப்’பெனும் ஓசை,
எல்லாம் ‘அழகு’ தான் கிராமத்தில்.
இருந்தும் தவணை முறையில்தான் பிடிக்கிறது கிராமத்தை.
ஜாதியை தங்கள் பெருமையென
நினைக்கும் பல ‘மனித’ மனங்களால்.
ஜாதிவாரி தெரு இருக்கும் கிராமங்களை அழகென்று சொன்னால்
அழகுக்கே அது அவமானம்.
-ஆதிரன் ஜீவா
தங்கேஸ் கவிதைகள்
1
தோல் போர்த்திய எலும்புக்கூடு
ஏந்திய கரமொன்றில்
இரண்டு ரூபாய் நாணயத்தை திணித்துவிட்டு
ஏதோ தோன்றமுகம் பார்க்கிறேன்
வருடங்க ளுக்கு முன்பு
தொலைந்து போன
பெரியம்மாவின் சாயல் தென்பட
அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று
தன்னிச்சையாக
அவ்விடம் விட்டு நகர்கிறேன்
தம்பி என்றழைக்க நினைத்த வார்த்தையை
அவரசமாக விழுங்கி விட்டு
நான் போகும் திசையை வெறித்தபடி
நாணயத்தோடு
அதுவும் நகர்ந்திருக்க கூடும்
வேறு இடம் தேடி
2
வயலுக்குப் போனாலும் வரப்புக்குப் போனாலும்
பார்வதி வாரேன்
என்று சொல்லிவிட்டுப் போகும்
ஆண்டி தாத்தா
பாட்டியிடம் சொல்லாமல் போன
அன்று தான்
ரெட்டைப் புளிய மரப் பிஞ்சையில்
உழவுச்சாலுக்குள்ளேயே பிணமாக
கிடந்தார்
பார்வதிப்பாட்டியும் ஒரு நாள்
தெருப் பார்த்த திண்ணையில் சாய்ந்தவாறே
செத்துப் போயிருந்தாள்
எங்கள் அலுவலகத்தில் ஒரு நாள்
ஏ3 சார்
ஒரு தம்ளர் தண்ணிர்
தொண்டைக்குள் இறங்குவதற்கும் முன்பே
ஒரு வார்த்தை சொல்லாமல்
என் மடியிலேயே உயிரை விட்டிருந்தார்
ஒரு முறை
ஐநூறு மைலுக்கு அப்பாலிருந்த விற்பனைப் பிரதிநிதி
தந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக சொன்ன
குறுஞ்செய்திக்கு அலறியடித்து
இரவெல்லாம் பயணித்து
அதிகாலையில்
அவரை வந்து பார்த்த போது
வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும்
வயர்கள் செருகப்பட்டு கிடந்த அவரால்
ஒரு வார்த்தை பேச முடியவில்லை
கடைசி மூச்சு பிரியும் போது
கடைக் கண்ணோரம் சரிந்த
இரண்டு துளி கண்ணீர் மட்டுமே
உருண்டு விழுவதற்காக காத்திருந்தது
சிறிது வெளிச்சம் இருந்தாலும்
தொடர்ந்து வரும் நம் நிழல்
இருளுக்குள் வந்ததும்
சொல்லாமலே விடை பெறுவது போலத்தானா
மனிதர்கள் வாழ்க்கையிடமிருந்து
விடை பெறுவதும்
கங்கையாய் மாறிய கிணறு கவிதை – ஆதித் சக்திவேல்
(1940 களின் முற்பகுதியில் தமிழ் நாட்டின் சிற்றூர் ஒன்றில் நடந்த நிகழ்வு கவிதை ஆக்கப்பட்டுள்ளது)
வறட்சி
இயற்கையின் பாடம் அது
கோபத்தின் வடிகால் அன்று
இயற்கைச் சங்கிலியின்
மிக வலிமையான கண்ணி அது
சற்றே நீளமானதும் கூட
வறட்சியால்
ஈரம் குறைந்த வெப்பக் காற்றின்
பாரம் மூச்சில் கனத்தது
நீர் இழந்த மண்ணின் புழுதி
எங்கும் அதன் வாசம்
வாசலில்
வீதிகளில்
பாதங்களில்
கால்களில் – விளையாடும்
குழந்தைகளின் முழங்கால் வரை
கொஞ்சமும் பசுமை இன்றி
மஞ்சளாய் மாறிய இலைகளால்
தஞ்சம் தரத்தான் முடிந்தது
அப்புழுதிக்கு
வெப்பத்திற்கு பயந்து
உதிர்ந்த இலைகளோ
ஒளிந்து கொண்டன அப்புழுதியில்
அசை போட ஏதுமின்றி
புல் பூண்டுகள் காய்ந்திட
துருத்தி நின்றன
இளைத்துப்போன கால்நடைகளின்
விலா எலும்புகள்
தாகத்தில்
தம் ஒரே மூச்சில்
நீரைப் பருகி முடித்த
ஆற்று மணலில் பறித்த
ஊற்றுகளும் காய்ந்து
நாட்கள் பல ஆயின
நான்கு பக்கங்களிலும்
ஊரே நின்று நீர் இறைக்கும்
எங்கள் வாசலில் இருக்கும் கிணற்றில்
மேலிருந்து பார்க்கையில்
அலை அடித்துச் சிரிக்கும் நீர்
ஒரு மிடறில் அதன் குளிர்ச்சி
உடலில் கொடி கட்டிப் பறக்கும்
எண்ணெய் கண்டு நாளான
மர உருளையின் ‘தட தட’ச் சத்தம்
இன்னிசையாய்ப் பரவும்
தெருவெங்கும்
சலனமற்ற நீரில் முழு நிலவு
நிறம் மங்கா புராதன ஓவியமெனக்
காட்சி தந்து மனம் நிரப்பும்
பௌர்ணமி இரவுகளில்
காய்ந்து – அடியில்
கரும்பாறை தெரிந்தது இன்று
நீருக்கு மாற்றாய்
“எத்திசையில் சென்றாலும்
ஏழு எட்டு மைல் நடந்து
சுமந்தால் தான் நீர்”
ஓயாது சொன்ன அப்பா
ஒரு சில நாட்களில்
நோயில் படுக்க – அவருக்குப்
படுக்கையில் தான் எல்லாம
முதுமையைக் காரணம் காட்டியது ஊர்
அப்பாவைப் புரிந்த
எனக்குப் புரிந்தது
உண்மைக் காரணம்
“சேரி ஜனங்களை
ஊரில் யாரும்
தண்ணி சேந்த விட மாட்டாங்களே”
நினைவு வந்த போதெல்லாம்
தட்டுத் தடுமாறி சொன்னார் அப்பா
மறக்காமல்
அவர் பேசிய வார்த்தைகள்
திணறிய சுவாசத்தில் கரைந்து
தெளிவின்றி வெளி வந்தன
எதைப் பேசினார் எனத்
தெளிவாய்த் தெரிந்தது எனக்கு
“அடுத்த ஐப்பசி மழையிலும்
என் கிணறு வறண்டே இருக்குமோ?”
பயம் பிறழ்ச்சியுடன் வெளிப்பட
மரணத்தை நோக்கி – அது
வேகமாய் இழுத்துச் சென்றது அவரை
ஊருக்குக் குடி நீர் தருவதில்
இன்று என் முறை
நன்றாய்ப் புரிந்தது
நான் செயல்பட வேண்டிய தருணம் இதுவென
வெடி வைத்து பாறையைத் தகர்த்தால் ஊற்று கிடைக்கும் என
ஊரின் அனுபவம் சொன்னது
நானும் சம்மதித்தேன் நம்பிக்கையுடன்
தினம் இரண்டு, மூன்று வெடிகள்
பாறைகள் பாளம் பாளமாய் உடைந்து கிணற்றை நிறப்பின
திரியைப் பற்ற வைத்த பின்னும்
வெடிப்பதற்கு முன்னும்
நிலவும் நிசப்தத்தை அனுபவிக்க
வெடித்த பின் பாறைகள் பறப்பதை
வேடிக்கை பார்க்க வந்தோர்
அப்பாவின் நலனையும் விசாரித்து
விடை பெற்றனர்
அப்பாவின் நலன் விசாரிக்க வந்தோர்
வெடி வெடிப்பதையும்
வேடிக்கை பார்த்துச் சென்றனர்
மூன்றாம் நாள்
மூச்சுத் திணறத் தொடங்கியது
காட்டித் தந்தது அவர் முகம்
அன்று
முதல் வெடியில் விரிசல் விட்ட பாறை
பெரியதொரு ஊற்றுக்கு வழிவிட
அடி ஆழத்திலிருந்து
பீய்ச்சி அடித்த நீர்
கிணற்றுக்கு மேலே
ஆளுயரம் எழுந்து அதனுள் விழுந்தது
கரும்பாறைத் துகள்களுடன்
தொடர்ச்சியாக
கூடியிருந்தோர் ஒன்றாய்ச் சேர்ந்து “ஊற்று கிடச்சிருச்சு” என
இட்ட சத்தத்தில்
அப்பாவின் குழி விழுந்த கண்களில்
குளம் போல் தேங்கியது கண்ணீர்
மகிழ்ச்சி அவர் முகமெல்லாம்
நிறைந்து வடிந்தது
“சேரி ஜனங்க
நம்ம கிணத்திலெ
எப்பவும் சேந்துவாங்க அப்பா”
மகிழ்ச்சி பொங்கக் கத்தினேன்
அவர் காதுக்கு அருகில்
இதற்காகவே காத்திருந்தது போல் இரண்டொரு நிமிடங்களில்
அவரது உயிர் பிரியும் வேளை
“கங்கா தீர்த்தம் எடுத்துட்டு வாங்க”
சுற்றி நின்றிருந்தோர் சொல்ல
கிணற்றில் பீய்ச்சி அடித்த நீரில்
கொஞ்சம் கையில் பிடித்து
அவர் வாயில் ஊற்றினேன்
சொட்டுச் சொட்டாய்
அவருக்கு அது தான்
கங்கா தீர்த்தம் என எனக்குத் தெரியும்
மகிழ்ச்சியுடன் நீரை விழுங்கியது
அவர் முகத்தில் தெரிந்தது
நானும் கொஞ்சம்
என் வாயில் ஊற்றிப் பார்த்தேன்
அதன் சுவை கூடியிருந்தது இப்போது
மூச்சு நின்ற பின்னும்
அவரது கண்களில் நீர் பொங்கியதாய்
அருகில் நின்றிருந்தோர்
ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்
அப்பாவின் இழப்பிற்கு அப்பால்
இழுத்துச் சென்றது என்னை
கிணற்றில் கிடைத்த ஊற்று
அவரது தலைமாட்டில் ஏற்றி வைத்த
குத்து விளக்கு
மங்கலமாய் ஒளி வீச
இசையாய் ஒலித்தது பறை
தெருவில்
கறுப்புச் சந்தையில்
வெடி மருந்து வாங்கிய
கிணற்றின் சொந்தக்காரர்
அப்பாவைத் தேடி வந்த
பிரிட்டிஷ் போலீசுக்கு
அவரது சாம்பலைக் கரைத்த
கங்கையாய் மாறிய
எங்கள் கிணற்றைக் காட்டினேன்
ஊற்றில் நீர் பொங்கும் சத்தம்
கிணற்றின் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது
விடுதலைக்கு முன்பே
எல்லாக் கிணறுகளிலும்
சேரி மக்களைச்
சேந்த அனுமதித்த அச்சிற்றூர்
சேந்து கிணறு எனும்
சரியான அடைமொழியுடன்
எங்கள் தெருவிற்கு
அப்பாவின் பெயரைச் சூட்டி
அவரைக் கௌரவித்தது
தன்னைத் திருத்திக் கொண்ட அது
அது யாருடைய பிரேதம்? சிறுகதை – தாமோதர் மௌசோ
சற்று தள்ளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி, அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு நின்று பார்த்தார். பிவா வெயிலின் உக்கிரத்தால் உருகி ஓடும் தார்ச்சாலை அருகில் வயிற்றில் பசியோடும், தாகத்தோடும் நின்றிருந்தான். நடந்து நடந்து கால்களெல்லாம் ஓய்வுக்கு கெஞ்சின. சைக்கிளில் வந்தவர் முகக் கவசத்தை முக்கிலிருந்து லேசாக இறக்கி, பசியால் வாடிக் கிறங்கிப் போயிருக்கும் அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டார்.
“ஏம்ப்பா… அங்கே கிடக்கிற பிரேதம் யாரோடது ? உனக்கு வேண்டியவங்களா…?”
“யார்…யாருன்னு தெரியலைங்களே” பசி மயக்கத்தில் பிவாவினால் பேச முடியவில்லை.
“மரத்தடியில் நிக்கிற, பிரேதம் யாருதுன்னு கேட்டா மரம் மாதிரி நிக்கிறாயே…
அப்போது முகக் கவசம் அணிந்த இன்னொருவர் சைக்கிளில் வந்து இறங்கினார். பேசிக்கொண்டிருந்தவரின் முகத்தைப் பார்த்து, “ஏன் முகக் கவசத்தை நாடிக்குக் கீழே இறக்கிவிட்டிருக்கிறாய்? மூக்கின் மேலே ஏற்றிப் போடு” என்றவர் திரும்பி பிவாவை அருவருப்போடு பார்த்தார்: “அந்தப் பிணம் யாருதுனு ஏதாவது சொன்னானா?”
“ஒண்ணுமே தெரியலை என்கிறான். எப்போது இங்கு வந்து செத்துப் போனதுன்னு யாருக்குத் தெரியும்? புலம் பெயர்ந்து வருபவர்களை எவரென்று அறிய முடியாது.”
இரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரம் தேசிய நெடுஞ்சாலையை உற்று நோக்கினார்கள். ஊரடங்கினால் தார்ச் சாலையில் வெகுதூரம் வரையில் யாரும் தெரியவில்லை.
பல நாட்களாகவே வெளி மாநிலத்திலிருந்து ஜனங்கள் பெட்டிகளையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இந்த சாலை வழியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“நான் நேற்று மாலை வரை இந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். மக்கள் சாரை சாரையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. நேற்று இரவிலோ அல்லது அதிகாலையிலோ யாரோ இந்தப் பிணத்தை இங்கு கொண்டுவந்து போட்டிருக்கவேண்டும் அல்லது சம்பவ இடத்திலே வந்து இறந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?”
“பிணத்தைக் கொண்டுவந்து போடுகிறவர்கள் ஏன் சாலையிலிருந்து இருபது அடி தள்ளி இருக்கிற மரத்தடியில் போட வேண்டும்?” சைக்கிளில் வந்த மற்றொருவர் கேட்டார்.
“ஆமா… நேற்று இந்தப் பகுதியின் காவல் பணி நீதானே செய்தாய்? இரவு காவலரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அல்லவா நீ வந்திருக்க வேண்டும். வெளியூர்க்காரன் எவனாவது இந்த வழியே வந்து ஊருக்குள் நுழைந்திருக்கிறானா?”
பிணத்தைப் பற்றிய உரையாடல் அவர்களுக்குள் தொடர்ந்துகொண்டிருந்தது.
புலம்பெயர்ந்து இந்த சாலை வழியே நடந்து போய்க்கொண்டிருக்கும் ஏராளமான மக்களில் கொரோனா வைரஸ் பாதித்த யாராவது ஒருவர் ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக கிராமத்திலிருந்து ஊர்க்காவல் போட்டிருக்கிறார்கள். பெருந்தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இது வரை இந்த மாதிரியான சம்பவம் நடந்ததில்லை. வெளியாள் யாரும் ஊருக்குள் நுழைய முடியாது. அப்படியிருக்க இந்தப் பிணம் இங்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை. நடந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
“சரி. அதை விடு. அடுத்து இந்தப் பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவதென்று யோசிக்கலாம்”.
“போலீசுக்கு தகவல் சொல்லலாமா?”
“போலீஸ் வந்து என்ன செய்வாங்க? புகார் எழுதிக் கொடுக்கச் சொல்வாங்க…இறந்தவரைப் பற்றி நாங்க விசாரணை செய்துக்குறோம். இந்தப் பிணத்தை நீங்களே அடக்கம் பண்ணிருங்க என்பார்கள். நம் முதுகில் ஏறி சவாரி செய்துகொண்டு நம்மிடமே வேலை வாங்குவார்கள். இது தேவையா? அதற்கு முன் பிணம் அழுகி வீச்சம் எடுத்துவிடும். இன்னொரு முக்கியமான விஷயம். அந்தப் பிணம் கொரோனாவால் பாதித்திருந்தால் நம்ம கிராமத்திற்குள் வைரஸ் பரவ ஆரம்பித்துவிடும்”.
அவர்களில் ஒருவர் பிவாவை ஏற இறங்க பார்த்துவிட்டு சொன்னார்: “இவனையே ஏன் பிணத்தை அடக்கம் செய்யச் சொல்லக் கூடாது?”
“ நல்ல யோசனை. அவன் வெறும் ஆளாகத்தான் இருக்கிறான். அவனை பிணத்தின் அருகே போகச் சொல்லுவோம். கிராமத்துக்காரர்கள் யாரும் பிணத்தைத் தொட மாட்டார்கள். நாம் விலகியே இருப்போம்”.
இவ்வளவு நேரமாக அத்தனை உரையாடல்களும் பிவாவின் முன்னால் தான் நடந்துகொண்டிருக்கிறது. சுற்றி நடப்பதைப் பற்றிய பிரக்ஞை அவனுக்கு இல்லை. சோகங்களையும், துயரங்களையும் கடந்தே வந்திருக்கிறான். கொரோனாவைத் தேசிய பேரிடர் என்கிறார்கள். பேரிடர் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள்? கடந்த பல நாட்களாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அவன் கண்டது என்ன? பல்லாயிரம் மனிதர்கள் சொந்த வீடு நோக்கி வேகாத வெயிலில் கால் நடையாகப் பயணிக்கிறார்கள். பட்டினியால் மடிகிறார்கள். குழந்தைகள் பாலின்றி சாகின்றன.
தான் இவ்வளவு நேரமும் தகிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருப்பதை பிவா அப்போதுதான் உணர்ந்தான். சூரியனின் வெப்பத்திலிருந்து காக்க நிழல் பகுதியை நோக்கி நகர்ந்தான். உடனே அவர்கள் இருவரும் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள்.
“நில்லுப்பா… பிரேதம் யாருன்னு தெரியலைன்னா இருக்கட்டும். நீதான் அந்தப் பிணத்தை புதைக்க வேண்டும். அது வரையில் நீ போக முடியாது” என்று மிரட்டும் தொனியில் கூறினார்கள்.
பிவாவின் கால்கள் தளர்ந்து நடுங்கின. அவர்களின் பயமுறுத்தும் வார்த்தைகள் இன்னொரு பேரிடருக்குள் தள்ளியது போல் உணர்ந்தான். நா வறண்டு, கண்கள் உள்ளே போய், வயிறு ஒடுங்கி நிற்பவனைப் பார்த்து அவர்களில் ஒருவர் இரக்கத்துடன் கேட்டார், “பசிக்கிறதா?”
“தண்ணீர்…தண்ணீர் வேண்டும். கையில் காசு இல்லை.”
பேச்சே வரவில்லை. கொர கொரவென்று சத்தம் வந்தது. பட்டினியால் வயிறு ஒட்டிப் போயிருந்தாலும் அவன் உணவை நாடவில்லை. தொண்டைதான் வறண்டுவிட்டது. முதலில் தண்ணீர்தான் அவனுக்குத் தேவை.
“உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே வந்துவிடும். சொன்ன வேலையைப் பார்”. பிவாவுக்கு உணவும், தண்ணீரும் கொண்டுவர சைக்கிளை எடுத்து வேகமாய்க் கிளம்பினார்.
இவனுக்கு கொரோனா தொற்று இருக்குமோ…இவனை சைக்கிளில் ஏற்றிச் செல்ல முடியாது. மற்றொரு சைக்கிள்காரர் நினைத்துக்கொண்டார். பிவா அவர் பின்னால் தள்ளாடியபடி நடந்து சென்றான்.
கோவாவிலிருந்து புறப்பட்ட பிவா, நடை பயணத்தின் போது பல்வேறு மனிதர்கள் உடன் வந்தார்கள். தூக்கமிழந்து, நடை தளர்ந்து, பசியோடு நடந்து வந்தார்கள். அவர்களெல்லாம் இவனுக்கு கூட்டாளி ஆவார்களா? புலம் பெயர்ந்து பிழைப்பு தேடிப் போன ஒவ்வொருவரும் வீடு போய்ச் சேர வேண்டும் என்ற வேட்கையோடு திரும்பி நடந்து செல்கிறார்கள். பிவா கையிலிருக்கும் பணத்தை லாரி டிரைவரிடம் கொடுத்து இரண்டு வண்டியில் மாறி மாறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறான்.
சீக்கிரம் வீட்டிற்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. கோவாவிலிருந்து கிளம்பி பத்து நாட்களாயிற்று. கோலாப்பூருக்கும், சோலாப்பூருக்கும் இடையில்தான் தற்போது இருக்கிறான். ஊரை நெருங்கிவிட்ட குதுகலம் வந்தது. கையில் பணம் இருந்தால் இந்நேரம் ஊர் போய்ச் சேர்ந்திருக்கலாம். லாரி டிரைவரிடம் பணம் கொடுத்தால் வண்டியில் சரக்குகளோடு சரக்குகளாக ஏற்றி குறிப்பிட்ட தூரத்தில் இறக்கி விட்டுவிடுகிறார்கள். அவன் சொந்த ஊரான நான்டெட் இங்கிருந்து சில மணி நேர பயணம் என்றாலும் காசில்லாமல் எப்படி ஊர் போய்ச் சேர முடியும்?
அப்போது பிரேதம் இருந்த இடத்திலிருந்து அரைக் கிலோ மீட்டருக்கு அப்பால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இவனுக்கு தெரிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். எங்கே தன்னைக் கூப்பிட்டு: விடுவார்களோ என பயந்தான். இப்போது இந்த ஊர்க்காரர்களைப் பயன்படுத்தித்தான் நமது ஊருக்குப் போக வேண்டும். அவர்கள் பார்ப்பதைத் தவிர்த்து தலையைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் எல்லோரும் இவன் பார்வையிலிருந்து கடந்து போனார்கள். அவர்கள் ஏதாவது இவனிடம் கேட்டால் பதில் சொல்லும் தெம்பு இல்லை. சைக்கிள்காரர் கூடவே சென்றுவிட்டான்.
அருகில் வந்தபின்தான் அது பெண் பிணம் என்று தெரியவந்தது. ஐந்தாறு கிராமத்து ஆட்கள் பிணம் கிடந்த மரத்தடியிலி;ருந்து சமூக இடைவெளிவிட்டு நின்றிருந்தார்கள். பிரேதத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடிக் கலைகிற கூட்டம் போல் ஒரு தகவலும் பெற முடியவில்லை. பிரேதம் யாரென்ற விபரம் கிடைக்கவில்லை. ஆனால் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு பிணத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் கள்ள மௌனமாக இருந்தார்.
ஒரு பிணத்தை யாருடையது என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? ஒரு பெண் உயிரோடு இருந்தால் தாயாக, ஒருவரின் மனைவியாக, சகோதரியாக இருக்க முடியும். ஆனால் அவள் இறந்து விட்டாள். அவள் யாருக்குச் சொந்தமானவள்? முடிவில்லாத விவாதமாகத் தொடர்கிறது.
இந்தப் பிணத்திற்கு மட்டும் பேசக்கூடிய சக்தி இருந்தால், பாலின்றி பட்டினியால் மடிந்த அவளுடைய குழந்தையை மூன்று நாட்களுக்கு முன் சாலையோரம் புதைத்துவிட்டு வந்ததைச் சொல்லியிருப்பாள். இறந்த குழந்தையை சாலையோரத்தில் கிடத்திவிட்டு வா என்று அவளுடைய கணவன் வற்புறுத்தி அழைத்தான். தாயுள்ளம் கேட்கவில்லை. அவள் வர மறுத்த போது, இவர்களை விட்டு விட்டு அவன் சென்றுவிட்டான். பட்டினியாலும், தாகத்தாலும் மூன்று நாட்களாக நடந்து நடந்து குழந்தை இறந்த ஏக்கத்தோடு இவ்விடத்தில் அவள் உயிர் பிரிந்தி;ருக்கிறது,
பிவா பிரேதத்தின் அருகில் சென்று சுற்று முற்றும் பார்த்தான். சைக்கிள்காரர், கிராமத்து ஆட்களுடன் நெருக்கமாக நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“இறந்தவள் என்ன சாதியோ, மதமோ தெரியவில்லை. அவர்கள் வழக்கத்தில் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா?”
“எரித்தால் அதிகம் செலவாகும். பேசாமல் புதைத்துவிடுவதுதான் சரியானது” என்றார் ஒருவர்.
“புதைப்பதென்றால் எங்கே குழி தோண்டுவது? நமது ஊர் மண்ணில் இவளை புதைக்கக் கூடாது. ஊர் எல்லையைத் தாண்டி தாழ்வான பகுதியில்தான் அடக்கம் செய்ய வேண்டும்” என்றார் மற்றவர்.
புதைக்கிறவனுக்குக் கூலி கொடுக்க, வந்தவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தார்கள். ஒருவர் மிச்ச ரூபாயைப் போட்டு நூறு ரூபாயாக ஆக்கினார். சாப்பாடும் தண்ணீர் பாட்டிலும் வாங்க ஊருக்குள் போனவர் இன்னும் திரும்பி வரவில்லை. இங்கே இருப்பவர்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பிவாவை சத்தமாக அழைத்து வேலையை ஆரம்பிக்கச் சொல்லி, பாதுபாப்பாக பத்தடிக்கு அப்பால் தள்ளி நின்றுகொண்டார்கள்.
பிணத்தைத் தாழ்வான பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஊர்க்காரர்கள் பிணத்தைத் தூக்க உதவிக்கு வர மாட்டார்கள். என்ன செய்வது? எப்படியாவது கொண்டுபோக வேண்டும். வயிறு வேறு பிசைந்து கொண்டிருந்தது. விரைவில் வீட்டுக்குப் போக வேண்டும். சட்டென்று முடிவெடுத்தான். குனிந்து பிணத்தின் தோளுக்கடியில் கைகளைக் கொடுத்து இழுத்துச் சென்றான். முகத்தைப் பார்க்கவில்லை. பிணம் பயங்கரமாக கனத்தது. ஆனால் அவன் அடைந்த துயரத்தின் முன் இந்த பிரேதத்தின் கனம் சிறியதுதான்.
திடீரென்று அவனுக்கு தோன்றியது. ‘இறந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இழுத்துச் செல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் பிறந்து, வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக் கொள்பவர்களுக்கு கண்ணியமான முறையில் வழியனுப்பி வைப்பதே சிறந்த மனித நேயமாகும்’.
மீண்டும் குனிந்து பிணத்தின் பின் கழுத்தின் கீழும், முழங்கால்களுக்குக் கீழும் கைகளை வைத்து தூக்கினான். அவன் உடம்பின் எடையை விட பிணத்தின் கனம் அதிகமாக இருந்தது. கண்கள் இருண்டன. பின் நிதானித்து முழு பலத்தையும் திரட்டி தூக்கி நடந்தான்.
புதைக்கும் இடம் வரை பிணத்தைத் தூக்கி வந்ததால் மேல் மூச்சு வாங்கியது. வேகமாக சுவாசித்தான். நாய்கள் வேகமாக ஓடிவந்து மூச்சு வாங்கி இளைப்பது போல் தஸ் புஸ் என்று காற்று மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் வெளியேறியது. கீழே பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது. ஊர்க்காரர்கள் ஏற்கனவே குழி தோண்டி வைத்திருக்கிறார்கள். நல்ல வேளை குழி வெட்டும் கடினமான வேலை இல்லாமல் போனது. ஆனால் ஊர்க்காரர்கள் இவன் கடப்பாறை, மண்வெட்டியைத் தொட்டால் அதன் மூலம் கொரோனா தொற்று ஊருக்குள் பரவிவிடும் என்ற அச்சத்தில் தான் உள்ளுர்காரர்களை வைத்து புதை குழி தோண்டியிருக்கிறார்கள். ஊரின் ஒதுக்கத்தில் செல்லாத காசுகளை சேமிக்கும் உண்டியலாக இருக்கும் சுடுகாட்டில் கூட அந்தப் பிணத்தைப் புதைக்க ஊர்க்காரர்கள் விரும்பவில்லை.
“பிணத்தைத் தூக்கி உள்ளே போடு…”
தூரத்திலிருந்து கத்தினார்கள்.
பிவா அவ்வாறு செய்யவில்லை. பிரேதத்தைத் தூக்கி குனிந்து மெதுவாக உள்ளே இறக்கி படுக்க வைத்தான். அவன் மகள் இறந்தபோது இருக்கிற கண்ணீரெல்லாம் முழுவதுமாக வெளியேறி வற்றிவிட்டது. மனிதனுக்கு இருக்கும் ஒரே ஆசுவாசம் அழுகை மட்டுமே. அது கண்ணில் சுரந்துகொண்டிருக்கும் வரை வாழ்வில் எந்த சோகத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். இப்போது சிந்துவதற்கு கண்களில் நீர் இல்லை. தொண்டையில் கட்டி உருவாகி முழுவதும் அடைத்துவிட்டது போல் உணர்ந்தான். வாயெல்லாம் உலர்ந்து, உதடுகள் வெளுத்துவிட்டன. அடுத்த சாவு நானாகத்தான் இருக்கும். அவன் நினைத்துக்கொண்டான்.
“மண்ணைத் தள்ளி குழியை மூடு…”
மீண்டும் சத்தம் கொடுத்தார்கள். அவர்கள் போதும் என்று சொல்லுகிற வரை மண்ணை அள்ளி போட்டுக்கொண்டே இருந்தான். குழியளவிற்கு மேடாக்கி கல்லறை போல் ஆக்கினான்.
“சரிப்பா…வேலை முடிந்துவிட்டது. நாங்கள் போகிறோம்”.
காகிதத்தில் சுற்றப்பட்ட இரண்டு சப்பாத்திகளையும், தண்ணீர் பாட்டிலையும் கீழே வைத்தார்கள். ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்துவிடாமல் இருக்க அதன் மீது சிறு கல்லைத் தூக்கி வைத்தார்கள். நூறு ரூபாய் இதிலே இருக்கிறது எடுத்துக்கொள்.
வந்தவர்கள் அனைவரும் முகக் கவசங்களை சரி செய்துகொண்டார்கள். மிகப் பெரிய வேலையை மிக எளிதாக முடித்துவிட்ட திருப்தியில் சமூக இடைவெளிவிட்டு ஊருக்குள் திரும்பிப் போனார்கள்.
பிவா பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு தண்ணீரைக் குடித்தான். காகிதத்தை பிரித்த போது, அதில் தடித்த இரண்டு சப்பாத்தியும், பு+ண்டு சட்னியும் இருந்தன. சட்னியை சிறிது எடுத்து நாவில் தடவினான். வாயில் எச்சில் ஊறியது. கரகரப்பான வாசனை மூக்கைத் துளைத்தது. செரிமான உறுப்புகளெல்லாம் இயங்காததினால் அவனுக்கு பசியெல்லாம் இல்லை. சப்பாத்திகளை காகிதத்தில் சுருட்டி பேன்ட் பைக்குள் திணித்து, ரூபாய் நோட்டுக்களை எண்ணி சட்டைப் பைக்குள் வைத்தான்.
புலம்பெயர்ந்து போய் வேலை செய்து வாங்கிய சம்பளத்தையும், தற்போது இந்த வேலைக்குக் கிடைத்திருக்கும் கூலியையும் ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைத்தான். கடைசியாக புதை மேட்டின் மீது பாதங்களால் சிறிது மண்ணைத் தள்ளிவிட்டான்.
‘எனக்கு இது மாதிரி மரணம் வந்தால், நடந்து வரும் வழியில் எனது குடும்பத்தின் மூன்று உயிர்கள் ஒவ்வொருவராக பலியானதை, ஊரிலுள்ள அம்மாவும், அண்ணனும் எப்படி தெரிந்து கொள்வார்கள்? எனது உயிர் பிரியும் போது, அது எனது சொந்த ஊரில், சொந்த வீட்டில் நிகழ வேண்டு’மென்று நினைத்தான்.
கையில் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வந்தான். சூரியன் தனது நெருப்புக் கோளத்திலிருந்து வெப்பத்தை பூமியின் மீது இறக்கிக்கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை உக்கிரமான வெயிலை உள்வாங்கி அதை அப்படியே வெளியிட்டது. வானத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவனுடைய உடம்பின் தோலுக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.
சாலையில் நடந்தான். சட்டைப் பையில் உள்ள நூறு ரூபாய் அவனுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்தது. எதிர்காலத்தை நோக்கி வாழும் மனிதனின் இயல்புதான் இக்கட்டான சூழலிருந்து அவன் மீள உதவுகிறது.
இந்த நூறு ரூபாயை எந்த லாரிக்காரரிடம் கொடுத்தாலும் ஊரில்கொண்டுபோய் இறக்கி விட்டுவிடுவார். வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்.
நன்றி: இண்டியன் லிட்டரேச்சர்- 322
கொங்கணி மூலம் : தாமோதர் மௌசோ
ஆங்கிலம் வழி, தமிழில்: மாதா
மூலக் கதை ஆசிரியர் தாமோதர் மௌசோ அவர்களைப் பற்றி…..
தாமோதர் மௌசோ கொங்கணி மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளர். அடிப்படையில் சிறுகதைகள் அதிகம் படைப்பவர் என்றாலும், சிறுகதைகளும், நாவல்களும் அவருடைய படைப்புக் களமாக உள்ளது. இதுவரை அவர் கொங்கணி மொழியில் பதினேழு நூல்களும், ஆங்கிலத்தில் ஒரு நூலும் வெளியிட்டுள்ளார். மிக ஆழமான இலக்கிய விமர்சகரான இவரது நூல்கள் மராத்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன. “ கர்மெலின்” என்ற தமது முதல் நாவலுக்கு “சாகித்ய அகாதமி” விருது பெற்றவர்.
வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் பெற்றோர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் அமர்த்தப்படும் கோவா மாநிலப் பெண்களது பாடுகளையும், இன்னல்களையும் வடித்திருந்த அந்த நாவல் பதின்மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கேரள இலக்கியங்கள் கூடப் பேசாத அந்தக் கருப்பொருளைத் தமது நாவல் பேசியது என்று சொல்லும் மௌசோ, கொங்கணி இலக்கிய வரலாற்றில் கத்தோலிக்க சமூகம் பற்றிய முதல் பதிவும் இது தான் என்று சொல்கிறார். “சுனாமி சிமோன்” என்ற நாவலுக்கு” வி.வி. பை புரஸ்கர்;” விருது வழங்கப்பட்டது. கோவா அரசின் கலாச்சார விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அண்மையில் அவருக்கு ஒன்றிய அரசு, இலக்கியத்தில் மிக உயர்ந்த விருதான “ஞான பீட” விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர் மாதா எனும் மா தங்கராசு அவர்களைப் பற்றி ….
பள்ளி இறுதிக் கல்வி வரை மட்டுமே படிக்க முடிந்த எளிய நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்த மா தங்கராசு அவர்கள், அயல் மொழி இலக்கியங்களை வளமான தமிழில் மொழி பெயர்த்து வருபவர், இது வரை 21 மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மாதா என்ற இவரது புனைபெயரில் வெளியாகியுள்ளன. பல்வேறு விவாதப் பொருள்கள் மீதான 32 கட்டுரைகளும் படைத்துள்ள இந்த உற்சாகமிக்க 63 வயதுக்காரர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர். சமூக செயல்பாட்டாளர்.
நூல் அறிமுகம்: சோ. தர்மனின் தூர்வை – அன்புமணிவேல்
சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் சோ. தர்மன் ஐயா அவர்களின் எழுத்துகளில்… என் முதல் வாசிப்பு இந்த “தூர்வை”.
ஐயாவின் சூல், கூகை குறித்தான வாசகப் பார்வைகளைக் கண்டிருந்த வகையில்.. அவற்றுக்கான வாசிப்புத் தேடலில் இருந்த எனக்கு.. நினைத்துப் பார்க்காதவாறு கைக்குச் சிக்கியது.. “தூர்வை”.
அந்தக் காலத்தில் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்குச் சென்று நிராகரிக்கப்பட்டு குப்பைக்குப் போன “கதவு” போல.. அதே விகடனின் நாவல் போட்டிக்குச் சென்று நிராகரிக்கப்பட்டது தான் இந்த “தூர்வை” யுமென..
படைப்புலகத்தின் இலக்கணக் குறிப்பீட்டுக்குள் பொருந்தாது போன இந்த கதை சொல்லி பாவனையிலான படைப்புகளின் நிலை குறித்தான தனது வருத்தங்களை..
“ஒரு பருக்கைப் பதம்” என்று முன்னுரையில் மனம் திறந்திருக்கிறார் கி.ரா.
🌷தூர்வை:
ஒரு சம்சாரிக் கோப்புக்குண்டான வாழ்க்கைப் பாட்டுக்கு ஆதார வேராக இருக்கின்ற நிலமும் நீரும் எந்தெந்த வகையிலெல்லாம் சுரண்டப்பட்டு ஒரு நிலவுடமைச் சமூகம் பையப் பைய ஒரு தொழில் மயச் சமூகத்திற்குள் எப்படியெல்லாம் தள்ளப்படுகிறது என்பதனை உருளைக்குடியை முன்வைத்து.. ஒரு பன்னாட்டுப் பிரச்சனையைக் களமாக்கியிருக்கிறது “தூர்வை”.
ஒரு பரிதாபத்துக்குரிய பச்சாதாபத்துக்குரிய அடையாளமாகத்தான் இதுவரைக்கும் ஒரு தலித் சமூகம் நமக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில்.. நல்ல செழிப்பமும் வளப்பமுமான..ஒரு நேர்த்தியான கலாச்சார பண்பாட்டு வழிமுறைகளைக் கொண்டதான ஒரு தலித்திய வாழ்வியலை.. அறிமுகம் செய்திருக்கிறது உருளைக்குடி கிராமம்.
மினுத்தான்-பெரிய சோலை-சந்திரன் என்று மூன்று தலைமுறைகளை இழுத்துக் கட்டியவாறு நகர்கிறது கதை.
🌷முதல் தலைமுறை:
வெள்ளையன் விலாங்கு புடிச்ச கதை.. தொத்தப் பய துட்டி சொல்லிப் போன கதை..
வெள்ளெலி வேட்டைக்குப் போன சிவனாண்டி கதை.. பனை ஏறி பதினிக் கலயத்துக்குள்ள மிதந்த அயிரமீனுக் கதை..
கிடைக்காவல் சண்முகம் பொண்டாட்டி பெருமாத்தாளுக்கும் நல்லப்பனுக்குமான தொடுப்புக் கதை.. மகாதேவர் கோயில் அலப்பறைக் கதை..
எகத்தாளம் கூத்தாடுகிற சொலவடைகள்.. என்று நீளுகிற நூற்றுக் கணக்கான “கதைகளும்”…
உயிரோடு இருந்து கொண்டே தன் கருமாதிச் சோற்றைத் தானே தின்னும் குரூஸ்.. ரெண்டு தாரத்தையும் தீத்துக்கிட்டு ஓசிச் சோத்துக்குப் பண்டாரமா அலையுற முத்தையா… வெத்திலைச் சாறைத் துப்பிக்கிட்டே பேய்க்கதையா உருட்டித் தள்ளுகிற முத்துவீரன்…
சிலம்புக் கம்பு வாத்தியாரு ராமுக் கிழவன்… விலாங்குன்னு நினைச்சு வேட்டி நெறையத் தண்ணிப் பாம்பைப் புடிச்சாந்து நடுவீட்டுல கொட்டுன கெண்டல் சுப்பையா… தோத்தாத் தொங்கிருவேன்னு சேவச் சண்டையில கொடுத்த வாக்கைக் காப்பாத்துன உளியன்…
ஆண்டிப்பட்டி முனியம்மா.. மாசந்தவறாம பேய் புடுச்சு ஆட்டுகிற முத்தம்மா.. பஞ்சாயத்துக்குப் போறேன்னு ஊருலயும் வீட்டுலயும் பூசை வாங்கிக் கட்டிக்கிற மேகாட்டுச் சண்டியரு கருமலையான்… தாத்தையா நாயக்கரோட கெங்கம்மா அக்கா..
பருத்திக் களவாணி கூனன்… நரிவளர்த்தாப் பாட்டி… யென்று வெள்ளந்தி “மனிதர்களும்”.. சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கொட்டுச் சத்தம், வேட்டுச் சத்தமென்று கேளிக்கையும் வேடிக்கையுமான “வழிபாடல்”களுமாக…
திரும்பிய பக்கமெல்லாம் விதையும் பயறும்… மிதிபடுவதெல்லாம் காயும் கனியும்.. எந்நேரமும் நிறைமாச சூலியாய்த் தானியக் குலுவைகளும்.. கம்மங்களியும், வரகுக் கஞ்சியும், கேப்பைக் கூழும், குதிரைவாலிச் சோறுமென அடுப்பணையா வனப்புமாக…
மினுத்தானின் தலைமுறையைப் பதிவு செய்திருக்கிற பக்கங்கள் யாவும்.. செவிவழிக் கதைகளாக நம்மைச் சேர்ந்திருக்கும்.. நம் தாத்தனும் பாட்டியுமான உலகம்.
🌷இரண்டாம் தலைமுறை:
பொய்த்துப் போன மழையின் நீட்சியில்..
காய்ந்து போன காடுகரையும்
மாய்ந்து போகும் மானுடப் பாடுமாக..
இருட்டுப் பானை தடவும்
குருட்டுப் பூனையாகத்
தரிசுக் காட்டைக் கட்டியழுக முடியாது வந்த விலைக்கு மண்ணை மாற்றி பிழைப்புக்கென நகரம் பெயர்ந்து வாட்ச்மேனாகவும், கொத்தாளு சித்தாளாகவும், தீப்பெட்டி தொழிற்சாலை, சாக்குத் தொழிற்சாலையென்று இருட்டைப் பழக எத்தனிக்கும் இரண்டாம் தலைமுறையாக… மினுத்தானின் மகன் பெரியசோலை.
குரோதம், துவேசம், துரோகம், வன்மம், வஞ்சினம், பகைமை, பொறாமை இப்படியான துர்க்குணங்கள் எதுவொன்றும் இதுவரை அறிந்திடாத கேள்வியுறாத இப்படியான மண்ணின் மனிதர்கள்..
நிலவுடமைச் சமூகத்திலிருந்து தொழில்மய சமூகத்திற்குத் துரத்தியடிக்கப்பட்டு.. மேற்கண்ட அத்தனை கல்யாண குணங்களோடான நகரத்து வாடகை வீட்டில்..
முறுங்கைக் கீரையும் கறிவேப்பிலையும் காசுக்கு வாங்க நேரிட்ட தங்கள் காலத்தை நொந்து கொண்டு.. மூச்சு முட்டிப் போகும்
பிழைப்பாக..
நம் அம்மையும் அப்பனுமாக நம் கண் முன்னே.
🌷மூன்றாம் தலைமுறை:
ஊரான ஊருக்குள்ள ஆகப் பெரிய ஜமீனென்று
கதையாக மட்டுமே தங்கிப் போன தாத்தா..
அத்தனையும் வித்துப்புட்டு
கூலிக்கு கையேந்தும் அப்பன்..
பொறப்பே கூலிப் பொழப்பு தான்னு தன் இருட்டுப் பாதைக்கு வெளிச்சம் தேடுகிற கேள்விக் குறியோடு.. மினுத்தானின் பேராண்டி சந்திரனில் வந்து நிற்கிறது மூன்றாம் தலைமுறை.
இந்தப் புள்ளியில்..
கைப்புண்ணுக்குக் கண்ணாடியாக
நாம்.
🌷பெண்கள்:
காட்டையும் வீட்டையும் மலர்த்துகிற விடியலாக…
கொண்டவனின் வலுவாக..
மதியூக யோசனைகளைக் கடத்துகிற ராஜ தந்திரியாக…
மனித வாசங்களை அரவணைத்துச் செல்லுகிற
ஆதித் தாயின் நிஜமாக..
தன் முதுமையை எவருக்கும் பாரமேற்ற விரும்பாது
ஆகாரம் நீக்கி ஆவியைப் போக்கிக்கொண்ட
உணர்வின் திடமாக…
நம் தாய்வழிச் சமூகத்தின் அடையாளமும்
நம்பிக்கையுமாக…
ஒரு மாபெரும் அதிர்வு… “மாடத்தி”.
“தூர்வை” யின் மொத்தக் குருதியோட்டமுமே “மாடத்தி பெரியம்மா” தான். மாடத்தி தவிரவும்..
சீனியம்மா, பொன்னுத்தாயி, முத்தம்மாயென்று நீளுகிற அந்த மண்ணின் பெண்களால் மட்டுமே தான்.. இந்தக் கரிசலின் காடும் வீடும்..நகர்கிறது.
🌷கரிசல் காட்டின் மாண்பு:
மனங்கசந்த வாழ்வைத் தொடராது.. அவரவரின் மறு வாழ்வைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமையும்.. பெண்ணின் விருப்பத்தையொட்டியே வாழ்வும் தீர்வும் என்பதான மனப்பாங்கும்.. இன்றைய நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கையில் விரக்தியும் வெதும்பலுமே மிச்சமாகிறது.
🌷கதைகள்:
விதைப்பு, நாத்தறுப்பு, களையறுப்பு யென்று காட்டுக் கழனி வேலைகள் யாவையும் அலுப்புச் சலிப்பின்றி கடத்துவது.. அந்த மண்ணின் கதையாடல்கள் மட்டுமே. கதைகளாலேயே மனிதர்களின் வாழ்வு பின்னப்பட்டுக் கிடக்கிறது. கதைகள் தான் வயிற்றுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்துக்கு
உரம் ஏற்றுகின்றன.
நீரும் நிலமும் காடும் மலையும் பறவையும் விலங்கும் மண்ணும் மழையும் காத்தும் வெய்யிலுமான ஒரு தலைமுறையைக் கிளைக்கச் செய்யுமந்த ஆதி வேர்களின் கதைகளை.. இப்படியான கதைசொல்லிகள் தானே காலத்துக்கும் கடத்துகிறார்கள்.
இப்படியான கதைகளும் கதைசொல்லிகளும் இல்லாத இப்போதைய நம் வாழ்வு… வேர்களின் ஈரத்தை உணராத சருகின் நிலையாக.
🌷வாசிப்பனுபவம்:
ஊருக்கு வெளியே பயணிக்கையில.. “நிலம் விற்பனைக்கு” என்ற கூவலோடு.. கண்ணிலாடுகிற ப்ளாட் போடப்பட்ட பொட்டல் நிலங்கள்…
வருசத்துக்கொரு முறை மாசிப் படையலுக்கு ஊருக்குப் போகையில.. “மனுச மக்க யாருமில்லாம நான் மட்டும் வெறுச்சுனு இருக்க வேணாம்னு எல்லாத்தையும் வித்துட்டு இப்போ மகனோட தான் இருக்கேன்” னு வெறுமையாச் சிரிக்கிற எங்க கோவில் வீட்டு பூசாரித் தாத்தனும் அந்த அப்பத்தாவும்…
நாம எதையெல்லாம் இழந்திருக்கிறோம்.. எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற முடிச்சில்… தீர்வு நம் கையிலா… காலத்தின் கையிலா..? நிச்சயம்.. இதுவொரு ஆய்வுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய படைப்பு.
நூல்: தூர்வை
ஆசிரியர்: சோ. தர்மன்
வெளியீடு: அடையாளம்
பக்கங்கள்: 238
விலை:230