இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க? கவிதை – நல்லு ஆர் லிங்கம்
ஊரிலிருந்து வந்த அலைபேசி அழைப்பு
மரணச் செய்தி ஒன்றை அறிவித்தது
உறவினர் ஒருவரும் இணைந்துகொண்டார்
துக்கம் விசாரிக்கவும் வழித்துணையாகவும்
சாலையைப்போலவே அரட்டைகளும் நீண்டன
சினிமாவில் தொடங்கி அரசியலை அலசி
சமூகத்தின் பக்கம் பேச்சை நகர்த்தினோம்
ஊர் நெருங்கும் நேரத்தில் உரையாடல் நடுவே
‘இப்பல்லாம் யாரு மாப்ள சாதி பாக்கறாங்க?’ என்றார்
எதைச் சொல்லியும் அவருக்குப்
புரிய வைத்துவிட முடியாது என்றுணர்த்த
அவருடைய வசனமே போதுமானதாயிருந்தது
ஊருக்குள் நுழையும் முன்பு
வண்டிக்குக் கொஞ்சம் ஓய்வளித்து
‘வாங்க தோழர், ஒரு டீ குடிப்போம்’ என்றேன்
புருவங்களின் சுருக்கம் சொல்லாமல் சொன்னது
தோழர் என்ற சொல் அவர் நெஞ்சுக்குள் தைத்ததை
மச்சான் முறை கொண்டவன் தோழர் என்றழைத்தால்
தைக்காமல் வேறென்ன செய்யும்?
‘இப்போதெல்லாம் கிராமத்தில்கூட
இரட்டைக் குவளை இல்லை பாத்திங்களா?’ என்றார்
‘தேங்காய் சிரட்டைக்கு மாற்றாக
யூஸ் அன்ட் த்ரோ வந்தபின்னால்,
எச்சில் கிளாஸ் பிரச்சினையும் முடிந்தது’ என்றேன்
‘எல்லாத்துக்கும் ஒரு பதில்
இன்ஸ்டன்ட்டா வச்சிருப்பிங்களே’ என்றார்
தேநீர் முடித்து இழவு வீட்டுக்கு நடந்தோம்
தெரு முனை நெருங்கும்போதே
செவிப்பறை கிழித்தது தோல் பறையொலி
மலர் மாலையை மடிந்தவருக்குச் சாத்திவிட்டு
எங்கள் உடலை நெகிழி நாற்காலியில் சாத்தினோம்
அதிரடி இசைக்கேற்ப அங்கம் வியர்க்க
டாஸ்மாக் பானத்தின் உற்சாகம் கொப்பளிக்க
நடனக் கச்சேரி நடந்தேறிக் கொண்டிருந்தது
இறுதிப் பயணம் தொடங்கும் நேரம்
மரணத்திற்கு முன்பான மருத்துவமனை நாட்களில்
முளைத்த மயிரை மழிக்க வந்தார் ஒருவர்
உடலைக் குளிப்பாட்டி கோடி உடுத்தியபின்
சங்கு ஊதியபடி பட்டினத்தார் பாடல் பாட ஒருவர்
மூங்கில் கம்பில் பச்சை மட்டை வைத்து
சக்கரமற்ற வண்டியான பாடை கட்ட ஒருவர்
உறவுகள் தூக்கி அமரர் ஊர்தியில் வைக்க
ஊர்வலமாக வண்டி ஓட்ட ஒருவர்
மங்கையின் கூந்தல் மனிதரின் கடவுள்
இரண்டையும் சேர முடியாத மலர்கள்
இறுதி அஞ்சலியாக சாலையெங்கும்
அனுமார் போல வாலில் தீ வைக்கப்பட்ட வெடிகள்
வழியெங்கும் ஒலிபரப்பிச் சிதறின
இடுகாடு சேர்ந்து சடங்குகள் முடித்தபின்
பிணத்தைக் கிடத்தி கட்டையை அடுக்கி
எரியூட்ட ஒருவர் இருக்கின்றார் தயாராக
கொள்ளி வைத்த சொந்தங்கள்
இல்லம் நோக்கித் திரும்ப
பறையடித்தவர், நடனம் ஆடியவர்,
முழி மழித்தவர், சங்கு ஊதியவர்,
பாடை கட்டியவர், வண்டி ஓட்டியவர்
இரவு முழுக்கப் பிணத்தை எரிப்பவர்
எல்லோரும் சேர்ந்து வரவு செலவு பார்க்க
சிதையில் எரிபவரின் புண்ணியத்தில்
சில வேளை அடுப்பெரியும் இவர்கள் வீட்டில்
வந்தவழி திரும்புகையில்
வழியில் கிடந்த மாலைகளை
வெடித்துச் சிதறிய காகிதங்களை
விரைந்து வந்து அள்ளிக் கொண்டிருந்தனர்
துப்புரவுப் பணி செய்யும் சோதரர்கள்
மாநகர எல்லைக்குள் நுழைந்த போது
சாலையெங்கும் சாக்கடை பெருக்கெடுத்தது
நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தி
சேற்று நீர் தெரிக்காமல் காலைத் தூக்கினார்
எல்லா இடத்திலும் ஹைஜீனிக் பார்ப்பவர்
வீடு திரும்பும் சந்திப்பில் இருந்த
பாதாளச் சாக்கடை மூடியை நகர்த்தி
அருவருப்பு என்கிற அடையாளமே இன்றி
ஊரார் வெளியேற்றிய மலக்குழிக்குள் இறங்கி
அடைப்பை நீக்கிவிட்டு அயர்ச்சியோடு வந்தார்
அறுபதை நெருங்கும் முதியவர் ஒருவர்
காலை முதல் கண்ட காட்சிகள் யாவையும்
மீள்பார்வை செய்யும்படி உடன் வந்தவரிடம் சொல்லி
‘இவர்களில் ஒருவர்கூட
ஆண்ட பரம்பரையில் ஏன் இல்லை?
என்பதை மட்டும் எண்ணிப் பாருங்கள்’ என்றேன்
எப்போதும் என் கருத்திற்கு
ஏளனப் பார்வை வீசும் அவர்
ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார்
வீட்டுக்கு வாங்க, டீ குடிச்சிட்டுப் போலாம் என்றேன்
இருவரும் இணைந்து இல்லம் நுழைந்தோம்
இருக்கையில் அமர்ந்து, இல்லாள் தந்த
தேநீர்க் கோப்பையைக் கையில் ஏந்தி
தொலைக்காட்சியை இயக்கினேன்
வரிசையாக வந்து விழுந்தன
சாதிக்கு ஒரு மேட்ரிமோனியல் விளம்பரங்கள்
‘இப்பலாம் யாருங்க தோழர் சாதி பாக்கறாங்க?’ என்றேன்
எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டார்
அவர் கையில் இருந்த தேநீர்க் குவளைக்குள் விழுந்தன
இரு கண்ணீர்த் துளிகள்.