வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச வேண்டுமா? – நா.மணி
கோடை தொடங்கிவிட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பள்ளித் திறப்பு ஒருவேளை ஓரிரு வாரங்கள் தள்ளிப் போனால், மொத்தக் கோடை விடுமுறை நாட்களைக் காட்டிலும் குழந்தைகள் குதூகலம் அடைவார்கள்.
எத்தனை நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டாலும், திடீர் விடுமுறை குழந்தைகளுக்குப் பெரு மகிழ்வைத் தருகிறது. குழந்தையின் உலகம் பள்ளியில்லா உலகை வேண்டுகிறது. கற்பதையே இயல்பாகக் கொண்ட குழந்தைகள், பள்ளியைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள்.
ஒருவர் இருவர் அல்ல, 99% குழந்தைகள் மனச் சோர்வோடும் அவமதிப்புகளோடும் பெரும் பதற்றத்தோடும் அனுதினமும் வீடு திரும்புகிறார்கள். ஏனிந்த அவலம்? பள்ளி விடுமுறைக்காக குழந்தை துக்கித்து நிற்கும் நிலை வராதா? நிச்சயம் வரும். அதற்கு வன்முறையில்லா வகுப்பறை வேண்டும். மகிழ்ச்சி பொங்கும் வகுப்பறை வேண்டும்.
தடியெடுக்க தடைவிதிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்று? இன்னமும் வன்முறை பற்றி பேசுகிறீர்களா? என கேட்கலாம். பள்ளிக் கல்வியின் சகல தோல்விகளுக்கும் தங்களிடம் இருந்த தடி பிடுங்கப்பட்டதே என்ற பேச்சும் எழலாம்.
உங்கள் வீட்டருகே இருக்கும் குழந்தையிடம் கேளுங்கள். “உங்க மிஸ் அடிப்பாங்களா?” என்ற கேள்விக்கு, எத்தனை குழந்தை இல்லையென்று பதில் அளிக்கிறது பார்ப்போம். நாமும் நம் குழந்தையை அடக்க “உங்க மிஸ்கிட்டே வந்து சொல்லிடுவேன், டைரியில் எழுதிக் கொடுத்துவிடுவேன்” என்று எத்தனை முறை மிரட்டியிருக்கிறோம்! அதன் அடிப்படை என்ன?
“சீருடை, வாய் பொத்தி அமைதி, விசில், கையில் பிரம்பு, உரத்துக் கேட்கும் கட்டளைகள்” இத்தகு நிலையில் உள்ள பள்ளிக்கும் சிறைச்சாலைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால் என்ன பதில் இருக்கிறது? பொதுவெளியில் ஒருவர் தவறு செய்தால், போலீஸ் விசாரணை, வழக்குரைஞர்கள் வாதங்கள் இறுதியாக நீதிபதி வழியாக தண்டனையோ விடுதலையோ வாய்க்கும்.
ஆனால் இந்த மூன்று செயலையும் ஆசிரியர் என்ற ஒருவரே எந்தவித கேள்வியுமின்றி செய்கிறாரே இது அராஜகம் என்று கூறினால் அதற்கு மறுமொழி என்ன? குழந்தைகள் பேசத் துடிக்கிறது. தன்னிடம் உள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ள எல்லையில்லா ஆர்வத்தோடு இருக்கிறது. தன்னிடமிருக்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலைத் தேடி பரிதவித்து நிற்கிறது.
தன்னை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறது. தன்னை சக மனிதர்கள் ஆராதிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறது. குறைந்த பட்சம் சகமனிதனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது.
ஆனால், எல்லோர் சொல்வதையும் கேட்க மட்டுமே குழந்தைகளுக்கு அனுமதி. இப்படி துன்புறுத்துகிற இடம் வன்முறைக் கூடாரம் இல்லையா? மாணவர்கள் ஏன் தவறு செய்கிறார்கள், தான் சொல்வதை ஒரு குழந்தையால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? என்று இன்று வரை அறியாமல் தண்டனை வழங்கும் முறைமையை என்னென்பது?
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவே தண்டனைகள் எனில், பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்துப் பாட சாலைகளிலும் உடலை வருத்தும் தண்டனைகள் இல்லையே! ஒரு பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் பிள்ளையோ காவல் கண்காணிப்பாளர் பிள்ளையோ படித்தால் அவர்களின் தவறுக்குத் தக்க தண்டனை கிடைக்குமா? சம அளவு கற்றல் குறைபாடுகளுக்கு, தவறுகளுக்கு, சம அளவில், சாதி வர்க்க பேதமின்றி தண்டனைகள் ஆசிரியரால் வழங்கப்படுகிறதா? இதிலிருந்தே கற்றுக் கொடுக்கவோ தவறைச் சரி செய்யவோ தண்டனைகள் வழங்கப்படுவது இல்லை என்பது புரியும்.
குழந்தை நம்மைவிட பலமற்றது. நம்மைவிட பல வருடங்கள் சிறியது, அதற்கு எதுவும் தெரியாது. நமக்கு எல்லாம் தெரியும். நாம் இடுகிற கட்டளைகளுக்கு அடிபணிதல் அன்றி அதற்கு வேறு கடமைகள் இல்லை. அதைவிட நாம் அதிகாரமும் பலமும் மிக்கவர்கள். ஆசிரியர் என்றால் அஞ்சி நடுங்க வேண்டும் என்றோ கற்பிதம் செய்யப்பட்ட மனப்பாங்கு.
அமைதி என்று கட்டளை இட்டவுடன், வகுப்பறை மயான அமைதியில் ஆழ வேண்டும் என்ற ஆசிரிய அகம்பாவம் இதுவெல்லாம் சேர்த்து ஆசிரியனை வன்முறையாளனாக மாற்றுகிறது. ஐயோ அடிப்படையில் நான் அப்படியில்லை என்று கதறும் நல்லாசிரியரா நீங்கள்? மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி. ஆனால், வன்முறையில்லா வகுப்பறையாக உங்கள் வகுப்பறையை மாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முயன்றால் முடியாததும் அல்ல.
உங்கள் முயற்சிக்கு ஒரு அழுத்தமான ஊன்றுகோல் முளைத்திருக்கிறது. அந்த ஊன்றுகோலின் பெயர் “வன்முறையில்லா வகுப்பறை” அதனை எழுதியவர் ஆயிஷா நடராசன். 2016 டிசம்பரில் வடிவமைக்கப்பட்டு, பாரதி புத்தகாலயம் வழியாக விற்பனைக்கு இந்நூல் வந்திருக்கிறது. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த நூல் அறிமுகம்? எத்தனை பேருக்கு பரிட்சயம்? வகுப்பறையில் நிகழும் வன்முறைக்கு அடிப்படைக் காரணம் தொடங்கி, தற்போது உடல் ரீதியான தண்டனைகள் தடுக்கப்பட்டுள்ள காலத்தில் நிகழும் வகுப்பறை வன்முறைகள் வரை அலசி ஆராய்கிறார். தீர்வுகளை முன்வைக்கிறார், பயிற்சிகளைப் பட்டியலிடுகிறார்.
இன்றைய நவீனக் கல்விமுறையின் தோற்றுவாய். அதை ஆங்கிலேயர்கள் அடிமை இந்தியாவிற்கு ஏற்றவண்ணம் அமல்படுத்திய விதம். குருகுலப் பண்பாட்டுக் கல்வி வாயிலாக நாம் உள்வாங்கிக் கொண்டவிதம் ஆகியவையே மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய நாட்டு வகுப்பறையில் தண்டனைகள் மலிந்துகிடக்கக் காரணம் என்பதை முதலில் மனதில் பதிய வைக்கிறார்.
கல்வி முறையில் உள்ள முரண்பாடுகள், வகுப்பறை வன்முறைக்கு வித்திடுவதை போதுமான ஆதாரங்களுடன் விளக்குகிறார். தண்டனைகளின் நோக்கம், தண்டனைகளுக்கும் நெறிப்படுத்துவதற்குமான அடிப்படை வேறுபாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது என்பதற்கான தெளிவுகள் திருப்தி தருகிறது.
குழந்தைகளை புரிந்து கொள்வது எப்படி? அதன் நடத்தையைப் புரிந்து கொள்வது எப்படி ஆசிரியரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? மாணவர்கள் தவறு செய்வது ஏன்? மாணவனின் குறும்புக்கும் குற்றத்திற்குமான வேறுபாடுகள் என்ன? வளர் இளம்பருவ குழந்தைகளைப் புரிந்து கொள்வதும் கையாள்வதும் எங்ஙனம்? கீழ்படிதல் என்றால் என்ன? ஒழுக்கம் என்றால் என்ன? இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் எவை? என்ற கேள்விகளுக்கும் இந்நூல் விடையளிக்கிறது. இத்தகைய கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான, உளவியல் ரீதியான, ஆராய்ச்சி அனுபவங்களை சேர்த்து பதிலளித்திருக்கிறார். ஆசிரியர் தன்னை மேம்படுத்திக் கொள்ள கூடுதலான நூல்களையும் பரிந்துரை செய்கிறார்.
மேற்படி கேள்வி முடிச்சுகளுக்கான விடை தெரிந்துவிட்டால், ஓர் தொழில்முறை ஆசிரியராக இல்லாமல், ஆசிரியராக வாழத் தலைப்பட்டுவிடுவார். அப்படி ஆசிரியராக வாழும்போதும் மாணவர்களின் மனநல ஆலோசகராக, குழந்தைகளின் வளர்ச்சி அலுவலராக அவர் பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுவார். அப்படியாக ஆசிரியராக பரிணமித்துவிட்டால், உற்சாக வகுப்பறை உயிர்விடும். கற்றல் ஆர்வம் ஊற்றெடுக்கும். வகுப்பறையில் பங்கேற்பு அதிகரிக்கும். குழந்தைகளின் பேச்சைக் கேட்கும் காதுகள் ஆசிரியருக்கு முளைக்கும். மகிழ்ச்சி பொங்கும் வகுப்பறைகள் ஜனிக்கும். இத்தகைய வகுப்பறைகள் மாலை முடிவுற்றால் காலை பள்ளி வந்து சேரும் வரை ஏங்கித் தவிக்கும். இரவு நீண்ட பொழுதாக குழந்தைக்கு தொல்லை தரும்.
112 பக்கங்களில் 25 தலைப்புகளில் ஆயிஷா நடராசன் வகைப்படுத்திக் கூறியிருக்கும் பாங்கு எளியது. ஒவ்வொரு தலைப்பின் முகப்பிலும் ஆயிஷா நடராசன் தேர்ந்தெடுத்து பொருத்தியிருக்கும் மேற்கோள்கள் மட்டும் படித்துப் பார்த்து அசைபோட்டால் கூட ஆசிரியர் மனமாற்றம் பெறுவர். இந்த நூலை வாசித்திருக்காத ஆசிரியர்கள், கல்வி நலனில் அக்கறை இருப்போர் ஒவ்வொருவரும் இந்நூலைப் படித்துப் பார்த்தல், வகுப்பறையில் பயிற்சித்துப் பார்த்தல், பயிற்சியின் அடிப்படையில் தோன்றும் முரண்பாடுகளை விவாதித்தல் தீர்வுகாண வகுப்பறைக்குச் செல்லுதல் என்பது வன்முறையில்லா வகுப்பறை சமைக்கும்.
உடல் மன தண்டனைகளை களைய, பல கல்வியாளர்கள் குரல் கொடுத்துள்ளனர். கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒரு நூலின் ஊடுபாவாக வன்முறையில்லா வகுப்பறை பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால் ஒரு முழு புத்தகமும் வன்முறையில்லா வகுப்பறையைப் பற்றி பேசுவது பயிற்சிக்கான கையேடு போல அமைந்திருப்பது இதுவே முதல் முறை. இந்தப் புத்தகம் பள்ளி ஆசிரியர்களுக்கானது என கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒதுக்கிவிட தேவையில்லை. படித்துப் பார்த்தால் அனைவருக்குமானது என்பது புரியும். இந்த நூல் வெளிவந்ததும் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கோத்தகிரியில் மாநில அளவிலான வாசிப்பு முகாம் நடத்தி இதனைக் கொண்டாடியது. மாணவர்களைக் கையாள முன்னெப்போதும் இல்லாத பேராயுதமாக இது விளங்குகிறது.
நா.மணி பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு. [email protected]
நன்றி: மின்னம்பலம்
நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ.₹120/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]