வியர்வையின் நன்றி! கவிதை – பாங்கைத் தமிழன்
நான்
பார்த்தும் இருக்கிறேன்
கேள்விப் பட்டும்
இருக்கிறேன்!
கருப்புசாமியால்
கொண்டு வரப்பட்ட
‘காபி’சொம்பு
தண்ணீர் தெளித்து
எடுத்து….
குவளையில் ஊற்றி
குடித்தக் கம்பத்துக் காரரை!
காலி சொம்பு
கம்பத்து வீட்டில்
சேரும்போது…..
ஆள் அரவம் இருந்தால்
தண்ணீர் தெளித்து எடுப்பார்;
இல்லையென்றால்
கம்பத்து வீட்டம்மா
கருப்பனை…. தொடக்கூடாதவனாகப்
பார்ப்பதில்லை!
கம்பத்தம்
வயோதிகத்தில்
வாழ்வு மறித்தபோது
கதறிய….
ஒரே மகனை
கரை சேர்க்க வேண்டிய
பொறுப்பு….
அம்மாவிற்கும்,
அவர் வீட்டு
உப்பைத் தின்று வளர்ந்த
கருப்பனுக்கும்!
கருப்பன்
பொறுப்பு மிக்கவனாக
இருந்தான்!
கம்பத்து மகன்
கருப்பனை
பெயர் கூறி
அழைத்த போதெல்லாம்
கௌரவமாகத்தான்
எடுத்துக் கொள்வான் கருப்பன்!
கம்பத்து வீட்டம்மா
கருப்பனுக்கு
ஆண்டையென்றாலும்…
அவன்
உழைப்புக்காக
கண்ணீர் சிந்தியது உண்டு!
கருப்பனின் வியர்வை
கரைசேர உதவியதை
கம்பத்து வீட்டம்மாள்
கனவிலும் மறவாத
கண்ணியமிக்கவள்!
படிப்பால் உயர்ந்த
கம்பத்துக்காரர் மகன்
கருப்பனை
கம்பத்தின் ஆளாக மட்டுமே
பார்க்க வைத்தது
அவனின் பரம்பரை
இரத்தம்!
இரத்தம் இருக்கட்டும்!
வியர்வை சிந்தினால்தான்
இரத்தம் விலைமதிப்பற்றது
என்ற விபரம்
கற்றவனுக்கும்… கம்பத்துக்காரனுக்கும்
வந்தால்தான்
கருப்பு… வெண்மையாகும்!