ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “குறுங்” – பிரியா புரட்சிமணி
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி
விழியனின் “குறுங்…“ அனுபவ பகிர்வு – மு.ஜெயராஜ்
நான் ஆசிரியராக இருந்தபோதிலும் சரி தற்போது தலைமையாசிரியராக இருக்கும் போதும் சரி கடந்த இருபது வருடங்களாக நான் பழகிக் கொண்டிருப்பது வளரிளம் பருவ மாணவர்களோடு தான்.
எட்டாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களை கையாளுவது எளிது. எந்த எதிர் கேள்வியும் இல்லாமல் சொல்படி நடப்பார்கள். ஆனால் ஒன்பது, பத்து, மற்றும் அடுத்த இரண்டு வருடங்களில் மாணவர்களின் நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
நல்லது-கெட்டது, சரி-தவறு, வேண்டியது-வேண்டாதது போன்ற அனைத்திலும் குழப்பமே எஞ்சி நிற்கும்.
நமது சமூக கட்டமைப்பில் வளரிளம் பருவ பெற்றோரில் பெரும்பாலானோர் பிள்ளைகள் சிறப்பாக படித்து மதிப்பெண்களை வாரி குவிக்க வேண்டும், எதிர்கேள்வி எதுவும் இன்றி சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று அவர்களின் வயதுக்கான இயல்புகளுக்கு முரணாக எதிர் பார்க்கிறார்கள். இந்த முரண்கள் நெகிழ்வுத்தன்மை இன்றி முற்றும் இடங்களில் எல்லாம் பிரச்சனைகள் முளைவிடுகின்றன.
பெற்றோர்கள் வளரிளம் பருவ குழந்தைகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயல்வதோ தோழமையோடு அனுகுவதோ மிக மிக அரிது.
ஆகவே, அவர்களுக்கான விஷயங்களை சினேகமான மொழியில் தோளில் கைபோட்ட படி உரையாடும் தொனியில் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. விழியன் அவர்கள் எழுதியுள்ள “குறுங்…“ என்கிற இந்த நூல் நான் மேற்கூறியிருக்கும் அந்த தேவையை நூறு விழுக்காடு முழுமையாக நிறைவு செய்கிறது.
இந்த நூல் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமன்றி வளரிளம் பருவத்தினரோடு தொடர்பில் உள்ள அனைவருமே வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.
விழியன் அவர்கள் தொடர்ந்து மாணவர்களோடு உரையாடி வருபவர். பள்ளி மாணவர்களை சந்திக்க தொடர்ந்து பயணித்த வண்ணம் உள்ளார். மாணவர் மையக் கற்பித்தல் சார்ந்து தொடர்ந்து களமாடி வருகிறார். அவரது பேச்சிலும் சரி எழுத்திலும் சரி ஒரு சினேகமான மொழி இழைந்தோடும்.
இந்த நூல் தொடராக “ தி இந்து தமிழ் வெற்றிக்கொடி “ மாணவர் நாளிதழில் வந்த போதே சில பகுதிகளை வகுப்புகளில் வாசித்து காண்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
அறிவியலை மாணவர்கள் அனுகும் விதம் பற்றி அழகாக கூறியிருந்தார் ஆசிரியர். சக்கரம் உருண்டோடி சைக்கிளாக மாறி நமது தோள்களில் சுதந்திரம் என்கிற சிறகை பொருத்துவதை எல்லாம் தொட்டுக் காட்டி கூர்ந்து கவனிப்பதன் தேவையையும் அறிவியல் கற்பதன் அவசியத்தையும் அழகாக உணர்த்தி இருப்பார். தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டியது பற்றி எல்லாம் அழகாக கூறியிருந்தது “மலைப்பூ“வாக மணத்தது.
வரலாறை கண்டு பெரும்பாலானோர் அச்சம் கொள்ள காரணம் அதில் வரும் ஆண்டுகள் தான் என்று சரியாக கணித்து கூறியுள்ளார். வரலாறு என்றால் முதலில் “உள்ளூர் வரலாறு“ பற்றி அறிவதில் துவங்குங்கள் என்கிறார். வரலாறு படிப்பதோடு நில்லாமல் வரலாறு படைக்க வேண்டுமானால் “அரசியல் பழகு“ என்கிறார். “அய்யய்யோ அரசியலா?” என்று அலறும் பெரியவர்களே இருக்கும் காலத்தில் வளரிளம் பருவ குழந்தைகளுக்கே அரசியல் அறிவு வேண்டும் என்கிறார்.
அனைவருக்குமான உலகம் என்கிற பகுதியில் Inclusiveness பற்றி சிறப்பாக கூறியுள்ளார். எனது மாணவர்களில் ஒருவர் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவர். அவரை மாலை வேளைகளில் தூக்கி கொண்டு செல்வதற்கு பசங்க மத்தியில் அவ்வளவு போட்டி இருக்கும். உண்மையாகவே Inclusiveness ஐ சரியாக உணர்ந்து பரஸ்பர உதவி புரிபவர்கள் பள்ளி மாணவர்கள் தான்.
நூலாசிரியர் கணிதம் பற்றி வெற்றிக் கொடியில் தொடர் எழுதுவதோடு கணிதம் சார்ந்து குழந்தைகளோடு ஆன்லைன் உரையாடல் நடத்தி வருகிறார். எனவே கணிதம் பற்றி எழுதாமல் இருப்பாரா? கணக்கோடு சில மாணவர்களுக்கு ஏற்படும் பிணக்கை தீர்க்க ”பஞ்சாயத்து” பண்ணி இருக்கிறார்.
கேள்விகள் கேட்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பாக கூறி உள்ளார். சில கேள்விகளுக்கு உடனே பதில் கிடைத்துவிடும் சில கேள்விகளுக்கு காலப்போக்கில் பதில்கள் கிடைக்கும். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேட்பட்ட விடைகள் வரலாம் என அவர் அடுக்கிக் கொண்டே போவது சுவாரசியமாக இருக்கிறது.
புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க செல்வது பற்றி ஒரு பகுதி எழுதியுள்ளார். அவர் கூறியுள்ள சில நுணுக்கங்கள் மாணவர்களுக்கு நிச்சயமாக பயன்படும்.
நூறு தலைமையாசிரியர்கள் கலந்து கொண்ட பயிலரங்கில் மேடைக்கு அழைத்த உடனேயே கைதூக்கியபடி நான் எழுந்து கொண்டேன். அங்கு என்னை CEO வாக (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) நடிக்க கூறினார்கள். அடுத்த இரண்டு நாட்களும் அனைத்து சக தலைமையாசிரியர்களும் வணக்கம் CEO சார் என்று சினேகமுடன் பேசினார்கள். ஒரு வினாடியில் அனைவருக்கும் தெரிந்தவனாகிப் போனேன். இதற்கு காரணம் உள்ளபடியே நூலாசிரியர் எழுதிய “மேடைக்கு முந்து” பகுதி தான்.
மாணவர்களை அறிவுத்தேடல் சார்ந்து முடுக்கிவிட்டு அந்த அறிவின் வடிகாலாக அவர்களை எழுதவும் ஊக்குவிக்கிறார். ஆம், பள்ளிகளில் “சிறார் இதழ்“ தொடங்குவது பற்றியும் அதில் எந்த எந்த பகுதிகள் இருந்தால் சிறப்பாக அமையும் என்பது பற்றி எல்லாம் அழகாக கூறி உள்ளார்.
எனவே இந்த நூல் குழந்தைகள் அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் நிறைந்தது. இந்த நூலை குழந்தைகள் வாசித்து முடிக்கும் போது அவர்களின் நடத்தையில் நிச்சயமாக விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என அடித்துக் கூறுவேன்.
மு.ஜெயராஜ், தலைமை ஆசிரியர்,
எனக்குப் பிடித்த நூல் கட்டுரை – அழகோவியம்
நூல் : அன்பிற்கு ஆயிரம் முகங்கள்
ஆசிரியர் : விழியன்
விலை : ரூ.₹60/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
தன் வகுப்பில் நடந்த கட்டுரைப்போட்டியில் விழியனின் அன்பிற்கு ஆயிரம் முகங்கள் நூலினைப் பற்றிய அறிமுகம் கொடுத்துள்ளார் அழகோவியம். ஏழாம் வகுப்பை சேர்ந்த மாணவி. “எனக்கு பிடித்த நூல்” என்ற தலைப்பிலான கட்டுரை. மற்றவையை கட்டுரை சொல்லும்.
எனக்குப் பிடித்த நூல்
*****************************
குறிப்புச்சட்டகம்:-
முன்னுரை
பிடித்த நூல்
நூலாசிரியர் குறிப்பு
நூலின் மையக்கருத்து
பிடிக்கக்காரணம்
முடிவுரை
முன்னுரை:
புத்தகம் மனிதனை முழுமையாக்குகிறது.
நல்ல நல்ல புத்தகங்களைத் தேடி தேடி வாசிக்க வேண்டும். புத்தகங்களைப் படிக்கும் போது அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ”ஒரு புத்தகம் உங்களிடம் இருந்தால் ஆயிரம் நண்பனுக்குச் சமம் என்பார்கள்.” அதுபோல நான் படித்த நூல்களில் ஒன்றான * அன்பிற்கு ஆயிரம் முகங்கள்’ நூலைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிடித்த நூல்:
13 சிறுகதைகள் கொண்ட ’அன்பிற்கு ஆயிரம் முகங்கள்’ தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்த மற்றும் ஈர்த்த நூலாகும். இந்நூலில் உல்ல சிறுகதைகளில் ஒன்றான ‘பெருமழையின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நூலாசிரியர் குறிப்பு:
‘அன்பிற்கு ஆயிரம் முகங்கள்’
என்னும் நூலை எழுதியவர் விழியன். விழியன் என்கிற உமாநாத், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும். எழுதியும். கல்வி சார்ந்து இயங்கியும் வருகின்றார். இவரின் ‘மலைப்பூ, 1650 – முன்ன ஒரு காலந்துல ‘பென்சில்களின் அட்டகாசம்’ ஆகியவை பரவலாகப் பேசப்படும் புத்தகங்கள்.
நூலின் மையக்கருத்து:
இக்கதையின் மையக்கருத்து அன்பு எவ்வாறு வெளிப்படுகின்றது. குழந்தையின் ஆலோசனை எவ்வாறு அன்பாக வெளிப்படுகிறது என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.
பிடிக்கக்காரணம்:
இக்கதையில் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், ஃபேண்டசி சிறிது என கலந்து இருக்கும் நுட்பமான உணர்வுகளையும் புதிய சமூகப் பார்வைகளையும் கொடுக்கும். இதனால் இந்நூல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
முடிவுரை:-
புத்தகத்தில் ஒளிர்வது, ஞானத்தின் ஒளி.!”. என்பர். அதுபோல நாம் நிறைய நூல்களை படித்து ஞானத்தை பெறுவோம் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்.
– அழகோவியம்
புத்தக தூதுவர்களை உருவாக்குவது அவசியம் கட்டுரை – விழியன்
நிறைய பதிப்பகங்கள் தற்சமயம் அரசுப்பள்ளிகளுக்குப் பள்ளிகளுக்கும் நூல்களைக் கொடையாக கொடுக்கும் பட்சத்தில் நிறையத் தள்ளுபடி கொடுத்து வாசிப்பினை ஊக்குவிக்கின்றனர். நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளுக்குக் கொடையாக புத்தகங்களைக் கொடுக்க முன்வருகின்றனர். மிகவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்பு. ஆனால் அதே சமயம் புத்தகத் தூதுவர்களை எல்லா இடங்களிலும் உருவாக்க வேண்டியுள்ளது. புத்தகம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குத் தூதுவர்களை உருவாக்குவதும் அவசியமாக உள்ளது.
யாரிந்த புத்தக தூதுவர்கள்?
புத்தகங்கள் இருக்கின்றன, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இடையே ஓர் இணைப்புப்பாலம் தேவைப்படுகின்றது. எல்லா குழந்தைகளும் உடனடியாக வாசிக்க துவங்குவதில்லை. புத்தகத்தைப் பிடித்தவுடன் (வாசிக்க தெரிந்தும்) படிப்பதில்லை. அவர்களை எவ்வளவு நெருக்கத்திற்கு அழைத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு நெருக்கத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு ஏற்பாடு தேவையாக உள்ளது. குழந்தைகள் எல்லோரும் ஒன்றுபோல இல்லை அல்லவா. இந்த இணைப்புத்தான் புத்தகத் தூதுவர்கள். இவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம், தன்னார்வலர்களாக இருக்கலாம். ஒரு வரியின் புத்தகத்துடன் இணைப்பினை ஏற்படுத்துபவர்கள்.
என்ன செய்யலாம் புத்தகத் தூதுவர்கள்?
புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் வயது, வாசிப்புத்திறன், சுவைக்கு ஏற்ப புத்தகங்களை கொடுத்துப் பரிசோதிக்கலாம். சில குழந்தைகளுக்குத் தனியாக வாசிக்க வராது, அப்போது கூட்டு வாசிப்பில் ஈடுபடுத்தலாம். ஒரு குழந்தை ஒரு பக்கமே ஒரு சில வரிகளோ படிக்க வைத்து அடுத்த குழந்தையை அடுத்த சில வரிகள் என தொடரலாம். தானும் வாசித்துக்காட்டலாம். பின்னர், வாசித்த புத்தகம்/கதையைப் பற்றி தங்கள் அனுபவங்களைக் கூறலாம். கட்டாயம் இல்லை. அதில் வரும் முக்கிய பாத்திரங்கள், வேறு எப்படிக் கதையைச் சொல்லி இருக்கலாம், பிடித்த அம்சம் என்ன எனப் பேச வைக்கலாம். தனியாகச் சென்று வாசித்தவர்களையும் அவர்களின் அனுபவத்தைச் கூற சொல்லலாம். அங்கிருந்து அவர்களே கதைகளை உருவாக்க ஊக்குவிக்கலாம்.
கதைகள் மட்டுமில்லாமல், கூட்டாக பாடல்களைப் பாடலாம். பாட்டிற்கேற்ற மெட்டினை குழந்தைகளை உருவாக்கச்சொல்லலாம். பயிற்சி பெற்ற பாடல்களைப் பள்ளி/உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் அரங்கேற்றலாம். கதைகளைச் சொல்லவும் உருவாக்கவும் செய்யலாம். புத்தகங்களோடு நிற்காமல் தினசரிகளை வாசித்தல், அறிவியல் குழந்தைகள் இதழ்களை வாசித்தல் போன்ற செயல்பாடுகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த வைக்கலாம்.
புத்தகத்தூதுவரிடம் என்ன தேவை?
புத்தகங்களை கொண்டு செல்பவர்கள் நல்ல வாசகர்களாக இருப்பது முக்கியம். அப்படி வாசகர்களாக இருக்கும்பட்சத்தில் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் அவர்களால் செயலாற்ற முடியும். குழந்தைகள் மீது ஏராளமான ப்ரியம் இருந்தால் எதையும் செய்திடலாம். மிக முக்கியமாக இது ஒரு தொடர் செயல்பாடு. இன்று ஆரம்பித்து நாளையோ நாளை மறுநாளைப் பலன் கிடைத்துவிடாது. அது சில மாதங்கள் எடுக்கலாம், வருடங்கள் கழித்தும் பலன் தரலாம். பலன் என்பது குழந்தைகளுக்குள் நடக்கும் ஆரோக்யமான மாற்றங்கள். ஆக முயற்சிகளை எடுக்க தயங்கவே கூடாது, அதே சமயம் தோல்வியைக் கண்டு துவண்டும்விடக்கூடாது.
புத்தக்தூதுவர் தயார் புத்தகங்கள் எங்கே?
தூதுவர் தயார் என்றால் பாதிக் கிணறு தாண்டியாச்சு. கைவசம் இருக்கும் புத்தகங்கள்கொண்டு ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கான புத்தகம் தேவை என்றால் உள்ளூரிலேயே நிறைய உதவும் கரங்கள் கிடைக்கும். புத்தகங்களை தேர்வு செய்யும்போது அவை அறிவியர்பூர்வமான சிந்தனையை, நவீனச் சிந்தனைகளை, சமத்துவ எண்ணங்களை விதைக்குமா என்று மட்டும் ஒருமுறை பார்க்கவும்.
பாடம்தாண்டி வாசிப்பு குழந்தைகளின் பல திறன்களை வளர்த்தெடுக்கும். அது ஒரு இமாலயப் பணி, ஒவ்வொரு புத்தகத்தூதுவரும் மிக மிக முக்கியமானவர். நாமே தூதுவராக மாறுவோம் வாருங்கள்.
– விழியன்
நன்றி:
வெற்றிக்கொடி – 25 நவம்பர்
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் – தசிஎகச வரவேற்கிறது – விழியன்
வணக்கம்,
சிறாருக்குக் கூர்மையான அறிவையும் அகன்ற பார்வையையும் அளிப்பவை புத்தகங்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பாடத்திட்டம் தாண்டிய நூல் வாசிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையான சிறாருக்குக் கிடைப்பதே இல்லை. பள்ளிகளின் வழியே அப்படியான வாய்ப்பை வழங்க முடியும் என்று பலரும் யோசனை தெரிவித்து வந்தனர்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கமும், கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு முன்வைத்த பரிந்துரைகளில், ’வாரம் ஒரு புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் வாசித்து. அது குறித்து வகுப்பறையில் பேசும் விதமாக பாடவேளை அட்டவணை அமைய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஏனெனில், கதை, பாடல், நாடகம், அறிவியல் நூல்கள் வாசிப்பது பாட நூல்களைக் கற்கவும் உதவும் என்பதால், அதை வலியுறுத்தியிருந்தோம். இந்த அரசு, இம்மாதிரியான கோரிக்கைகளை ஆராய்ந்து ’பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ எனும் திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் பணியைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்க’த்தைத் தொடங்கியிருப்பது மிகுந்த ஆரோக்கியமான முன்னெடுப்பு. நூல்களை வாசிக்கும் மாணவர்களை பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் தேர்ந்தெடுத்து சிறப்பிக்க உள்ள முறை வரவேற்கத்தக்கது. முத்தாய்ப்பாக, ‘இறுதியில் தேர்வாகும் மாணவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, புகழ்பெற்ற நூலகங்களைப் பார்வையிட வைப்பது சிறப்பானது. அதே நேரம், இந்தச் செயல்பாடு வழக்கமான போட்டிகளில் ஒன்றாக மாறிவிடுவதும் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. அதேபோல, மாநில அளவில் தேர்வான மாணவர்கள், குழந்தை எழுத்தாளர்களோடு உரையாட வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறியிருப்பது மாணவர்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல முயற்சி, அதை மனதார பாராட்டுகிறோம். பள்ளிக்கல்வித் துறையோடு கைக்கோத்து செயல்படவும் விரும்புகிறோம்.
இந்தத் திட்டம் 6ஆம் வகுப்பிலிருந்து தொடங்குகிறது என்று உள்ளது. விரைவில் தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று நம்புகிறோம். மேலும் போட்டிகள் என்பது உந்து சக்தியாக இருக்கமட்டுமே, போட்டி முடிந்தாலும் வாசிப்பு தொடர உறுதி செய்ய வேண்டும். இந்த சரியான சந்தர்ப்பத்தில் பள்ளிகளுக்கு நூலகரை நியமிப்பது, நூலகத்திற்கு என்று போதிய ஏற்பாடு, புதிய புத்தகங்களுக்கான வழிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் எனும் இந்தத் திட்டம் கல்வியிலும் மாணவர்களின் சிந்தனை திறனை வளர்த்தெடுப்பதிலும் மகத்தான சாதனையை நிகழ்த்தும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இதனை முன்னெடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் அன்பில் பொய்யாமொழி அவர்களுக்கும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கும் எங்கள் சங்கத்தின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்கணம்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம்
நன்றி,
விழியன் | செயலாளர்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.
+91 90940 09092 / +91 94438 81701
[email protected]
மலரட்டும் வாசிப்பின் வசந்த காலம் புத்தகப்பூங்கா – முதல்வர் அறிவிப்பு தசிஎகச வரவேற்பு
புத்தக வாசகர்களுக்கும், புத்தக ஆர்வலர்களுக்கும், அனைத்துப் பதிப்பகங்களின் நூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பாக புத்தகப்பூங்கா அமையும் என்பதில் மட்டற்ற மகிழ்வுடன் முதல்வரின் அறிவிப்பை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. அனைத்துப் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும், புத்தகக்காதலர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கின்ற இடமாக அந்தப் புத்தகப்பூங்கா திகழவேண்டும். அதற்கு புத்தகப்பூங்கா அமைப்புக்குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம் என்று தசிஎகச கருதுகிறது.
புத்தக கண்காட்சிக்கு வருவதே குழந்தைகளுக்கு பேரனுபவம், புத்தக பூங்காவிற்கு வருவதும் இந்த அனுபவத்தை கட்டாயம் கொடுக்கும். பல ஊர்களில் இருந்து பள்ளிகள் வழியாக புத்தக பூங்காவிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்யலாம். புத்தக பூங்கா அமைக்கும்போது கட்டாயம் சிறுவர்களுக்கான தனி அரங்கங்கள் அமைக்கப்படவேண்டும். சிறார் அரங்கங்களில் அறிவியல், கதை சொல்லல், நாடகம், திரையிடல் போன்ற கலைகள் சார்ந்த நிகழ்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எப்படி சிறார் பகுதி தனித்துவம் வாய்த்ததாக இருக்கின்றதோ அதே போன்று தனித்துவமாக அமைக்கபப்ட வேண்டும்.
புத்தகப் பூங்காவினை அமைக்கும் அதே தீவிரத்தன்மையுடன் ஊர்புற நூலகங்களையும், பள்ளி நூலகங்களை உயிர்ப்பித்தல் அவசியம். அதற்கென நிதி ஒதுக்கி, தரமான புத்தகங்களை பெற்று, அதனை ஒரு இயக்கமாக மாற்றவேண்டும். நூலகங்களின் செயல்பாடே ஒரு நாட்டின் உயரிய குணாம்சம்.
புத்தக வாசிப்பைக் குழந்தைப் பருவத்திலிருந்தே அறிமுகப்படுத்துவதற்கும் கவிமணி தொடங்கி இன்று வரையிலான சிறார் எழுத்தாளர்களின் படைப்புகளை, ஆய்வுகளை, முழுமையாக ஆவணப்படுத்தவும், விளையாட்டு, பாரம்பரிய கலைகள், நாடகம், திரைப்படங்கள், ஓலை கீற்று -ஓரிகாமி போன்ற நுண்கலைகள், அறிவியல் என சிறார் உலகத்துடன் தொடர்புடைய அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய சிறார் இலக்கிய நூல்களுக்காக மட்டும் ஒரு தனி நூலகம் ஒன்று தலைநகரில் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஆண்டு தோறும் கோடை விடுமுறை காலத்தில் சென்னையில் சிறார்களுக்காக மட்டுமேயான ஒரு புத்தகக்கண்காட்சியை நடத்த நம்முடைய அரசு திட்டமிட வேண்டும். அதன் பின்னர் அதை மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிடலாம். குழந்தைகளை புத்தகவாசிப்பின் திசையில் கொண்டு வருவதற்கு புத்தகக்கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக நடத்தத் திட்டமிட வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
உதயசங்கர், விழியன்.
நூல் அறிமுகம்: விழியனின் குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்) – கு.செந்தமிழ் செல்வன்
நூல்: குழந்தைமையை நெருங்குவோம் (கொரோனா கால குழந்தை வளர்பு கட்டுரைகள்)
ஆசிரியர்: விழியன்
வெளியீடு : Books for Children
விலை: ரூ 45
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com
“கொரோனா காலம்” தந்த தழும்புகளைத் தடவிப் பார்த்தும் விம்மிக் கொண்டும்தான் நாட்கள் நகர்கிறது
அதன் விளைவுகள் ஏராளம். பலரின் வாழ்க்கைகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது.. எதில் அதிகப் பின்னடைவு ?
வாழ்வாதரத்திலா, ? உடல் ஆரோக்கியத்திலா?, பொருளாதாரத்திலா, குழந்தைகளின் கல்வியிலா ?, கலாச்சாரத்திலா?
நிச்சயமாக ஈடு செய்ய இயலாத விளைவுகள் அனைத்திலும்தான்.
ஆனாலும்,, வளரும் குழந்தகளுக்கான இழப்பு பன்முகத்தன்மைக் கொண்டது. அதனை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே சொல்லலாம். கற்றதையும் மறந்த கல்விச்சூழல் ஒன்றே நம்மைப் பதற வைக்கிறது..
குழந்தைகளின் இரண்டாண்டு வீடுகளில் முடக்கம் பெற்றோர்களுக்கு மிகப் பெறும் சவாலாக அமைந்தது. இது ஒரு சவாலாக ஏற்றவர்களுக்குத்தான் சவால்..
சவாலை ஏற்ற பெற்றோர்களை உற்சாகமூட்டி ஓட வைக்கும் புத்தகம்தான் விழியனின் “குழந்தைமையை நெருங்குவோம்”
தனது சொந்த அனுபவத்தினை குழைத்து ஒரு எழுத்தளராகவும் வரைந்துள்ளதால் இந்தப் புத்தகத்தில் உயிரும் இருக்கிறது. உன்னதமும் இருக்கிறது.
எவ்வளவு செலவானாலும் பீஸ் கட்டி பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டால் தனது கடமை முடிந்தது என கருதிய பெற்றோர்களுக்கு வீட்டிலேயே குழந்தைகளுடன் இருந்தது பல புதிய அனுபவங்களைத் தந்தது. குழந்தகளுடன் நெருங்கி உறவாடவும் உரையாடவும் வாய்ப்பளித்தது .
ஒரு நல்ல ஆசிரியராகவும் அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று.. இது எப்போதும் பெற்றோராக செய்ய வேண்டிய கடமைதான். ஆனாலும், கொரானா கால வீட்டடங்கு சூழல் அவர்களுக்கு தெளிவுபடுத்தியது. நிர்பந்தப்படுத்தியது.
“உங்கள் குழந்தை சரியில்லை என நினைத்தால் உங்களை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று பொருள்:” பெலூன்ஸ்கி.
அத்தகைய பெற்றோர்களுக்கான வழிகாட்டி புத்தகமாக “ குழந்தமையை நெருங்குவோம்” வந்துள்ளது. கொரோனா முடிந்தாலும் தொடர்ந்தாலும் குழந்தை வளர்ப்புக்கான இந்தப் புரிதல்கள் அவசியம்.
- நவீன உலகில் தொலைகாட்சி, மடி கணினி, கைபேசி இவைகளை குழந்தைகள் தொடலாமா கூடாதா? வீட்டடங்கில் குழந்தைகள் இவைகளைத் தொடாமல் எப்படி நகரும் நாட்கள்?. எப்படி நடைபெறும் ஆன் லைன் வகுப்புக்கள்? “தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் சென்று நுழைந்து விட்டால் அது அவர்களை இழுத்துச் சாப்பிடும். அவ்வளவு திறமையான வஸ்துக்கள் உள்ளே இருக்கிறது”என்கிறார் விழியன். சரி, அதற்காகத் தொலைக்க்காட்சியை நிராகரித்துவிட முடியுமா? புதிய தொழில் நுட்பத்தை ஓரம் கட்டிவிட முடியுமா? இந்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
- கதை சொல்வது இயல்பாக நடைபெற்ற நாட்கள் உண்டு. ஏராளமான் கதைகள் செவி வழியாகத்தான் கடத்தப் பட்டு வந்துள்ளன. . “கதைகளைக் கேட்க இயல்பாகவே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அந்த மகிழ்ச்சி கொடுக்கும் குரல் இயல்பாக நெருக்கமாகிறது. நமது வேகமான வாழ்க்கைச் சுழற்சியினை இலகுவாக்கும்.” “கதையின் குரலில்” இதனை கேட்கலாம்.
- “குடும்ப சபை நடத்துவோம்” எனவும் அழைக்கிறார். திட்டமிடவும் விவரங்களுடன் யோசிக்கவும் இந்த குடும்ப சபை தனக்கு உதவியதை பதிவிடுகிறார், “குழந்தைகளும் பெற்றோர் மீது விமரிசனம் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் ஒரு வகையில் ஜனநாயக நாட்டில் பிரஜைகளை உருவாக்கும் முயற்சி இவை” என்கிறார்
- “மென் தருணங்கள் மலரச் செய்வோம்” என்ற கட்டுரையில் குழந்தைகளோடு சேர்ந்து ரசிக்கும் இன்ப சூழலைத் தேடுங்கள் என்கிறார். அதுதான் நம்மை குழந்தைகளிடம் நெருங்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும்.
“இன்றைய அவசர உலகிற்கு அவசியம் தேவை மனிதத் தருணங்களே ; என்ற ஹாலோ வெல் வார்த்தகைகள் நினைவு கூறத்தக்கது
- நிறைய உரையாடவும் வேண்டும் பெரிய காதும் வேண்டும் என்பதும் முரண்பட்டவைகளா? உரையாடல் என்பது அடுத்தவர்களின் நிலையினை அறிந்து கொள்ள பயன்படுத்தும் அற்புதமான ஆயுதம். குழந்தகளைப் பேச வைத்து அவர்களது பார்வையில் உருவாகும் உலகை நாம் தரிசிக்க அவசியம் பொறுமையும் காதும் தேவை. நாம் சொல்வதை கேட்பார்கள் என்ற நிலையிருந்தால் பாலியல் சீண்டல்களைக்கூட பெற்றோர்களிடம் பகிர்வார்கள்.
- 48 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே அமர்வில் படித்து விடலாம். ஆனால், தேவை இந்த புத்தகம் முன் வைக்கும் கருத்துகள் மீது விவாதமும் தெளிவும். இதனை குடும்ப மாக வாசித்து விவாதிக்க வேண்டும். அதுவே குடும்ப சபையின் முதல் அமர்வாக இருக்கலாம்.
- குழந்தைகளை முதலில் நெருங்குவோம். குழந்தமையைப் பற்றிய நமது புரிதல்களை சரி செய்து கொள்வோம்.ஒவ்வொரு பெற்றோர்களின் அனுபவங்களும் ஒரு புத்தகமே.
- அதற்கான வழிமுறைகளையும் கைகொள்ளும் ஆயுதங்கள்தான் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது..
- குழந்தைகளை நெருங்குவதே குழந்தைமையை நெருங்க வழி.
கு.செந்தமிழ் செல்வன், மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்