Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

நூலகாலஜி – 2 நூலகமே வெல்லும்… – ஆயிஷா. இரா. நடராசன்



Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்
விளாதிமிர் வெர்னாட்ஸ்கி

ரஷ்ய – உக்ரேனிய  யுத்தத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் விளாதிமிர் வெர்னாட்ஸ்கியை  நினைக்கிறேன். சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இணையாக நான் மதிக்கும் பெயர். பலரையும் போல வெர்னாட்ஸ்கியை  எனக்கு தேடி எடுத்து அறிமுகம் செய்தவர் தோழர் சிங்காரவேலர்தான். பூகோள-விஞ்ஞானி என்று வெர்னாட்ஸ்கியை  பற்றி நான்கு பாரா அறிவியல் கட்டுரையை நம் சிங்காரவேலர் தொகுப்பில் பார்க்கலாம். தந்தை பெரியாரின் குடியரசு இதழில் அது வெளிவந்திருந்தது. பிஜி தீவுகளில்  தோழர்கள் எஸ். ஏ. டாங்கே, சவுகத் உஸ்மானி, சுபானிமுகர்ஜி  ஆகியோரோடு வெர்னாட்ஸ்கியை  சந்தித்த சிங்காரவேலர்…. டார்வினுக்கு இணையான அறிவியல் மகாஅறிஞர் என்று அவரை ஏற்றதோடு இந்தியா வருமாறு அந்த மாமனிதருக்கு அழைப்பு விடுத்தார் என்று தோழர் எம். பி. டி. வேலாயுதம் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

டார்வினின் உயிரிகள் தொடர்பான பரிணாவியல் தத்துவத்தை யாருமே இன்று மறுக்கமுடியாது. ஆனால் ஒரு காலத்தில் அவரது ‘உயிரிகளின் தோற்றம்’  நூல் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்தது. அதைப்போலவே வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும்   தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல… மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும் நம்மால் நம்ப முடியாதபடி வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஒரு அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. அதுசரி யார் இந்த வெர்னாட்ஸ்கி?.

பரிணாமவியல் வளர்ச்சியை முழுதும் புரிந்து கொள்ளாமல் வெர்னாட்ஸ்கியை நாம் நெருங்கக்கூட முடியாது. பரிணாமவியல்  எனும் அறிவியல் சித்தாந்தத்தை  டார்வின் புவியியல்  உயிரிகளின் தோற்றம்- இன்றுள்ள பல்லுயிர் பெருக்கமாக எப்படி மாறுபாடு அடைந்தது என்பதன்  புதிரை விடுவித்த ஒற்றை சரடாக கண்டடைந்ததை பார்க்கிறோம். பலபல ஆயிரம் ஆண்டுகளாக தங்களது மூதாதை உயிரினங்களில் இருந்து  பலவகை கிளைப்பாதைகள் வழியே இன்றுள்ள தங்களது நிலையை உருவத்தை வாழ்க்கை சுழற்சியை புவியின்  உயிரினங்கள் அடைந்துள்ளன என்று அவரது கோட்பாடு விவரிக்கிறது. பிற்காலத்தில் மரபணுவியல் டார்வின் விட்டுச்சென்ற இடைவெளிகளை மிகக் கச்சிதமாக தனது டி.என்.ஏ வரையறைகள் கோட்பாடுகள் மூலம் நிறைவடைய வைத்து அதை நிரந்தர வளர்ச்சி அறிவியல் துறையாக மாற்றியது. ஆனால் வெர்னாட்ஸ்கி செய்தது என்ன?

வெறும் புவிசார்ந்து மலர்ந்த இந்த கோட்பாட்டை அவர் இந்த முழு பிரபஞ்சம் சார்ந்தும் பொருத்துகிறார். டார்வின் கோட்பாட்டை உள்வாங்கிய பிறகு அதனை அவர் பிற்பாடு விரிவாக்கினார் என பல வரலாற்றாலர்கள் தவறாக பதிவு செய்கிறார்கள். மரபியல்-வேதியியல், வேதிப்பொருட்களின் பரிணாமவியல் வளர்ச்சி, உயிர்ப்பு வேதியியல், வானிலை-நிலவியல் என பல புதிய துறைகளுக்கே வித்திட்ட சோவியத் அறிஞர் வெர்னாட்ஸ்கியின் கண்டுபிடிப்புகள் முழுக்க முழுக்க தன்னிச்சையானவை. அவர் நிலப்பண்பியல் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்தபோது புவி வளர்இயல்  எனும் துறையே பிறந்தது. அவரது கோட்பாடு எதுவும் டார்வின் வழி வந்தது அல்ல. ஆனால் டார்வின் தத்துவத்திற்கு அது உறுதுணையாக நிற்கிறது.

பரிணாம வளர்ச்சி என்பது உயிரிகளோடு மட்டுமே வைத்து பார்க்கப்பட முடியாது என்பதை டார்வினும் ஒப்புக்கொள்கிறார். கார்லைலின் புவிசார்ந்த உருவாக்க நூலை தனது கப்பல் பிரயாணத்தில் வாசித்த அனுபவம்தான் டார்வினையே டார்வினியவாதி ஆக்கியது. ஆனால் அந்த விஷயத்தில் கார்லைல் விட்ட இடத்தில் இருந்து புரிதலை பல படிநிலை மேலே உயர்த்திச் சென்றவர் வெர்னாட்ஸ்கி. புவியின்  பரிணாமம் அவரது நூஸ்பியர் (Noosphre) கோட்பாட்டின் படி மனிதகுரங்கு மனிதனாக மாறிய படிநிலையில் முடிந்துவிடவில்லை. மனிதனால் மனிதனின் தலையீடுகளால் புவியியல் ஏற்படும் விபரீத மாற்றங்களை அவர் 1930-களிலேயே புவி பரிணாமத்தின் அடுத்த படிநிலையாக அறிவித்து சுற்றுச்சூழலியல் புவிவெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு என     நம் 21-ஆம் நூற்றாண்டு சிக்கல்களை முன் அறிவித்தவர். அதுவும் புவி சார்ந்த பரிணாம படிநிலைகளின் ஒருபகுதி என்று அதிர்ச்சி அளித்தவர் அவர்.

அவரது பயோஸ்பியர் மட்டுமல்ல- நூஸ்பியர், உயிரிகள் குறித்த கல்வியும் புதிய இயற்பியலும் போன்ற நூல்களை நான் வாசித்திருக்கிறேன். மேஹன் ரவுலியார்டு மொழிபெயர்ப்பில் அவை ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அந்த நூல்கள் எல்லாம் பலரும் நினைப்பதுபோல ரஷ்ய மொழியில் எழுதப்படவில்லை. அவை உக்ரேனிய மொழியில் எழுதப்பட்டவை. புவியின் வாழியல் சூழல் மனிதனின் தோற்றத்தை பரிணாமம் அடைய வைத்த நிலை மாறி மனித தலையீடுகளால் அடுத்த பரிணாமம் தொடங்குவதையும் இவை இரண்டுமாக ஒன்றன் மீது ஒன்று ஏற்படுத்தப்போகும் தாக்குதலையும் வெர்னாட்ஸ்கி முன்மொழிந்த அத்தனை அறிவியல் ஆய்வு கட்டுரைகளும் உக்ரேனிய மொழியில் தான் எழுதப்பட்டன.

 இத்தனைக்கும் வெர்னாட்ஸ்கிக்கு ரஷ்ய மொழி கசாக்கிய மொழி, பிரெஞ்சு ஆங்கிலம், ஜெர்மன் உட்பட எட்டு மொழிகள் தெரியும். தன் அறிவியலை தன் தாய்மொழியில் மட்டுமே எழுதியது அவரது அரசியல் போராட்டம் என்று அறிந்தபோது அந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீள பலநாட்கள் ஆனது.

உக்ரேனிய கசாக்கிய முன்னோடி குடும்பத்தில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பற்றி பிறந்து தாதுஇயல் என்னும் புத்தம் புதிய துறையில் தனது ஆசிரியர் அலெக்ஸி பாவ்லோவால் பட்டப்படிப்பில் இணைய ஊக்குவிக்கப்பட்டவர் அவர். உலகெங்கும் பயணம் செய்த அற்புத விஞ்ஞானி. அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போதும் அறிய பல புகைப்படங்களை காணும்போதும் ஏற்படும் பிரமிப்பு இந்த பூகோளமே என் ஆய்வுக்கூடம் என்று அறிவித்த அவரது துணிச்சலை பறை சாற்றுகிறது. சுவிட்சர்லாந்து, பாரிஸ், லண்டன், முனிக், ஆஸ்திரியா உட்பட ஒரு தனது ஆய்வு நாட்களில் 2 லட்சம் கிலோமீட்டர் பரப்பளவை சர்வ சாதாரணமாக நிலவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தியவர் படிகங்களின் ஒளியியல், வெப்பவியல், இழுவை மற்றும் காந்த புலப்பண்புகள்  குறித்து முனிச் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வுகூடத்தில் தனது முதல் கோட்பாட்டை அவர் நிறுவிய ஆண்டில் ரஷ்ய ஜார் மன்னன் உக்ரேனிய  மொழியில் புத்தகங்கள் அச்சிட தடை விதித்ததையும் பெட்ரோ லாவ்ரோ நடத்திய முன்னோக்கி எனும் உக்ரேனிய நாளிதழையும் முடக்கியதையும் அறிந்து கொதிக்கிறார். ரஷ்யமொழியே ஆட்சி மொழி என அறிவித்து ஜார் மன்னன்  இரண்டாம் நிக்கோலஸ் அதை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து அலுவல்களுக்குமான மொழியாக திணித்து அரசாணை வெளியிடுகிறான். உடனடியாக தன் தோழர் உக்ரேனிய எழுத்தாளர் ஷெவ்ஷென் கோவோடு  இணைந்து உக்ரேனிய புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து திரட்டி பாதுகாக்கும் பணிக்காக அவர் நாடு திரும்பினார்.

ஜார் மன்னன் அந்த உக்ரேனிய நூல்களை கைப்பற்றி அழிப்பதற்குமுன் ஆயிரக்கணக்கான நூல்களை தன் அயல் நட்பு வட்டாரத்தின் மூலம் நாட்டுக்கு வெளியே எடுத்துச் சென்றுவிட்டார்.  வெர்னாட்ஸ்கி. உக்ரேனிய மொழிக்கு சம அந்தஸ்து பெறுகிற பிரம்மாண்ட போராட்டத்தில் ஒருபுறம் பங்கேற்றாலும் மறுபுறம் தன் தாய் மொழியான அதனை செம்மைப்படுத்திட உலக கவனத்தைப் பெற பல்வேறு இலக்கிய அறிவியல் முயற்சிகளை மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார் அவர். தோழர் லெனினை சந்தித்து சோவியத் புரட்சிக்கு பிறகு அனைத்து மொழிகளுக்கும் சமஉரிமை பெற்றதோடு அவரது கல்வி மற்றும் பொது எழுத்தறிவு அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசின் ஆலோசகர் ஆகிறார். மாஸ்கோவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  பல்கலைக்கழகம் உக்ரேனிய மொழியில் பேராசிரியர் இன்மையால் பாடத்தை நடத்தமுடியாது என நீக்கிட நிர்வாகம் முடிவுவெடுத்தபோது ஒரு குறிப்பிட்ட மொழியில் பயின்றிட  ஒருவர் இருவரால் கூட முடியாத நிலை இருந்தாலும் அந்த பல்கலைக்கழகத்தையே மூடிவிடுங்கள் என்று லெனின் அறிவித்தது என்ன ஒரு அற்புதம்!. சோவியத் மொழிக்கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் வெர்னாட்ஸ்கி. அவரவர் மொழியில் கல்வி என்பது முதல் பிரகடனம். போல்ஷிவிக்குகளின்  அக்டோபர் (1917) புரட்சிக்குப் பிந்தைய அரசு சோவியத் மாகாணங்கள்  தேசிய இனங்களின் 130 மொழிகளுக்கும் சமஉரிமை வழங்கும் இரண்டாம் பிரகடனம் சற்றே வித்தியாசமானது. சோவியத் அரசியல் சாசனத்தின்படி மொழி அடிப்படையில் யாரும் யார் மீதும் பாகுபாடு காட்டுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது.

 உக்ரேனின் கீவ் நகரில் தினெய்பபர் நதிக்கரையில் டெமிவ்கா எனும் பகுதியில் வெர்னாட்ஸ்கி தனது பிரம்மாண்ட கனவை விதைத்தார். 1918 ஆகஸ்ட் 2 அன்று மிக சிறிய அளவில் தொடங்கிய நூலகம் அது. ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் பேரழிவு தடை சட்டத்திடமிருந்து தான்  காப்பாற்றி நாடு கடத்தியும் ரகசியமாக பத்திரப்படுத்தியும்  வைத்திருந்த உக்ரேனிய  புத்தகங்களை அங்கே அவர் அடுக்கத்தொடங்கினார் நாலண்டுகளில் மூன்று லட்சம் புத்தகங்களாக பிரம்மாண்ட கட்டிடமாய் அது வளர்ந்தது. தனது ஆய்வு கட்டுரைகள் நூல்களை ஆண்டுதோறும் கீவ்-தேசிய நூலகத்திலிருந்தே அவர்  வெளியிட தொடங்கினார். பாவ்லோ ஸ்கோரோ பாட்ஸ்கி எனும் ஒப்பற்ற உக்ரேனியா அறிஞரை நூலகராக அவர் கட்டாயப்படுத்தி ஏற்கவைத்தார் 1940ல் கீவ் தேசியநூலகம் உலகப்பிரசித்தி பெற்றது. காரணம் மக்கள் பதிப்பகம், ராதுகா பதிப்பகம் மற்றும் மீர் பதிப்பகம் தனது வெளியீடுகளின்  முதல் பிரதிகளை அந்த நூலகத்தில் காட்சிக்கு வைத்தன. ஒரு புத்தகம் அச்சிடப்பட்டால் அது தமிழ் உட்பட 171 மொழிகளில் வந்த அதிசயம் வேறு எப்போதாவது நடந்திருக்கிறதா?

 ஆனால் 1941 நாஜி வெறியரான ஹிட்லர் ஆபரேஷன் பார்பரோஸா எனும் ராணுவ நடவடிக்கை மூலம் சோவியத் மீது ஆக்ரோஷமாக படையெடுத்தார்.  கீவ்-வின்  சில மைல்கள் வரை உள்நுழைந்த ஜெர்மனிய நாஜிப்படை வெர்னாட்ஸ்கியின் உலக பிரசித்திபெற்ற நூலகத்தை தரைமட்டமாக்குவதை தனி நோக்கமாக அறிவித்தது. நான்கு இரவுகள்- வெர்னாட்ஸ்கியும் அவரது தோழர்களுமாக  செய்த வேலையை வரலாறு மறக்காது. சோவியத் ராணுவத்தால் கைவிடப்பட்ட ஒரு வெறும் 32 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் புத்தகங்கள் அனைத்தையும் ஏற்றி ஆறுமுறை வான்வழி குண்டு தாக்குதல்களின் ஊடாக  ஆயிரம்மைல்களுக்கு  அப்பால்  பாஷ்கோடோஸ்தான் எனும் பிராந்தியத்தின்  தலைநகரமான உஃபா (Ufa)வுக்கு ஒரு பள்ளி வளாகத்தில் நூல்களை ரகசியமாக கடத்தினார்கள். இப்பெரும்பயணத்தில் தனது 27 தோழர்களை தீவிர வாசகர்களை மாணவர்களை வெர்னாட்ஸ்கி இழந்தார். நூலகக் கொலைகள் என்றே அவைகளை மக்கள் அழைத்தார்கள்.

ஹிட்லர் படைகளுக்கு எதிராக தனது காலியான கீவ் நூலக வளாகத்தில் இருந்தபடியே பிரம்மாண்ட மக்கள் யுத்தத்தை அவர் தோழர் ஜோசப் ஸ்டாலினோடு தோளோடு தோள் நின்று துவக்கினார். வெறும் சோவியத் படைகள் தனக்கு எதிராக நிற்கும் என்று நினைத்த ஹிட்லரும் அவனது தளபதிகளும் மக்கள் யுத்தம் என்னும் புதிய வகை எதிராளியின் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. 890 நாட்கள் சுற்றிவளைத்து உணவின்றி மக்கள் செத்து மடியட்டும் என்று ஆணையிட்டான். ‘பசித்தே இறத்தல்’ என்பது அந்த ராணுவ நடவடிக்கைக்கு பெயர். ஆனால் மக்கள் நடத்திய முற்றுகைப்போர் (War of Attrition) தாய்மார்கள், குழந்தைகள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் இன்னும் பிளம்பர், தொழிற்சாலை பொறியாளர், மருத்துவர் என்று யாவரும் நாஜிப் படைகளுக்கு எதிராக கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கி துப்பாக்கி குண்டுகளால் துளைத்தாலும் கிளர்ந்தெழுந்து  யுத்தத்தை தேசபக்த போராக (Patriotic War) மாற்றி வென்றது வரலாறு. மூன்றாண்டுகள் தொடர்ந்த கொடிய ரத்தவெறி பிடித்த மகா யுத்தத்தில் மண்ணைக் காத்திட கீவ் நூலக வளாகம் ஒரு போர்படை பாசறையாக அறிவியல் அறிஞர் வெர்னாட்ஸ்கியால் திறம்பட செயல்படப்பட்டது. அப்போது அங்குதான் ரஷ்ய அணு சோதனைகள் செய்வதற்கான வெர்னாட்ஸ்கியின் மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டன.

 இந்த கட்டுரையின் ஆரம்ப வரிக்கு திரும்புவோம். உக்ரேன் ரஷ்ய யுத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கேள்வி சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடந்த நம் இந்திய மாணவர் சங்க கல்விக் கருத்தரங்கில்  உரையாற்றி விட்டு வெளியே வந்தபோது மாணவர் சங்க தோழமைகளில் ஒருவரான ஒரு லயோலா கல்லூரி மாணவரால் சாதாரண உரையாடலில் என்னிடம் கேட்கப்பட்டது. வரலாறு முழுவதும் தோளோடு தோள் நின்று களத்தில் வென்ற இரு சகோதரர்கள் அல்லவா உக்ரேனும்-ரஷ்யாவும். ரஷ்யாவுக்கு எதிரான தனது வெறுப்பு ராஜதந்திரத்தின் மூலம் தனது அடிமையான நேட்டோ படையில் பழைய சோவியத் பிராந்தியங்களை ஒவ்வொன்றாய் இணைத்து பணியவைத்த அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் இறுதியாக உக்ரேனையும் இழக்கிறார்கள். தனக்கு எதிரான நேட்டோ படைகளின் கூட்டமைப்பில் தன்னை பிராந்திய நில ரீதியில் மூன்று பக்கமும் சூழ்ந்த உக்ரேனும் இணைந்தால் அது தனது பாதுகாப்பு என்ன ஆகும் என பரிதவித்தபடி களம் இறங்கிய ரஷ்யாவை ஆதரிப்பதா அல்லது ரத்தவெள்ளத்தில் இறந்த உக்ரேனிய போர் வீரர்களுக்காக அழுவதா….. ஆனால் இந்த சகோதர-யுத்தத்தின் வழியே ரத்தம் குடிப்பதும் தனது ஆயுத-சந்தையை திறந்து விட்டு முதலை கண்ணீர் வடித்து உலக ஊடக நாடகத்தை நடத்துவதும் யார் என்று எல்லோருக்கும் தெரியும். 

Noolagalagy - 2 The library wins...Webseries By Ayesha era Natarasan நூலகாலஜி - 2 நூலகமே வெல்லும்... - ஆயிஷா. இரா. நடராசன்

1945 இல் உஃபா விலிருந்து பிரபலமான ’நூலக பெரும் பயணம்’ மூலம் மூன்று கப்பல்களில் கீவ் நூலக நூல்கள் -திரும்பியதும் தனது மாபெரும் கனவான தனது பிரம்மாண்ட நூலகத்தில் ஹிட்லரின் குண்டுகளால் சிதலமடைந்த பகுதிகளை சீர் செய்ய மறுபடியும் கட்டிட வேலைகள் தொடங்கி பீடு நடைபோட்ட நாளில் மக்கள் வெற்றியின் சின்னமான தனது நூலகத்தை கடைசியாக வலம்வந்த பின் ஜனவரி ஆறாம்  நாள் அறிஞர் வெர்னாட்ஸ்கி காலமானார். இன்று உலகின் பிரம்மாண்ட நூலகங்களில் ஒன்றாக போற்றப்படும் கீவ் நகரின் வெர்னாட்ஸ்கி தேசிய நூலகம் உக்ரேனிய ரஷ்ய தோழமையின் அடையாளமாக  விரைவில் இருவரும் இணைந்து  ஏகாதிபத்தியத்திற்கு பதில் கொடுக்கும் நாள் வரும் என பறைசாற்றியபடி உயர்ந்து நிற்கிறது., வரலாறு சொல்லும்,, நூலகமே வெல்லும்.,,

முந்தைய கட்டுரையை வாசிக்க:

நூலகாலஜி – 1 தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல… – ஆயிஷா. இரா. நடராசன்