நூல் அறிமுகம்: சுதேசி கப்பல் (Swadeshi Steam) – பேரா.வ.பொன்னுராஜ்
வ.உ.சி.யும் திருக்குறளும் கட்டுரை – ஆ. சிவசுப்பிரமணியன்
ஆ. சிவசுப்பிரமணியன்
[email protected]
தமிழர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத்துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்றெடுத்த தந்தையேயாயினும் யான்பெற்ற மக்களேயாயினும் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை நேசிப்பதுமில்லை. (வ.உ.சி. “கர்மயோகி” மார்ச் 1910)
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி ஓர் அழுத்த மான சைவர். சைவ சமயத்தின் சாத்திரங்களில் ஒன்றான சிவஞான போதத்திற்கு உரை எழுதி 1935இல் வெளியிட்டவர். பகவத்கீதையை அவர் கற்றறிந்திருந்தார். ஆயினும் தேசியத்தின் அடையாளமாகவோ தமிழர்களின் அடையாளமாகவோ சிவஞானபோதத்தையும் பகவத்கீதையையும் அவர் முன் நிறுத்தவில்லை. திருக்குறளையே அவர் முன்வைத்தார்.
திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு அதற்கு எழுதப்பட்ட பழைய உரைகளையும், கற்றறிந்தவர். அவற்றுள் சில அச்சு வடிவம் பெறாது சுவடிவடி வில் இருந்தவை. திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னவர் என்றறியப்பட்ட மணக்குடவர் (11ஆவது நூற்றாண்டு) எழுதிய உரை இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிவரை அச்சிடப்படாது சுவடி வடிவிலேயே இருந்தது. 1917 ஆவது ஆண்டில் திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய அறத்துப்பால் உரையை வ.உ.சி. பதிப்பித்து வெளியிட்டார்.
அவரது வறுமைச் சூழலில் பொருட்பாலையும் காமத்துப்பாலையும் பதிப்பித்து வெளியிட முடியாது போயிற்று. ஆனால்தாமே திருக்குறளுக்கு ஒரு உரை எழுதியுமுள்ளார்.
வ.உ.சி.யின் உரை:
திருக்குறளின் மூன்று பால்களுக்கும் உரை எழுதிய வ.உ.சி அறத்துப்பாலின் உரையை 1935 பிப்ரவரியில் வெளியிட்டார். எஞ்சிய இரண்டு பால்களுக்கும் அவர் உரை எழுதி முடித்திருந்தாலும் அவை நூல்வடிவம் பெறவில்லை. பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
தூத்துக்குடியில் வ.உ.சி பெயரில் இயங்கி வரும் கல்லூரியில் நான் பணியாற்றிய போது அக்கல்லூரி நூலகத்தில் உள்ள நூல்களையும் ஆய்விதழ்களையும் உறுதியான அட்டையால் கட்டும் பணிக்காக ஒருவர் அடிக்கடி வருவார். அறுபது வயதுக்கும் மேலான அவரை அடிக்கடி நூலகத்தில் சந்திக்க நேரிடும். ஆனால் உரையாடியதில்லை. ஒரு நாள் நூலகர் திரு. முத்தையாபரனாந்து அவரை அறிமுகம் செய்வித்ததுடன் ‘இவர் வ.உ.சியின் கடைசிக்காலத்தில் அவரது நூல்களைப் பைண்ட் செய்து கொடுத்தவர்’ என்று கூறினார். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தமக்கு வரும் சட்ட இதழ்களை நூல்வடிவில் பாதுகாக்க இவர் உதவி இருப்பார் என்று முதலில் நினைத்தேன். அவரிடம் உரையாடியபோது அவர் கூறிய செய்தி உள்ளத்தை உருக்குவதாய் இருந்தது.
தமது தூத்துக்குடி வாழ்க்கையில் நூல்களை அச்சிடும் போது பண நெருக்கடியினால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அவற்றை நூல்வ டிவில் பெற்றுக்கொண்டுள்ளார் . எஞ்சியவற்றை பக்க வரிசையில் முறையாக அடுக்கி கட்டுக்களாகக் கட்டிப் பாதுகாத்துவந்துள்ளார். நூல்கள் வேண்டும் என்று கேட்கும் போது அக்கட்டுக்களைப் பிரித்து கட்டுநர் உதவியால், அவற்றை நூல்வடிவாக்கித் தந்துவிடுவார். திரு இசக்கி இளம் வயதிலேயே இத் தொழிலில் தேர்ச்சி பெற்றவர். வேறு இடத்தில்பணிபுரிந்தாலும் பகுதிநேர வேலையாக இத்தொழிலை வீட்டில் இருந்தவாறே செய்து வந்துள்ளார். வ.உ.சி.யின் நூல்களை அட்டைக்கட்டு செய்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டதை 1968 அல்லது 1969இல் ஒரு குறிப்பாக எழுதி வைத்திருந்ததன் சாரம் வருமாறு:
‘பைண்டிங் செய்யவேண்டி இருந்தால் வைக்கப் பிள்ளை (வக்கீல் பிள்ளை) ஜயா சொல்லிவிடுவார். நான் அவர்களைப் பார்க்க வீட்டுக்குப் போவேன்.
வா இசக்கி என்பார்கள். அச்சடிச்ச பாரங்களைக் கொடுப்பார்கள். பைண்ட் செய்துகொண்டு போனதும் சில சமயம் உடனே காசு கொடுத்து விடுவார்கள். சில சமயம் மணியார்டர்வரலேயப்பா என்பார். சரிண்ணுட்டு வந்துருவேன். இரண்டு நாள் கழிச்சுப் போனா சில சமயம் பணம் கிடைக்கும்.சிலநேரம் கிடைக்காது.சில நேரம் போஸ்ட்மேன் வாராராண்ணு பார்ப்போம். எனக்கும் பணம்வேணும்னு சொல்லி உக்காரச் சொல்லிருவாக. போஸ்ட் மேன் இரண்டு மூணு மணியார்டர் கொண்டு வந்தா முழுப்பாக்கியும் கிடைக்கும். எதிர்பார்த்த மாதிரி மணியார்டர் வரலைண்ணா அவங்களும் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிடுவாக. எனக்குக் கொஞ்சப் பணம்தான் கிடைக்கும். நானும் அழுத்திக் கேக்கமாட்டேன். எப்படியும் பாக்கியைத் தீர்த்துவிடுவார்கள்,
இக்கட்டுரையின் தலைப்பிற்குப் பொருந்தாத செய்தியாக இச் செய்தி இருப்பதாகத் தோன்றினாலும் வ.உ.சி.யின் திருக்குறள் உரை முழுமையான வடிவில் கிடைக்காமைக்கான காரணத்தை நாம் அறிய உதவுகிறது. 1935 பிப்ரவரியில் திருக்குறள் அறத்துப்பால் உரையை நூலாக வெளியிட்ட வ.உ.சி அடுத்த ஆண்டில் (1936 நவம்பர் 18) காலமானார். அதற்கு முன்னரே எஞ்சிய பொருட்பால் காமத்துப்பால் என்ற இரு பால்களுக்கும் உரை எழுதி முடித்து விட்டார்.
அவர் மறைவிற்குப்பின் அவை இரண்டும் நூல்வடிவம் பெறாது அவரது மகன் திரு.வ.உசி. சுப்பிரமணியம் பொறுப்பில் இருந்தன . அக்கையெ ழுத்துப்படிகளை அவர் பாரிநிலையத்திடம் வழங்கியுள்ளார். அச்சு வடிவில் முதலில் வெளியான அறத்துப்பால் உ ரையையும் ஏனைய இருபா ல்களின் உரைகளையும் இணைத்து ஒரே நூல் வடிவில் பாரி நிலையத்தார் 2008 இல் வெளியிட்டுள்ளனர்.
பதிப்பாசிரியர் உரை:
திருக்குறளுக்கு வ.உ.சி. எழுதிய உரை முழுவதையும் ஒரே நூலாகப் பதிப்பித்தவர் பேராசிரியர் இரா.இளங்குமரன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்தவர். பதிப்பாசிரியர் விளக்கம்’ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள பதிப்புரை, வ.உ.சி. எழுதியுள்ள திருக்குறள் உரை குறித்த நல்லதொரு அறிமுகமாக அமைந்துள்ளது. இப்பதிப்புரையில் வ,உ.சி.யின் திருக்குறள் உரையின் அமைப்பையும் அதன் சிறப்பையும் மிகத் தெளிவாக அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
வ.உ.சி.யின் முன்னுரை:
தமது முன்னுரையின் தொடக்கப்பகுதியிலேயே பரிமேலழகர் உரையுடன் தமது உரைவேறுபடுவது குறித்தும், தமக்கு முந்தைய உரையாசிரியர்கள் கொண்டுள்ள மூல பாடங்களில் இருந்து பரிமேலழகர் வேறுபட்டிருப்பதையும் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.
வ.உ.சி.யின் உரை:
இனி வ.உ.சி.யின் திருக்குறள் உரையில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
எடுத்துக்காட்டு: 1
எடுத்துக்காட்டாக நான்கு குறள்களுக்கான அவரது உரைகளைக் காண்போம். இவ்வுரைகளின் வழி அவரது இலக்கிய இலக்கணப் புலமை மட்டுமின்றி அவரது சமூகப் பார்வையும் வெளிப்படுகிறது. இக்கட்டுரையில் மேற்கோளாகக் காட்டியுள்ள குறள்கள் வித்துவான், ச. தண்டபாணி தேசிகர் தொகுத்துப் பதிப்பித்த திருக்குறள் – உரைவளம் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. இப்பதிப்பை அடியொற்றியே குறள் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை.
(குறள் எண்: 43)
என்ற குறளில் இடம் பெற்றுள்ளதென்புலத்தார் என்ற சொல்லுக்குப் “பிதிரர் என்று பரிமேலழகர் பொருளுரைத்துள்ளார். பிதிர் என்ற சொல் குறிக்கும் பொருள்களில் ஒன்று இறந்த பெற்றோர் மூதாதையர் ஆகியோரின் ஆன்மா ஆகும். இவர்களை நினைவு கூர்ந்து செய்யும் சடங்கு பிதிர்க்கடன் எனப்படும். இறந்த தந்தைக்குச் செய்யும் ஈமக் கிரியையைப் பிதிர்க்கருமம் என்று சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி
( தமிழ் லெக்சிகன்) குறிப்பிடுகிறது. பிதிரர் என்ற சொல்லுக்கு” பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற்* படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி அவர்க்கிடம் தென் திசையாதலின் தென்புலத்தாரென்றார்” என்று பரிமேலழகர் விளக்கமளித்துள்ளார். “புதல்வரைப் பெறுதல்” என்ற தலைப்பிலான திருக்குறளின் ஏழாவது அதிகாரத்திற்கு எழுதிய அதிகார வைப்பு முறையில் தெனபுலத்தார் கடனை நிறைவேற்ற புதல்வரைப் பெறுதல் தேவை என்று ம் கூறியுள்ளார். புறநானூறு (9:3) “தென்புல வாழ்நர் என்று பிதிரர்களைக் குறித்துள்ளது. உ.வே.சா. பதிப்பித்த புறநானூற்றுப் பதிப்பில் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள அரிய சொற்களைப் புரிந்து கொள்ள அவர் உருவாக்கிய அரும்பத அகராதி இடம் பெற்றுள்ளது. அதில் தென்புல வாழ்நர் என்பதற்குத் “தென்றிசைக்கண் வாழும் பிதிரர்” என்றே பொருளுரைத்துள்ளார்.
காலத்தால் பரிமேலழகருக்கு முற்பட்ட திருக்குறள் உரையாசிரியர்களில் பரிதியார் என்ற உரையாசிரியர் “பிதிர்லோகத்தார்” என்றும் காளிங்கர் என்ற உரையாசிரியர்” தன் குடியில் இறக்கப்பட்ட பிதிர்களுக்கும்” என்று உரை எழுதியுள்ளனர். இச் செய்திகளின் பின்புலத்தில் தென்புலத்தார் என்ற சொல்லிற்கு வ.உ.சி கொண்ட பொருளைக் காண்போம். தென்புலத்தார் என்ற சொல்லுக்கு “மெய்யறிவுடையார்” என்று இக் குறளுக்கான பதவுரையில் வ.உ.சி.பொருள் கூறியுள்ளார். இதுவரை நாம் கண்ட பொருளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. இக் குறளுக்கான அகல உரையில், (விருத்தி உரை) ‘தென்-அழகிய, புலம்-அறிவு,அழகிய அறிவானது மெய்யறிவு. அதனால் தென்புலத்தார்
என்பதற் கு மெய்யறிவுடையார் ” எனப் பொருள் உரைக்கப்பட்டது. என்று விளக்கமளித்துள்ளார். தற்போது இந்நூலைப் பதிப்பித்துள்ள முனைவர் குமரவேலன் தமது குறிப்புரையில் “உரையாசிரியர்கள் அனைவரும் தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்று பொருள் சொல்ல, வ.உ.சி. மெய்யறிவுடையார் என்று கூறியுள்ள திறமும் கருதத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது. இருப்பினும் அவரது தமிழ்ப்புலமை மட்டுமின்றி அவரது சமூகக் கண்ணோட்டத்தின் தாக்கமும் பழைய உரையாசிரியர்களின் உரையில் இருந்து விலகிநிற்கத் தூண்டியிருக்கலமோ என்று கருதவும் இடமுள்ளது.
நவம்பர் 1927 இல் சேலம் நகரில் நடைபெற்காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் தலைமை உரையும் வ.உ.சி நிகழ்த்தியுள்ளார். அதை “எனது அரசியல் பெருஞ்சொல்” என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளார். அவ்வுரையில் பிராமணர், பிராமணர் அல்லாதார் சண்டையை நோ ய் என்று குறிப்பிட்டுள்ளதுடன் அந்நோய்க்கான மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்திக் கூறியுள்ளார். அம் மூன்று காரணங்களில் இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள காரணம் வருமாறு (அரசு.வீ.2002:213):
“பிராமணர்களே பிராமணரல்லாதவர்கள் கடவுளை அடைவதற்குரிய வழியைக்காட்டும் குருமா ர்களென்றும் பிராமணரல்லாதார்களின் குடும்பங்களில் நிகழும் மங்கல அமங்கலச் சடங்குகளையும் நடாத்துவிப்பதற்குரிய ஆச்சாரியர்கள் என்றும் கூறிப் பிராமணரல்லாதார்களின். பொருள்களை அவர்கள் தாய்வயிற்றில் உற்பவித்த காலம் முதல் அவர்கள் இறக்கும் வரையிலும், அவர்கள் இறந்தபின் அவர்கள் மக்கள் உயிரோடிருக்கும் காலம் முடியும் வரையிலும் கவர்ந்து கொண்டு வருகிறார்கள்” (அழுத்தம் எமது)
அத்துடன் இச் சடங்குகளை “…தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்டகொள்கை அழியாதிருக்கும் பொருட்டு பிராமணர்கள் மற்றை ஜாதியாளர்களுக்கு விதித்த அபராதத் தண்டனை.” என்றும் விமர்சித்துள்ளார். இதையடுத்து இது தொடர்பான பெரியாரின் கருத்தை
ஏற்றுக்ககொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
எனவே அவரிடம் இடம் பெற்றிருந்த சடங்குகள் தொடர்பான சமூகக் கண்ணோட்டமும் தென்புலத்தார் என்ற சொல்லுக்கு, முந்தைய உரையாசிரியர்களின் உரையில் இருந்து விலகி நிற்கச் செய்துள்ளது என்று கருத இடமுண்டு.
எடுத்துக்காட்டு:2-3
திருக்குறளில் ஏழாவது அதிகாரமாக இடம் பெற்றுள்ள அதிகாரத்தின் தலைப்பு “புதல்வரைப் பெறுதல்” ஆகும் புதல்வர் எனும்போது அது ஆண்பாலைச்சுட்டி பெண்பாலைப் புறக்கணிக்கிறது. திருக்குறளின் பழைய உரையாசிரியரும் மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர், ஆகியோரும் புதல்வரைப் பெறுதல் என்றே கொள்கின்றனர். ஆனால் வ.உ.சி “இரு பாலரையும் உள்ளடக்கி மக்கட்பேறு”என்று தலைப்பிட்டுள்ளார். இவ் அதிகாரத்தின் முதற் குறள்
பெருமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
(குறள் எண்:61)
என்பதாகும். இக் குறளில் இடம் பெற்றுள “அறிவறிந்த” என்ற பாடத்தைத் தவிர்த்து அறிவுடைய என்ற பாடத்தை வ . உ . சி கொண்டுள்ளார். இப் பாடத்தை முன் வைப்பதற்கான காரணத்தை அவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:
“அறிவறிந்த மக்கட்பேறு என்பது கற்று அறிய வேண்டுவனவற்றை அறிந்த மக்களைப் பெறுதல் எனப் பொருத்தமற்ற பொருளைத் தருதலானும் ‘அறிவுடைய’ மக்கட் பேறு என்பது ‘இயற்கை அறிவையுடைய மக்களைப் பெறுதல் எனப் பொருத்தமுள்ள பொருளைத் தருதலானும் அறிவுடைய என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க. ‘அறிவறிந்த’என்றதனான் மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது ” என உரை ப்பாரும்* உளர் . அப்பாடத்தைக் கொள்ளினும் அவ்வுரை பொருந்தாது. கல்வியறிவு இரு பாலர்க்கும் பொதுவாகலான்” இதே அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு குறள் பரவலாக அறிமுகமான குறள்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
(69) இக்குறளில் இடம் பெற்றுள்ள “கேட்ட தாய்” என்ற சொல்லுக்கு, உரை எழுதிய பரிமேலழகர் “தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்” என்று பத வுரையிலும் விருத்தியுரையில் “பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்டதாய் எனவுங் கூறினார்” என்று எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி தன் மகன் அறிவுடையவன் என்பதை ஒரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியாது. பிறர் கூறித்தான் அறிந்து கொள்ளமுடியும். கேட்டதாய் என்பதற்கு பரிமேலழகரின் இக்கருத்தை
ஏற்றுக் கொள்ளாததுடன் அவரது கூற்றைமேற்கோளாகக்காட்டி “ பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாயெனக் கூறினார் என்று உரைப்பாரும் உளர்.பெண்ணின் இயல்பு தானாக அறியாமை என்பது அறிவிலார் கூற்றென அவ்வுரையை மறுக்க” என்று சற்றுக் கடுமையாகவே மறுத்துள்ளார்.
இறுதியாக கேட்டதாய் என்பதற்குப் பிறர் கூறக் கேட்டதாய் என்று நேரடியாகப் பொருள்கொண்டு ‘தன் மகன், கல்வியும் அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன் என்று பிறர் பேசக் கேட்டதாய் பேருவகை எய்துவாள்’ என்று கருத்துரையில் கூறியுள்ளார்.
பெண்கள் மீது வ.உ.சி. கொண்டிருந்த மதிப்புணர்வை இவ்விரண்டு குறள்களுக்கும் அவர் எழுதியுள்ள உரையால் அறிய முடிகிறது.
எடுத்துக் காட்டு:4
நிலையாமை என்ற அதிகாரத்தில் மனித உடலுக்கும் உயிருக்கும் இடையிலான தொடர்பு குறித்த
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்ப
(குறள்: 338)
என்ற குறள் இடம் பெற்றுள்ளது. இக்குறளில் இடம்பெற்றுள்ள குடம்பை என்ற சொல்லுக்கு “கூடு” என்று மணக்குடவர் பொருள் கொண்டு “கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு என்றவாறு” என்று உரை எழுதியுள்ளார். காளிங்கர் என்ற உரையாசிரியரும் குடம்பை என்பதற்கு “புள் இயற்றும் கூடு” என்றே பொருள் உரைத்துள்ளார்.
பரிமேலழகர் குடம்பை என்பதை முட்டை என்று பொருள் கொண்டு “…முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்துபோன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு” என்று உரை எழுதியுள்ளார். அத்துடன் கூடு புள்ளுடன் தோன்றாமையானும் அதன் கண் மீண்டு புகுதலுடமையானும் உடம்பிற்கு உவமை யாகாமை யறிக” என்று விளக்கமளித்துள்ளார்.
வ.உ.சி. தாம் போற்றும் மணக்குடவர் வழிநின்று குடம்பை என்பதற்கு கூடு என்றே பொருள் கொண்டுள்ளார். இக் குறளுக்கான அகல உரையில் பரிமேலழகரின் உரையை மறுத்து வ.உ.சி. எழுதியுள்ள உரைப் பகுதியில் மேற்கூறிய பரிமேலழகரின் உரையை மேற்கோளாகக் காட்டிவிட்டு
“அவர் இவ்வதிகாரம்” நிலையாமை என்பதையும் இக்குறள் உடம்பைவிட்டு உயிர் நீங்கும் தன்மையையே கூறுகின்ற தென்பதையும், உடம்போடு உயிர் தோன்றுதலையாவது , உடம்பினுள் உயிர் மீண்டும் புகாமையையாவது கூற வந்ததில்லையென்பதையும் நோக்கிலர். அன்றியும் முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப்பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கேயன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று. மேலும் முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டதுமில்லை கேட்டதுமில்லை” என்று விருத்தியுரையில் குறிப்பிட்டுள்ளதுடன் மட்டுமின்றி தம் உரைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சேக்கை மரனொழியச் சேணிங்கு புட்போல, யாக்கை தமர்க்கொழிய நீத்து” என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ள நாலடியார் (3-10) செ ய்யுள் ஒ ன்றை யும் மேற்க்கோளாகக் காட்டியுள்ளார்.
இவ்வாறு பல புதிய விளக்கங்களை வ.உ.சி. முன் வைத்துள்ளார். அவற்றில் சிலவற்றை மறுப்பதற்கும் இடமுண்டு. எனினும் அவற்றை முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.
கட்டுரையாளர்:
மூத்த பேராசிரியர், நாட்டாரியல் ஆய்வாளர்.
நன்றி:
காக்கை ச் சிறகினிலே
பெரியாரின் ‘நமது சிதம்பரம்’! (பாரதி புத்தகாலயம் நடத்திவரும் வ உசி 149 கருத்தரங்கத்தை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை) – திருமாவேலன்
” அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத்தொண்டில் இறங்கினேன்” – என்று சொன்னவர் பெரியார். அவர், அவர் என்று சொன்னது வ.உ,சி.யைத் தான்!
அத்தகைய பெருந்தலைவராம் வ.உ.சி., பெரியார் படத்துக்கு தேங்காய் உடைத்து விழுந்து வழங்கினார். பெரியாரையே பெருந்தியாகி என்றார். இவருக்கும் இடையிலான நட்பு என்பது கொள்கையைத் தாண்டிய அன்பு உறவாக இருந்துள்ளது.
வ.உ.சி.யால் தான் தீவிர அரசியலுக்குள் நுழைந்ததாக பெரியார் பேசி இருக்கிறார். விருதை சிவஞானயோகிகள்( 1840-1924) திருக்குற்றாலத்தில் 19.11.1906 அன்று திருவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த திருவிடர் கழகத்தின் கோவில்பட்டி கிளையின் 18 ஆவது ஆண்டு விழா கோவில்பட்டி போர்டு ஹைஸ்கூலில் ( இன்று அது வ.உ.சி.மேனிலைப்பள்ளியாக இருக்கிறது!) நடந்தது. அதில் வ.உ.சி.யும் பெரியாரும் இணைந்து கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பெரியாரைப் புகழ்ந்து வ.உ.சி. பேசுகிறார். அதன்பிறகு பேசிய பெரியார்,
”நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றிச் சொல்லியவைகள் யாவும் என்னிடம் உள்ள அன்பினாலல்லாது அவ்வளவும் உண்மை என்று தாங்கள் நம்பிவிடக்கூடாது என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய பெருங்கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத்தொண்டில் இறங்கினேன்” ( குடிஅரசு 26.6.1927) என்றார். அதாவது வ.உ.சி.யின் தியாகம் ஈ.வெ.இரா.வை வீதிக்கு இழுத்துவந்துள்ளது.
‘பெரியாரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும்” என்று 1928 நாகப்பட்டினத்தில் பேசிய வ.உ.சி. குறிப்பிடுகிறார். அப்படியானால் 1908 முதல் அவர்கள் இருவருக்கும் அறிமுகமும் நட்பும் இருப்பதை உணரமுடிகிறது. இதனை பிற்காலத்தில் தனது உரையிலும் பெரியார் உறுதி செய்கிறார். ”இந்த நாட்டின் விடுதலைக்காக குடும்பத்தோடு நாசமடைந்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் வ.உ.சிதம்பரனார் அவர்களேயாகும். வங்காளத்தில் ஏற்பட்ட சுதந்திர உணர்ச்சி இயக்கக் காரணமாக நம் நாட்டிலும் துணி கொளுத்தப்பட்டது. ஆனால் நமது வ.உ.சி. அவர்கள் இதுமட்டும் போதாது என்று வெள்ளையர்களின் கப்பலுக்கு எதிராக கப்பலையும் கட்டி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் பிரயாணக் கப்பலாக ஏற்பாடு செய்தார். அந்தக் காலத்தில் நான் நன்றாக வாழ்ந்திருந்தவன் தான். வ.உ.சி.யின் இந்த முயற்சிக்காக எங்கள் ஊரிலே 35 ஆயிரம் வசூல் செய்து கொடுத்தோம். அதில் எங்கள் பணம் 5 ஆயிரம். முஸ்லீம் நண்பர்களுடையது 5 ஆயிரம், மற்றவர்களும் ஆயிரம், அய்நூறு என்பது போன்று உதவி செய்து அவரது முயற்சிக்கு பலந்தேடினோம்” ( 7.11.1948 சேத்துப்பட்டு வ.உ.சி., இளைஞர் கழக இலவச வாசகசாலை நூல் நிலையத்தை திறப்புவிழா, உலகத் தலைவர் பெரியார் பாகம் 2, பக்கம் 327) என்று பெரியார் பேசி உள்ளார்.
பெரியார் காங்கிரசுக்குள் நுழையும் போது, ( 1908) வ.உ.சி. மிகப்பெரும் தலைவராக இருக்கிறார். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்றுவிட்டார். 1912 இல் வ.உ.சி. வெளியில் வரும்போது காங்கிரசு கட்சியில் திலகர் காலக்கட்டம் முடிந்து காந்தி காலக்கட்டம் தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் 1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கமும் தோன்றிவிட்டது. இதற்கு எதிர்வினையாக பார்ப்பனரல்லாதார் நலனைப் பாதுகாக்க காங்கிரசு கட்சியும் முயற்சித்தாக வேண்டிய சூழல் தோன்றுகிறது. அத்தகைய சிந்தனை கொண்டவர்களின் அமைப்பாக சென்னை மாகாண சங்கம் ( 1917) உருவாக்கப்படுகிறது. இதில் கேசவப்பிள்ளை, திரு.வி.க., வ.உ.சி., பெரியார் போன்றவர்கள் இயங்குகிறார்கள். இந்த சென்னை மாகாண சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டு ஈரோட்டில் இரண்டாம் ஆண்டு விழா நடக்கிறது. இதன் தீர்மானத்தை வடிவமைப்பதில் சேலம் விஜயராகவாச்சாரியார், திரு.வி.க., டாக்டர் வரதராசலு, வ.உ.சி. ஆகிய நால்வரும் முன்னின்றதாக பெரியார் பிற்காலத்தில் எழுதுகிறார். பார்ப்பனரல்லாதார் நலன் குறித்து வ.உ.சி. அழுத்தமான கொள்கை கொண்டதை இதன் மூலம் அறியலாம்.( குடிஅரசு 20.12.1925)
இதைத் தொடர்ந்து 1920 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்த 26 ஆவது சென்னை மாநில அரசியல் மாநாட்டில், அரசு வேலைவாய்ப்புகளில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் சமூகங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வ.உ.சி. தீர்மானம் கொண்டுவந்ததாக – இந்து 25.6.1920 ஆங்கில நாளேட்டை ஆதாரமாகக் காட்டி பெ.சு.மணி எழுதுகிறார்.
நெல்லை மாநாட்டின் உள்கூட்டமாக பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடியது. அதில் வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை சோமசுந்தரம்பிள்ளை, வ.உ.சி., சிதம்பரம் என். தண்டபாணி ஆகியோர் கொண்டு வந்தனர், பின்னர் இது மாநாட்டின் விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமாநாட்டில் இத்தீர்மானத்தை பெரியார் முன்மொழிந்தார். வ.உ.சி.யும், தண்டபாணியும் வழிமொழிந்தார்கள். இங்கு தான் எஸ்.கஸ்தூரிரெங்கய்யங்கார் உள்ளே புகுந்து குழப்பி தீர்மானத்தை சில வார்த்தை விளையாட்டில் கொண்டு போய்விட்டு கெடுத்துவிட்டார் என்று பெரியார் எழுதுகிறார்.( குடிஅரசு 6.12.1925) ஆனால் இதே மாநாட்டில் கல்வித் துறையில் சமற்கிருதத்துக்கு உள்ள வாய்ப்புகளை தமிழுக்கும் தர வேண்டும் என்ற தீர்மானத்தை பெரியார் கொண்டுவர, அதனை வ.உ.சி.வழிமொழிய அத்தீர்மானம் நிறைவேறியது.
1920 இல் கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று வந்த வ.உ.சி. அதன்பிறகு அக்கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.ஆனால் பெரியார் காங்கிரசில் தொடரவே செய்கிறார். கோவில்பட்டி சென்ற வ.உ.சி. வழக்கறிஞராக தனது தொழிலைத் தொடர்கிறார். அப்போது அவர் நீதிக்கட்சி சார்பு கொண்டு இருந்ததாக பி.ஶ்ரீ.எழுதுகிறார். பெரியாரும் காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு வ.உ.சி.யும் அவருடன் இணைகிறார். பெரியாரின் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்திய நூல், ‘ஞானசூரியன்’. இதனை எழுதியவர் சுவாமி தயானந்தசரஸ்வதி. இந்நூலை முதலில் வெளியிட்டவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். இந்நூலை பெரியாருக்கு கொடுத்தவரும் அவரே. இதனை 1928 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்து பெரியார் வெளியிட்டார். பார்ப்பனர் மேலாண்மைக்கு ஆரியம் வழிவகுத்த இலக்கிய ஆவணங்களை அம்பலப்படுத்தும் நூலாக இது அமைந்திருந்ததால் தனது இயக்கத்துக்கு அடித்தளமாக ‘ஞானசூரியனை’க் கருதுகிறார் பெரியார். இந்நூலுக்கு மூன்று பேரிடம் சிறப்புரை பெற்றுள்ளார் பெரியார். வ.உ.சி., மறைமலையடிகள், கா.சுப்பிரமணியனார் ஆகியோரே அந்த மூவர். இந்த சிறப்புரையை 7.10.1927 அன்று கோயிற்பட்டியில் இருந்து எழுதியதாக வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், பார்ப்பனர் எதிர்ப்பில் மட்டுமல்ல, எத்தகைய சீர்திருத்தச் சைவராகவும் வ.உ.சி. இருந்துள்ளார் என்பதை இதன் சிறப்புரை மூலமாக அறியலாம்.
காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்போது மீண்டும் அவருக்கும் வ.உ.சி.க்குமான நட்பு துளிர்க்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பக்கட்டத்தில் சீர்திருத்த சைவர்கள் பலரும், அந்த இயக்கத்தை வழிமொழிந்தார்கள். வழிஏற்படுத்தியும் கொடுத்தார்கள். பெரியார், இராமாயணம் குறித்து பேசும் போது அவர்களும் சேர்ந்து விமர்சித்துப் பேசினார்கள். ஆனால் பெரியார், என்று பெரியபுராணத்தைக் கைவைத்தாரோ அன்றே சைவர்களும் எதிர்க்கத் தொடங்கினார்கள். ஆனால் வ,உ.சி, சீர்திருத்தச் சைவர்களிலும் இன்னும் தீவிரமானவராக இருந்தார். சைவர்கள் மத்தியில் வ.உ.சி.க்கு இருந்த எதிர்ப்பை ஆ.இரா.வேங்கடாசலபதி விரிவாக எழுதி உள்ளார். செட்டிநாட்டில் ஆற்றிய உரைக்காக கடுஞ்சைவர்கள் வ.உ.சி.யை கடுமையாகத் தாக்கியுள்ளனர். என்று ‘சிவநேசன்’ இதழில் நடந்த கருத்துவிவாதங்களை வெளியிட்டுள்ளார். 1929 மார்ச் மாதம் நெல்லையில் நடந்த சைவர் கூட்டத்தில் கலந்து கொண்ட வ.உ.சி. சீர்திருத்த சைவர் அணியையே சார்ந்திருந்தார் என்றும் சலபதி சொல்கிறார். சைவ சமயத்தைச் சீர்திருத்த வேண்டிய முறைகளைப் பற்றி வ.உ.சி. கூறியது ஏற்கப்படாததால் அதில் இருந்து வெளியேறியதாக குமரன்,குடிஅரசு இதழ்களை மேற்கோள் காட்டி சலபதி எழுதுகிறார். இதனடிப்படையில் பார்க்கும் போது சைவத்தை பெரியார் தாக்கிய போது சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறும் சைவராக இருக்காமல், சைவர்கள் கூட்டத்தில் சுயமரியாதைக் கருத்துக்களை விதைத்து அங்கிருந்து வெளியேறும் தீவிர எண்ணம் கொண்டவராக வ.உ.சி. இருந்துள்ளார்.
வ.உ.சி. – பெரியார் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அறிய நாகப்பட்டினம் அடிப்படையாக அமைந்துள்ளது. 1928 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தேசபக்த சமாஜனத்தின் 6 ஆவது ஆண்டு விழா நடந்துள்ளது. அதில் பெரியாரின் படத்தை வ.உ.சி. திறந்து வைத்துள்ளார்.
இதில் கலந்து கொள்ள வ.உ.சி.யுடன் முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், சிதம்பரம் என்.தண்டபாணி, ‘திராவிடன்’ ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வ.உ.சி. அழைத்து வரப்பட்டுள்ளார். பெரியார் படத்தை திறந்து வைத்து பேசும்போது, ” இந்த திரு உருவப்படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை,மாலை,பகல் முதலிய வேளைகளில் வணங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.” ( குடிஅரசு 10.6.1928) என்று பேசினார் வ.உ.சி. அதேபோல் வ.உ.சி.யும் விழுந்து வணங்கி உள்ளார். அவரின் இச்செய்கையை பெரியார் கண்டித்தும் இருக்கிறார்.
” இந்தச் செய்தி அறிந்த எனக்கு மிகக் கஷ்டமாகிவிட்டது. பிறகு அவரையே ( வ.உ.சியை) நேரில் சந்தித்து இந்த அக்கிரமத்தை அய்யா அவர்கள் செய்யலாமா என்று கேட்டேன். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இப்படிச் செய்தால் தான் பார்ப்பனர்கள் என்னை நாஸ்திகன் என்று தூற்றமாட்டார்கள். தோழராகிய ராமசாமி படத்துக்கே இப்படி விழுந்துகும்பிடும்பொழுது நாஸ்திகனாக இருப்பானா?’ என்று கலங்குவர் என்உ பட்டென்று பதில் கூறினார். அவ்வளவு பார்ப்பனீய எதிரியாக இருந்து வந்தவர் நம் வ.உ.சி.( ( 7.11.1948 சேத்துப்பட்டு வ.உ.சி., இளைஞர் கழக இலவச வாசகசாலை நூல் நிலையத்தை திறப்புவிழா, உலகத் தலைவர் பெரியார் பாகம் 2, பக்கம் 327) என்று பேசியுள்ளார் பெரியார். இருவரும் எத்தகைய தலைவர்களாக இருந்துள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நாகப்பட்டினம் நிகழ்ச்சி!
பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் குறித்த தெளிவான அரசியல் பார்வை வ.உ.சி.க்கு இருந்தது., அது அவரது பல்வேறு மாநாட்டு உரைகளில் வெளிப்பட்டது.1926 இல் மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாடு, 1927 இல் நடந்த கோவை பார்ப்பனரல்லாதார் மாநாடு, சேலம் அரசியல் மாநாடு ஆகிய மூன்றிலும் வ.உ.சி. கலந்து கொண்டார். ” காங்கிரசின் அமைப்பாளர்கள் பிராமணரல்லாதவர்கள். ஆனால் இப்பொழுது அதிகாரம் பிராமணர்களிடம் உள்ளது. இப்பொழுது எடுக்கப்படும் நடவடிக்கை அந்த அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காகத் தான்.” என்று கோவை மாநாட்டிலும்,
5.11.1927 சேலத்தில் நடந்த மூன்றாவது அரசியல் மாநாட்டுக்கு தலைமை வகித்து பேசும் போது, ” ”இராஜாங்க உத்தியோகங்களும் ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி நம் தேசத்தாருள் ஒற்றுமையுண்டாகப் போவதில்லை” என்றும் பேசினார். ( விடுதலை 20.11.1947) அதனால் தான் திராவிட இயக்க வரலாற்றில் திருப்புமுனை மாநாடாகச் சொல்லப்படும் தூத்துக்குடி மாநாட்டில் ( 1948 மே8,9) வ.உ.சி.யின் படத்தை திறந்து வைக்கச் சொன்னார் பெரியார். திறந்து வைத்துப் பேசியவர் குத்தூசி எஸ்.குருசாமி.
வ.உ.சி. மறைந்தது 1936 நவம்பர் 18. அதே ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டுக்கு வ.உ.சி. ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார். ” நமது சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட மட்டில் அதிலும் முக்கியமாக தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மட்டில் பெருந்தொகையினர்களாகிய பார்ப்பனரல்லாக்தார்கள் பல துறைகளிலும் சிருதொகையினராகிய பார்ப்பனருடைய ஆதிக்கத்துக்குட்பட்டு பின்னைலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நடுவுநிலையுடையார் யாரும் மறுக்க முடியாத உண்மை. அதைப் பற்றி நான் பெரிதும் கவலை அடைகின்றேன். பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித்தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன்னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். ” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.( குடிஅரசு 17.5.1936) இதுதான் வ.உ.சி. விடுத்த வெளிப்படையான குரல். இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் குரல்.
மே மாதம் 11 ஆம் நாள் பெரியாருக்கு வ.உ.சி. ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ”சர்வக சாதிப் பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடுவதற்குத் தாங்கள் சொல்வதே சரியான உபாயம். அவ்வாறு சர்வக சாதிப் பார்ப்பனரல்லாதார்களின் மகாநாடு ஒன்று காஞ்சிபுரத்தில் வருகிற ஜூன் மாதத்தில் நடக்கப் போகும் தமிழர் மகாநாட்டுப் பந்தலிலேயே கூட்டுவிக்கும்படியாக நமது நண்பர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்களுக்கு நான் இதனுடன் ஒரு கடிதம் பொறுத்து எழுதியிருக்கிறேன். அவர்கள் பதிலை எதிர்பார்ப்போம்.கடவுள் துணை, தங்களன்புள்ள வ.உ.சிதம்பரம்பிள்ளை” ( விடுதலை 5.9.1972) என்று எழுதி இருக்கிறார் வ.உ.சி. மரணிப்பதற்கு ஆறு மாதத்துக்கு முன்பு எழுதி கடிதத்தில் வ.உ.சி. சொல்கிறார், அனைத்துக் கட்சியில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒன்று கூட்டவேண்டும் என்று. இது தான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் கனவு!
கவிதை தமிழனின் கவிதைகள்
உழைப்பின் உயர்வை
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பேரினமே….!
உலகே வியந்து
உமக்காய் தந்தது,
இன்றைய மே தினமே….!
வியர்வை துளிகளின்
விலையை அறிந்தோர்
உமைபோல் எவருமில்லை…!
நேரம், நேர்மை
இரண்டையும் உணர்ந்தோர்
நீயின்றி எவருமில்லை…!
உடலை வருத்தி
ஓய்வை மறந்து
இயங்கும் உயர்பிறப்பே…!
உலகம் சுழல
உறவுகள் மகிழ
உழைக்கும் எம்மக்களே…!
உழையுங்கள் உயருங்கள்
உறவோடு மகிழுங்கள்….!
மேன்மைமிக்க உங்களுக்கு
மே தின வாழ்த்துக்கள்…!
**********************************************************
கல்லூரி வாழ்கைபோல இருந்ததில்லை எங்கும்…..!
கரையாத நினைவுகள் நெஞ்சின் ஓரமாய் தங்கும்….!
அரட்டைகள் அடித்துவிட்டு
நள்ளிரவே தூங்கும்….!
தருணங்கள் மீண்டும்வருமா என்றுமனம் ஏங்கும்….!
அதுபோல ஓர்நாளை
எதிர்நோக்கி காத்திருந்தேன்….!
ஆனாலும் இதுவரையில்
ஈடேற மறுக்கிறதே…..!
எங்கெங்கோ பிறந்திருந்தோம்,
நாமங்கே இணைந்திருந்தோம்…..!
நட்பென்ற ஓர்மொழியால்,
நகம்சதைபோல் பிணைந்திருந்தோம்…..!
அந்தநான்கு வருடங்கள்,
நினைவில்நீங்கா நிமிடங்கள்….!
இடையிடையே திருப்பங்கள்,
ஈடில்லா சொந்தங்கள்….!
எதிர்பாலின ஈர்ப்பியலால்,
மலர்ந்திருந்த காதல்கள்…..!
எதிர்கால இலக்கறியாது
கடந்துவிட்ட காலங்கள்…..!
எதிர்கால சிந்தனையில்லை,.
எதைப்பற்றியும் கவலையுமில்லை….!
குடும்பச்சுமை முதுகில்இல்லை,
கொடுத்துவைத்த வாழ்க்கையிதுவோ…!
பையில்பெரும் பணமுமில்லை,
எம்தலையில் கணமுமில்லை…..!
எதிர்கொண்ட இன்பமதற்கோ,
எல்லையும் இல்லவே இல்லை….!
************************************
மெய்போல பொய்யையும்
பாரெங்கும் பரப்பும்…!
ஒருபடத்தை பலகுழுவில்
பதிவிட்டு வருத்தும்…!
இவனாலே இளம்விழிகள்
இரவெங்கும் விழிக்கும்…!
நேரத்தின் மாண்பினையும்
நேர்த்தியாக அழிக்கும்…!
அப்டேட் செய்யச்சொல்லி
அவ்வப்போது வதைக்கும்…!
ஆண்ட்ராய்டு போன்களின்
ஆயுளையும் குறைக்கும்…!
நாம்தொலைத்த உறவுகளை
எளிதாக இணைக்கும்…!
நாள்முழுக்க நம்மோடு
பயணிக்க துடிக்கும்…!
காலத்தை விரயமாக்கும்
சதிகாரன் கண்டுபிடிப்பு…!
நண்பர்கள் கைகோர்க்கும்
அறிவியலின் அன்பளிப்பு…!
ஆயிரமாயிரம் தகவல்களின்
ஒட்டுமொத்த அணிவகுப்பு…!
அவ்வப்போது சலசலப்பு
அளவற்ற கலகலப்பு – அட
அதுதாங்க நம்ம வாட்ஸ்அப்பு…!
***************************************
ஆண்டவன் நேரில் வந்திட மாட்டான்…!
அதனால் அன்னையை அனுப்பிவைத்தான்.!
ஆனால் அவளோ,கடவுளை விஞ்சி
அன்பை பகிர்ந்தே, உயர்ந்து நின்றாள்..!
கேட்டது யாவையும், எம்மத இறைவனும்
உடனடியாகத் தருவதும் இல்லை..!
கேட்காமலே தந்திடுவாளே அவள் போல்
உலகில் எவருமே இல்லை…!
பிள்ளையின் சிறு வெற்றியைக்கூட,
சாதனை போலவள் மெச்சிடுவாளே….!
உதட்டில் நாளும் உச்சரித்தே
ஊரார் முன்பவள் உளமகிழ்வாளே…!
பிழையாய் அவளை ஒதுக்கி வைத்தாலும்
பிள்ளைகள் நம்மை வெறுத்திட மாட்டாள்…!
அன்பை நாமும் தர மறுத்தாலும்
அன்னை அவளோ, ஒதுங்கிட மாட்டாள்…!
கள்ளங் கபடம், இல்லா அன்பை
கடவுளர் கூட காட்டுவதில்லை..!
காசு கொடுத்த மாந்தருக்கே
கருவறை வரையில் தரிசனம் தருவார்…!
முந்நூறு நாட்கள் நம்மை சுமந்து
கருவறை தன்னில் இடமும் தந்து
வாழ்கிற வரையில், நம்மை நினைந்து
வீழ்கிற உயிரை, மறந்திடலாமா…!
அவள்செய்த தியாகத்திற்கு தந்திட ஈடாய்
அவனி முழுவதும் போதாது, உணர்வாய்..!
குருதியை பாலாய், கொடுத்தவள் அறிவாய்…!
தாயென்னும் இறைவியை நித்தம் தொழுவாய்…!
*****************************************************
எளியோர்க்கும் புரியும்படி
எழுதி வைப்பது
எளியநடையில் தமிழ்ச்சொற்களை
தொகுத்து அமைப்பது
வந்துவிழும் வார்த்தைகளை
அடுக்கி வைப்பது….!
வரிமுழுதும் எதுகை,மோனை
அமைத்து வைப்பது…!
கனவுகளை நடுநடுவே
திணித்து வைப்பது…!
கற்பனைகளை கண்முன்னே
விரிய வைப்பது…!
கவிதைபற்றி இதற்குமேலே
என்ன சொல்வது..?
மொத்தத்தில் அதன்பணியோ
மனதை வெல்வது…!
*****************************
அண்ணா…
நாடாளும் மன்றத்தினை
நாவாலே வென்றவனே…! தமிழ்நாடென பெயர்சூட்டிய
தன்மானத் தமிழ்மகனே…!
விந்திய மலைதாண்டி
இந்திக்கு வேலையில்லை…!
திராவிட இனம்போல
திராணிகொண்டோர் எவருமில்லை…!
கலப்புத் திருமணத்தை
கலங்காமல் ஆதரித்தாய்….!
சட்டத்தை கொண்டுவந்து
சரித்திரத்தில் இடம்பிடித்தாய்…!
சமூக நீதிகாக்க
சளைக்காமல் நீ உழைத்தாய்…!
சாதியத்தை வேரறுக்க
சட்டங்கள் இயற்றிவைத்தாய்…!
பெரியாரியம் பேசிவந்த
பெருமைமிகு தலைமகனே….!
மகத்தான ஆட்சியினை
மறவாது தமிழினமே…!
*******************************
நம்மாழ்வார் நம்மை ஆள்வார்…!
இவரை யாரென்றறியா தமிழினம்-இங்கு
இருப்பதால் வலிக்கிறது என்மனம்…!
தன்னலம் அறியா இவர்குணம்-இவர்
தமிழ்நில இயற்கையின் நூலகம்…!
இயற்கை வேளாண்மை இவர்மூச்சு-நம்மை
இழுத்து கிறங்கடிக்கும் இவர்ப்பேச்சு…!
சற்றும் ஓய்வறியா இளைஞரிவர்- சூழலில்
சர்வமும் கற்றறிந்த கலைஞரிவர்…!
ஒருபோதும் அழிவில்லா ஒருதலைவர்-இவர்
ஒருவரே வேளாண்மைத் தமிழ்த்தலைவர்…!
இன்றென் வரிபோற்றும் நம்மாழ்வார்…!
என்றும் நல்வழியில் நமை ஆள்வார்…!
*******************************************
வ.உ.சி வரலாற்றை
வாசித்து முடிப்பதற்குள்,
கண்கள் குளமாகி,
கசிந்துருகிப் போகுமையா…!
அமுதத் தமிழ் மொழியில்
ஆழ்ந்த அறிவு மிக்கார்…!
வறுமையில் உழல்வோர்க்கு
வழக்காடும் குணம் உடையார்…!
அந்நிய நாட்டுப் பொருட்களை
அவர்கள் முன்னே தீயிட்டார்…!
பாரதியுடன் நட்பு கொண்டு,
பட்டாளிக்காய், பாடு பட்டார்…!
சுப்பிர மணிய சிவாவோடு,
சுதந்திரப் போரில் ஈடுபட்டார்…!
விடுதலை வீர வரலாற்றில்
விபரீத தீர்ப்பைப் பெற்றார்…!
சணல் நூற்கப் பணிக்கப்பட்டு
சகிக்க முடியா இன்னலுற்றார்…!
சிறப்பு மிக்க வழக்கறிஞன்
சிறை பட்டு செக்கிழுத்தார் …!
மண்ணுக்காய் மக்களுக்காய்
பொன்பொருளை இழந்திருந்தார்…!
சிறை முடிந்து திரும்புகையில்
மறுபடியும், மனம் நொந்தார்…!
வரவேற்க எவரும் இல்லை
வந்து தங்க வீடுமில்லை
வாங்கி மேவிய கப்பலில்லை
ஏங்கி தவித்தான் குறைவாழ்வில்…!
தென்னாட்டுத் திலகரின்,
தியாகப் பெரு வாழ்வை,
இந்நாட்டில் வாழுகிற
மக்கள் நாம் மறவலாமா…!
அவர்தம் தியாகம்,
அறியாத் தலைமுறை
இருப்பது வன்றோ
இழி நிலைமை…!
அவர்தம் நூற்றாண்டை
அழகுற நடத்துதல்
அரசின் இன்றைய
முதல் கடமை…!
கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு – வீரமணி
ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர்களின் மனோநிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் சமூக-கலாச்சாரப் பாரம்பர்யங்களுக்குமான ஆழமான அவமதிப்பையே காட்டுகிறது.
இந்த ஆண்டு அணிவகுப்பு சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் குறிப்பதால், அதற்கேற்ற விதத்தில் மேற்கு வங்க அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போசையும், விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பையும் சித்தரிக்கும் விதத்தில் அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. இது நிராகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்களாக விளங்கிய வ.உ.சிதம்பரனார், விடுதலைப் போராட்டத்தின் தேசியக் கவி, சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சிலரை அலங்கார ஊர்தியில் சித்தரித்திருந்தது. இதனையும் ஒன்றிய அரசு ஏற்கவில்லை.
கேரளாவின் அலங்கார ஊர்தியில் மாபெரும் சாதி ஒழிப்புப் போராளியும், மறுமலர்ச்சி இயக்க வீரருமான ஸ்ரீ நாராயண குருவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனையும் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகும். அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவானது, ஸ்ரீ நாராயண குருவின் சிலைக்குப் பதிலாக ஆதி சங்கராச்சாரியார் சிலை வைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் கேரள அரசு ஸ்ரீ நாராயண குருவின் சிலையை அப்புறப்படுத்த மறுத்ததன் காரணமாக, கேரள அரசின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து, விடுதலை இயக்கத்திற்கும், மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் பங்களிப்பினைச் செய்தவரைவிட, எட்டாம் நூற்றாண்டில் பிராமண தர்மத்தை மீட்டமைத்திட்ட ஒரு சாமியார், எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இதனை இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிடும் ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் விளக்கிட முடியும். கேரளாவின் அலங்கார ஊர்தியில் ஆதி சங்கராச்சார்யாவின் சிலையை வைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசின் வல்லுநர் குழு வற்புறுத்தியதன்மூலம் அது ஸ்ரீ நாராயண குருவை மட்டும் அவமதித்திடவில்லை, கேரளாவின் ஒட்டுமொத்த முற்போக்கு சமூக-கலாச்சாரப் பாரம்பர்யத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும்.
தங்கள் மாநில அலங்கார ஊர்திகளை விலக்கிவைத்திருப்பதனை எதிர்த்துக் கடிதம் எழுதிய மேற்கு வங்க மற்றும் தமிழ்நாடு அரசு முதல்வர்களின் கடிதங்களுக்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், அவ்வாறு விலக்கியிருப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார். அவரின் கூற்றுப்படி, அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவில், கலை, கலாச்சாரம், இசை, கட்டிடக்கலை முதலானவற்றில் புகழ்பெற்ற நபர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்பதாகும். இந்த 75ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும் குடியரசு தின அணி வகுப்பிற்கு மிகவும் பொருத்தமான நபராக ஆதி சங்கராச்சார்யாவைக் கருதிய வல்லுநர் யார் என்று தெரிந்துகொள்ளவே ஒருவர் விரும்புவார்.
ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வருக்கு எழுதியிருக்கும் பதிலில், மத்தியப் பொதுப் பணித்துறையும் ஓர் அலங்கார ஊர்தியைப் பெற்றிருப்பதாகவும் அதில் சுபாஷ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் கூறும் கூற்றுப்படி, ஒரு மாநிலஅரசின் அலங்கார ஊர்தியைவிட ஒன்றிய அரசின் ஒரு துறை அளித்துள்ள அலங்கார ஊர்தி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பதாகும்.
மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான மற்றும் குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தின் காரணமாக நடைமுறையில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இது, அரசாங்கத்தின் கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரான அணுகுமுறையையே காட்டுகிறது. ஜனவரி 26 இந்தியக் குடியரசு உருவானதையும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்திடும் அரசமைப்புச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதையும் குறிக்கும் தினமாகும். மோடி அரசாங்கம், இவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளையே மீறிக் கொண்டிருக்கிறது.
(ஜனவரி 19, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி
வஉசியும், சமூகநீதியும் – பேரா. வீ. அரசு | VOC And Social Justice
வஉசியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதி புத்தகாலயத்தின் சார்பில் நடத்தப்படும் இணையவழி கருத்தரங்கம்.
வஉசியும், சமூகநீதியும் – பேரா. வீ. அரசு (மேனாள் தமிழ் இலக்கியத்துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்)
ஒருங்கிணைப்பு: முனைவர் பா. ஜெய் கணேஷ்
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below
To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…
பெற 044 2433 2924
களங்கமின்மையின் சுடர் – கு. அழகிரிசாமியின் குழந்தைகள் உலகம்
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “
குழந்தைகளின் உலகம் எளிமையானது. கபடோ, பாசாங்கோ, கள்ளத்தனங்களோ, அற்றது. அந்தந்தக்கணங்களில் வாழ்கிறவர்கள் குழந்தைகள். வாழும் அந்தத் தருணங்களில் முழு அர்ப்புணிப்புடன் தங்களை ஈடு கொடுப்பவர்கள். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து குழப்பமடையாதவர்கள். இயல்பானவர்கள். எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்காதவர்கள். பெரியவர்களாகிய நாம் சொல்லிக்கொடுக்காதவரை உயர்வு தாழ்வு என்ற சிந்தனை இல்லாதவர்கள். அவர்களுடைய போட்டியும் பொறாமையும் குழந்தைமையின் ஒரு பண்பு. அந்தக் குணங்கள் அவர்களிடம் வெகுநேரம் நீடிப்பதில்லை. எந்தச் சண்டையையும் நீண்ட நேரத்துக்கு போடாதவர்கள். காயும் பழமுமாக அவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக்குபவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அன்பால் நிறைந்தவர்கள். குழந்தைமை என்பதே வெகுளித்தனமும், களங்கமின்மையும், கபடின்மையும் தான். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த பெரியவர்கள் வளரும்போது அந்தக் குழந்தைமையைத் தொலைத்து விடுகிறார்கள். தங்களுடைய பரிசுத்தமான உணர்ச்சிகளால் நிறைந்த அப்பாவித்தனமான இளகிய இதயத்தை வளர வளர இரும்பாக்கி விடுகிறார்கள். ஒருவகையில் இலக்கியம் அந்த மாசற்ற அன்பைப்பொழியும் களங்கமின்மையை மீட்டெடுக்கிற முயற்சி தான்.
குழந்தைகள் உலகை தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல், இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன. சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள் எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில் குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கு.அழகிரிசாமியின் எளிமையான கலைவெளிப்பாடு குழந்தைகளின் எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு அருகில் கொண்டு போய் விடுகிறது.
கு.அழகிரிசாமியின் தனித்துவமான வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால் அன்றாட வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில் தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது. முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால் உற்று நோக்க நோக்க அந்த ஓவியத்தின் அழகும், ஆழமும், கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது வாசகனுக்குத் திடீரென தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னச்சுற்றி வண்ணவண்ண முத்துகள் கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக் கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப்போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள் பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும் அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும்.
அப்போது தான் கு.அழகிரிசாமியெனும் மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம் வாசகமனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து கொள்வான். கு.அழகிரிசாமியின் கதைகளில் பெரிய தத்துவவிசாரமோ, ஆன்மீக விசாரமோ, செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள் வருமென்றால் அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளியமொழியையே கையாண்டார். இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது. தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை, குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.
ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார் கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை, எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக் கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும். தான் வாழும் வாழ்க்கையை வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய எழுத்தாளராகிறார்.
1950 – ல் சக்தி இதழில் வெளியான ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன் தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும் போதே இரண்டு வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும், அவளுடைய மூத்த சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும் அந்த ஊரிலேயே பெரிய தனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில் படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது உன்வீட்டில் இருக்கிறதா? என்று வளர்ந்து பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும், தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும் வெவ்வேறு சாதியினர் என்பதை கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன் மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக அறிமுகமாகிறாள்.
ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு குடிசைக்கு வரும் குழந்தைகளில் மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம் ஐயா வந்து விட்டாரா? என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில் வேலை பார்த்து அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து எப்படியோ மிச்சப்பட்ட காசில் தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும், ஒரு பாவாடையும், பச்சைநிறச்சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத் துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார். அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு என்று மங்கம்மாள் கேட்கிறாள்.
இருட்டில் அவர்கள் குடிசைக்குப் பின்னாலிருந்த வாழைமரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா, இல்லாத அநாதையான சிரங்கும் பொடுகும், நாற்றமும் எடுக்கும் தன் அரையில் கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள். இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார். குளிக்கும் போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது சரியாயிரும் சரியாயிரும்.. புண் ஆறிரும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை வாசிக்கும் போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளை படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி.
மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும் போது ராஜாவுக்கு என்ன செய்ய என்று தாயம்மாள் குழம்பி நிற்கும் போது மங்கம்மாள் தான் அப்பாவுக்கென்று வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்க சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல் அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும் ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம். புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது பெரிய வீட்டு ராமசாமி வருகிறான். அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை
“எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..” என்று சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப்போட்டியை நினைத்துக் கொண்டு,
“ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கிறார்… எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து பாரு..”
என்று சொல்வதோடு கதை முடிகிறது. இந்த வரிகளை வாசிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக்கதையை வாசிக்க வாசிக்க வாசகமனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே சேர்த்தணைப்பதை உணரமுடியும்.
எளியவர்களின் மனவுலகை, அவர்கள் இந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையை இதை விடச்சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு குறையவில்லை. பொங்கித்ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும் வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீகநேசத்தைச் சொல்லியிருப்பார்.
கு.அழகிரிசாமி ராஜா வந்திருக்கிறார் கதையில் தன்னுடைய அம்மாவுக்கு கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக்காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம். தமிழ்ச்சிறுகதைச் சிகரங்களில் ஒன்று ராஜா வந்திருக்கிறார்.
வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்து விடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள் உனர்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே ஈடு கட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம். அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும். சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ, சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு. அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம்.
மிகச்சாதாரணமாகா ஆரம்பிக்கிற கதை எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி நம்மை அசைக்கிறது. வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பது தான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு மானுடம் முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது.
பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும் நேசத்தையும் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தைகளும் அவன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருக்கின்றன. அவனை வயது மூத்தவனாகக் கருதாமல் தங்களுடைய சமவயது தோழனாகக் கருதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளென்று விடிந்து வெகுநேரமாகியும் தூங்கிக் கொண்டிருக்கிற அவனை முதுகில் அடித்து எழுப்புகின்றன குழந்தைகள். குழந்தைகள் வாசிப்பதற்காக அவன் வாங்கிக்கொண்டு வருவதாகச் சொன்ன புத்தகங்களுக்காக வீட்டை கந்தர்கோளமாக ஆக்கிவிடுகின்றனர். அவனும் அவர்களுக்கு சமமாக விளையாடி கொண்டு வந்த புத்தகங்களைக் கொடுக்கிறான்.
அவன் தாயாரோடு இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அவனுக்குப் பரிச்சயமான சித்ராவும் சுந்தர்ராஜனும் எப்போதும் முதல் உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். அவனும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். மற்ற குழந்தைகளும் அதை நியாயம் தான் என்று நினைக்கும் போது சாரங்கராஜன் மட்டும் ஏங்குகிறான். அதற்காக வால்ட்விட்மேனின் கவிதை நூலை வாசிக்கக் கேட்கிறான். அதை மறுக்கும்போது அழுகிறான். அடுத்து அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிருந்தாவுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருப்பதைக் கேள்வி கேட்டு அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறான். பிருந்தா அவனைப் பார்த்ததும் மாமா மாமா என்று புலம்புகிறாள். கொஞ்சம் தெளிவடைகிறாள். அப்போது சாரங்கனும் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அதன்பிறகு இரண்டு டைரிகளைக் கொண்டுவந்தவன் சித்ராவுக்கும் சுந்தர்ராஜனுக்கும் மட்டும் கொடுக்கிறான். அப்போதும் சாரங்கன் ஏமாந்து போகிறான்.
ஏற்கனவே சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையன்று சாரங்கனின் வீட்டுக்குப் போகும் கதாநாயகனுக்கு உப்புமா காப்பியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறான் சாரங்கன். பின்னர் மெல்ல அவனுடைய டவுசர் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவனுக்கு முன்னால் வைத்து எழுதச் சொல்கிறான் சாரங்கன்.
என்ன எழுத? என்று கேட்கும் அவனிடம், சொல்கிறான் சாரங்கன்.
”என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு“
குழந்தைகளின் களங்கமற்ற அன்பைச் சொல்கிற மிகச் சிறந்த கதை. குழந்தைகளிடம் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கற்பிக்கும் கதை அன்பளிப்பு. இந்தக் கதைக்குள் ஓரிடத்தில் கதையின் கதாநாயகன் நினைப்பதாக கு.அழகிரிசாமி எழுதுகிறார்.
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் “
உண்மையிலேயே குழந்தைகளின் உலகத்தில் குழந்தைகளோடு குழந்தையாக வாழ்பவரால் மட்டுமே இப்படியான கவனிப்பைச் சொல்ல முடியும். இந்தக்கதை 1951-ல் சக்தி அக்டோபர், நவம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.
ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இரண்டு கதைகளும் தமிழிலக்கியத்துக்கு கு.அழகிரிசாமி கொடுத்துள்ள கொடை என்று சொல்லலாம்.
1959 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட தம்பி ராமையா கதையில் அப்போதே கல்வியினால் தங்களுடைய குடும்பம் உய்த்து விடும் என்று நம்பி காடுகரைகளை விற்று மூத்தமகனான சுந்தரத்தை படிக்கவைக்கிறார் கிராமத்து விவசாயியான பூரணலிங்கம். ஆனால் மகன் படித்து முடித்து நான்கு வருடங்களாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும் அவலத்தைப் பார்த்து கல்வியின் மீதே வெறுப்பு வருகிறது. ஊரிலுள்ள மற்ற பேர்கள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்கவைப்பது குறித்து பேசும்போது பூரணலிங்கம் படிப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லை என்று வாதிடுகிறார். இந்த நிலைமையில் மதுரையில் நண்பன் ஒருவன் மூலம் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போன சுந்தரம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மாதாமாதம் ஐந்து ரூபாய் சேமித்து ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வருகிறான். ஊருக்கு வரும்போது தம்பி தங்கைகளுக்குத் துணிமணிகள், பலகாரங்கள், வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையின் கையில் முப்பதோ, நாற்பதோ பணமும் கொடுக்கிறான். அவன் ஊரில் இருக்கும் சில நாட்களுக்கு தினமும் விருந்துச்சாப்பாடு நடக்கிறது. இதைப்பார்த்த தம்பி ராமையா அண்ணனுடன் ஊருக்குப் போனால் தினம் பண்டம் பலகாரம் புதுத்துணி, பொம்மை என்று வசதியாக இருக்கலாம். ஆனால் அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக மறுக்கிறான் என்று நினைத்து அண்ணன்மீது வெறுப்பு வளர்ந்து அவன் ஊருக்குப் போகும்போது அலட்சியப்படுத்துகிறான்.
அண்ணனால் தம்பியின் வெறுமையான பார்வையைத் தாங்க முடியவில்லை. ஆனால் வீட்டிலுள்ளோருக்குப் புரியாமல் தம்பி ராமையாவை அதட்டி உருட்டி அண்ணனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். ராமையா அண்ணனுக்கு விடைகொடுக்க கையைக்கூட அசைக்கவில்லை.
அப்போது சுந்தரம் நினைக்கிறான்,
“ராமையா நான் உன்னை நடுக்காட்டில் தவிக்க விட்டுவிட்டு இன்பலோகத்துக்கு வந்து விடவில்லையடா. நான் வேறொரு நடுக்காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீயாவது என்னை வெறுப்பதன் மூலம் ஆறுதலைத் தேடிக்கொண்டாய்.. எனக்கோ எந்த ஆறுதலும் இல்லை….. தினம் தினமும் உன்னையும் உன் ஏக்கத்தையும் இப்போது உன் வெறுப்பையும் எண்ணி எண்ணித் துயரப்படுவதற்குத் தான் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.. நீ நினைப்பது போல் நான் ஈவு இரக்கமற்ற பாவியில்லை..”
தம்பிராமையா என்ற ஏழுவயது சிறுவனின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற கதை. அண்ணன் சுந்தரத்தின் வழியே கதையை நடத்தும் கு.அழகிரிசாமி அந்தக் காலத்தைப் பற்றிய சமூக விமரிசனத்தையும் கல்வி குறித்த விமரிசனத்தையும் முன்வைக்கிறார். இந்தக் கதை பல தளங்களில் வைத்துப் பேசப்படவேண்டிய கதை.
கு.அழகிரிசாமியின் வர்க்க அரசியலை வெளிப்படையாக உணர்த்துகிற கதை தெய்வம் பிறந்தது. ராமசாமிக்குத் திருமணமாகி நீண்ட பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு பிறக்கிறான் குழந்தை ஜகந்நாதன். அவர் அவனை இந்த உலகின் அனைத்து தர்மநியாயங்களும் அறிந்த உத்தமனாக வளர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் அவனுக்கு எல்லாவிதமான நீதிநெறிகளையும் நன்னெறிகளையும் சொல்லிக்கொடுக்கிறார். அவர் சொன்னபடியே கேட்டு நடக்கிறான் ஜகந்நாதன். அப்பாவுக்கு ஷவரம் செய்ய வரும் வேலாயுதத்தை வணங்கி மரியாதை செய்கிறான்.
வீட்டில் காந்தியின் படத்தை மாட்டும்போது அவர் சமூகத்துக்குச் செய்த சேவையைப் பற்றி ஜகந்நாதனிடம் சொல்கிறார். அப்போது அவன் அபப்டியென்றால் சாமிப்படங்களை ஏன் மாட்ட வேண்டும் என்று கேட்கிறான். இந்த உலகை, இயற்கையைப் படைத்துக் காப்பாற்றுகிற சாமிப்படங்களை மாட்டி வைக்கலாம் என்று சொன்னதும் கேட்டுக் கொள்கிறான். ராமசாமிக்கு ஒரு குடும்பப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க ஆசை. அதற்காகப் பிரயத்தனப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து கண்ணாடிச் சட்டமிட்டு சுவரில் மாட்டுகிறார். அப்போதும் குழந்தை ஜகந்நாதன் கேள்வி கேட்கிறான். நம்முடைய போட்டோவை எதுக்கு நம் வீட்டில் மாட்டவேண்டும் என்கிறான். தந்தையால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி, சாமிப் படங்களை மாட்டியிருப்பதற்குச் சொன்ன பதிலையே அவன் திரும்பக் கேள்வியாகக் கேட்கிறான். நமக்கு நன்மை செய்கிறவர்களின் படங்களைத் தான் மாட்டவேண்டுமென்றால் நம்முடைய வீட்டுக்கு வருகிற துணி வெளுக்கிற கோமதி நாயகம், ஷவரம் செய்கிற ஐயாவு, வேலாயுதம், காய்கறிக்காரர், இவர்களுடைய படங்களை ஏன் மாட்டவில்லை? என்று கேட்கிறான் குழந்தை. அந்தக்கேள்வியைக் கேட்ட ராமசாமி சிலிர்த்து மகனைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தி, என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? பிறந்து விட்டதே! என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு மனைவியைத் தேடிப்போகிறார்.
பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் நீதிமான்களாக நியாயவான்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் தான். அந்த நியாயமும், நேர்மையும் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாதவரையில் குழந்தைகளுக்கு நன்னெறி, நீதிநெறி, ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வம் பிறந்தது கதையில் வருகிற ராமசாமி குழந்தையின் கேள்வியில் புளகாங்கிதமடைகிறார். அந்தக் கேள்வியின் தாத்பரியத்தைக் கண்டு அகமகிழ்கிறார். கு.அழகிரிசாமி தன்னுடைய அரசியல் சார்பு நிலையை ஜகந்நாதன் மூலம் வெளிப்படுத்துகிறார் என்று சொல்லலாம். இயல்பு மாறாமல் குழந்தையின் கேள்விகளை திறம்பட புனைவாக்கித் தந்து கதை முடிவில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.
1960 – ஆம் ஆண்டு தாமரை பொங்கல் மலரில் வெளியான கதை தெய்வம் பிறந்தது.
மேலே சொன்ன கதைகளுக்கு மாறாக குழந்தைகளின் பேதமையைப் பற்றி எழுதிய் கதை பேதமை. 1960- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலைக்கதிர் பத்திரிகையில் வெளியான கதை. வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கதை.
தெருவில் கடைக்காரரால் மிருகத்தனமாக அடிக்கப்பட்டு கதறிக் கொண்டிருக்கும் இரண்டு கந்தலுடையில் அழுக்காக இருந்த ஏழைச்சிறுவர்களை அந்த அடியிலிருந்துக் காப்பாற்றுகிற கதாநாயகன் சற்று நேரத்துக்கு முன்னால் அவனே அடிக்க வேண்டும் என்று நினைத்தவன் தான். வீடு வீடாகச் சென்று பிச்சைச்சோறு வாங்கி வந்து கொண்டிருந்த வயதான குருட்டுப்பிச்சைக்காரரின் தகரக்குவளையில் அந்த இரண்டு சிறுவர்களும் மண்ணையள்ளிப் போட்டு விட்டுச் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த எல்லோருக்குமே ஆத்திரம் வந்தது. ஆனால் கடைக்காரர் அந்த ஆத்திரத்தை கண்மண் தெரியாமல் காட்டி விட்டார். குழந்தைகளின் அவலக்குரலைத் தாங்க முடியாமல் அவரிடமிருந்து அவர்களை மீட்டு அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
ஊருக்கு வெளியே இருந்த குடிசையில் அவனுடைய அம்மா மட்டுமல்ல அக்கம்பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்தவர்களும் கூட அந்தக் குழந்தைகளை அடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்ப்போது கூட குழந்தைகளின் பேதமையை நினைத்து, இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் தானே எண்ணம் வரும் என்றெல்லாம் யோசிக்கிறார் கதாநாயகன். ஆனால் அந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது அந்தக் குடிசைக்குத் தட்டுத்தடுமாறி இன்னொரு குருட்டுப்பிச்சைக்காரன் ஒரு கையில் குவளையும். ஒரு கையில் தடியுடன் வந்து சேர்கிறான். அவன் தான் அந்தக் குழந்தைகளின் தந்தை. அதைப் பார்த்ததும் கதாநாயகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. குருடன் பெற்ற பிள்ளைகள் தான் குருடன் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுச் சிரித்தவர்கள்.
துயரம் தாங்க முடியாமல் கடைசி வரியில் குழந்தைகளே! என்று விளிக்கிறார் கதாநாயகன்.
புறவயமான சமூகச்சூழலின் விளைவாக இருந்தாலும் இந்தக் கதையில் வரும் குழந்தைகளின் பேதமையை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.
குழந்தைகளைப் பற்றிய இன்னுமொரு கதை இருவர் கண்ட ஒரே கனவு.
கு.அழகிரிசாமியின் கலை உன்னதங்களை மட்டுமல்ல, கீழ்மைகளையும் நமக்குக் காட்டுகிறது. அவரளவுக்கு நுட்பமாக குழந்தைகளின் உலகை வெளிப்படுத்தியவர்கள் தமிழில் மிகவும் குறைவு.
இருவர் கண்ட ஒரே கனவு கதையில் ஏழைத்தாய் காய்ச்சலினால் இறந்து போய் விடுகிறாள். அவளுடைய இரண்டு பையன்களும் இரண்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இரக்கப்பட்டு கஞ்சி கொடுக்கிறார் விவசாயத்தொழிலாளியான வேலப்பன். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாதென்ற அம்மாவின் கண்டிப்பினால் ஆசைப்பட்டு கஞ்சியை வாங்கிவந்த சின்னவனிடம் பெரியவன் சண்டைபோட்டு கஞ்சியைக் கீழே கொட்டி விடுகிறார்கள். அம்மாவிடம் புகார் சொல்வதற்காக ஓடிவந்தால் அம்மா இறந்து கிடக்கிறாள். எப்போதும் அவள் விளையாடும் விளையாட்டென்று நினைத்து அவளை அடித்துக் கிள்ளி எழுப்புகிறார்கள். அம்மாவின் இழப்பைக் கூட உணரமுடியாத பிஞ்சுக்குழந்தைகள். முன்னர் கஞ்சி கொடுத்த வேலப்பன் தன் வீட்டில் அவர்களைத் தங்கவைக்கிறான். இரவில் இரண்டு குழந்தைகளும் ஏக காலத்தில் அம்மா என்றலறி எழுந்திரிக்கிறார்கள். கேட்டால் இருவருக்கும் ஒரே கனவு. அவர்களுடைய அம்மா வந்து தான் உடுத்தியிருந்த சேலையை அவர்கள் மீது போர்த்திவிட்டு நான் சாகவில்லை.. என்று சொல்லிவிட்டுப் போவதாக கனவு வந்து அம்மாவை தேடுவதாகக் கதை முடிகிறது.
கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மட்டுமல்ல அநாதரவான குழந்தைகள், ஏழைச்சிறுவர்கள், திரும்பத்திரும்ப கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மனநிலையை அவ்வளவு யதார்த்தமாகச் சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் அழியாத சித்திரங்களாக அமைந்து விடுகிறார்கள். கதையின் முக்கியக்கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய இருப்பை கு.அழகிரிசாமி அபூர்வமான வண்ணத்தில் தீட்டி விடுகிறார். குழந்தைகளின் மீது அவர் கொண்ட பேரன்பும் பெருநேசமும் அவரை அப்படி எழுத வைத்திருக்கிறது.
தரிசனம் என்ற கதையிலும் முத்து என்ற ஒரு ஆதரவற்ற கிழவரும், ஆண்டியப்பன் என்ற அநாதையான சிறுவனும் வருகிறார்கள். முதியவருக்கு உணர்வுகள் மரத்துப் போய் விடுகிறது. எதுவும் நினைவிலில்லை. சித்தசுவாதீனமில்லாதவர் என்று ஊரார் சொல்கிறார்கள். ஆனால் அவர் அன்றாடம் கூலிவேலைக்குப் போய் கிடைக்கும் கூலியைத் தூரத்து உறவினரான ஆறுமுகத்திடம் கொடுத்து அவனிடமும் அவன் மனைவியிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு திண்ணையில் முடங்கிக் காலத்தைக் கழிக்கிறார். ஆண்டியப்பனுக்கோ தாயும் தந்தையும் இறந்து ஆதரவின்றி அந்த ஊர் பெரிய தனக்காரரிடம் வேலை பார்த்துக் கொண்டு தொழுவத்தில் படுத்துக் கிடக்கிறான். பத்து நாட்களாக விடாமல் பெய்யும் மழை சிறுவனையும் திண்ணைக்குத் தள்ளுகிறது. இருவரும் திண்ணையில் இரவுப்பொழுதைக் கழிக்கிறார்கள். அப்போதுதான் திண்ணையின் மூலையில் ஒரு குருவிக்கூடிருப்பதைப் பார்க்கிறார் கிழவர் முத்து. அது தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காமல் தட்டழிவதைப் பார்க்கிறார். வெளியே மழை பெய்து கொண்டேயிருக்கிறது.
மழையினால் கூலி வேலையில்லையென்பதால் ஆறுமுகத்தின் மனைவி வைது கொண்டே சோறு போடுகிறாள். அவள் போடும் சோற்றில் பாதியை ஒரு காகிதத்தில் எடுத்து வந்து தாய்க்குருவி கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுகிறார். தாய்க்குருவி சோற்றை எடுத்துக்கொண்டு போய் குஞ்சுகளுக்கு ஊட்டுகிற காட்சியைப் பார்த்து கிழவர் தெய்வ தரிசனத்தைக் கண்டமாதிரி கண்களில் கண்ணீர் வழிய கும்பிடுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன் தொழவேண்டியது அவரையல்லவா என்று அவரைக் கும்பிடுகிறான்.
இந்தக்கதை முழுவதும் கிழவர் முத்துவைச் சுற்றியே வந்தாலும் ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரமும் தரிசிக்கிறது. இரண்டுபேரும் இரண்டு தரிசனங்களைப் பார்க்கிறார்கள். இரண்டு தரிசனங்களின் வழியாக வாசகர்களுக்கு வேறொரு தரிசனத்தைத் தருகிறார் கு.அழகிரிசாமி.
எளியவர்களின் வழியாகவே வாழ்க்கையின் உன்னதங்களை உணர்த்துகிறார் கு.அழகிரிசாமி. குழந்தைகளின் இயல்புணர்வை அவரளவுக்கு பதிவு செய்தவர்களும் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக் கதைகளில் குழந்தைகள் வந்து செல்வதையும் பார்க்கும்போது, எந்தளவுக்கு கு.அழகிரிசாமியின் மனதில் குழந்தைகளின் மீதான பிரியமும் பேரன்பும் இருக்கிறது என்பது புரியும்.
எங்கள் அன்புக்குரிய கலைஞன் கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்பைத் தாங்களே சரி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை எளிதாக அவிழ்த்து விடுகிறார்கள். தங்களுடைய நேசத்தினாலும் பரிவினாலும் இந்தப் பிரபஞ்சத்தையே பற்றியணைக்கும் வல்லமை கொண்டவர்களாகிறார்கள்.
அவர்கள் யாவரும் கு.அழகிரிசாமியே! எங்கள் மூதாயே!
கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும் – கு. அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளை முன்வைத்து – உதயசங்கர்
உலக இலக்கியத்தில் ரயில் நிலையம் போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக் கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து எழுதப்பட்டது. இந்திய இலக்கியத்திலும் மிக முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம். அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில் நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
தமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான கு. அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும், குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில் ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார். அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு. அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள், மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார். எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார் கு. அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது தான். அந்த சாதாரணத்துவத்துக்குள் தார்மீகமான அறவிழுமியங்களைத் தேடுகிறார்.
தான் கண்டடைந்த மானுடத்தார்மீக அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு. அழகிரிசாமி. குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும், கபடின்மையும் தான் கு. அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு. அழகிரிசாமியும் தான் கண்ட அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.
ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு மாறாக கு. அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள், ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம் இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக் கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு. அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
கோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு மேதைகள் கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள் என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள் என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில் பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.
23-9-1923 அன்று கு. அழகிரிசாமி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை வ. உ. சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவனாகவே இருந்தார் கு. அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு. அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார். இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார்.
இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம் ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே தன் இலக்கியகுருவாக கு. அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு. அழகிரிசாமி சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார் மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும் அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில் சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்.. தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார்.
1943 –ல் கு. அழகிரிசாமியின் முதல்கதையான உறக்கம் கொள்ளுமா? என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில் உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி, தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள், 4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
கம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில் கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன், சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள் பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும், முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார்.
1962 –ல் எழுத்து பத்திரிகை ” எதற்காக எழுதுகிறேன்? ” என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு. அழகிரிசாமி எழுதும்போது,
“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்.. நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. நான் முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில் சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..
பிரசாரத்துக்காக எழுதவில்லையா, நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள் மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ, புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள் ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )
தான் ஏன் எழுதுகிறேன் என்பதைப் பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு. அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன் என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப் பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட அறவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி, தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.
இந்தக்கட்டுரையில் 1960-ல் அவர் எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.
குமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர் சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர். குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும் ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன் என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர்.
இரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு, மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள், ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன? தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும் கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல், எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.
ஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம் ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு. அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும் மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச் சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு. அழகிரிசாமி.
முதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை. ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது. அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்துகிறார் கு. அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம் மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர் குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.
கு. அழகிரிசாமியின் கலை செகாவியன் பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின் வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்பப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத் தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும்.
கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும் மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின் வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம் இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின் வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை உற்றுக் கேட்காவிடில் கு. அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.
குமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான் எழுதியதைப் பற்றி கு. அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான் நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில் காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான மனோரம்யமான வாழ்க்கை! நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும் வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல் “ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப் பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில் குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “
இந்தக் கதையை கு. அழகிரிசாமி எழுதிய காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல் கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும் எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம் ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின் தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச் சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல் கடந்து செல்லமுடியாது.
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. அருகில் எந்த ஊரும் கிடையாது. கு. அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன் தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில் 1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன். எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம் ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும் புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும், இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி, தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும் பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன் குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து சிலிர்த்தாடுவதைக் காணலாம்.
இப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக யாருக்கு மனம் வரும்? அதுவும் கு. அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன் கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது. ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்ளும். அப்படியொரு அமைதி.
1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து, அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப் போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள்.
லாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர் இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில் நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால் தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின் ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.
அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப் போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத் தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம் தோன்றியது. மனம் இளகியிருந்தது. அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து செம்மை செய்தேன்.
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு, மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக் கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன் அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை.
மீண்டும் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள் இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று கொண்டிருக்கிறார். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச் சரிகிறார்.
குமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க? என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன் திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார். அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.
இந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள் சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறது.
ஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின் இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.
இரண்டு கதைகளிலும் குமாரபுரம் ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை வைத்து கு. அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப் போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது.
குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு. அழகிரிசாமி காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.
கு. அழகிரிசாமியே! என் மூதாதையே!