நூல் அறிமுகம்: தேனி சுந்தரின் ஓங்கூட்டு டூணா..! – து.பா.பரமேஸ்வரி
நூல் : ஓங்கூட்டு டூணா
ஆசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூ.₹90
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
வகுப்பறை அலப்பறை
இலக்கைத் தொலைத்த வகுப்பறைகளும்
இருப்பையே தொலைத்த குழந்தைகளும்
மறந்து போன மந்திரம்…!
அதுவே “ஓங்கூட்டு டூணா” என்ற ஒற்றைத் தாரக மந்திரம். செல்லக் கோபங்களுக்கும் அதைப் பரிமாறிய பின்பாக முட்டிக் கொள்ளும் கண்ணீர் குமிழிகளுக்கும் இடையிலான பாலம். நீரில் எழுதிய எழுத்து போல…. முடிக்கும் முன்னமே கரைந்து விடும்…காற்றில் அடித்து செல்லும் புழுதிபோல கலந்து விடும் அவர்களின் வெள்ளை அன்பின் வளிவெளியில்.. கணநேரம் காணாமலே போய் விடும்.
“ஓங்கூட்டு டூணா” எழுத்தாளர் தேனி சுந்தர் அவர்களின் அன்றாடம் தரிசிக்கும் வகுப்பாலயத்தின் மூலவர்களான பிள்ளைத்தெய்வங்கள் தனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களையும், நிதம் அர்ச்சிக்கும் அபிஷேக விசேஷங்களையும், பாராயணம் செய்யும் ஜெபங்களையும், வழிபாட்டுத் துதிகளையும் சேகரித்து கவின் உலகின் மழலைக் காவியமாகப் நமக்கு வழங்கியுள்ளது. வகுப்பறை வாசத்தைப் பள்ளிப் பருவத்தில் தொலைத்த வாசகருக்கு மீண்டும் மாணவர்களாகப் பயணிக்கும் தம்மை இவர்கள் மத்தியில் தேடவும் ஒரு வாய்ப்பாக நினைவாலயத்தின் அருங்காட்சியகமாக இந்நூல் திகழ்கிறது.
குழந்தைகளைப் பற்றி எழுத பெரிதாக என்ன தெரிந்திருக்க வேண்டும். பாரட்டும் அளவிற்கு அசத்தலாக என்ன செய்துவிட போகிறார்கள் என்கிற மேம்போக்கு கருதுகோளை முற்றிலுமாக தகர்கிறது நூற்தொகுப்பு. குழந்தைகளுக்கு என்ன தெரியும் தெரியாது என்பதைப் பற்றிய அடிப்படை ஞானமற்ற பெரியவர்களாகவே நாம் இன்றளவும் அவர்களை மட்டுப்படுத்துகிறோம். குறிப்பாக, வகுப்பறையை ஏட்டுக் கல்வியை சேகரித்த கற்பிதங்களைக் கொண்டு இதுகாறும் ஆசிரியர்கள் இயந்திரங்கள் போல பிள்ளைகளை சாதனங்களாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள் உயிரோட்டமின்றி. வகுப்பறையை கருத்தரங்க மண்டபம் போல நடத்தும் தினுசை கைவிட வேண்டும்.ஆரவாரங்கள் கூட்டும் திரையரங்கமாக ஒலித்தக் கிடக்க செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பிள்ளைகளை அணுகும் ஒவ்வொரு அசைவும் தனக்குத் தெரிந்ததைக் கூட அவர்கள் முன் தெரியாததுப் போல சரணடையும் வித்தையில் மட்டுமே பிள்ளைகளின் அன்பையும் கற்பித்தலிலும் உயிர்ப்பையும் முழுமையாப் பெறமுடியும் என்பதை வகுப்பறையில் ஆசிரியர் நடைமுறைப்படுத்தியதை இத்தொகுப்பு நமக்குச் சான்றாகக் காட்டுகிறது .
போலவே, ஆசிரியருடன் பிள்ளைகள் பாகுபாடின்றிப் பிணைந்திருக்க முற்படும் தயக்கத்தையும் தீர்க்க முடியும். அவர்களிடம் நாம் பணிந்தால் மட்டுமே அவர்களை நம் வசமாக்கி நமது கற்பித்தல் காரியங்களைச் சாதிக்க முடியும். உருட்டலும் மிரட்டலும் பிள்ளைகளை கையாளும் தற்காலிக உத்தி. இறுதி வெற்றியை வழங்காது. ஆசிரியர் என்பவர் பெரிய ஆளுமை எல்லாம் இல்லை அவரும் நம்மின் ஒரு சாதாரண மனிதர் என்கிற நிலையை அவர்கள் மனதில் தவழவிடவேண்டும். அப்போதே ஆசிரியர் மாணவ நல்லுறவு வகுப்பறையில் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்.
பூவினியின் கற்றல் தீவிரத்திற்கும் கற்பித்தல் ஆர்வத்திற்கு முன் ஒரு ஆசிரியராய் பிள்ளையிடம் தெரிந்ததைக் கூட அவர்களின் பாணியில் அவர்களைக் குஷிப்படுத்தக் இணங்குவதில் கனமேதுமில்லை என்பதையே இந்த சம்பவம் நமக்குப் போதிக்கிறது.
8 என்கிற எண்ணை ஆசிரியர் பூவினியிடம் பயின்று பணிவு என்கிற வாழ்வின் ஆதாரப் பண்பைப் பிள்ளைகளுக்குச் செயல்வழிக் கல்வியாக்கிப் புகட்டியுள்ளார்.
நூறாண்டுக் காலங்களாக ஆசிரியர் என்றாலே பயந்து ஒடுங்கி விழிக்கும் பிள்ளைகளைக் கொண்ட கல்விச்சாலைகளைத் தரிசித்துப் பழகிய நமக்கு பிள்ளைகளின் முகத்தில் பிரவாகிக்கும் பேரானந்தத்திற்காக அவர்களின் உயரத்திற்குத் தம்மை நத்தைப் போல சுருக்கிக் கொண்ட பேராசிரியராகவே தோழர் சுந்தர் அவர்கள் இந்தத்தொகுப்பில் நமக்கு பரிச்சயமாகிறார்.
இங்கு ஒரு சம்பவம் என்பதை விட சமரசம் எனலாம்.. பல கோணங்களைத் திறந்துக் காட்டியது. போக,யாஷ்னா பாப்பாவின் முதிர்ச்சியும் என்னை அதிவியப்பில் ஆழ்த்தியது.
நேத்து மதியம்…
எல்லோரும்
சாப்பிட போயிட்டாய்ங்க…
நான் டேபிள்’ல
தலைக்கு கைய வச்சு
உக்காந்த வாக்குலயே
கொஞ்ச நேரம்
கண்ண மூடினேன்..
டேபிள்’ல டொக் டொக்குனு
தட்டிக்கிட்டே…
சார்… சார்..சார்ன்னு சத்தம்…!
கண்ணு முழிச்சு பாத்தா..
யாஷனா தான்…
“பள்ளிக்கூடத்தில தூங்குனா
படிப்பு வராது…
எந்திரிங்க சார்…!”
சாரெல்லாம்
சின்ன வயசுலயே
நெறைய படிச்சிட்டேன் பாப்பா…
சார்…
எங்களுக்கு படிப்பு வராது சார்..
எந்திரிங்க சார்..!
சட்டென சிரித்துவிட்டேன்.ஒவ்வொரு ஆசிரியரும் இவ்வாறாக பிள்ளைகளின் உலகிற்குள் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவர்களின் நடைப்பயில தனது அனைத்து வாசல்களையும் திறந்து வைத்துக் காத்து வருகிறார் தேனி சுந்தர் என்பது விசேஷம்.
பெரும் சமுத்திரத்தின் சிறு துளி போல தொகுப்பு முழுதும் மழலைகளின் கவிதைப் பிஞ்சுகள் கொடிபூத்து ஆக்கிரமித்துள்ளன.. வாசித்து அவர்களின் மொழியில் வசித்து வசியமான நிகழ் கணத்தின் படிமங்கள் அவை..
கதைச் சொல்வதென்றால் நம்ம அபிமன்யாவுக்கு ரொம்பவே பிடிக்கும் என்பது தொகுப்பின் மூன்று கதைகள் நமக்கு பறைசாற்றுகின்றன. மூன்றுமே மழலைக்கதைப் பேழைகள்.. காட்டுவிலங்குகளின் கதைகளாக .. கதை என்னவோ மூன்றும் ஒருபோல…ஆனால் ஒவ்வோர் முறையும் கதைகளின் விலங்குகள் மட்டும் மாறிக் கொண்டே வரும். மாறுபட்ட பரிணாமங்களை விரிக்கும்.இவ்வாறாகக் குழந்தைகளின் கதையலையில் நீந்தினால் மட்டுமே வியனுலகக் கரை சேர முடியும்..மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகைமையில் பிள்ளை கதையை இழுத்துப் பறித்துக் கொஞ்சுகிறது.. பிள்ளைகளிடம் தம்மை பெரிதுப்படுத்தாது மண்டியிடும் மாண்பு ஒரு சில ஆசிரியர்களிடம் மட்டுமே காண கிடைக்கும். தனக்கு எல்லாம் தெரியும் என்கின்ற மேம்போக்கு எண்ணத்தை உயர்த்திப் பிடிக்கும் நொடி முதல் வெறும் கற்பித்தல் கடன் மட்டுமே நிகழும் ஒழிய கற்றல் கடல் விரியாது.
மிகச்சரி என தட்டிக் கொடுக்கவும் ஆரத்தழுவவும் மோகன் பாரதி அருகில் இல்லை. அப்படியான நிகழ்வு இது…ஆசிரியர் சமூகத்தையே தட்டிக் கேட்பது போல..
அறிவியல் தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் மதிய நேரம் போல நூலாசிரியர் தாமதமாகப் பள்ளி வந்ததைப் பார்த்த பிள்ளை மோகன பாரதி கொஞ்சமும் தயங்காமல்..
“ஏன் சார் இவ்வளவு லேட்டு…?
நாங்க இம்புட்டு லேட்டா வந்தா
பேசாம விட்ருவீங்களா…??
ஆசிரியர் என்ற தயக்கம் துளியும் இன்றி தவறு என்கிற வாக்கில் சுட்டிக்காட்டும் துணிச்சல் போதிக்கப்படவில்லை, அசலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.. பிள்ளைகளைத் தன்னியல்பில் வளர வழி விட்டுள்ளது ஆசிரியரின் கல்வி. பேச்சுஒழுங்கு மாணவவிதிகள் என்கிற எந்த வியாக்கியானத்திற்குள்ளும் முடக்காமல் நினைத்ததை நினைத்த மாத்திரம் பேசும் சுதந்திரம் ஊக்கப்படும் போதே அவர்களின் தன்னம்பிக்கை வேறூன்றும்.எதிர் காலத்தில் கண்முன் நடக்கும் அநீதிகளை எதிர்த்துக்குரல் கொடுக்கும் திராணி ஏற்படும் என்பதே நூலாசிரியர் மோகன் பாரதியின் கேள்விக்கு அமைதியாய் நின்றார்.
அடுத்து பால்வாடி அபிஷேக்கின் பஞ்சாயத்து ஒன்று…
வகுப்பில் சிலேட்டுகள் காணாமல் போக பிள்ளைகளின் பைக்கோடுகள் சோதனைச் செய்யப்பட்டன. பால்வாடி அபிஷேக் பைக்கோட்டில் காணாமல் போன அனைத்தும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில் அபிஷேக்கின் தரப்பு வாதம் ஒரு விசித்திர வேடிக்கை வினோதம்.. களவாடுதல் என்பதெல்லாம் பிள்ளைகளுக்கு ஒன்றும் புரியாது. அவர்கள் கண்களை ஆட்சி செய்யும் எதுவாகினும் அதைக் கவர்ந்து விட நினைக்கும் பழக்கம் சில குழந்தைகளிடம் தென்படும். தனதாக்கிக் கொள்ளும் ஒருவித ஆர்வக்கோளாறே அது.
ஏண்டா இப்டி
களவாண்டு வச்சிருக்க…?
இது ஆசிரியர்..
கூலா சொல்றான்..
களவாணல சார்..
சும்மா எடுத்து வச்சிருக்கேன்…!
இது அபிஷேக் பதில்
அதான் ஏன் எடுத்து வச்ச..?
இதெல்லாம்
என்னோட கண்ணுக்குள்ள வந்துக்கே இருந்துச்சு…!
அடுத்தவங்க பொருள எடுத்தா அடி விழுகுமே..
அது உன் கண்ணுக்குள்ள வரலயா….?!
அதுவும் வந்துச்சு சார்..!
வெகுளித்தனத்தில் சாமர்த்தியம் தோய்ந்து மணக்கிறது.. .
தொகுப்பில் சில சம்பவங்கள் இன்னும் பல ஆய்வுகளுக்குள்ளும் கண்டுபிடிப்புகளுக்குள்ளும் நம்மைப் பிடித்து நிறுத்துகின்றன. ஒரு புள்ளியில் தவறவிட்ட நமது அறிவின் திண்மத்தை வெகு சாதாரணமாக தொட்டுவிடுகின்றன பிள்ளைகளின் நுட்பத்திறன்.
பேனாவுல எழுதினா
டீச்சரு..!
பென்சில்ல எழுதினா..
ஸ்டுடென்ட்டு…!
அவ்வளவே…..
இதைப் விட எளிமையாக ஆசிரியர் மாணவ வேறுபாட்டைப் பகுத்துக்காட்ட ஜீவிகளாலும் இயலாது.. மழலைகளின் அறிவார்ந்த சிந்தை எப்போதும் சிலிர்தே கிடக்கும்.
தாவரவியலின் அடிப்படைப் பாடத்தில் நடந்த ஒரு நிகழ்வின் பகிர்வு கூட இப்படித்தான் போகிற போக்கில் சாமான்யமாய் ஒரு அறிவுரையை வழங்கிச் செல்கிறது பவன்யாவின் பட்டவர்த்தனமான பேச்சு.
செடிகள் மரங்கள்’லாம்
உணவு தயாரிக்குதாம்…
உங்களுக்கு எதாச்சும்
அதப்பத்தி தெரியுமான்னு கேட்டேன்..
ஆசி
ஒண்ணாப்பு பவன்யாவுக்கு
ஒரே அதிர்ச்சி..
“என்னங்க சார்…
சின்னப் புள்ளைக கிட்ட
ஒங்க பாட்டுக்கு
இத்த தண்டி கேள்விய
கேட்டுருக்கிங்க..?!””
நல்லாருக்கு ல…
அடுத்தொரு கவிதை…. மொழி வளர்ச்சி என்பது பிள்ளைகள் தங்களுக்கு தாங்களே அவ்வப்போது புலனாய்வுச் செய்துப் புதுப்பித்துக்கொள்ள தங்களுக்கேற்றாப் போல அலட்டாமல் எளிமைப்படுத்திக் கொள்ளும் புழங்கு மொழி. இதில் யதார்த்தத்தை மட்டுமே காண முடியும்… மொழிச்சுத்தம் கம்பீரம் சொற்பாங்கு மொழிப்பற்று என்பதெல்லாம் அவர்களுக்கு அவசியமற்றது.
டிவி’ங்கிறது
இங்கிலீஷ் வார்த்தை…
தமிழ்ல என்ன சொல்லணும் தெரியுமா!?
“தமிழ் டிவி”சார்..!
அம்புட்டுத்தேன்… இதுக்கெதற்குப் பெரிய பெரிய அகராதி எல்லாம்… பிள்ளைங்களே பல்பொருள் தேடலில் முளைத்த அகராதி பிடித்த அகராதிகள் அல்லவா….
பிள்ளைகளின் நுட்ப அவதானிப்பு ஒவ்வொன்றும் கூரிய தன்மை கொண்டவை. பிள்ளைகளை கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒன்று விளங்கும்.அவர்கள் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களின் கவனத் திறன் சுற்றியுள்ள அனைத்து படிமங்களின் மீதும் படர்ந்து தான் இருக்கும். அனைத்தையும் உள்வாங்கிய படியே தங்கள் செயல்களிலும் மகிழ்ந்திருப்பர். செவிகளும் விழிகளும் அனைத்துத் திசைகளிலும் தொடர் இயங்கு தளத்தில் பணிக்கப்பட்டிருக்கும் அதிசய மனிதர்கள் நம் பிள்ளைகள். இதை என் சொந்த அனுபவத்தில் பலமுறை உணர்ந்துள்ளேன்.
தொகுப்பில் இரண்டு சம்பவங்கள் இந்தக் கருத்திற்கான ஆக்கமாக இங்கு பதிவிடப்பட்டுள்ளன..
தேச தலைவர்கள் தேசிய தினங்கள் பற்றிய அன்றைய வகுப்பில்..
மோடி தெரியுமா’ன்னு கேட்டதும் அம்ரிதா மொத ஆளா
கை தூக்க…
ஒனக்கு என்ன தெரியும்னு
நான் கேக்க…
” எப்ப பாத்தாலும்
ஏரோபிளேன்ல போவார்ல சார்.. அவரு தான் மோடி…!”
அடடா.. ஒரண்டைய இழுத்து விடுறாங்களே.. என ஆசிரியருடன் நானும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்..
கவனக்குறைவு, மறதி, பராக்குப் பார்த்துட்டே ஒரு வேலையும் உருப்படியா பண்றதில்ல, விளையாட்டுத்தனம் கூடுதல் என இனி பிள்ளைகள் மீதான முன்கணிப்பைப் பெற்றோரும் ஆசிரிய சமூகமும் கைவிட வேண்டும் என்பதே இந்தச் சம்பவம் நமக்கு வலியுறுத்தப்படுகிறது.
அடுத்த நிகழ்வு மிக முக்கியமான ஒரு பகுதி..
சாலை விபத்து பற்றிய பாடமொன்றில் ஆசிரியரின் விலாவாரியான வகுப்பில்..
ரோட்ல போகும்போது வேகத்தடை’லாம் போட்டுருப்பாங்க..
அது எதுக்குன்னு தெரியுமா??
இப்போ சாண்டில்யன் அதிரடி பதில் அலட்டாமல்..
“போலீசு வசூல் பண்றதுக்கு சார்…!”
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குமே என்ன சொல்வதென்று விழிப்பிதுங்குகிறது.. அப்ப நம்ம சுந்தர் சார் அவர்களின் நிலை கண்முன் விரிகிறது… இப்படிப் பண்ணாய்ங்கனா…. எப்படித் தான் பாடம் எடுப்பது…? என்பது போல….
வீட்டிலும் வெளியிலும் பிள்ளைகள் போவது வருவதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாலையில் வாகனங்களில் பயணிப்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறுகின்றனர். அது அவர்களின் கூரிய அவதானிப்பின் நிகழ்கண கற்றல் திறன். வாய்மொழி வகுப்பறைக் கல்வியைத் தாண்டி சுய ஆர்வத்தில் தம்மைச் சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் கற்றுத் தேரும் அவர்களுக்கேயுரிய பிரத்யேக சுதந்திரக்கல்வி. பிள்ளைகளை வாசித்திராத பெற்றோர் எப்போதும் அவர்களைக் குறைக் கூறிக் கொண்டேயிருப்பர்.
தொகுப்பு பல பரிமாணங்களில் பிள்ளைகளின் சிந்தனைகள் செய்கைகள் பேச்சுகள் பாவனைகள் என பெற்றோர் கண்டடையாத அவர்களின் சுயதிறனை அவர்களின் புற சாகசங்களைக் காட்சிப்படுத்துகிறது.
அதேபோல பிள்ளைகளின் பூசல்கள் என்பவை எல்லாம் வெறும் பொய் கோபங்கள்.. எத்தனை வேகத்தில் வீரியமடைகிறதோ அத்தனை விசையில் நிதானத்தையும் அடைகிறது.. பனி படர்வுகள் போல.. வன்மமற்ற மனதின் ஆதிக்கத்தில் மறந்து விடும்..மறைந்துப் போகும்.. துரோகங்கள் பழிவாங்குதல் விரோதங்கள் போன்ற வக்கிர துவம்சங்கள் ஏதுமற்ற பால்பனி.. தூய்மையையும் பரிசுத்தத்தையும் மட்டுமே சூடிக்கொண்டுள்ள கோயில் அவர்களின் மனம்..
மொதல்ல அபிமன்யு வந்தான்… சார்..
எங்கூட யாருமே சேர மாட்ராய்ங்க….!
தொடர்ந்து திவ்யஸ் பூவினி என பிள்ளைகள் பத்து பேர் மாறி மாறி இதையே திருப்பித் திருப்பி புகார் தாக்கல் செய்த வண்ணம் ஒரே வாக்கியமாக… ஆசிரியரின் துணையுடன் வகுப்பறையில் நீதிப்பரிபாலனம். மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நமது சுந்தர் தோழர் எவ்வாறு கையாண்டார் என்பதை வாசக சுயபரிசீலனைக்கு ஆட்படுத்துகிறது தொகுப்பு.
வகுப்பறையின்
மிகப்பெரிய
மிரட்டல் வாக்கியமாக இருக்கு… “ஒங் கூட சேர மாட்டேன் போ…”
இது மிரட்டல் என்கிற கருதுகோள் நமது புரிதலின் கோளாறு. பிள்ளைகளைப் பொறுத்தவரை வகுப்பறையின் கலாட்டா அலப்பறை சிடுக்குகள் யாவும் அவர்களின் உள்நாட்டு பூசல்.. தற்காலிக ஒத்துழையாமை இயக்கம்.. நம்மின் தலையீடும் பஞ்சாயத்துக்கும் அவர்களுக்கு இடையூறாகவே இருக்கும். இயல்பான குணப்போக்கில் பிசகலை ஏற்படுத்தும். அடித்தாலும் பிடித்தாலும் ஒன்று கூடி விடுவர் இயல்பின் நிமித்தத்தில்..
எனது பள்ளியில் வகுப்பறை ஆர்பாட்டங்கள் பலவற்றை இந்தத் தொகுப்பின் பக்கங்கள் நினைவு படுத்தின… ஒரு ஆசிரியராக நானும் இப்படியான அனுபவங்களைக் கடத்திய மகிழ்ச்சி இன்றும் தித்தித்துக் கிடக்கிறது நினைவுக்கிடங்கில்.
சில சமயங்களில் அவர்களின் அறிவார்ந்த ஜீவித்தனம் அவர்களின் மீதான நமது முன் முடிவுகளைத் தளர்த்தியபடியே அவர்கள் முன் நம்மை அறியாமல் மண்டியிட்டு கிடக்க வைக்கும். விண்வெளியை தாண்டிய வேறொரு உலகத்திற்குக் கடத்திச் செல்லும் ஆகாச விமானமாகவே நமது பிள்ளைகளின் மொழிகளும் செய்கைகளும் கேளிக்கைகளும் ஆசிரியர் என்பதை மறக்கடித்து நமது பிராய காலத்திற்குக் கூட்டிச் செல்லும் மந்திரகோல்கள் பிள்ளைகள்.
பள்ளி வகுப்பறை ஆசிரியர் போன்ற காலதேச வர்த்தமானங்களைக் தாண்டி அவர்களுக்கான சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் வெளியாகவே ஆசிரியரின் கல்விச்சாலை அமைந்துள்ளது என்பதை இங்கு ஒரு ஆசிரியராக குறிப்பிட்டே ஆக வேண்டும்.
தொகுப்பு முழுக்க சின்ன சின்ன பூசல்களும் உடன் பெரிய பெரிய சந்தோஷங்களும் கவிந்துக் கிடக்கின்றன வாசித்துக் கொண்டாட.. குழந்தைகளுடன் உறவாடிப் பிணைந்திருக்க அவர்களை ஆகர்ஷிக்க அவர்களின் அகவைக்கு நம்மைக் குறைத்துக் கொண்டு அவர்களின் மொழியிலேயே அவர்களுடன் பயணிக்க வேண்டும். இதையே குழந்தைகளின் அன்றாட பரஸ்பர பரிபாஷணையாக “ஓங்கூட்டு டூணா” வாகை சூடுகிறது சிறார் இலக்கியத்தில்.
பிள்ளைகளிடம் தான் எத்தனை கோரிக்கைகள் எத்தனை விதமான வேண்டுதல்கள், பலதரத்தின் செயலூக்கங்கள், விதவிதமான கேள்விகள் என அத்தனையும் அவர்களுடன் பரிமாறிக் கொள்ளும் தளமாக வகுப்பறை என்னும் கல்விஆலயம் என்பது போதுமானதாக இருக்கிறது என்பது வாசிப்பிற்குப் பின் புலப்படுகிறது. அவற்றை வழிப்பாட்டுத்தளமாகவோ சிறைச்சாலை கம்பிகளாகவோ உருவாக்கும் கட்டுமானவித்தகராக பிள்ளைகள் எதிர்கால நலனில் அக்கறையுள்ள ஆசிரியராக சுந்தர் அவர்கள் உள்ளதை இந்தத் தொகுப்பு நிரூபித்துள்ளது. வாசிக்க வாசிக்க பிள்ளைகளின் வெள்ளை மனதிற்குள் முடங்கிக் கிடக்கும் பல முகங்களைத் தரிசிக்கலாம்
அகண்ட சமுத்திரத்தின் ஆழங்கள் மழலைகள்.. அதற்குள் மூழ்கி முத்தும் குளிக்கலாம் அன்பின் அலைகளில் ஆசுவாசமாய் மிதந்தே கரை சேரலாம். அத்தனை மாதுரியம் பிள்ளைகளின் உணர்வொன்றும். அவற்றையெல்லாம் வாசித்தே அனுபவிக்க வாய்த்த இந்தத் தொகுப்பின் அநேக பக்கங்கள் மனதிற்கான இதத் தூறல்கள்..
மெட்ரிக் பள்ளியிலிருந்து வந்த ஒரு பிள்ளை எப்போதும் அக்கா தாத்தா பாட்டி என யாரேனும் ஒருவர் நேரடி பார்வையில் இருக்க அடம் பிடிக்குமாம். உறவுகள் கண்களில் படவில்லை என்றால் வகுப்பறையை ஆட்டகளம் ஆக்கி விடுமாம் என்கிற அறிமுக வரியுடன் தொடங்கும் கவிதை மற்றுமொரு ஜனரஞ்சக ரசனை..
ஒரு நாள் நைசா பேசி கெஞ்சியெல்லாம் பார்த்தேன்…
” சார் உங்க கால்’ல கூட விழுகுறேன்..
என்னைய கொண்டு போயி
எங்க வீட்ல விட்ருங்க..
ப்ளீஸ் சார்…!”
பிள்ளையின் இந்த வேண்டலை நினைத்து ஒருகணம் சிரித்து விட்டேன்.. பாவமாக அவர்கள் கெஞ்சுவதை காட்சிப்படுத்தும் விதமாக கோர்த்து எழுதியுள்ளது, நிகழ்வை அப்பட்டப்படுத்தியது என ஆசிரியரின் எழுத்தின் உத்தி தொகுப்பிற்குக் கூடுதல் பலம்.
புறம் பேசும் பெரியவர்களின் அறியாமை முன்னம் குறையோ நிறையோ பிடித்தமோ ஒவ்வாமையோ உள்ளதை உள்ளபடிக்கே நேராகச் சொல்லிவிடும் இயல்பு பிள்ளைகளிடம் மட்டுமே தரிசிக்கலாம். ஆசிரியர் என்ற மிகையுணர்ச்சி சற்றும் இன்றி குடும்ப உறவு போல சுயகருத்தையும் விமர்சனத்தையும் தயக்கமின்றி பரிமாறிக் கொள்ளும் மாணவ சுதந்திரத்தை ஊக்கப்படுத்தும் ஆசிரியரையும் வகுப்பறையையும் தான் இந்த தொகுப்பு நமக்கு அடையாளங்காட்டுகிறது. இந்த யதார்த்த குணாதிசியங்களை பாராட்டியோ கடிந்தோ இடைமறிக்காமல் இருந்தாலே தன்னியல்பில் வளர்வார்கள் பிள்ளைகள் என்பதை ஆசிரியர் தனக்கு வழங்கப்பட்ட குருவிக் கூட்டங்களைக் கொண்டுச் சாதித்துள்ளார்.
இந்தச் சம்பவமும் மேற்கூறிய விஷயங்களை நிரூபிக்கிறது.
இன்னைக்கு
ஜிப்பா மாதிரி
சட்டை போட்டுக்கிட்டு போனேன். இது ஆசிரியர்..
இப்ப வித்யா பாப்பா..
“சார் இந்த சட்டையல
உங்கள பாக்கப் பாக்க
எனக்கு கோவம் கோவமா வருது சார்..!?”
எதுக்கு வித்யா…?
தெரியல சார்.. ஆனா கோவமா வருது…!
அப்ப சட்ட நல்லா இல்லையா வித்யா..?!
கேவலமா இருக்கு சார்…!!
எத்தனை ஆசிரியர் இத்தனை பேச பிள்ளைகளை அனுமதிக்கிறார்கள் என்பது இதுவரை பதிவிடப்படாதக் குறிப்புகள். ஆனால் பிள்ளைகள் தமக்குப் பிடித்தமான ஆசிரியரை உரிமையுடன் மட்டுப்படுத்தி நக்கல் செய்வது என்பது ஒருவித அதீத பிரியத்தின் பிரதிபலிப்பு என்பதை துளியும் கூச்சப்படாமல் வாசக வெளியில் பிள்ளைகளின் நையாண்டிகளைத் தானும் ரசித்து காலத்திற்கு நிலைக்கும்படியாக நமக்கும் ருசிக்க பதிவாக்கியுள்ளார் ஆசிரியர் சுந்தர்.
இதையொத்த சம்பவம் மற்றொன்று… கூடுதலாக ஆசிரியரின் மீது நன்மதிப்பைக் கூட்டுகிறது…
இன்னைக்கு
கூலிங் கிளாஸ்
போட்டுக்கு போனேன்..
எல்லாரும் சுத்திச் சுத்தி வந்தாய்ங்க..
” சார்..
சூப்பரா இருக்கு..
சார்…
சூப்பரா இருக்கு..
சார்…
சூப்பரா இருக்கு..!”
அதுல இந்த யோக ஸ்ரீ இருக்கே… யோகா ஸ்ரீ…?!
ஒரே போடு தான்…
அம்புட்டும் காலி..!
சார்…. நல்லாவே இல்ல… கண்ணாடிய கழட்டுங்க… வேற ஆளு மாரி இருக்கு…!” .
ஆகச் சிறந்த கவிதைகளும் நாணித் தவிக்கும் மழலையின் கனிமொழியில் பால்வாடி வித்யா சொல்றாங்க
“சார்.. நானும்…
நாம் பேர் எழுதிக்கு வரவா..?!
” நாம் பேரு”.. அழகு…இந்த கவிதை எந்த மொழியிலும் பெயர்க்கமுடியாத பிள்ளைத்தமிழமுது…
உறுதியும் நிலைப்பாடும் நம்மை விட பிள்ளைகளிடம் கூடுதலாக இருக்கும். இதை நாம் பிடிவாதம் அடம் பிடித்தல் என்று சாடுகிறோம் அவர்களை. அசலில் அது உயிர்களின் பிரத்யேக குணாதிசயம். அதேபோல் எதிலும் ஸ்திரத்தன்மை என்பதும் பிள்ளைகளின் சுயம் என்பதை பா.பவன்யா நிரூபிக்கிறாள்.
பக்கத்துல மண்டபத்தில் விசேஷம்..
காலையில இருந்து
ஒரே பாட்டு சத்தம்..
வாதம் இதான்..
பாட்டு போடுறது
சும்மா ஆடுறதுக்கா
இல்ல வார்த்தைகளை புரிஞ்சுக்கவா..
வழக்கு ஆசிரியரிடம் வந்தது.. இப்போது ஆசிரியர்..
பாட்டு..
சும்மா ஆட்றதுக்கா..
இல்ல புரிஞ்சுக்கவா.? ஆடறதுக்கா… புரிஞ்சுக்கவா..?!
மறுபடியும் மறுபடியும் கேட்டேன்.. பாட்டு..ஆடுறதுக்கா.. புரிஞ்சுக்கவா…?!
பா.பவன்யா மட்டும்
கடைசி வர மாறவே இல்லை “பாட்டுங்கிறது
வார்த்தைகளை நாம் புரிஞ்சிக்க தான் சார்…!”
அடுத்ததாக பிள்ளைகளின் வகுப்பறை நாயகர்களான பல ஆசிரியர்கள் ருசித்த அனுபவம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஆசிரியர். இந்த அனுபவத்தை நானும் ருசித்துள்ளேன். பிள்ளைகளைப் பொருத்தவரை தனது மனதைக் கவர்ந்த ஆசிரியர்களை அப்படியே பிரதியெடுப்பர். தங்களின் பிரியமான ஆசிரிய நாயகர்களின் ஒவ்வோர் வெளிப்பாடுகளுக்கும் தான் மட்டுமே உரிமைப் பாராட்ட வேண்டும் என்கிற பிரயாசையில் வெளிப்படும் அந்த அன்பின் தீவிர ஆக்கிரமிப்பு பார்க்கவும் ரசிக்கவும் பிரமிப்பாக இருக்கும். அது ஆசிரியர்கள் விரும்பிச் சுவைக்கும். மழலைபோதை. இதை அனுபவித்திராத ஆசிரியர்கள் பெரும்பாலும் வகுப்பறை சர்வாதிகாரிகளாகவே இருப்பர்.
வகுப்பறையின் மேசையைச் சுற்றிய பிள்ளைகளின் வளைவு வட்டத்திற்கு மத்தியில் சக ஆசிரியரின் திருமண ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் நமது ஆசிரியர் சுந்தர்.. அப்போது….
என்னயச் சுற்றி
ரெண்டு பக்கமும் நின்னுக்கிட்டாய்ங்க..
ஒவ்வொரு பக்கமா புரட்டினேன்..
அப்ப ரெண்டாம் வகுப்பு மா.பவன்யா வாயில் இருந்து
ஒரு முணுமுணுப்பு..
“கடவுளே.. கடவுளே..
எங்க சார் போட்டோ ஏம்பக்கந்தான் வரணும்…
கடவுளே.. கடவுளே..
எங்க சார் போட்டோ
ஏம்பக்கம் தான் வரணும்..!”
இந்த பிள்ளைப்பிரியவர்களை விடவா பெரிய விசிறிகள் இப்பூவுலகில் கண்டடைய முடியும். இந்த ரசிகக்கூட்டம் பிற துறைகளில் வாய்க்காத ஆசிரியத் தொண்டிற்கு மட்டுமே உரித்தான மகிமை.
ஆசிரியரிடமிருந்து தன்னை ஒலித்துக் கொள்வதாக முகம் திருப்பி முதுகு புறம் காட்டி உட்கார்ந்தும், நேற்றை நாளைக்கு என்று தனக்குத் தோதான மொழியாக்கிய அஜிஸ், குடும்பமே விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் படுக்கிடையாகக் கிடக்க பசியில் சோற்றுக்காக மட்டுமே பள்ளிக்கு வந்த யோகா பாப்பாவின்
“சார் இன்னும் சோறாக்கலையா” என்று கேட்ட அவளின் புன்னகையைக் காட்சிப்படுத்திய யோகாவின் புன்னகைப் பூத்த முகம் என் மனதில் ஆழமாய் புதைந்துவிட்டன.
உண்மையிலேயே என்பதை உம்மையிலேயே என்று கொஞ்சும் அபிமன்யு, ரத்தத்தை நத்தம் என்று தொத்தித் பேசும் ஒரு பாப்பா, ஃபர்ஸ்ட் எழுதி முடித்த சுபிக்ஷா செல்லம், “ஒங்கூட சேர மாட்டேன் என்று அழ வைக்கும் மழலை நட்புக்கூட்டம், முறைத்துப் பார்த்தே பயமுறுத்தும் வகுப்பின் நாயகன் ரக்ஷித், புத்தி புகட்டும் யக்ஷனா பாப்பா, பள்ளிக்கு லீவு போட்டதால் கண்ணீர் சுமந்த விழிகளுடன் வினிதா ஸ்ரீ பாப்பா, சாமியிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கும் யோகேஷ், எதிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் மழலையாக சுபிக்ஷா, நாம் பேரு என்ற அஞ்சுக மொழி வித்யா, சாப்பிடு என்பதை “தாப்புடு” என்று தொத்திப் பேசி மயக்கும் கவிஸ் எத்தனை ரக மொழிகள்.. ரசிக்க இதைவிட வேறென்ன வேண்டும்..
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…” என்பதே தேனி சுந்தர் அவர்கள் படைப்பின் நோக்கமாகும் பார்க்கிறேன்.
இந்த மலர் கூட்டங்களின் மழலை வாசத்தைப் சுவாசிக்கும் பக்தனாக ஒட்டு மொத்த பிள்ளைகளின் ஒருமித்த மூச்சாக “ஓங்கூட்டு டூணா” வாசகரிடம் ராசியாகிறது.
அழுகாமல் முடி வெட்டிக் கொண்டதால் பெரிய ஆள் ஆகிவிட்ட திவ்யேஸ்,கிள்ளி கிள்ளி வைக்கிறாள் சடைய சடைய அவிழ்த்து விடுகிறாள், உங்க அம்மா வெள்ளிக்கிழமை செத்துப் போகும் என்று சொல்கிறாள், பட்ட பேரு வெச்சி கூப்பிடுறா என வகுப்பறை புகார்கள் தான் எத்தனை.. தீர்க்கவும் தீர்ப்பு கூறவும் நேரம் போதாமை…கூடவே நாம் குழந்தையாக அவர்கள் முன் பணிந்து ஊடாடவும் வேண்டும். அப்போதே இந்தக் கொண்டாடங்களில் மகிழ்ந்திருக்க முடியும்.
சனிக்கிழமை என்றாலே ஞாயிறு விடுமுறை நாளை குறிப்பாக உணர்த்தும் ஒரு திருநாள். கூடுதலாக அன்றைய தினம் கலர் சட்டை போடும் வழக்கம் நான் பள்ளியில் படித்த காலத்திலேயே இருந்து வருகிறது. பிள்ளைகளின் பள்ளிச் சோர்வைப் போக்கும் பெருநாளாக சனிக்கிழமை அவர்களுக்கான நாள். இன்றைய நகர்ப்புற பள்ளிகளில் இப்படியான வழமை கைவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் கடைப்பிடித்து வருவதை நினைக்கும்போது பள்ளிக்கால எனது பாலியல் நினைவுகள் கண்முன் விரிகின்றன. தொகுப்பில் இந்தத் திருநாளை காட்சிப்படுத்திப் பதிவாக்கியது மலரும் நினைவுகளில் ஆழ்த்தியது. தொகுப்பு முழுதும் பெருவாரியான பகுதிகள் வகுப்பறை என்னும் கல்விவளாகத்தை பிள்ளைகளின் சுயத்தை வளர்த்தெடுக்கும் அவர்களுக்கான தனித்த உறைவிடவாகவே ஆசிரியரின் வகுப்பறை அமைந்திருப்பது உள்ளபடிக்கே மகிழ்ச்சி.
இத்தொகுப்பில் நிரம்பப்பெற்ற அஞ்சுக சம்பாஷணைகளின் அணி வரிசையில் சிலவற்றை மட்டும் அடிக்கோடிட்டு சிலாகித்து மீதமுள்ள பிள்ளைகளின் மொழிகளை தள்ளி வைத்துக் கடத்திவிட மனம் ஒப்பவில்லை. ஒரு ஆசிரியராக குழந்தைகளின் உயிர்ப்பு உறைந்திருக்கும் இத்தொகுப்பிற்குள் சில உயிர்களை மேடை ஏற்றியும் பலதுகளை வெறும் பார்வையாளர்களாக ரசித்துவிட்டு பேசுவது ஏதோ மதிப்பெண் தரவரிசை போல பாரபட்ச ஏற்றத்தாழ்வுகளில் பிள்ளைகளின் கனிமொழியை கவித்துவ துள்ளலை தரம் பிரிப்பது போல ஆகிவிடும் என்கிற கவனத்தில் கூடுமானவரை எல்லா பிள்ளைகளையும் எனது எழுத்துப் பார்வைக்குள் அரவணைத்துள்ளேன். வாசிப்பவருக்கு வேண்டுமானால் இந்த விமர்சனம் வறட்சியை தரலாம் அல்லது தொகுப்பின் அநேக பக்கங்களை ஆட்கொண்டதால் மதிப்பீட்டிற்கு இடையூறாக இருக்கலாம்.ஆனால் என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளின் சுயதேடலுக்கு வழிவிடும் பரந்த வெளியாக இருக்கும் சுந்தர் அவர்களின் வகுப்பறை, நாளொன்றிலும் நிகழ்த்திய ப ஆச்சரிய அனுபவங்கள். பிள்ளைகளின் மாய உலகின் அனைத்து விந்தைகளையும் ரசித்து பிசகாது குறித்து ஆவணப்படுத்திய குறிப்பேடாக இந்நூலை காலங்களைக் கடந்த அமரகாவியமாகத் திகழும் அனைத்து சாத்தியங்களும் பொதிந்துள்ளது.. இனிவரும் காலங்கள் இது போன்ற வகுப்பறை மலரும் நினைவுகளை ஒவ்வொரு ஆசிரியரும் குறித்து வைத்து படைப்பாக்கம் செய்யவேண்டும். அவர்களின் சிறு அசைவுகளும் கூட காவியமாகக் கவிதையுலகில் பொறித்து வைக்கப்பட வேண்டும். இந்தத் தொகுப்பு இலக்கிய உலகில் மாறுபட்ட ஒரு தளத்தை உருவாக்கப்படும் படைப்புப் புரட்சியாகவே காண்கிறேன்.
ஒவ்வொரு நூற் பார்வையிலும் முதல் ஒரு பக்கம் எனக்கானதான அறிமுகக் கட்டுரை ஒன்றிக்காக நான் ஒதுக்கிக் கொள்வேன் இது எனது பாணி. முதல் முறையாக பிள்ளைகளின் ஒவ்வொரு பச்சிளம் ரேகைகளின் செந்நிறத் தடங்கள் எனது எழுத்துரையில் பதியப்பட வேண்டும் என்கின்ற பேரவாவில் ஆதி முதல் அந்தம் வரை தொகுப்பின் இழையோரங்கள் இடுக்குகள் என ஒரு கூட்டி எனக்கான ஒரு நிறைவைப் பதிவிட்டுள்ளேன் என்கின்ற திருப்தியில் பிள்ளைகளின் நினைவரிசைகளைப்வாசித்துப் பேசியதில் உள்ளபடிக்கே பெருமிதங் கொள்கிறேன்.
து.பா.பரமேஸ்வரி