ஊர் வேலைக்காரன் சிறுகதை – கி. பிரவீன் குமார்
எலே மாயி, எலே மாயி இங்க வாடா இப்படியே எத்தனை நாளைக்குத் தான் கதைபேசிட்டு இருக்க போற.நம்ம டீ கடைக்கு வேலைக்குவரது.
வரேன் துரை. சரி குமாரு எனக்கு வேலை வந்துருச்சு அப்புறம் பேசலாம்.
எலே மாயி டீ கடையில நீ போடுற டீக்கு எல்லா பையலும் இங்கதான் வரனும் பார்த்துக்க!
சரிதுரை.
எதாவது தேவைனா எங்க அப்பன் இருப்பான். அவன்கிட்ட கேட்டுக்க. எனக்கு தலைவலிக்குற மாதிரியிருக்குடா மாயி. எனக்கு இப்ப போதையிலை வாங்கிதாடா.
“இவன் வேற என்ன வேலைக்குலாம் அனுப்ப போறானோ தெரியலை” என தன்னுள் புலம்பிக்கொண்டு வாங்க சென்றான்.
சில நாட்கள் கடந்தது.
மாயி நம்ம டீ கடையில தான், இப்ப எல்லா பையலும் வரானுங்க, எல்லாம் உன் கைவித்தை தான்யா மாயி. சரிவாடா மாயி உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கு ஆஸ்பத்திரி வரை போயிட்டுவரலாம்.
அப்படியா! என்னாச்சு துரை உடம்புக்கு?
எலே! வாடா மாயி வாயபொத்திக்கிட்டு!
என்ன துரை “ஒயின் சாப்” பக்கமா வண்டிய நிறுத்துறிங்க.
நீ இந்த கடைக்குபோயி உன் கையில இருக்கிற பணத்த எடுத்து, ஒரு ஃபுள்ளூ வாங்கிட்டுவாடா. எதுக்கு துரை அதலாம்? நான் சொல்லுறத மட்டும் செய்யுடா முதல, நேரத்த வீணாக்காதடா கஞ்சாமாயி.
இந்தாடா! மாயி இந்த தீனிய வாயில போட்டு திண்ணுக்கிட்டு கிட. நான் இந்த ஃபுள்ள வையித்துல ஊத்திட்டுவரேன். இப்படி குடுத்துல தண்ணீ ஊத்துரமாரி ஊத்துரானே! இன்னைக்கு என்ன கூத்து நடகப்போகுதோ தெரியலை?
சரிடா மாயி இப்ப வீட்டுக்கு போலமா?
சரிதுரை.
இப்பத்தாண்டா தெம்பா இருக்கு. நேரமாச்சு ஏறுடா வண்டில.
பார்த்து வண்டிய ஓட்டூங்க துரை.
துரை, துரை,…! வண்டிய நேரா ஓட்டூங்க, வண்டி வருது முன்னாடி!
எலே மாயி வண்டிய நல்லா தாண்டா ஓட்டூறேன். வண்டிதாண்டா வேற எங்கேயோ போகுது. நாளைக்கு வண்டிய சர்வீஸ்க்கு விடனும்டா.
துரை, வண்டி ரோட்ட விட்டு வேற எங்கேயோ போகுது! கடவுளே நீ தான் இவன் கிட்டயிருந்து காப்பாதனும்! என சொல்லிகொண்டு இருக்கும்போது வண்டி சாலையின் ஓரத்தில் நிலைத்தடுமாறி தடம் புரண்டது.
சொல்லி வாய மூடல அதுக்குள்ள வண்டிய முள்வேலில ஏத்திடானே!
“அய்யோ” ! கடவுளே கை, காலெல்லாம் ஒரே காயமா இருக்கே!
துரை, துரை,…? நீங்க எங்கயிருக்குறிங்க?
டேய் மாயி,இங்க வாடா வந்து வண்டிய தூக்குடா மாயி.
உடம்பு எல்லாம் இரத்தமா வருது துரை வாங்க ஆஸ்பத்திரிக்குப் போவோம்.
டேய் ! வீட்டுல கேட்டா. காருக்காரன் இடுச்சுட்டான்னு சொல்லிரு வேற எதுவும் சொல்லாத.
சரி துரை வாங்க போலாம்.
மறுநாள் காலையில்.
“நாம இனி இவன் கடைக்கு போககூடாதுடா சாமி” என முடிவு எடுத்தான்.
என்னயா மாயி தனியாபொழம்பிக்கிட்டு இருக்க? உடம்புலாம் காயமா வேற இருக்கு?
அது பெரிய கதை குமாரு!
இப்படியே எத்தன நாளைக்குத் தான் ஊருக்காரனுங்களுக்கு சும்ம வேலை செய்ய போற? உனக்குனு குடும்பம், குட்டி இல்லையா?
அட விடு குமாரு. அதலாம் கடந்து வந்தாச்சு. இங்க வந்து இருபது, முப்பது வருசமாவது இருக்கும். நமக்கு இப்படி இருக்குறது தான் நிம்மதியா இருக்கு. இந்த ஊருக்காரனுங்க அப்படித்தான். அவனுங்களுக்கு தேவைனா என்னைய வேலைக்கு கூப்பிடுவானுங்க. இப்படியே பழகிடுச்சு குமாரு. கடவுள் நல்ல உடல் ஆரோக்கியத்த தந்துருக்கான். அப்பறம் எதுக்கு குமாரு காசு பணம்.
“ய்யோ நீ தத்துவமெலாம் நல்ல தான் பேசுற”. சரி எதாவது சம்பளத்துக்கு வேலைக்குப் போக வேண்டியது தானே. விருப்பமில்லாமலாம் இல்ல குமாரு. முன்னாடி மாதிரி வேலை செய்யமுடியலை.
சரியா காலையில இருந்து எதாவது சாப்பிட்டியா, இல்லையா?
அதுலாம் எப்பயாவது தான் குமாரு.
இந்தாயா மாயி இப்போதிக்கு இந்த காச வச்சு நைட்டாவது நல்லா சாப்பிட்டுக்க. சரியா மாயி நாளைக்கு பாக்கலாம்.
இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு, தெரு கடையில் இருக்கும் படிக்கட்டில கொசுக்கடியுடன் தன்னிடம் இருந்த வேட்டியினால் போர்த்திக்கொண்டு தூங்கினான். ஏங்க! எங்கங்க போனீங்க? எவ்வளவு நேரமா உங்கள தேடுறது?
பக்கத்துல சின்ன வேலையா போயிருந்தேன். என்னா மயிலு? என்ன வேணும்?
ஏங்க! தீபாவளி வருது நம்ம பிள்ளைகளுக்குத் துணி, பட்டாசுலாம் வாங்கனும். அப்படியே குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வரலாமாங்க?
சரி மயிலு போகலாம்.
என்னையா பரமசிவம் (மாயி) நல்லநாளுக்குப் பொண்டாட்டி, பிள்ளைங்ககூட வெளியே கெளம்பிட்ட போல? சரி, சரி நல்ல இருந்தா சரிதான்டா மாயி.
என்டி மயிலு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் சந்தோசமா இருக்குடி. என்னானு தெரியல !
ஆமாங்க. நீங்க எங்க கூட இருந்தா எங்களுக்கும் சந்தோசமாதான் இருக்கு. நீங்க தான் எங்கள விட்டுட்டு போகிடுறிங்க.
இனி போக மாட்டேன்டி மயிலு. உன்ன நல்லா பாத்துகிறேன்.
மனநிறைவுடன் தன் குடும்பத்துடன் நடந்து சென்றான்.
“ய்யோ மாயி,”ய்யோ”…எந்திரியா! மணி ஏழு ஆச்சு! இன்னும் என்னையா தூக்கம் வருது? எந்திரியா! இந்த சிட்டையில இருக்குற பொருளை வாங்கிட்டுவாய, கடைக்குச் சாப்பிட ஆளு வரப்போறாங்க.
சரி தாயி வாங்கிட்டுவறேன் என பதறி எழுந்த மாயி, கண்களைத் துடைத்துக் கொண்டு தன் அன்றாட ஊர் வேலையை செய்ய நடந்து சென்றான்.