Posted inPoetry
புனிதனின் கவிதைகள்
எதுவெல்லாம் அழகு
************************
கஞ்சன் வீட்டுப்
பெரிய பூக்கள் அழகு
ஊதாரி வீட்டுச்
சின்னப் பூக்கள் அழகு
ஆட தெரியாதவளின் வீட்டு
ஒயிலான பூக்கள் அழகு
நர்த்தகி வீட்டு
மயில் மாணிக்கம் கொடிப் பூக்கள்
அழகு
கோழையை வீரனாக்கும்
பூக்கள் அழகு
மத்தியானத்தை
தியானம் ஆக்கும்
பூக்கள் அழகு
போர் செய்திகள்
*********************
விளையாடிவிட்டு
வரும் போது
சொற்களை அழுக்காகி
கொண்டு வருகிறாள் பாப்பா
போர் செய்திகள் கேட்டு
பயத்தில்
அதிகம் சாப்பிட்டு
குண்டாகிக் கொண்டே
போகிறாள்
மின்மினி போல்
துலக்கி வைத்ததாய்
இருந்தன அவள் சொற்கள்
கோழிக் கொண்டைப் பூக்களுக்கு
நிக்கா ஆயிருந்தன
இரு சிட்டுக்குருவிகள்
பேசுவதை
மௌனம் எனவும்
நெல் திணையை
அம்மா கையால்
தேய்க்கும் பொழுது
சொற்கள் பேசுவதையும்
அறிந்து வைத்திருந்தாள்
– க. புனிதன்