பத்து வருடங்களுக்குமுன் ஒரு மழைநாளில் வீட்டை அடைத்துவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு மருத்துவருடனான நேர்காணல் நிகழ்துகொண்டிருந்தது. நிறைவாக நெறியாளர் கேட்டார். “உலகம் நோய்ப்பீடையில் இருந்து முழு விடுதலை பெற்றுவிட்டது. மருத்துவமோ மருத்துவர்களோ தேவையில்லாத நிலை! அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” முகமெல்லாம் புன்னகையைப் படரவிட்டபடி மருத்துவர் சொன்னார். “அப்படி ஓர் உன்னத உலகம் உண்டாகுமானால் முதலில் சந்தோஷப் படுவது நான்தான். மருத்துவக் கருவிகளில் இருந்து விடுதலையாகிப் பேனாவை எடுத்துக் கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன். மருத்துவம் போலவே இலக்கியமும் மானுட சேவைக்கானது.”
டாக்டர் பிருந்தா அவர்களின் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்தபோது அந்தப் பழைய ஞாபகம் வந்து மனம் சிலிர்த்தது. மருத்துவர்கள் இலக்கியமும் செய்கிறார்கள் என்பது அபூர்வம். இந்தத் தொகுப்பிலேயே கூட ஒரு கவிதை உண்டு. ஓர் அலுவலர் தனது பணியிடத்தில் ஒரு ரோபோவைப் போல் வேலை செய்கிறார். மாலையில் உழைத்துக் களைத்து அலுவலகம் நீங்குகிறார்.
அடையாளப் பையைத்
தலையைச் சுற்றிக் கழற்றிக்
கைப் பையில் திணித்தபின்
நானாகிவிட்ட நான்
இன்றைய கவிதைக்கான வார்த்தைகளை
மனதுக்குள் கோர்த்தபடி
உல்லாசமாய்
நடந்து செல்கிறேன்.
கவிதை என்பது களைப்புநீக்கி. ஓர் ஆசுவாசம். வாழ்வியல் வரட்சி, வெறுப்புணர்ச்சி மேலிடும்போது நம்பிக்கை நீரூற்றி மென்மைப் படுத்துவது.
ஆதிமனிதனின் வேட்டை யுகம் முடிவடைந்து அறிவுத் தேடலின் முதல் நுனியை நெருங்க முயன்றபோது அவனுக்குக் கிடைத்தது காணொளி ஓவியங்களும் மனவெளிக் கவிதைகளும்தான். முதலில் வெற்றுக் குரல் ஒலியால் தனது உணர்வுகளையும் ஆசாபாசங்களையும் காதல் காவியங்களையும் வரைந்து பழகினான். காமம், காதல், அன்பு, அரவணைப்பு என்று மனமும் உடலும் புதிய படிநிலைகளை எட்ட முயன்றபோது அவனின் வெற்றுக் குரலின் ஒலிப்பரவலுக்குமேல் ஏதோ தேவைப் பட்டது. குறுகிய வாழ்க்கைப் பாதையில் இருந்து பரந்துபட்ட பயணப் பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கத் தொடங்கினான். தேடலின் உச்சத்தில் அவனுக்குக் கிடைத்தது மொழியும், அதன் வளர்ச்சியில் எழுத்தும்.
எழுத்து உருவான பிறகு முதலில் அவனுக்குக் கைகூடியது கவிதை. மன அந்தரங்கத்தின் ஊமை மொழிகளை எழுத்துருவத்தின் வழியே கவிதையாக்கினான். ஊடலும் கூடலும் கவிதையாய் மலர்ந்தன. தான் வாழும் வாழ்க்கையைக் கவிதை மொழிக்குள் பதிவிறக்கம் செய்து தானே ரசித்துப் பிறரையும் ரசிக்கவைத்தான். வாழ்வின் துன்ப துயரங்களையும் புதியதாய்த் தான் கண்டுபிடித்த விஞ்ஞானக் கருத்துக்களையும் எழுத்துப் படிமத்தின் ஊடாகப் பயணிக்க விட்டான். மருத நிலத்தின் வழியாக உற்பத்தி முறை தோன்றியபோது மனிதனின் உணவுத் தேவை ஏறத்தாழ நிறைவடைந்தது. உற்பத்திக்கான உழைப்பு நேரம் போக மீதி நேரத்தில் மன அரங்கத்தில் சிந்தனைத் தடம் பதிவானது. உண்பதைத் தாண்டி உடுப்பதும் அதற்கடுத்து உறைவிடக் கண்டுபிடிப்பையும் செய்தான். ஓய்வு நேரம் என்பது அடுத்தடுத்த புதுச் சங்கதிகளை உருவாக்காகக் காலம் வகுத்துத் தந்த வாழ்வியல் தேற்றம்..
ஆதிக்கலை ஓவியம் என்றால் அடுத்த நிலை ஆடல் நிகழ்வு. ஊமை இயக்கமாய் இருந்த ஆடல் எழுத்துமொழிக் கண்டுபிடிப்பால் பாடலோடு கூடிக் குலவியது.. அதன் வழியே கவிதையும், கவிதை வழியே தத்துவச் சிந்தனையும் மலர்ந்தன.
சங்ககாலம் தொட்டு இன்றுவரை கவிதை ஊடகத்தின் மேல் வாழ்வியல் சிந்தனைகளும் வளர்ச்சிக் கோட்பாடுகளும் பயணிக்கின்றன. நிலம் எல்லாருக்குமானதாக இருந்தபோது அன்பு, காதல் போன்றவை பரிமாறப்பட்டன. சமூக வளர்ச்சியில் நிலம் உள்ளவர்கள், நிலமில்லாதவர்கள் என்ற பாகுபாடு உருவானபோது வீரம், பொருள் தேடல், காமம் ஆகியவை பேசப்பட்டன. நிலமுள்ளவர்கள் அரசதிகாரம் பெற்றார்கள். “நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என இலக்கியம் அவர்களுக்குச் சாமரம் வீசியது. காமக் கதைகள் பேசி நிலமற்ற உழைப்பாளிகளை மயக்க நிலையில் வைத்திருந்தது.. நிலமுள்ளவர்கள் அதிகாரம் பெற்ற மனிதர்களாய் உயர்ந்தபோது கவிதையும் இலக்கியமும் அவர்களுக்கு சேவை செய்தன. சேவைப் பகுதியின் பருப்பொருளாய் மதம் என்ற கருத்தியல் கோட்பாடு உருவானது.
சமுதாயம் அன்றுமுதல் இன்றுவரை ஒரே நிலையில் நின்று நிலைப்பதில்லை. மாறிக் கொண்டே இருக்கிறது. அரசதிகாரத்தைக் கேள்விகேட்ட வணிக குலத்தின் பிரதிபலிப்பாய், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்கள் தோன்றின. மனித வாழ்வை முடக்கிப் போட்ட ஆரிய மதத்தை எதிர்வாதத்தின்மூலம் தோற்கடித்தன குண்டலகேசியும் நீலகேசியும். சமூக மாற்றமும் இலக்கிய வளர்ச்சியும் சம அளவில் வளர்ந்து வந்து இன்று 21ஆம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது. காலமாற்றத்துக்கும் சமுதாய மற்றும் அரசியல் வளர்ச்சிக்கும் தகுந்து, ஜனநாயகக் கருத்தியலை உள்வாங்கி உச்சத்தை அடைந்திருக்கிறது இலக்கியம்.
இன்றைய கவிஞர்களை பாரதியின் வழித் தோன்றல்கள் என்று சொல்லலாம். சங்க காலம் தாண்டி காவியக் காலம், அதன் பிறகு பக்தி இலக்கிய காலம், 20ஆம் நூற்றாண்டில் ஜனநாயக காலம். ஜனநாயக யுகத்தைத் தோற்றுவித்தவர் பாரதி. அவருக்குப் பின் வந்த எல்லாக் கவிஞர்களும் அவர் வகுத்துத் தந்த ராஜபாட்டையில் பயணிக்கிறார்கள். பாரதி கவிதைச் சக்கரத்தின் மையம் என்றால் மற்றெல்லாக் கவிஞர்களும் ஆரங்கள் என்று சொல்லலாம். அவர்களில் முக்கியமானவர் டாக்டர் எஸ். பிருந்தா இளங்கோவன்.
இந்தத் தொகுப்பு வலிமையானதும் எளிமையானதுமான உள்ளடக்கக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. ‘கவிதை என்றால் என்ன?” என்று ஒரு மாணவன் கேட்டால் ஓர் ஆசிரியரைப் போல எளிதாகப் பதில் சொல்கிறார். கவிதை என்பது பூக்களின் வம்சம் என்கிறார். கண்ணுக்கு அழகும் நாசிக்கு வாசமும் தொடுகலுக்கு மென்மையும் தருவது பூ. கவிதையும் அப்படித்தான்.
”எழுதுகோல் கொண்டு
இதழ் பிரிக்கத்
தேவை இல்லை.
அது தானாக மலரும்.
கவிதையும்
பூக்களின்
வம்சம்தான்.”
வார்த்தைகளை வரட்டுத் தனமாய்ப் பொறுக்கி எடுத்துக் கவிதை என்ற பெயரில் கோர்க்க வேண்டியதில்லை. பூவைப் போல தானாகக் கருக்கொண்டு ஜனனம் பெறவேண்டும். அப்போதுதான் கவிதை கற்பனைக்கும் நுகர்வுக்கும் உகந்ததாய் இருக்க முடியும். அழகான விளக்கம்.
வார்த்தைகளை எப்படித் தேர்வு செய்வது என்று இன்னொரு கவிதையில் விளக்குகிறார்.
”நாள்தோறும் பேசிக் குவித்த
வார்த்தைகளை
ஒரு கைப்பிடி அள்ளி
மனதிலிட்டுச் சலித்து
மேலாகத் தேங்கியவை கழித்து
கீழிறங்கும்
மென்மையானவற்றைக் கோர்த்துக்
கவிதை செய்கிறேன்.”
எமக்குத் தொழில் கவிதை என்றார் பாரதி, தொழில் என்பது செய்வது. அவர் வழியில் நின்று கவிதை செய்கிறார் பிருந்தா. அதுவும் சலித்தெடுத்த சொற்களால். செதுக்கி எடுத்த சிலையாய்க் கவிதை இருக்கவேண்டும்.
21ஆம் நூற்றாண்டு பெண்களுக்கு மிகவும் கொடூரமான காலம் ஆகும். பெண்களை வலையில் வீழ்த்தி அவர்களிடம் இன்பம் துய்த்துக் கரும்பிவிட்டு சக்கையாய்த் தூர எறியும் ஆண் வக்ரச் சில்மிஷக்காரர்களிட்ம் சிக்கி மடியும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பகுதியில் பெண் தான் விரும்பும் ஆடவனோடு வாழ அனுமதிக்காத பெற்றோரிடம் மாட்டி எரிந்து போகும் கொடுமை. சமீபத்தில் நடந்த சம்பவம் மனித மாண்பைச் சிதைக்கும் கொடூரம் என்றே சொல்லவேண்டும். காதலித்துக் கல்யாணம் முடித்து நான்கே மாதங்களில் அருவிக்குக் குளிக்க அழைத்துப் போய்க் கத்தியால் குத்திக் கொலை செய்த காதலனைக் காவல் துறை கைது செய்திருக்கிறது.
கண்டுபிடிக்கப் பட்ட கொலை ஒன்று என்றால் கண்டுபிடிக்க முடியாதவை எத்தனையோ? அந்தக் கொடூரக் காதலன் தன் மனைவியை அடுத்தவனுக்கு விருந்தாக்க யத்தனித்தபோது பெண் மறுத்துவிட்டாள் என்பதற்காக இநத்க் கொலை நடந்திருக்கிறது. இதைச் சமுதாயச் சீர்கேட்டின் உச்சம் என்று சொல்லலாம்.
இளம் பெண்களைக் கவிஞர் எச்சரிக்கிறார்.
”மிதிவண்டி பழகுகிறாள்;
அம்மாவின் புடவையை
அரைகுறையாய்ச் சுற்றிக் கொண்டு
அழகு பார்க்கிறாள்.
தப்புத் தப்பாய்ப்
பொடிகளை கலந்து
கொதிக்க வைக்காமல்
குழம்பு செய்கிறாள்.”
இப்படி அறியாப் பருவச் சூழலில் உலவிக் கொண்டிருக்கும் அவளுக்குக் கவிஞர் எச்சரிக்கை விடுகிறார்.
”அவள் பூஞ்சிறகுகளை வரவேற்க
ஆகாயம் காத்திருக்கிறது.
படபடக்கும் அந்தச் சின்னப் பறவை
விண்ணில் பாய அனுமதியுங்கள்.
அது
வல்லூறுகளும் பறக்கும்
வானமென்பதை
மெதுவாய்ச் சொல்லி வையுங்கள்.”
பெண்களின் சுதந்திரத்தைத் தடுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் அவளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். சம காலத்தைப் பிரதிபலிக்கும் முக்கிய படைப்பு இது.
“ஏதேனுமொன்று” என்றொரு கவிதை. மழைகாலத் தனிமையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் விரகதாபம். கணவன் வீட்டில் இல்லை. அவன் எப்போது வருவான் என ஏங்கிக் கிடப்பது பெண்ணிய யதார்த்தம். அந்தப் பெருமூச்சு ஒரு கவிதையைத் தருகிறது. தாபமும் இலக்கியப் பனுவலின் உள்ளடக்கமாய் உருப்பெறுவதுதான் கற்பனை ஆற்றலின் வலிமை.
”ஈர விறகாய்க் கிடக்கிறது மனது.
மின்னலாய்
உன் குறுஞ்செய்தி!
சின்னதாக ஒரு
தொலைபேசி முத்தம்!
கடற்கரைச் சாலை
நெடும்பயணம்!
நீ பருகித் தந்த
பாதிக்கோப்பைத் தேநீர்!
ஏதாவது ஒன்றேனும்
வேண்டும் எனக்கு.
மழைக்காலம் வீணாகிறது.”
இந்தக் கவிதையின் அஸ்திவாரமாய் அல்லது நெம்புகோலாய்க் கடைசிவரி திகழ்கிறது. மழை இரவில் தனித்துக் கிடக்கும் அனைவரின் உணர்ச்சியும் இந்த வரியில் கூடுகட்டி நிற்கிறது. இதை வாசிக்கும் வாசகர் கூதலடிப்பதையும் உடல் சிலிர்ப்பதையும் உணர முடியும்.
பிரபஞ்சத்தில் மனிதன் தவிர அனைத்து விலங்குகளும் பசியோடேயே அலைகின்றன. அவற்றின் ஒரே இலக்கு இரைதேடுவது. அப்புறம் ஓய்வெடுத்துத் தூங்குவது. இயற்கை உந்துதலில் எதிர்பாலினத்தோடு கூடுவது. மனிதன் மட்டுந்தான் உற்பத்தி முறையின் தாக்கத்தால் பசியை வென்று உயர்வடைகிறான்.
மனிதன் ஓர் உழைக்கும் பிராணி. உழைத்த உடம்பு ஓய்வை விரும்புகிறது. அந்த நேரத்தில் இடஞ்சல் வந்தால் சலிப்பு உண்டாகிறது. இதைக் கூட கவிதையாக்கியிருக்கிறார் டாக்டர் பிருந்தா.
என் படுக்கையறைக்கருகில்
படர்ந்து கிடக்குமொரு மாமரம்.
அங்கிருந்தபடி
அன்றாடம் எழுப்பும் என்னைப்
பெயர் தெரியாப் பறவை.
இன்றதிகாலையும்
கீச்சிட்டெழுப்பியது.
’தொந்தரவு செய்யாதே;
இன்று ஞாயிற்ருக் கிழமை”
என்று புரண்டு படுத்தேன்.
’எனக்கேது விடுமுறை?
இரைதேட வேண்டுமே’
என்றுரைத்து சிறகசைத்துச் சென்றது.
அதன் பிறகு
ஓய்வெனக்கு ருசிக்கவில்லை.”
கண்ணில் காணும், காதில் கேட்கும், மனதில் உணரும் எதையும் கவிதையாக்கும் ஆற்றல் கவிஞர் பிருந்தாவுக்கு இருக்கிறது. இது முதல் தொகுப்பு என்பதை நம்ப முடியாத அளவுக்கு மொழி நடையும் உள்ளடக்கத் தேர்வும் அமைந்திருக்கின்றன. உதிரும் இலைச் சருகையும் பறக்கும் தூசுப் படலத்தையும் கூடக் கவிதயாக்கி விடுவார் போல. வாழ்க்கையின் சகல அசைவுகளையும் கவிதையாக்கியிருக்கிறார் டாக்டர் பிருந்தா. அவருக்கு நல்ல எதிர்காலம் கண்விழித்துக் காத்திருக்கிறது.
நூல்: எனக்கெனப் பொழிகிறது தனிமழை கவிதைத் தொகுப்பு.
ஆசிரியர்: டாக்டர் எஸ். பிருந்தா இளங்கோவன்.
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்
விலை: ரூபா 110