தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
சருகுகள் போல குவிந்திருக்கும் வார்த்தைகளின் மீது
கால்கள் மிதித்து செல்லும் போது
ஒலிக்கும் சரக் சரக் சப்தம்
குழாயிலிருந்து சொட்டும்
நீர்த்துளி போல
ஒலி எழுப்பும்
கடிகார முட்களின் சப்தம்
காதருகே வந்து
பூனை போல் குதிக்கும்
இதயத்தின் லப் டப் சப்தம்
ஒரு இரவுப் பூச்சியை பிடித்துண்ண
தாடை அசைக்கும்
வாசற் கவுளியின் சப்தம்
பின்னிரவை சிறகிலிருந்து உதறும்
தெருச் சேவலின் சப்தம்
யாவும் தேய்ந்து தேய்ந்து
என்னில் விழுந்து ஓய்ந்து போக
சொற்களற்ற தேசத்தில் வசிக்கும்
அதிசயப் பிராணி நான்
கவிதை 2
சிலிர்ப்புகள்
என்னைக் கண்டதும்
கலங்கிச் சேறாகும்
உன் கண்களுக்குள்
பரிதவிக்கின்றன
சுவாசமற்ற மீன்கள்
வார்த்தைகளற்ற மெளனத்தில்
நிகழும்
ஒரு சந்திப்பு
எத்தனை அதிர்வுகளை
எழுப்பி விடுகிறது
ஒரு உறைந்திருக்கும் மனதில்
துளியாகக் கடந்து போகும் ஒரு கணத்தை
கடலாக விரிந்து
பேரலைகளை எழுப்பிவிட்டுப்
போய் விடுகிறது
விதியின் மாயக்கரமொன்று
எதுவுமே தோன்றாமல்
சிலையாகி விடும் ஒரு கணம்
அத்தனை சிலிர்ப்புகளை
உண்டாக்கி விடுகிறது
ஒரு ஊமை ஆன்மாவில்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்