Posted inPoetry
தண்ணீர் தொட்டியில் சாதி மலம் கவிதை – பிச்சுமணி
தண்ணீர் டேங்கில்
மலம் கலந்தது கேட்டு
பேண்ட சாதி பெருமை
அவளுக்கும் கலந்திருக்கிறது
டீக்கடை
இரட்டை டம்ளரில் ஒற்றை டம்ளர்
எச்சில் உசந்ததுயென
உள்ளுக்குள் கர்வம்
உண்டவளுக்கு
அய்யனாருக்கு
ஆவாத சாதியை ஆட்சியர்
அழைத்து வந்து விட்டாரென
சாதி பிடித்து சாமியாடிவர்
முன்னொரு காலத்தில்
அரசிடம் அளித்த சாட்சியங்கள்
வருமானத்துறை வந்தபோது
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதை
ஒத்துக்கொண்டார்
ஏதுமற்ற ஏழை எங்களுக்கு
இலவச ரேஷன் அரிசிதான்
வயித்தை காப்பாத்துது என்றார்
கவர்மென்ட் ஆஸ்பத்திரி இல்லனா
இந்தக் கட்டைக்கு சுகர் மாத்திரை
யார் தருவார்?
மிகவும் பின் தங்கியிருக்கோம்
மூத்த மவன் தான்
எங்க பரம்பரையில்
முதன் முதலில் காலேஜ்க்கு போறான்..
என்றெல்லாம் அவர் சொன்னார்….
தண்ணீர் டேங்கில்
மலம் கலந்தது கேட்டு
பேண்ட சாதி பெருமை
இன்னுமா
அவளுக்குள் கலந்திருக்கும்?….
-பிச்சுமணி