கொட்டும் மழை கவிதை – வளவ. துரையன்
இத்தனைநேரம் இறுமாப்புடன்
இதழோரம் புன்னகையுடன்
இளநடை போட்டவர்கள்
இப்போது ஒதுங்க இடம்
இதோ தேடுகிறார்கள்.
அவசர அவசரமாக
வீதிக் கடைக்காரர்கள்
நிர்வாணப் பொருள்களுக்கு
ஆடை உடுத்துகிறார்கள்.
படித்ததெலாம் மறந்துவிட்டால்
பாதையிலே எதை வைப்பதெனும்
பதைபதைப்பில் சில பேர்கள்.
முதலாளி பூதத்தின் வாயில்
மூழ்க வேண்டுமெனும்
முணுமுணுப்புடன் ஓட்டம்.
வீதியெலாம் சிறுசிறு
குட்டையாகி விடுமென
விதியை நொந்துகொண்டு
விழியில் கவனமாக
விரையும் உயிரினங்கள்.
ஆக
வரவேற்க யாருமின்றி
கொட்டிக்கொண்டிருக்கிறது மழை.
– வளவ. துரையன்