தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்

தினம் ஒரு பூ கவிதை – பாங்கைத் தமிழன்




வேண்டுகோள்தான் இது;
இறுக்காதே இன்னும்!
வலிமையற்றவர்
வாழ வேண்டும் இங்கு!

வியாபாரிகளுக்குத்தான்
வீரியமென்றால்
வியர்வை சிந்துபவனுக்கு
வீரியமும் வீரமும் விவேகமும் அதிகம்தான்!

இந்த தேசத்தில்
தேச பக்தனை
அடையாளம் தெரிந்துகொள்ளாமல் வாழ்வது
எவ்வளவு பெரிய அவலம்; அவமானம்!

இந்த மண்ணை
நேசிப்பதல்ல….
நம்புவதுதான்
பெரிய தேசபக்தி!

இந்த மண்ணே
வழி…
வாழ்வு….

பக்தி என்பதை
வேஷத்தை வைத்து
எடைபோடும் நிலை
எப்போது வந்தது
இந்த மண்ணில்?

வேஷம் போடத் தெரியாமல்
வியர்வையை மட்டுமே
இந்த மண்ணில் சிந்தும்
மண்ணுக்குச் சொந்தக்காரனின்
வேண்டுகோள்!

இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்றுக்கொள்;
ஆணவம் வந்தால்
அதிக பசி வரும்தான்;
அதை இதை
எதை வேண்டுமானாலும்
பிராய்ந்து போட்டுக்கொள்;
பெரும்பசிக்காரனே!

ஆள வந்தால் மட்டுமே
அடிமட்டத்துக்காரனின்
பசியும் வலியும் தெரியும்!

ஆசைப் படுபவனும்
அள்ளிக் கொள்ள நினைப்பவனும்
வறுமைப் புத்தகத்தை
வாசிக்க முடியாதுதான்!

மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறேன்;
என்னுடைய வேண்டுகோள்
ஒன்றேவொன்றுதான்!
இடையில் வந்த
எதனை வேண்டுமானாலும்
விற்று, பசி போக்கிக்கொள்!

உனக்கு
இந்த மண்ணின்
பூர்வ குடியானவனின்

ஒரேயொரு….
இரகசியம் சொல்கிறேன்!

உலகில்
இருநூற்று முப்பதுக்கும்
மேலான
நாடுகளாம்!

எந்த நாட்டிற்கும்
இல்லாத பெருமை
என் தாயகத்திற்கு
மட்டுமே உண்டு;வியாபாரியே!
அது தெரியுமா உனக்கு?

பூ….
பூ தெரியுமா உனக்கு?
மென்மையும் செழுமையும்
வளமையும் உள்ள இடத்தில்
மட்டுமே பூக்குமே….
பூ….
அதனின் இரசியம்
சொல்கிறேன்!

உலகில் உள்ள நாடுகளில்
முன்னூற்று அறுபத்தைந்து
நாட்களிலும்
ஏதாவது ஒரு பூ
தினமும் கிடைத்துக்கொண்டே
இருக்கும் ஒரே தேசம்
என் இந்திய தேசம் மட்டுமே!

அந்த
என் தேசத்தை மட்டும்
விற்றுவிடாதே!

பாங்கைத் தமிழன்.