மற்றுமொரு நாள் சிறுகதை – சுதா

மற்றுமொரு நாள் சிறுகதை – சுதா




கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்த லட்சுமியை ‘விஷ் யூ டுவென்டி செகண்ட் ஆனிவர்சரி மாம்…’ அப்டீனு கன்னத்தில் முத்தப்பரிசோட காயத்ரி சொல்லவும் காயத்ரியின் அப்பா கதிர் வரவும் சரியா இருந்துச்சு. ‘அப்பா திருமணநாள் வாழ்த்துக்கள்’ என காயத்ரி சொன்னதும் ‘ஹா ஹா ஹா’ என சிரித்து ‘உங்க அம்மா என்னை கல்யாணம் பண்ணி 22 வருஷம் ஆச்சா… அவளுக்கு என்ன ராணி’ என தோள் தொட்டு இழுத்து நெற்றியில் முத்தமிட்டார் கதிர்.

‘அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல், சிக்கன் பிரியாணி கேசரி மட்டன் கிரேவி எல்லாமே வேணும்மா’

‘உனக்கில்லாததா காயூ, எல்லாமே செஞ்சுடுவோம்’ என கதிரும் மகளுக்கு பிடித்தமானதை வாங்க கடை வீதிக்கு சென்று விட்டார்.

லட்சுமியின் உடல் நிலையை யாரும் கவனிக்கவில்லை அவளும் காட்டிக்கொள்ளவில்லை தலைவலியும் உடல்வலியும் லட்சுமியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.வயதும் ஏறுகிறது வலிமையும் குறைகிறதுதானே…

சிக்கனும் மட்டனும் வந்துவிட மும்முரமாய் கிச்சன் வேலையை ஆரம்பித்தாள். வேலை ஏதும் இருக்கான்னு கேட்க யாருக்கும் மனமில்லை. லட்சுமி அடுக்களையில் வேர்வையில் குளிச்சிட்டு இருக்க.ஏசி அறையில புதிதாய் வெளியான திரைப்படத்தின் சத்தம் காதை நெருங்கிக்கொண்டிருந்தது.

அத்தனையும் சமைச்சு எல்லாருக்கும் பரிமாறி பாத்திரத்தை ஒதுக்கி போட்டு அடுக்களையை அலசி பாத்திரம் கழுவ உட்காரும்போது பாத்திரம் சொன்னது ஹேப்பி அனிவர்சரி என்று…