நூல் அறிமுகம் : கோவை சசிகுமாரின் “இலையுதிர் நிர்வாணங்கள்” கவிதை – ஜெயஸ்ரீ
நூல் : இலையுதிர் நிர்வாணங்கள்
ஆசிரியர்: கோவை சசிகுமார்
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கியவட்டம்
பக்கங்கள்:112
விலை: ரூ.120
“இலையுதிர் நிர்வாணங்கள்” கவிஞர் கோவை சசிகுமார் அவர்களின் மூன்றாவது கவிதை நூல்.
நூலிற்கு மணி மகுடமாக கவிஞர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரையோடு அழகாய் துவங்குகிறது.
நூலின் ஒவ்வொரு கவிதைகளும் இயல்பான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தாலும் அவை கவிதையாய் கோர்க்கப்பட்டுள்ள விதம் புது பரிணாமமாய் விளங்குகிறது. முகநூலில் கவிஞர் கோவை சசிக்குமார் அவர்களின் கவிதைகளை வாசித்த எனக்கு இந்த கவிதை தொகுப்பு மிக ஆச்சிரியத்தை அளித்தது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கவிதை நூலினை வைக்க முடியாது அப்படியான கருத்தாழம் நிரப்பப்பட்ட சமூக சிந்தனை துளிகள்.
பொதுவாக கவிஞர்கள் நூலை தாய்க்கோ மனைவிக்கோ அல்லது ஆசான்களுக்கோ சமர்ப்பணம் என்று எழுதுவார்கள் ஆனால் இதில் அப்பாவுக்கு சமர்ப்பணம் என்று நூலின் நாலாவது பக்கமே ‘ஆஹா’ போட வைத்துள்ளது.
இதோ நான் ரசித்து படித்த சில வரிகள்.
“பத்தாண்டுகளுக்கு முன்னால்
நிரம்பி வழிந்த கிணறு
நீர்வற்றி வெளியேற முடியாத
தவளைகளின்
கொலைக்களமாகின்றது”
கிணற்று நீரில் நிலாவை பார்த்து தான் கவிதை வருமென்று இல்லை. தவளைகளின் கொலைக்களமாக வறண்ட கிணறின் காட்சியினை கொண்டுவந்து விட்டார் கவிஞர்.
“மழை மேகம்
தக்கவைத்துக் கொள்ள
தவறிய வானம்”
வானம் தவறியதா அல்லது நாம் தவறவிட வாய்ப்பு அளித்தோமா எந்த சிந்தனையை தூண்டும் வரிகள்.
“எல்லாம் ஒரு வியாபாரம் தான்
வியாபாரியின் வீட்டில் மட்டும்
ஆர்கானிக் உணவுகள்
பரிமாறப்படுகின்றன”
வீட்டை பெருக்கி குப்பை ரோட்டில் கொட்டுவதை போலவே சுயநலம் மிகுந்த வியாபார உலகத்தை நான்கு வரிகளில் கூறிவிட்டார்.
“காலச்சூழ்நிலையின் பருவமென
இலைகளை உதிர்த்து
தண்ணீருக்காக
தானமாக்கி நிற்கையில்
ரசிப்பதற்கென எழும்
சூரியனை கண்டு
வெட்கப்படுவதேயில்லை
விரக்தியில் நிற்கும்
இலையுதிர் நிர்வாணங்கள்”
நிர்வாணம் என்பது ஆடையற்ற மனித உடலுக்கானது மட்டுமல்ல இலைகளை இழந்திட்ட மரத்திற்கும் ஆனது தான். பருவச்சூழல் மாற்றத்திற்கு நாமும் ஒரு காரணம் என்பதை சொல்லாமல் சொல்லும் வரிகள்.
நம்மை சுற்றி சமூகத்தில் நிலவும் அவலங்களை பார்த்து கடந்து விட்டு செல்வது தான் தற்போதைய பரபரப்பான சூழல் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை. அதிலும் ஒரு தனித்துவத்தோடு கவித்துவம் நிரப்பி வார்த்தைகளோடு கோர்க்கும் பொழுது பெரும் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. அப்படியான ஒரு கருத்தாழமிக்க கவிதை நூல் “இலையுதிர் நிர்வாணங்கள்” என்பதில் ஐயமில்லை. சிறப்பானதொரு படைப்பிற்கு கவிஞர் கோவை சசிகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்.
நன்றி.
ஜெயஸ்ரீ
Best Regards,
Jayasree
[email protected]