மாச்சில் சிறுகதை – அமீபா

மாச்சில் சிறுகதை – அமீபா




பளபளக்கும் வெள்ளை நிற காகிதத்தை கிழித்து அதனுள்ளிருந்து வட்ட வடிவமான அந்த கோதுமை பிஸ்கட்டை எடுத்து கடித்தார். மொறு மொறுப்பாக அது உடைந்தது.

பட்

திடீரென அவருக்கு நேற்று தெருவில் வைத்து நான்கு பேர் ஒருவனை அடித்தது நினைவில் வந்தது. தேங்காய் பிஸ்கட் சாப்பிடுகிறவனாம்.
ச் சே.. என்ன பிஸ்கட் அது. கரடுமுரடான வடிவத்தில், கடிக்கவே முடியாதபடி கடினமாக எப்படித்தான் அதை சாப்பிடுகிறார்களோ… அதுவும் சுலபத்தில் கெட்டுவிடும். தேங்காய் அது தெய்வத்திற்கு படைக்கும் பொருள். தேங்காயிலிருந்து பால் எடுக்க முடியும்… அதைப்போய் எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ… என பலவிதமாக யோசித்தார்.

தனது பொருளாதார வசதிக்கும், பசிக்கும் இதுவே உகந்தது என அவன் ஆத்திரத்துடன் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இவர் காதிலும் அது சரியாக விழவில்லை.

அதுவும் இந்த பக்கத்து வீட்டுக்காரன் இருக்கிறானே உப்பு பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு. உலகத்திலேயே நாங்கள்தான் அதிக ரோசமானவர்கள். அதனால் தான் நாங்கள் உப்பு பிஸ்கட் சாப்பிடுகிறோம் என சொல்லிக்கொண்டு திரிந்தான். ரோசம் கெட்டு இருந்தவனை உணர்வு பெற உப்பு பிஸ்கட் சாப்பிட சொன்னதே நாங்கள்தான் என அவர்கள் சொல்ல தொடங்கியதை அடுத்து இப்பொழுது உப்பும் இனிப்பும் கலந்து சாப்பிடுகிறார்கள் சதுரமான வடிவத்தில். என்ன வடிவம் இது… கொஞ்சமும் அழகியலே இல்லாமல் இருக்கிறார்கள். நிலவு போல, சூரியன் போல, பூமி போல அழகிய வட்ட வடிவத்திற்கு நிகர் உண்டா..

தன் கையிலிருந்து ஒரு பிஸ்கட்டை எடுத்து கண்களின் முன்னால் வைத்து பார்த்தார். அதன் வடிவம் அவர் மனதை கொள்ளை கொண்டது.

ஆனாலும் இதே வடிவத்தில், இதே போன்று உள்ள மைதா பிஸ்கட் சாப்பிடுபவர்களும், கோதுமை பிஸ்கட் சாப்பிடும் தம்மை போலத்தான் என்று சொல்லிக் கொண்டு திரிவதை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் எரிச்சல் பட்டார்.

தொலைவிலுள்ள ஊர்களிலெல்லாம் தேங்காய் பிஸ்கட்டை எடுத்து பிடிக்க முடியாதபடி அவர்களுடைய கட்டைவிரல் வெட்டப்படுவதாக செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார். எப்படியோ போய்த் தொலையட்டும் என்று இருந்தார். அப்படியே இந்த சதுர பிஸ்கட்டை சாப்பிடுபவர்களையும் ஏதாவது செய்யட்டும் என நினைத்துக் கொண்டார்.

தன் வீட்டில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் எல்லாம் தீர்ந்த பிறகு புதிதாக வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு ஒரு நாள் சென்றார். அங்கே எங்கேயும் பிஸ்கட்டுகள் விற்பனையில் இல்லை. அதற்கு பதிலாக “கோதுமமிர்தம்” என்று ஒன்றை விற்றார்கள். அதைத்தான் இனி சாப்பிட வேண்டும் என்றார்கள். மஞ்சள் நிறத்தில் கொழக் கொழப்பாக பாட்டிலில் உள்ள அதைப் பார்த்த போதே இவருக்கு ஏதோ தோன்றி குமட்டிக்கொண்டு வந்தது.

கால காலமாக நான் சாப்பிட்டு வந்த பிஸ்கட்டை சாப்பிடக்கூடாது என சொல்வதற்கு இவர்கள் யார் என கேட்க நினைத்த போதே இவரது கட்டைவிரல் நடுங்கியது. ஆனால் இதே கேள்வியை கடைத்தெருவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கட்டைவிரலே இல்லை. அது அவர்களிடம் இருந்தபோது நடுங்கியதே இல்லை.

– அமீபா