Vellai Pookkal Kavithai By PuthiyaMaadhavi வெள்ளைப்பூக்கள் கவிதை - புதியமாதவி

வெள்ளைப்பூக்கள் கவிதை – புதியமாதவி

பறந்து வரும் உன் வானத்தை
தரையில் இருக்கும் கூடுகள்
அச்சத்தோடு எட்டிப்பார்க்கின்றன.
சந்திப்புகளின் காயங்கள் ஆறவில்லை.

கைக் குலுக்க மறுத்த காரணங்கள்
தேச வரைபடங்களில்
கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
உறவின் அர்த்தங்களை அவமானத்தில்

புதைத்த அவன் தேசம்
சமவெளி எங்கும் எந்திர மனிதர்கள்
மத்தாப்பு கொளுத்தி நடனமாடுகிறார்கள்
காயப்பட்டு கண்மூடிக்கிடக்கும் அந்த இரவு

உயிர்ப்பறவையின் படபடப்பு
பிரபஞ்சத்தின் பால்வீதிகள் இருண்டுபோய்
நட்சத்திரங்கள் தடுமாறுகின்றன.
தோழி
அவனை எட்டிப்பார்த்து

காற்றில் முத்தமிட்டு
கரைந்துவிட முடியாமல்
அடங்கிப்போகிறது பரணி.
கண்மூடிய கனவுகளை
அவன் சுடுகாடுகள்

எரிக்குமோ புதைக்குமோ?
யுத்தகளத்தில் மூடாமல் விழித்திருக்கும்
பிணத்தின் கண்களிருந்து
அழுகி நாற்றமெடுக்கிறது
அவன் எப்போதோ கொடுத்த
வெள்ளைப்பூக்களின் வாசம்.