வசந்ததீபன் கவிதைகள்
இரை
*******
சேம்பிலையில்
நீர்த்துளி உருள்கிறது
தடாகத்தில் மீனொன்று
வாய் திறந்திருக்கிறது
ஆக்ரோசவாதிகள் எல்லாம்
அழகியல்வாதிகள் ஆகி விட்டால்
அகிலமே புல்லரித்துவிடும்
வெந்ததைத் தின்று நடமாடுகின்றன
நடப்பதை வேடிக்கை பார்க்கின்றன
பொம்மைகளல்ல நீங்கள்
புத்தனைப் போல காட்டுக்குப் போகமாட்டோம்
ராமனைப் போல உப்பரிகையில் இருக்கமாட்டோம்
மனிதரோடு மனிதராய் கரங்கோர்த்து திரள்வோம்
பறித்ததைப் பறிப்போம்
இனியும் ஏமாறப் போவதில்லை
படையெடுக்கும் காலம் நெருக்குகிறது
ஐந்து நேரத் தொழுகை தவறமாட்டார்
ஷரியத் சட்டங்களை இறையச்சத்தோடு கடைபிடிப்பார்
வட்டி ஒழுங்காக வசூலாக என்ன வேணாலும் செய்வார்.
ஆராதனைகள் நிற்பதில்லை
பசியோடும் வாழும் பயத்தோடும் கர்த்தரின் குழந்தைகள்
பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது.
சொகுசுக் கார்களில் போதகர்கள்
முண்டியடித்தபடி பஸ்களில் விசுவாசிகள்
கர்த்தரைத் தேடிப் போகிறார்கள்.
கல்லறையாக்காதே
பூந்தோட்டமாக்கு
இதயம் சிட்டுக்குருவியாய் சிறகடிக்கட்டும்
பிரிவினைப் பாம்பை உடலில்
நூலாய்ச் சுற்றியபடி
சாத்தான் விஷம் கக்குகிறது
மனிதக்குருதி ருசிக்க
அதன் நாக்கு நீள்கிறது.
உள்ளே வெளியே
*********************
பேரன்புகள் தென்றலாய் வீசிக் கொண்டிருக்கின்றன
திளைத்துக் களித்துக் கோரையாய் அசைந்தாடுகிறேன்
ஏந்தியிருக்கும் வெண் மலர்கள் மிதக்கத் தொடங்கின
பசியால் உயிர் துடித்தது
தலையின் மேல் பழமொன்று விழுந்தது
புத்தர் கைநீட்டி அழைத்தார்
பைத்தியக்கார விடுதி திறந்திருக்கிறது
யாரையும் யாருக்கும் தெரியவில்லை
நெரிகின்றன நகரமெங்கும் தலைகள்
குற்ற உணர்வு எதிர் மரத்தில் அமர்ந்திருக்கிறது
சிறு பூச்சியாய் வெட்டவெளியில் ஊர்கிறேன்
கவ்விச் செல்லும் நேரம் நெருங்குகிறது
இரு சாத்தான்கள்
பெயர்ப் பட்டியலை
அகராதியில் அறிந்து கொள்ளுங்கள்
தேர்தல் எந்திரம் நவீன விவசாயம்.
காசி ராமேஸ்வரம் என்று அலைந்து திரிந்து
கர்மம் தொலைப்பார் நெறியற்று
சம்பாத்தியம் செய்த பணத்தில் கோபுரங்களுக்கு தங்ககவசம் செய்வார்
வியாபாரத்தில் பாட்னராக்கி உண்டியலில் காணிக்கை செலுத்துவார்.
– வசந்ததீபன்