The Global Hunger Index (GHI) for 2021 and the Government of India Article by Prof Anbazhagan 2021ஆம் ஆண்டின் உலகளவிலான பட்டினிக் குறியீடும் (GHI) இந்திய அரசின் குற்றச்சாட்டும் - பேரா.பு.அன்பழகன்

2021ஆம் ஆண்டின் உலகளவிலான பட்டினிக் குறியீடும் (GHI) இந்திய அரசின் குற்றச்சாட்டும் – பேரா.பு.அன்பழகன்




ஒரு நாட்டின் வளர்ச்சியினை மனித, இயற்கை வளங்கள் தீர்மானிப்பதாக உள்ளது. மனித வளத்தின் வெளிப்பாடு உழைப்பாகும்.  மனிதனின் உழைப்பு என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த செயலாகும். இதற்கு முதன்மையான உள்ளீடு உணவு ஆகும். அவ்வுணவும் ஊட்டசத்து நிறைந்ததாக இருத்தல் அவசியம். குழந்கைள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களுக்குத்  தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கவேண்டும்;  உணவு இன்றி வாழும் நிலைமை பல நாடுகளில் சமுதாயத்தின் விளிம்பு நிலை  மக்களிடம் காணமுடிகிறது. இதனை பட்டினி என்கிறோம். ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்கா நாடுகளில் பட்டினியால் வாடுபவர்களும், இறப்பவர்களும் அதிக அளவில் உள்ளனர். பட்டினி என்பது மனிதனுக்கு தேவையான கலோரிகளின் பற்றாக்குறை நிலையினைக் குறிப்பதாகும். கலோரிகள் என்பது ஆற்றல், புரோட்டின், வைட்டமின், மினரல் போன்றவைகள் வழியாகப் பெறக்கூடியதாகும். இவை போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என்பதே ஊட்டச்சத்து குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலே உலகளவிலான பட்டினிக் குறியீட்டை எகானமிஸ்ட் நுண்ணறிவு அலகு அமைப்பு ஆண்டுதோறும் 2006ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதன் முதன்மைக் குறிக்கோள், உலக,  வட்டார, தேசிய அளவில் நாடுகளின் வாழும் மக்களின் பட்டினி நிலையினை ஒப்பீடு செய்யவும், அதன் மூலம் விழிப்புணர்வினை எற்படுத்தவும், பட்டினியினைப் போக்குவதற்கான ஆதாரங்களை காண வழிவகையினை செய்வதுமாகும்.
The Global Hunger Index (GHI) for 2021 and the Government of India Article by Prof Anbazhagan 2021ஆம் ஆண்டின் உலகளவிலான பட்டினிக் குறியீடும் (GHI) இந்திய அரசின் குற்றச்சாட்டும் - பேரா.பு.அன்பழகன்2021ஆண்டுக்கான  உலகளவிலான பட்டினிக் குறியீடு  அண்மையில் வெளியிடப்பட்டது. இவற்றை கன்சர்ன் வேர்ல்ட்வைட், வெல்ட்ஹங்கர்லைஃப் என்ற சர்வதேச அமைப்புகளால் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதற்கான புள்ளிவிவரத்தரவுகளை FAO. UNICEF, WHO. World Bank, UN-IGME போன்ற பன்னாட்டு அமைப்புகளின் வெளியீட்டிலிருந்து  எடுத்துக் கையாளப்பட்டுள்ளது. இக்கணக்கீடானது மூன்று கோணங்களில் (ஊட்டச்சத்து குறைபாடு, சமனற்ற உணவு அளிப்பு, சிறார் இறப்பு) நான்கு முக்கிய காரணிகளான மொத்த மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் இறப்பு, ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் உயரத்திற்கு தகுந்த எடையின்மை  குறைபாடு, ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் வயதுக்கு ஏற்ற உயரமின்மை குறைபாடு போன்றவைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உலகளவிலான பட்டினிக் குறியீடு என்பது கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்து இன்மையினை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா தொடர்ந்து இக்குறியீட்டில் கீழ் நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவிலான பட்டினிக் குறியீடு 2021ன்படி 116 நாடுகள் வரிசைபடுத்தப்பட்டுள்ள அட்டவணையில் இந்தியா 101 இடத்தில் உள்ளது (2020ஆம் ஆண்டில் 107 நாடுகளில் 94வது இடத்தைப் பெற்றிருந்தது).

அதிக அளவு மதிப்பெண்களை (score) பெறும் நாடுகள் அதிக அளவிலான ஊட்டச்சத்து இன்மையினை உடையது என்பது பொருள். மாறாகக் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது என்பது குறைவான ஊட்டச்சத்து இன்மையினை உடைய நாடு எனக் குறிப்பிடலாம். ஊட்டச்சத்து குறைபாட்டினை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளை குறைந்த (9.9க்கு கீழ் மதிப்பெண்), மிதமான (10.0-19.9), கடுமையாக (20.0-34.9), ஆபத்தான (35.0-49.9) முற்றிலும் ஆபத்தான (50.0க்கு மேல்)  நாடுகள் என்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் ஆபத்தான குழுவில் ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா என்ற ஒரு நாடு மட்டுமே உள்ளது. ஆபத்தான நாடுகளின் பிரிவில் ஐந்து நாடுகள் உள்ளன. கடுமையான பிரிவில் 31 நாடுகள் உள்ளன அவற்றில் இந்தியவும் அடங்கும். இந்தியாவின் அண்டைநாடுகள், பல ஆப்பிரிக்க நாடுகள்கூட இந்தியாவைவிட முன்னணி நிலையில் உள்ளன. இந்தியாவை கடுமையான நாடு அட்டவணையில் பட்டியலிடப்பட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்பினைத் தெரிவித்துள்ளது. இக்குறியீடு சரியான ஆய்வு முறையினை பின்பற்றவில்லை என்று விமர்சனம் செய்துள்ளது.

இந்தியாவின் உலகளவிலான பட்டினிக் குறியீடு மதிப்பெண்ணின் போக்கானது 2000ஆம் ஆண்டில் 38.8 ஆக இருந்தது 2006ஆம் ஆண்டு 37.4ஆகவும் 2012ஆம் ஆண்டில் 28.8ஆகவும் 2021ஆம் ஆண்டில் 27.5ஆகவும் குறைந்துள்ளது. அதாவது 2000 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கிடையே 11.3 மதிப்பெண்கள் குறைந்துள்ளது, இது விழுக்காட்டில் 29.1 ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகைக்கான ஊட்டச்சத்து குறைபாட்டு விகிதம் 2000ஆம் ஆண்டில் 18.4ஆக இருந்தது 2021ஆம் ஆண்டு 15.3ஆகக் குறைந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் எடைக்குறைபாடு மிகச்சிறிய அளவில் 17.1லிருந்து 17.3ஆக அதிகரித்தும், இதே வயதுடைய சிறார்களில் வயதுக்கு ஏற்ற உயரம் குன்றியவர்கள் 54.2லிருந்து 34.7ஆக குறைந்தும் இவ் ஆண்டுகளில் முறையே காணப்படுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்கள் இறப்பு 2000ஆம் ஆண்டில் 9.2லிருந்து 2021ஆம் ஆண்டு வெகுவாக குறைந்து 3.4ஆக குறைந்துள்ளது (www.globalhungerindex.org).

இந்தியாவின் மக்கள்தொகை உலக அளவில் 18 விழுக்காடு பங்கினைப் பெற்றுள்ளது. ஆனால் அதிக அளவிற்கான பட்டினிகளும் பட்டினிச்சாவுகளும் உள்ளன. உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் மூன்றில் ஒருபங்கினர் இந்தியாவில் உள்ளனர். உலகில் உள்ள உயரத்திற்கு ஏற்ப எடை குறைவாக உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட மொத்த சிறார்களில் கால்பங்கினர் இந்தியாவில் உள்ளனர். இதுபோல் வயதுக்கு ஏற்ற உயரம் குறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட மொத்த சிறார்களில் பாதிஅளவிற்கு இந்தியாவில் உள்ளனர். உலகில் உள்ள பேறுகாலங்களில் இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்ற மொத்த பெண்களில் மூன்றில் ஒருபங்கினர் இந்தியாவில் உள்ளனர். அரசியல் பொருளாதார இதழின் (EPW 30.10.2021).  India’s Own Comprehensive National Nutrition Survey (CNNS) அறிக்கையின்படி 6 மாதத்திலிருந்து 23 மாதம் உள்ள மொத்த குழந்தைகளில் 6 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளப்படும் உணவினை எடுத்துக்கொள்கின்றனர்.

21 விழுக்காடு போதுமான பல்வகை உணவினை எடுத்துக்கொள்கின்றனர். 57 விழுக்காடு பச்சிளம் குழந்தைகள் மட்டுமே பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் குடிக்கின்றனர், 53 விழுக்காடு பச்சிளம் குழந்தைகள் 6லிருந்து 8 மாதங்கள் தாய்ப்பால் குடிக்கின்றனர் என்கிறது. BPNI யின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அருண்குப்தா என்பவரது ஆய்வின்படி கடந்த 30 ஆண்டுகளில் தாய்ப்பால்  கொடுக்கும் வீதம் குறைந்து வருகிறது என்கிறது. இதனால் குழந்தைகளின் உயரத்துக்கு தகுந்த எடையின்மையும், வயதுக்கு ஏற்ற உயரமின்மையும் அதிக அளவில் காணப்படுகிறன. CNNS அறிக்கையின்படி 5லிருந்து 19வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவிற்கு உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் உயரம், எடை குறைவாகவும் அதிக சர்க்கரை அல்லது மிகை கொழுப்பு உடையவர்களாகவும் உள்ளனர்.
The Global Hunger Index (GHI) for 2021 and the Government of India Article by Prof Anbazhagan 2021ஆம் ஆண்டின் உலகளவிலான பட்டினிக் குறியீடும் (GHI) இந்திய அரசின் குற்றச்சாட்டும் - பேரா.பு.அன்பழகன்National Family Health Survey – NFHS-5 (Phase-I)  புள்ளி விவரத்தின்படி நாட்டில் 88 விழுக்காடு தாய்மார்கள் மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர், 51 விழுக்காடு குழந்தைகளுக்கு பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது, 61.9 விழுக்காடு குழந்தைகள் பிறந்து 6 மாதங்கள்வரை தாய்பால் கொடுக்கப்படுகிறது. 26.9 விழுக்காடு குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்மையும், 18 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உயரமின்மையும், 5.5 விழுக்காடு குழந்தைகள் அதிக எடையுடனும்  உள்ளனர் என்ற புள்ளிவிவரங்களை தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடும்; மிகை ஊட்டச்சத்தும் உள்ள நாடு என்பது தெளிவாகிறது.

இந்திய அரசு பட்டினிக் குறியீடு கணக்கிடும் முறையானது அறிவியல் பூர்வமானது இல்லை என்கிறது. சிலரிடம் தொலைப்பேசி வாயிலாக எடுக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் இக்குறியீடு கட்டமைக்கப்பட்டதால் இது எவ்வாறு சரியான தரவாக இருக்கும் என்கிறது.   உலகளவிலான பட்டினிக் குறியீடானது மக்கள்தொகையில் சத்துள்ள உணவு கிடைக்கப்பெறாதவர்களின் விகிதத்தின் (PoU) அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்றும் இதற்கான புள்ளி விவரத்தினை ஐக்கிய நாடுகளின் சிறப்பு முகைமைகளில் ஒன்றான உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) புள்ளி விவரங்களிலிருந்து கையாளப்பட்டதாக இக்குறியீட்டை வெளியிட்ட அமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால் இந்திய அரசு, மேற்கண்ட ஐநா அமைப்பானது அறிவியல்பூர்வமான ஆய்வினை முன்னெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் இந்திய அரசு 5 கிலோ உணவு தானியத்துடன் 1 கிலோ பருப்பு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  வழங்கப்பட்டதையும், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு  5 கிலோ உணவுதானியங்கள் ஒரு மாதத்திற்கும், சென்னா இரண்டுமாதத்திற்கும் 2020 மே – ஜூன் மாதங்களுக்கு வழங்கப்பட்டதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.20 கூடுதலாகக் கூலி வழங்கப்பட்டதையும், ரூ.2000 முதல் தவணையாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ் அளிக்கப்பட்டதையும், ஜன்தன் திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வரவு வைக்கப்பட்டதையும்,

3 கோடி ஊனமுற்றோர்-கைம்பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ.1000 ஒரே தவணையாக வழங்கப்பட்டதையும் பட்டினிக் குறியீட்டை கணக்கிட்ட அமைப்பு கவனத்தில் கொள்ளவில்லை என்கிறது இந்திய அரசு. ஆனால் இவ்வமைப்பானது இத்திட்டம் குறிப்பிட்ட காலங்களிலும் குறிப்பிட்ட மக்களுக்கானது என்றும் மேலும் இத்திட்டங்கள் இவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்குவதற்கானதாக இல்லை என்கிறது.  வெகுஜனங்களான முறைசாராத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சமூகத்தில் நீண்டகாலமாகப்  பாதிக்கப்பட்டவர்களின்  துயரங்களை இந்த திட்டங்கள் தீர்க்கவில்லை என்பதால் இதனைக் கணக்கில் கொள்ளவில்லை என்கிறது. இக்குறியீடு வடிவமைப்பதற்கு நிபுணர்களின் ஆலேசானைகளின் அடிப்படையிலும், பரிசோதித்தும், பட்டினிக்கான பல்வேறு இயல்புகளையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது என்கிறது (Rajalakshmi, Frontline, 19.11.2021). பட்டினிக் குறியீடு 2021 கோவிட்-19 பெருந்தொற்று காலகளின் புள்ளிவிவரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இக்காலக்கட்டங்களில் முறைசாராத் தொழிலாளர்கள் வேலை, வருவாய், வாழ்வாதாரங்களை இழந்ததால் உணவு உட்கொள்வது குறைந்தது. குழந்தைகளுக்கான சத்துணவு திட்டமும், மாணவர்களுக்கான மதிய உணவு திட்டமும் முழு அடைப்பின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.  இதனால் உணவு பாதுகாப்பு பெருமளவிற்கு பாதிக்கப்பட்டது. அரசின் நிவாரண நடவடிக்கைகளும் போதுமான அளவிற்கு சென்றடையவில்லை. இவைகளின் வெளிப்பாடே 2021 பட்டினிக் குறியீட்டில் இந்தியா மேலும் சறுக்கலைச் சந்தித்துள்ளது.
The Global Hunger Index (GHI) for 2021 and the Government of India Article by Prof Anbazhagan 2021ஆம் ஆண்டின் உலகளவிலான பட்டினிக் குறியீடும் (GHI) இந்திய அரசின் குற்றச்சாட்டும் - பேரா.பு.அன்பழகன்

2021 உலகளவிலான பட்டினிக் குறியீடு இந்தியாவை எச்சரித்துள்ளதாகவே கருதவேண்டும். இந்தியா உலக அளவில் அதிக வறுமையும் சமனற்ற வளர்ச்சியும் உடைய நாடு.  இந்தியாவில் போதுமான அளவிற்கு பால், காய்கறி, இறச்சி, மீன், முட்டை, உணவு உற்பத்தி இருந்தாலும் ஊட்டச்சத்து குறைபாடு பெருமளவிற்கு காணப்படுகிறது. இந்தியாவில் பட்டியல் இனத்தவரும் மலைவாழ்மக்களும் அதிக அளவில் வறுமையில் வாடுகின்றனர்.  எனவே இவர்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையினை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதை தீவிர இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். உணவுக் கொள்கையில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உயர் ஊட்டச்சத்து செறிவுடைய உணவுதானியங்களை பொதுவிநியோக கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டும். தற்போதைய நிலைப்படி உணவு பணவீக்கம் உயரத் தொடங்கியுள்ளதால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது அவற்றை வாங்குவதற்கு கோவிட்-19 பெருந்தொற்றால் வருமானம் இழந்த விளிம்புநிலை மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் நிலவுகிறது (The Hindu 26.10.2021).

இந்தியாவில் போதுமான புள்ளிவிவர தரவுகள் இல்லாத நிலையில் இந்த பட்டினிக் குறியீட்டை உற்று நோக்க வேண்டிய அவசியம் உள்ளது.  எனவே உணவுப் பாதுகாப்பு அனைவருக்கும் உறுதிபடுத்த வேண்டும், ஊட்டச்சத்துடன் கூடிய உணவு பரவலாக்கப்பட வேண்டும். உலகளவிலான பட்டினிக் குறியீடு அறிக்கை இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்போது இந்தியா பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கையாளுவதில் கடந்த இருபது ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றம் கண்டிருந்தாலும், இம் மாற்றங்கள் சமனற்றதாகவும் பல நிலைகளில் பின்தங்கியதாகவும் உள்ளது. எனவே அனைவருக்குமான உணவும் பூஜ்யப் பட்டினியையும் உறுதிபடுத்த வேண்டும் என்கிறது.

“கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”

இந்தியாவில் கோவிட் பேரழிவிற்கு எது வழிவகுத்தது – உண்மையை உடைக்கும் அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

இந்தியாவில் கோவிட் பேரழிவிற்கு எது வழிவகுத்தது – உண்மையை உடைக்கும் அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

இந்தியாவில் முதன்முதலாக சென்ற ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கோவிட்-19இன் திரிபு வடிவமே அங்கே ஏற்பட்டிருக்கும் பேரழிவிற்கான முக்கிய காரணியாக இருந்தது என்று உலக சுகாதார அமைப்பில் தலைமை அறிவியலாளராக உள்ள சௌம்யா சுவாமிநாதன் கூறுகிறார். தனது தாய்நாடான இந்தியாவில்…