Posted inPoetry
வில்லியம் மார்டினின் அசாதாரணத்தின் வேர் கவிதை – தமிழில்: இரமணன்
அசாதாரண வாழ்வுக்கு
அருமைக் குழந்தைகளை
அறிவுறுத்தாதீர்.
அம்முயற்சிகள் அற்புதமாய் தோன்றலாம்.
ஆயின் அது
முட்டாள்தன முயற்சியே.
மாற்றாக
சாதாரண வாழ்வின்
அற்புதங்களும் வியப்புகளும் கண்டடைய
அவர்க்கு உதவிடுவீர்.
முக்கனிகள் ருசிக்கும் களிப்பு
முழுவதும் அவர் காண வேண்டும்.
செல்ல நாய்களும் பிரிய மனிதர்களும்
மரித்திடும்போது
கண்ணீர் விட்டழ கற்றுக் கொடுப்பீர்.
விரல் தொடுதலின் சிலிர்ப்பில்
விளையும் மட்டற்ற மகிழ்வு விளக்கிடுவீர்..
சாதாரணங்களின் உயிர்ப்பு
அவரறிய செய்துவிட்டால்
அசாதாரணங்கள் அதுவாய் தோன்றிடும்.
வில்லியம் மார்டின் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவில் வாழ்ந்தார். பொறியியலாளராக பணி புரிந்த அவர் எழுத்தாளராகவும் தத்துவவியலாளராகவும் விளங்கினார். அவருடைய கவிதைகளில் தாவோயிசக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது