உயிர்கொள் கவிதை – பிரியா ஜெயகாந்த்

உயிர்கொள் கவிதை – பிரியா ஜெயகாந்த்




நொடிதனில் கடந்தவை
முடிவற்றுக் கிடந்திட

நிமிடத்தில் கடந்தவை
திரும்பிடா நிலைதொட

நாள் பொழுதில் கடந்தவை
மீளாமல் உறங்கிட

வாரத்தில் கடந்தவை
வாராமல் மறைந்திட

மாதத்தில் கடந்தவை
காததூரம் அடைந்திட

வருடத்தில் கடந்தவை
வரும்திசை மறந்திட

நூற்றாண்டில் கடந்தவை
காற்றொடு கலந்திட

நிரந்தரம் என்று ஒன்றல்ல
நிகழ்காலத்தைத் தவிர

தோற்றது நீயல்ல
தோல்விகள் முடிவல்ல

நேற்றோடு நிறைவல்ல
நேரமும் குறைவல்ல

இனியும் தாமதமா…..
இலட்சியம் உயிர்கொள்ள….?

பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
9840308787
[email protected]

கலையின் கவிதைகள்

கலையின் கவிதைகள்




இயற்கையும் மனிதனும்
****************************
குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும்
கோழிகளுக்குத் தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது
எப்படியென்று
நாம்தான்
எப்போதும் கற்துகளிலே!
***************************
வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும்
கூடு நனைந்து போனதற்காக
போக்கிடமில்லையென புலம்பியழுததில்லை
உலா போய்க்கொண்டுதான் இருக்கின்றன…

நல் மண்ணில் வாழும்
கரையான் காற்று மழையில் கரைந்தாலும்
உறைந்து போக வில்லை
விரைந்து
கரையெழுப்பி வாழுகிறது …

வழிகளிருந்தும்
விழிகள்தான் செல்வதில்லை செல்லாதவற்கு!

-கலை

ஊமை எழுத்து கவிதை - ஜே. ஜே. அனிட்டா Oomai Ezuthu Kavithai By J. J. Anita

ஊமை எழுத்து கவிதை – ஜே. ஜே. அனிட்டா

பின் தூங்கி முன்னெழுகிற
இருட்காலங்களின் அகாலத்தில்
கிரகண மூச்செறிதலின் நீளும்
புகைக் கம்பியில் ஆவிகளைத் தோய்த்து பட்சணங்கள் தருகிறேன்.
சிறகுலர்த்தும் குழலிலிருந்து
திராவகச் சில்லுகளாய்ப் பறந்து மாய்கிறதைப் போலப்
பயன்படாத எதிர்ப்பின் குரல்.
உவர் மழையைப் பரிகசித்து
ஈரச் சுவற்றில் நிழலாடும் தாபத்தில்
அவர்களின் எந்திரப் பசிகள்
தீராப் பெருவுணவின் தேடலோடு.
நானென்பது தேயத் தேய
யாரோவென்பவர்கள் எல்லாமுமாய்
ஆகி விடுதல் அரூபச் சாபம்.

நீர்…அமிழ்வதற்கு
நிலம்…தோய்வதற்கு
காற்று… உயிர்ப் பருவம் நீந்த..
தீ.. ஒத்திகை எரியூட்டுப் பிரவாகம்
ஆகாயம்… கனவறுந்த வெற்றுக் கீற்று

நான்…
தசமபூதமாய்ச் சிரிக்கிற போது…

அறை அறைகளாய்
மிரண்டு திரிகிறது உடலம்.
ஒவ்வொரு அறையின் முதுகிலும்…
நூற்றாண்டு அடிமைச் சழக்கின்
நியாயக் கொக்கிகள்..!