ந.க.துறைவன் : கவிதைகள்
அலைகள் தெரியாத குளம்
நீர்மறைக்கும் ஆகாயத்தாமரைகள்
கரையில் மீன்பிடித் தூண்டில்காரன்.
*
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மையை ஏமாற்றி
இரை தேடும் குருவிகள்.
*
எழுத்து ரூபம்
சொற்கள் அரூபம்
பேச்சினிடையே மௌனம்.
*
அழகு சிதைந்த மலைக்கோட்டை
யாருமற்ற பழைய அரண்மனை
உள்ளே விறகு வெட்டி.
*
மேகங்கள் பயணம்
எதையோ தேடி வானில்
அலையும் ஒற்றை பறவை.
*
இலைகள் மகிழ்ச்சி
வயல் நாற்றுகள் சிரிப்பு
வசந்த காலம்.
*
தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழை குறித்து விமர்சனம்.
*
சூடான பால்
சர்க்கரை போட்டதும் மிதந்தது
உயிரற்ற எறும்புகள்.
*
கடந்து போகிறது காற்று
கடந்து போகிறது நிழல்
கடந்து போகிறது மனம்.
*
வாசலில் கோலம்
அழித்து விட்டு போகிறது
பால்காரன் சைக்கிள் டயர்.
*
அழகு மூலிகை வனம்
கொட்டும் அருவி
குரங்குகள் பருகும் குடிநீர்.
*
வாசலில் பூத்திருக்கு
சிவந்த செம்பருத்தி பூக்கள்
தெருவிற்கு அழகு.