இந்திய விண்வெளி (ISRO) விஞ்ஞானி திரு. ஆராவமுதன் – சித்தார்த் எம்பி | தமிழில்: சேஷ ஜெயராமன்
அரசியல் மற்றும் திரைத்துறையில் பிரபலமான பலரைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் நாம் வேறு எத்தனையோ துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள அதிகம் விரும்புவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. நாம் வளர்த்தெடுக்கப்பட்ட விதம் அப்படி. எது நமக்கு முன்பாக பிரதானமாக பேசப்படுகிறதோ, விமர்சிக்கப்படுகிறதோ அதைப் பற்றிய தகவல்களில்தான் நம்மை அறியாமல் நம் மனம் ஈடுபடத்தொடங்கி விடுகிறது.
அறிவியல் உணர்வு ஊட்டப்பெறாத ஒரு சமூகமாக நாம் இயங்கி வருகிறோம். எவ்வளவு புதிய கண்டுபிடிப்புகள் நம் முன்னர் களமாடினாலும், அறிவியல் சார்ந்த சிந்தனைகளோ, விவாதங்களோ மிகக் குறைவாகக் கூட பகிரப்படுவதில்லை. ஒரு சிறிய வட்டத்தில் அடங்கிவிடக்கூடியவையாகவே இன்றளவும் அவை தொடர்கின்றன. கல்வி அறிவு பெற்றவர்களின் விழுக்காடு கூடி வரும் இந்த நூற்றாண்டில் நாம் நம்மை திறமையுடன் வளர்த்துக்கொள்ள அறிவியல் சிந்தனைகளும், அறிவியல் கண்ணோட்டமும் மிகவும் அவசியமானவை. உண்மையில் எளிமையான முறையில் விளங்கிக்கொள்ளும் வகையில் எத்தனையோ அறிவியல் தகவல்கள் இணையதளங்கள் எங்கிலும் மண்டிக்கிடக்கின்றன. சற்றே ஆர்வமும், பொறுமையும் இருந்தால் இந்த விஞ்ஞான உலகில் நாம் கற்றுக்கொண்டு ஆச்சரிப்படவும், ரசிக்கவும் ஆயிரமாயிரம் தகவல்கள் இருக்கின்றன.
பல நூற்றாண்டுகள் முன்பே விண்வெளி ஆராய்ச்சிகள் தொடங்கி விட்டன என்றாலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அது மிகப்பெரும் பாய்ச்சலைக் கண்டது சென்ற நூற்றாண்டில் தான்.
ஆர். ஆராவமுதன் என்னும் இராமபத்ரன் ஆராவமுதன் ஒரு விண்வெளி விஞ்ஞானி. இந்திய விண்வெளித்துறையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். 1936-ல் சென்னையில் பிறந்தவர். நடுத்தர குடும்பம். சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி) மின்னணு-பொறியியலில் முதல் தரம் பெற்றவர்.
விஷயங்களைத் தெளிவாகப் பகுத்தும் தொகுத்தும் புரிந்துகொண்டு அவைகளை சரியான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளும் கூர் அறிவும், அறிவியல் மனப்பாங்கும் கொண்டவர்களுக்குப் பொருத்தமான பணியிடம் வாய்க்கும்போது அதனை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
திரு.ஆராவமுதன் அவர்களுக்கு ட்ராம்பே அணு உலைக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருக்கும் அணுசக்தித் துறையில் வேலை கிடைத்தது. கிடைத்த வேலை போதும் என்று அங்கேயே அவர் நீடித்திருக்கவில்லை. தனது திறமைகளை வெளிப்படுத்த அவர் மனம் வேறு ஒரு சிறப்பான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அப்போதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் பிதாமகரான திரு.விக்ரம் சாராபாய் அவர்கள் தனது புதிய ஆராய்ச்சிகளுக்காக இளம் விஞ்ஞானிகளைத் தேடிக்கொண்டிருந்தார். திருவனந்தபுரத்தில் ஒரு புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணியில் அவர் தீவிரமாக இருந்தார். இத்தகவல் கேள்விப்பட்ட ஆராவமுதன் அணுசக்தித் துறையிலிருந்து விலகி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். நண்பர்கள் சிலர் நிலையான வேலையை விட்டு புதிய வேலைக்குச் செல்வதில் உள்ள சவால்களை எடுத்துக் கூறினாலும் தன் மனம் விரும்பிய பணியில் சேரவேண்டும் என்ற முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட உடனே, அமெரிக்காவின் நாசாவிற்கு அனுப்பப்பட்டார் ஆராவமுதன். விண்கலத்தடங்களை கண்காணித்தல், தொலைதூரத் தகவல்களைப் பதிவு செய்து சேகரித்தல் என விண்ணில் செலுத்துப்படும் ஒரு ராக்கெட்டின் பாதை தொடர்பான சகல பணிகளிலும் அவருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.. தரை நிலையத்திலிருந்து பறந்துகொண்டிருக்கும் ராக்கெட்டிற்கும், ராக்கெட்டிலிருந்து தரை நிலையத்திற்குமான தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதே இவரது பணியின் மையநோக்கம். ஓராண்டு நீடித்த இந்தப் பயிற்சியின்போது தான் ஆராவமுதனுக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நட்பு கிடைத்தது. அப்போது கலாம் அவர்களின் வயது 31.
பயிற்சிகளின் பின் திருவனந்தபுரம் தும்பாவிற்குத் திரும்பிய குழு, ஒன்றன்பின் ஒன்றாக ராக்கெட் சோதனைகளை ஆரம்பித்தது. அறுபதுகளில் தொடங்கிய இவரது சேவை மங்கல்யான் விண்கலம் 2014-ல் மார்டியன் சுற்றுவட்டப்பாதையில் நிலைபெறும் வரையிலும், தொடர்ந்தது.
1970களின் முற்பகுதியில் இவர் தும்பா ஈக்வடோரியல் ராக்கெட் ஏவுதளத்தில் இயக்குநராக பணியாற்றினார். 1980 களில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குநரானார். பின்னர் 1989-ல் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அடுத்த ஐந்தாண்டுகளின் பின் 1994-ல் இவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பெங்களூர் சென்றார்.
1997-ல் திரு.ஆராவமுதன் ஓய்வு பெற்றபின் அவரது துணைவியார் திருமதி.கீதா அவர்களுடன் இணைந்து சுயசரித நூல் ஒன்றை எழுதினார். (ISRO: A Personal History).
1963ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் இந்திய விண்வெளித்திட்டங்களின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது. அன்றுதான் ‘நைக் – அபாச்” என்ற சோதனை ராக்கெட் முதன் முதலாக இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டது.
ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் நாற்பதாண்டு விழா நிகழ்வு 2003-ல் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு.ஆராவமுதன் தன் பணியில் ஆரம்பகால சுவாரஸ்யமான அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இவருக்கு ஆர்யபட்டா விருது வழங்கப்பட்டது.
2010 ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தனித்துவமிக்க சாதனைக்கான விருதையும் பெற்றார்.
எந்த விதமான கட்டமைப்பு வசதிகளும், வழிகாட்டுதல்களும் இல்லாத அந்த ஆரம்ப நாட்களிலிருந்து ஒவ்வொரு சிறு வாய்ப்பினையும் பயன்படுத்தி இன்று மிகப் பெரும் நிறுவனமாக நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வளர்ந்துள்ளதாக பெருமிதப்படும் திரு.ஆர். ஆராவமுதன் இன்று நம்மிடையே இல்லை. பெங்களூருவில் வசித்து வந்த அவர் சென்ற 4-8-2021 அன்று தனது 84ஆம் வயதில் எல்லையற்ற அந்த விண்வெளியில் நிரந்தரமாக சங்கமமாகிவிட்டார்.
நன்றி: wionews
தமிழில்: சேஷ ஜெயராமன்