சுதாவின் கவிதை
அன்றொருநாள் என்
அறை முழுவதும் சூனியக்
கயிறுகள் அங்குமிங்கும்
தொங்கிக்கொண்டிருந்தது…
என் சிறுபிள்ளைத்
தனத்தையும் சிரிப்பையும்
பேச்சையும் அசட்டுத்ததையும்
ஒளிவு மறைவு இல்லாத
ஆனந்தத்தையும் காலம்
அன்று அறுவடை செய்திருந்தது…
இரண்டே வழி
சூனியக் கயிற்றில்
தொங்கிட வேண்டும்…
இல்லையேல் என் சுமைகளை
சுமந்து சூனிய கயிறின்
உதவியால் மேலேறி விடவேண்டும்…
என் பாதம் பட்ட
இடமெல்லாம்
விஷப்பூச்சியின்
வாழ்விடமானது…
இரண்டில் முதல் ஒன்றே
என் தேர்வு என நினைத்த
உறவுகளின் எண்ணங்கள்
பொய்த்துப் போனது…
என் சுமைகளோடு
சூனியக்கயிறின்
உதவி கொண்டு மேலேறி
மேடேறி விட்டேன்…
இன்றும் என் அறைக்
கதவுகள் தட்டப்பட்டது…
அன்று என் பாதம் பட்ட
இடமெல்லாம் விஷ பூச்சிகளாய்
உழன்று கொண்டிருந்த
உறவுகளெல்லாம் அன்பின்
பூங்கொத்தை நீட்டுகிறது…
பூக்களின் மணம் நுகர்ந்து
பார்த்தேன் பிணக்குவியலின்
வாடையை அதில் உணர்ந்தேன்…