Posted inPoetry
கானல்வரிகள் சந்திப்பதில்லை கவிதை – புதியமாதவி
யுகங்களின் சூரியக்கதிர்கள்
அவள் மேனியில் விதைத்த
வேர்வையின் துளிகள் பெருகி
அலைகளாயின.
அடங்காத அலைகளுக்கு அடியில்
அவள் பனிக்குடம் நிரம்பி
பூமி பிரசவிக்க ஆரம்பித்தது.
அவள் கடற்கரைக்கு வந்தாள்.
பட்டினப்பாக்கம் அசதியில்
தூங்கிக்கொண்டிருந்தது.
கானல்வரி பாடிப் பிரிந்தவர்கள்
சந்திக்கவே இல்லை.
உடைந்து கிடந்த யாழின் நரம்புகளில்
துடித்துக்கொண்டிருந்தது
இன்னும் பாடாத பாடலின் இசை.
பறந்தலை அவள் நரம்புகளைக் கிழித்து எறிந்து
கருப்பையில் பசியாறிக்கொள்கிறது.
உழிஞை மரத்தடியில்
அவள் இப்போதும் காத்திருக்கிறாள்.
புதியமாதவி