இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்

இறைவி இவள் கவிதை – பாங்கைத் தமிழன்




அவள் என்ன
கற்சிலையா
உலோகத்தாலான
உருவச்சிலையா?

அரிதாரம் பூசி
அலங்கரித்து
அலங்கல் சார்த்தி….

திருவிழா என்னும் நாளில்
ஆராதிக்கப்படும்
பல்லக்குச் சிலையா?

சிற்பி செதுக்கிய
சிங்காரச் சிலையா?

அசையாத
அழகு செய்யப்பட்ட
அவயங்களால்
அம்மன் சிலையென
காட்டப்படும்
அலங்காரச் சிலையா?

நாள் குறித்து
அர்ச்சனை செய்து
திருவிழா நாளாக்கி
‘ மகளிர் நாளென’
கொண்டாடி……
விழா முடிந்து
மூலையில் முடக்கி
தாழிட்டு…..
இருட்டறையில்
இருக்கையில் அமர்த்தி
இயங்காதவளென
சொல்லாமல் சொல்கிறச்
சொப்பனக் குறியீடா?

இயக்குபவளை
இயங்குபவளை
இனிமைகளின்
இடமாக இருக்கும்
இளகும் இதயத்தவளை
இன்றொரு நாளில் மட்டும்
இமயமிவளென
இருட்டடிப்புச் செய்வதேன்?

அவள்
இன்றும் என்றும்
இயங்கும்……
இயன்றதையெல்லாம் செய்யும்
இறைவி அல்லவா?

-பாங்கைத் தமிழன்

பெண் என்னும் மானுட சக்தி கவிதை – து.பா.பரமேஸ்வரி

பெண் என்னும் மானுட சக்தி கவிதை – து.பா.பரமேஸ்வரி




தாயாக தாலாட்டினாலும்
தாரமாக சீராட்டினாலும்
தலைமகனுக்காகத் தான்
தவித்துக் கிடப்பாள்…..
பெண் என்னும் பேதை..

தங்கையாய் கவிந்தாலும்
மூத்த தமக்கையாய் ஊட்டமளித்தாலும்
விட்டுக் கொடுக்காது வாழ்த்துவாள்..
வீரத்தை மனமார ஊட்டி வளர்ப்பாள்
சகோதரனின் சோதரியாய்

தோழியாய்த் தட்டிக் கொடுத்தாலும்
காதலியாய்க் கனிந்து நின்றாலும்
உரிமையுடன் திருத்திடுவாள்
உயர்ந்து சிறக்க பின்னணியாயிருப்பாள்
பிரியமான சிநேகிதியாய்

அர்த்தநாரியாய் உறைந்திருப்பாள்
பிள்ளைக்கனியமுதாய் இனித்திருப்பாள்
பூஜ்ஜியத்தைப் பௌர்ணமி போல மாற்றிடுவாள்

எவர்க்கும் அஞ்சிடாது எதிர்த்திடுவாள்
நறுமுகை சூடிய நாச்சியார்..

ஆடவனின் பின்புலமாக
அவனை நகர்த்தும் முன்னெடுப்பாக
உடன் பயணிக்கும் வழி மொழியாக
உயிர்ப்பூத்துக் கிடப்பாள்…
யாதுமானவளாய்…
மங்கை எனும் மகாசக்தி..

து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778