thangesh kavithai தங்கேஸ் கவிதை

தங்கேஸ் கவிதை

ஒரு சொல் உயிரை வதைத்திடும் ஒரு சொல் காலத்தை நீரூற்றுப் போல பீறிட்டெழச் செய்கிறது ஒரு சிறுவனோ சிறுமியோ இளைஞனோ யுவதியோ மண்ணுக்கடியிலிருந்து தாவரம் போல் முளைத்தெழுகிறார்கள் பாசி படர்ந்த குளத்தில் பச்சை தவளைகள் தங்கள் பங்கிற்கு முட்டைக் கண்களை உருட்டியபடி…
செ. ஜீவலதாவின் கவிதை

செ. ஜீவலதாவின் கவிதை




எதோ ஒரு உந்துதலில்
கவிதை எழுத
எத்தனித்த பொழுது
நான் கற்றுக் கொண்ட
வார்த்தைகள் அனைத்தும்
சுழியமாய் ! சூண்யமாய் ஆயின!

ஆனால்,
இதில் ஏதோ
கள்ளத் தனம் உள்ளதோ ?

உன்னை நினைத்து
மை தொடுக்கும் போதே
முகில் தோன்றி
வார்த்தைத் தூறலாய்
தூறிக் கொண்டிருந்த
என் எழுத்துகள் அனைத்தும்
நடையெடுத்து !
அணிவகுத்து !
இலக்கணம் தொட்டு !
கவிதையானதே !!!

செ. ஜீவலதா
இராஜபாளையம்

சுதாவின் கவிதைகள்

சுதாவின் கவிதைகள்




உதவி செய்யாமலும்
கடந்து சென்று பழகுங்கள்…

பேசுவதற்கு வார்த்தைகள்
நிரம்பிய போதும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்…

அடுத்தடுத்த குறுஞ்செய்திகள்
அவசியம் இல்லையெனில்
தவிர்த்து நகருங்கள்…

உங்கள் நட்பாயினும்
ரகசியங்களை பத்திரப்படுத்துங்கள்….

உங்கள் குழந்தையேயாயினும்
உங்களுக்கு பிறகு தான்
என்பதை உறுதி செய்யுங்கள்…

எத்தனை வேலைகள் இருந்தாலும்
வெட்டவெளியில் வெறுமனே
அமர்ந்திடப் பழகுங்கள்…
கைபேசி இன்றி…

எல்லா வேலைகளையும்
இன்றே முடித்துவிடாதீர்கள்…
நாளைக்குக் கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்…

ஏனெனில் இங்கே தீர்ந்து போதல்
என்பது முடிந்து போதலுக்குச் சமம்…
அன்பே ஆயினும் கொஞ்சமேனும்
மிச்சம் வையுங்கள்…

வெறுப்பையும் கூட கொஞ்சம்
மிச்சம் வையுங்கள்…. பிறிதொரு

சந்திப்பில் அறிமுகம் தேவையிருக்காது…

******************

நான் விலகி நிற்கிறேன்
பஞ்சுமிட்டாய் வாங்கிய கைகள்
இன்று என் நிழல் விட்டு
விலகி நிற்கையில் நான்
கொஞ்சம் விலகி நிற்கிறேன்…

ஊர் சுற்றித் துள்ளிக்குதித்த
கால்களில் காரணம் தேடி
கடக்க நினைக்கையில் நான்
கொஞ்சம் விலகி நிற்கிறேன்…

பேசிப்பேசி ஓயாத வார்த்தைகள்
சுற்றிச் சுற்றி நோகாத கால்கள்…
இன்று வலியில் உதிர்த்த
வார்த்தைகளை இலையை அசையாது
உந்திச் செல்லும் பறவையாய்
கடந்து செல்கயில் நான்
சற்று விலகி நிற்கிறேன்…

அன்பின் பரிமாணம்
வார்த்தைகளில் முற்றுப்பெறும்
பொழுதுகளில் நான் விலகி
நெடுந்தூரம் செல்கிறேன்…

வேறு வேறு நட்புகளையும்,
அன்பையும் கொண்டவர்களே
அனைவரும் என உணர்கையில்
நான் மெல்ல விலகிச் செல்கிறேன்…

சாக்குப்போக்கு சொல்லி
என்னோடு நீ நிற்கமறுக்கும்
வேளையில் இதய ஓரத்தில்
ஒரு நரம்பு மட்டும் ஊமைக்
கண்ணீரில் ஓலமிடுகிறது…
அந்த இதயத்தைத் தேற்றுவதற்கேனும்
நான் விலகி நிற்கிறேன்…

மௌனத்தின் துர் நிமிடங்களை
மீண்டும் ஸ்பரிசிக்க விருப்பமற்று
நான் மெல்ல மெல்ல விலகுகிறேன்…

என் தலை முடியில் நரை முடி
மிகுந்த வேளையில்
சிந்தனைகளும் வெளிறிப் போனதோ
எனச் சற்றே விலகுகிறேன்…

உனக்கென நான்
பத்திரப் படுத்த நினைக்கும்
கைக்குட்டையும்
நீ விரும்பாத ஒன்றாகிவிடுமென
சற்றே விலகி நிற்கிறேன்…

மனதால் தொலைவில் வாழ
முயற்சிக்கையில் நான்
மெல்லமெல்ல விலகி நிற்கிறேன்…

– சுதா

சந்துரு ஆர்.சி – கவிதைகள்

சந்துரு ஆர்.சி – கவிதைகள்




வலிகளின் தைலம்
**********************
எல்லோரிடமும்
சில துன்பங்கள் இருக்கின்றன
மெல்லிய சில
வார்த்தைகளும் உள்ளன
சுமக்கும் வலிகளின் மீது
தைலமாய்த் தடவி விட
அவ்வார்த்தைகளை
ஆழமாய்ப் பதியமிடுகிறார்கள்.

எதற்கும் இருக்கட்டுமென்று
எல்லோரைப்போலவும்
சில பொய்களையும்
கோபங்களையும்
தயாராய் வைத்திருக்கிறோம்
செலவழிக்க விரும்பாமல்
முடிந்து வைத்த அவற்றை
உணர்ச்சிப் பெருக்கில் எப்போதேனும்
அவிழ்த்தும் விடுகிறோம்.

எனினும்
பகிர்தலின் பொருட்டு
எல்லோரும்
தங்களின் தோட்டங்களில்
இன்சொற்களால் பின்னிய
கூடுகளை அமைக்கவே முயல்கிறார்கள்.

வெளிப்பார்வைக்குத் தெரியாத
சில புன்னகைகளை
அதற்குள் மின்மினிகளாய்ப் பிடித்து ஒட்டுகிறார்கள்.

ஜொலிக்கும் சிறு வெளிச்சத்தில்
கூடுகளெங்கும் பரவுகிறது
வாழ்வின் ருசி…

யார் எதிரி
*************
கடவுளின் தோட்டத்திலிருந்து
விரட்டப்பட்டதால்
ஆதியிலிருந்தே இப்பூமி
சாத்தான்களால்
ஆசிர்வதிக்கப்பட்ட நிலமாய்
இருந்திருக்கலாம்…

தடை செய்த கனிகளுக்குள்
சுவையையும்
படைக்கபட்டவளுக்குள்
பறிக்கும் விருப்பத்தையும் தந்தது
கடவுளைத்தவிர
யாராய் இருக்கமுடியும்…!

முழுதாய் துய்த்துணரும் முன்பே
கைவிடப்பட்டதால்
சொர்கத்தை
ரசிக்கத் தெரியாதவரென்று
இன்பத்தின் எல்லையை
எதற்குள் வரையறுக்க முடியும்…
ஏவாளைப் படைக்க
ஆதாமிடமிருந்து
உருவப்பட்ட விலா எலும்பில்
ஆண்குறிகளின் நிழல்…

கடவுளைவிட இந்த பூமி
சாத்தானின் துகள்களால்தான்
நிரம்பியிருக்கிறது…

கைவிடப்பட்ட
ஆதாம் ஏவாளுக்குப்பின்
ஏதேன்ஸ் தோட்டத்தில் படைக்கப்பட்டவர்
யாராக இருக்கக்கூடும்…

இன்று பூமியிலிருப்பவை
யாருடைய கனிகள்…

தூக்கிட்டவனின் மரத்தைப்போல்
சாத்தானின் மரமும் இந்நேரம்
அடியோடு
வெட்டி வீழ்த்தப்பட்டிருக்குமா…

கீழ்படியாத படைப்பை உருவாக்கியதால்
தோற்றுப்போனது
கடவுளா…மனிதனா…?

சாத்தானின் சொல் கேட்டதால் விரட்டியடிக்கப்பட்டு
வேறு நிலம் பிறந்த வாரிசுகள்
கடவுளின் பிள்ளைகளாவதெப்படி…

சபிக்கபட்ட இருவரின் சந்ததிகள்
உருவாகக்காரணமான
சாத்தானை
எதிரியாய் எப்படி ஏற்பது…!

சாத்தான் மட்டும் இல்லையெனில்
நாமெல்லாம் இன்று ஏது…?
இருவரில் ….
முரண்படாமல்
மனிதனின் பக்கம் ஆதரவாய் நிற்பது
சாத்தானாகவும் இருக்கலாம்…?
ஒருவேளை….
பணிய மறுத்த மனிதனை
பகடையாய் உருட்டி விளையாடும்
மனித எதிரி
கடவுளாய்கூட இருக்கலாம்…!

இருள் உமிழும் கோபம்
***************************
உறை பனியில்
போர்வையற்று நடுங்குபவனின்
பற்கடிப்பை
அலட்சியம் செய்கிறான்
அதிகாரத்தின் பிரதிநிதி.

வழுக்குப் பாதையில்
நடப்போர்க்கு ஒத்தாசையாய்
எண்ணைப் பானைகளை
கவிழ்த்து விட்டவன்
நிலை தடுமாறுபவர்களை
புதுவித நாட்டியமாடுவதாய்
கைதட்டி ரசிக்கிறான்.

ஆட்சியதிகார மொந்தைகளில்
தலை கவிழ்ந்து
குடிகளை மறந்தவன்
எப்போதும் தன்னை
முக்காலத்தின் தீர்க்கதரிசியாய் அறிவித்துகொள்கிறான்..

செயற்கை வெளிச்சத்தில்
மின்னுபவன்
இரவில் மினுங்கும்
கண்களின் ஒளியை தவிர
தன்னிடம்
சுயமாய் ஒளியேதுமில்லை என்பதை
மறைத்தே வருகிறான்.

இயலாமையின்
கண்ணீர்த் துளிகளை
பூக்களாய் தொடுத்து
சந்தைப்படுத்தும்படி
காயப்பட்டவர்களிடமே
பரிந்துரை செய்கிறான்.

கசடுகளால்
இதயம் வளர்ப்பவனின்
அதிகாரம் பிடுங்கப்படும் நாளில்
அச்சப்பட்டு
ஒடுங்கிக்கியிருந்தோர்
தேக்கி வைத்த நியாயங்கள்
சர்வாதிகாரத்தின் தசைகளை
ஆளுக்கொன்றாய் அறுக்கும்.

முகமூடி
கழட்டப் பட்டவனின்
அசல் முகத்தை காண்போர்
அவன் நின்றிருந்த இடத்தின்
தடங்களையும் தகர்ப்பர்.

நசுங்கிக் கிடந்தோர்
விசும்பல்களை
உதாசீனம் செய்தவன்
அரண்மனை தாண்டி
தப்பிக்க வழிதேடி
அபயக்கரம் நீட்டும் நாளில்
துயர் சுமந்த கூட்டம்
யாசித்தவன் மீது
கோபத்தின்
இருளை உமிழும்.

அவ்விருளில்
மக்களை மடையர்களாக்கி
அதிகாரம் செலுத்தி வந்தவன்
ஆணவம் மொத்தமும்
சாமானியர்களின் காலடிக்குள்
யானையின் கால் இடறிய
நத்தையென
நசுங்கிக்கிடக்கும்.

– சந்துரு ஆர்.சி.

Dharmasingh Kavithai தர்மசிங் கவிதை

தர்மசிங் கவிதை




தஞ்சை நிலத்தில்
பயிரிட்டு வளர்த்தாலும்
பசி நீக்காது
பார்த்தீனியம் செடி

எந்தக் குளத்தில்
புனித நீராடினாலும்
வாசமாக துளிர்க்கப்‌ போவதில்லை
உடலின் வியர்வை

பல இலட்ச ரூபாய்ப் பட்டுச்சேலையில்
பொதிந்து வைத்தாலும்
முகத்தைச் சுழிக்கத்தான் வைக்கும்
பிணத்தின் மணம்

பூக்களோடு பூக்களாக
பிணைந்து இருந்தாலும்
புன்னகைக்கப் போவதில்லை
பூ நாகம்

சந்தனக் கட்டைகளை
சிதையில் அடுக்கினாலும்
ஜமீன்தாரின் எச்சத்திலும்
சாம்பல் வாசமே வரும்

வார்த்தை ஜாலங்களுக்கு
வாய்ப்புகளை இழந்து விட்டு
” குய்யோ… முறையோ …”
எனக் கத்துவது ஏமாளித்தனம்

பகுத்தறிவு என்பதே
கற்ற கல்வியின் தனம்
ஒன்பது முறை தோற்கலாம்
ஒரு தடவையாவது
வெற்றியின் இலக்கை
அடையாத வாழ்க்கை
அர்த்தமில்லாதது…

Sooravalikkul Urangugirom Poem By Vasanthadheepan. சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை - வசந்ததீபன்

சூறாவளிக்குள் தூங்குகிறோம் கவிதை – வசந்ததீபன்

சாக்கடையில் விழுந்து புரண்டன
தேடித்தேடி வயிறை நிரப்பின
பள்ளம் தோண்டி
ஒய்யாரமாய்ப் படுத்துக்
கனவு காண்கின்றன
அழைத்தான் வரவில்லை
வந்தது அழைக்கவில்லை
அழையா விருந்தாளியாய்ப் போகிறான்
மலரினும் மெல்லியது காதல்
மழைத்துளியின் கனம் தான் காமம்
மண் வாசனையாய்
கமழ்கிறது ஊடல்
அவளது நாக்கு வாளாய் மின்னுகிறது
வார்த்தைகள் வெட்டிச் சாய்க்கின்றன
குற்றுயிரும் குலையுயிருமாய் அவன்
பலாப்பழத்தை அறுத்துச் சொளையெடுக்கலாம்
பப்பாளியை வெட்டிக் கீத்தெடுக்கலாம்
சண்டாளர்கள் பணத்துக்காக
வயிற்றுத்துக் குழந்தையெடுக்கிறார்கள்
மெளனமாக இருக்க முயல்கிறேன்
காற்று
ஆடையைப் பறிக்க
பிரயாசைப் படுகிறது
அடைமழை
உயிரைப் பிடுங்க
உக்கிர தாண்டவமாடுகிறது
தண்டவாளங்கள் சாட்சி சொல்லியது
புகைவண்டி அறியாமல் செய்து விட்டது
நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது
சுதந்திரமாய்ப் பிறந்தோம்
அடிமைகளாய் வாழ்கிறோம்
சுதந்திர அடிமைகளாய்ப்
போய்ச் சேருவோம்.

Mounam Thantha Sorkal Poem By Dhayani Thayumanavan தயானி தாயுமானவனின் மெளனம் தந்த சொற்கள் கவிதை

மெளனம் தந்த சொற்கள் கவிதை – தயானி தாயுமானவன்




நாங்கள் எப்போதும்
எளிமையானவைகளையே…
முன்னிறுத்தினோம்.
உங்களை யாரென்று
அறியாமலேயே
கண்களினால்
அன்புசெய்தோம்.
உங்கள் சொற்களினால்
வசீகரிக்கப்பட்ட
நாங்கள் நாடோடிகள்.
எங்களுக்கான
குரல் இயற்கையினுடையது.
எங்கள் தார்ப்பாயின் வீடுகள்….
எப்போதும்
திறந்தே கிடந்தன.
உங்கள் சொற்பொழிவுகளைக் கேட்க….
எங்களுக்கு
கையூட்டு தரப்பட்டது.
அது
ஒரு வேளைப் பசிக்குப் போதுமானதாக.
நான் ஆசீர்வதித்துத் தருகிறேன்.
ஞானத்தையும்
கொஞ்சம் கொடு
இந்த மனித வடிவ
கழுதைகளுக்கு என்று.
வெள்ளிப் பணத்தைச் சுமந்து சென்று

உங்கள் முதலாளிகளின்
கஜானாவில் சேர்ப்பது
கடினமல்லவா?
எனவே
அந்த உறுதியையும்
உங்கள் உடல் பெறட்டும்….
என்றே
என் கழுதையை
வேண்டி நின்றேன்.
இப்போது புரிகிறதா?
கோப்பைகளுக்காக நாங்கள் அலைவதில்லை.
நாங்கள் கேட்காமலயே
எங்கள் மது கோப்பைகள்
நிரம்பிவிட்டன
சற்று முன்பு.

Kasadara Katridu Magale Poem By Jeyasree. ஜெயஸ்ரீயின் கசடற கற்றிடு மகளே.. !! கவிதை

கசடற கற்றிடு மகளே.. !! கவிதை – ஜெயஸ்ரீ




உயிர் மெய் கற்ற பள்ளியில்
ஆய்த எழுத்தோடு சேர்த்து
ஆயுதமும் கற்றுக் கொள் மகளே..
கல்விக் கூடமாக இருந்தது
கலவிக் கூடமாக மாறுவது
கண்டு பயந்திடாதே மகளே..

பாரதி கண்ட புதுமைப்பெண் நீ
பாரதியை தான் காணவில்லை
துணிந்து எழு மகளே..
தாய் தந்தையின் உழைப்பும்
அவர்களின் கனவும் நீ தானே
தளர்வுறாதே மகளே..

இறக்கையை விரித்திடு
பட்டாம்பூச்சியாய் அல்ல
கழுகினைப் போல மகளே..
நீ இன்று ஒடுங்கினால்
உன் சந்ததியும் நாளை ஒடுங்குமே
முன்னேற வா மகளே..

தவறுகளைத் தவிடு பொடியாக்க
கயவர்களைத் தட்டிக்கேட்க
கசடற கற்றிடு மகளே..

Kathirukka katrukolvom Poem by Shanthi saravanan சாந்தி சரவணனின் காத்திருக்க கற்றுக்கொள்வோம் கவிதை

காத்திருக்க கற்றுக்கொள்வோம் கவிதை – சாந்தி சரவணன்




விடியலை வரவேற்க சேவல் இரவெல்லாம் காத்திருக்கின்றது!
மொட்டு மலராக சில நாட்கள் காத்திருக்கிறது!
கூட்டு புழு பட்டாம்பூச்சியாக சில வாரங்கள் காத்திருக்கிறது!
காய் கணியாக சில மாதங்கள் காத்திருக்கிறது!
ஒரு உயிர் ஜணிக்க ஐ இரு மாதம் தாயின் கருவில் காத்திருக்கிறது!
ஆதவன் இருளை நீக்கி உதிக்க இரவெல்லாம் காத்திருக்கிறது!
மனிதா,
நீ மட்டும் ஏன் காத்திருக்க மறுக்கிறாய்?
காசை கொடுத்து “கையூட்டை” வளர்கிறாய்?
காத்திருந்து தான் பாரேன்!
தமிழ் அகராதியில்
“கையூட்டு”
என்ற சொல்லையே நீக்கிய  பெருமையை  நம் சந்ததியினருக்கு
வரமாக ஈன்று  தான் செல்வோமே!