பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘பிரிவு’
*********
பொய்யான கோபம்
பிரிந்திருந்த காலம்
உள்ளமெலாம் உருகி
உருவான கவிதை!

கோபமதை மறந்து
குலவ வந்த நேரம்
கொடுத்தேன் அந்தக் கவிதை
குளிர்ந்ததவள் மனது!

சென்றவளைக் காணோம்
சிந்தனையில் மனது;

தூது வந்த கடிதம்;

துயர் துடைக்குமென்று
பறந்ததெந்தன் மனது
பார்த்துக் கடிதம் இடியாய்,

நற்கவிஞனோடு
நானிருந்தால் உலகம்
நல்ல கவிதை இழக்கும்!
நன்றி சொன்னதெனக்கு!

உந்தன் பிரிவு ஊற்றாய்
உயர்ந்த கவிதை வந்தால்
உலகம் உய்யக் கொடுப்பேன்
உனது நினைவில் வாழ்வேன்!

க(வி)தை வந்தக் கதை

*******************************
உடலுணர்ந்து உள்ளுணர்ந்து
உண்மைகளைத் தாமுணர்ந்து
உவமைதனை ஊறுகாயாய்
உடனிணைத்துக் கவி படைத்தார்
உலகினிலே முதலினத்தார்
உயர்ந்த குலத் தமிழினத்தார்!

வெய்யிலிலே காய்ந்ததினால்
வெப்பமானக் கவிபடைத்தார்;
மழையினிலே நனைந்தப்பின்னே
மழையானக் கவிகொடுத்தார்!

கானகத்தில் கவியெடுத்தார்
கழனியிலே கவியெடுத்தார்;
சேற்றினிலே கவிதைகளை
செழுமையுடன் கண்டெடுத்தார்!

நீரோடை நிலைகளிலும்
நெடிதுயர்ந்த மலைகளிலும்
அன்றலர்ந்த மலர்களிலும்
அலைதுடிக்கும் கடலினிலும்;

அயராது உழைத்தவரின்
அயர்வுகளை வியர்வைகளை
அவர் வளர்த்தக்கன்றுகளை
அவர் வளர்த்தக்காளைகளை;

அவர் செய்தக் களவிகளை
அதிலிருந்த மென்மைகளை
பெயர் சுட்டிப் பேசாமல்
பெருமைமிக்கக் கவிகொடுத்தார்!

புழுப்பூச்சி உயிரினத்தை
புலத்தோடு தாமுணர்ந்து
அதன் வாழ்க்கை முறைகளையே
அணுவணுவாய் கவிபடைத்தார்!

பறவையினக் காதலதை
பாட்டினிலே நயம் படைத்தார்;
பார் வேந்தர் பாடுகளை
பங்கெடுத்துப் புகழ் படைத்தார்!

உடலுணர்ந்து உள்ளுணர்ந்து
உண்மைகளைத் தாமுணர்ந்து
உறுதிமிக்கக் கவிபடைத்தால்
உயிர்வாழும் எந்நாளும்;
உணர்வீரே கவிஞர்களே!

‘இவர்களும் குழந்தைகளே’

*******************************
கையேந்திப் பிழைக்கும்
செல்லங்களே….

நீங்களும்
இந்த தேசத்தின்
குழந்தைகள்தான்
செல்லங்களே!

உங்கள்
கையேந்தல்….
மழையைப் பிடித்தல் அல்ல
மனதைப் பிசைதல்!

சத்தியமாய்
என் முன்னோர்களோ
நானோ
காரணமல்ல…
உங்களின்
இந்த நிலைக்கு!

இதற்கும்
சனாதனந்தான் காரணம்
என்போரை
காரித்துப்புகிறார்
கருணையற்ற
கர்வம் கொண்டக் கூட்டம்!

வளர்ந்து கொண்டு வருகிறதாம்…..
தேசம்!
நீங்களும்தானே
வளர்ந்து கொண்டு வருகின்றீர்?
வறுமையுடன்!

இந்த தேசம்
பண்பாட்டில் உயர்ந்ததாம்;

நாகரீகத்தின்
உச்சம்தானே பண்பாடு?

நாகரீகமே இல்லாத நாட்டில்
பண்பாடு எப்படி
பந்தியில் பருப்பு பரிமாறுகிறது?

உங்களுக்கு
ஒரு இட ஒதுக்கீடு
வேண்டுமென….
போராடத் தலைவன்
இல்லாதது;
உங்கள் தலையெழுத்து
என்கிறது….
புதியதாக
ஒதுக்கீடு பெற்றுள்ள
குபேரர்களின் வாரிசுக்கூட்டம்!

சில்லறைகளைக்கூட
சில பேர்தான் தருவார்கள்;
பெரும்பாலோரிடம்
நோட்டுத்தான் இருக்கிறது
மனது இல்லை!

‘குழந்தைகள் தினத்தை’த்தானே
கொண்டாடினர்?
குழந்தைகளைக்
கொண்டாடியதாதத் தெரியவில்லையே!

குழந்தைகளைக்
கொண்டாடுவோர்
இருந்திருப்பின்…
உங்களைக் கொண்டாட
வந்திருப்பர்!

நானும்
வெட்கப்படுகிறேன்
செல்லங்களே!

உங்களுக்கு
வாழ்த்துகள் சொல்வது
நீங்கள்
இப்படியே வாழவேண்டும்
என்பதாக…..
அர்த்தப்பட்டு விடும் என்பதால்
வாழ்த்த மனம் வரவில்லை!

கையாளாகாதவர்களால்
கண்ணீர்த் துளிகளைத்தான்
உங்களுக்குத் தர இயலும்;
நானுந்தான்.

சுற்றமும்
நட்பும் சூழ்ந்தாலும்… 
*************************************
எப்போதும் வரலாம்;
எனக்கான மரணம்!
அகால மரணமாக
அவஸ்தை மரணமாக
அகவை முதிர் மரணமாக!

சுற்றமும் நட்பும்
சொந்தம் கொண்டாடும்;
மரணத்தில் வந்து
மார்தட்டிக் கூத்தாடும்!

என்னவெல்லாம்
நடக்குமென
எனக்குத் தெரியும்!

நடக்க வேண்டியதை
உயிர் சாசனமாக
ஒரு சில வரிகளில்….

நான்
நட்டு வளர்த்த
பூஞ்செடிகள் தரும்
பூக்களால்…..
போர்த்துங்கள்
என்
பூத உடலை!

நான் வளர்த்த தென்னை மரத்தின்
தென்னை ஓலைகளை
தென்னங் காய்களை…
என் தேகம் செல்ல
பயனாக்குங்கள்!

என்னை
உளமாற நேசிப்போர்
என் மெய்யின் மேல்
ஒரு துளி கண்ணீர்
சிந்துங்கள்!

நான்
படித்தும், படிக்காமலும்
வைத்துள்ள புத்தகங்களை
குழந்தைகளுக்குக்
கொடுங்கள்!

நான்
பயன்படுத்திய
அனைத்து ஆடைகளையும்
என்னுடனே
அனுப்பி விடுங்கள்!

என்
உழைப்பில் சம்பாதித்த
ஒரு ரூபாய் நாணயத்தை
நெற்றியில் வையுங்கள்!

இரத்த உறவுகள்
என் இறப்புக்காக
வீணான செலவுகளை
செய்யாதீர்கள்!

கதை முடிந்த அன்றுடன்
அவரவர் பணிகளைப்
பாருங்கள்!

என் அன்பு மகனே…..
என் நினைவாக
ஒரு மரக்கன்றினை நட்டு. ..
பாதுகாத்து…
வளர்த்துக் கொடு!

அது….
பறவைகளுக்கும்,
பலருக்கும்
பயன் படட்டும்!

‘பாசாங்கு… ‘
***************
பள்ளிக்குச் செல்வதில்
ஏதோ…..
கசப்பு உணர்ந்தபோது
கண்டுபிடித்த
சுயமான வித்தை;
முதல் ஏமாளி
அம்மா!
” அம்மா…. வயிறு
வலிக்குதே”!

படிப்படியாக
ஆசிரியர்களிடம்..!

வீட்டில் பள்ளியைப்பற்றி
பள்ளியில் வீட்டைப் பற்றி
பாசாங்கு காட்டியே…
படிப்பும் முடிந்தது!

பாசாங்கு காட்டாத
மனிதன் நான் எனச்
சொல்பவன். …
பாசாங்கு காட்டுகிறான்
என்று பொருள்!

பாசாங்கு….
நடிப்பின் உச்சம்!

பாசாங்கு என்பது ஒரு கலை!

அது
பறப்பன… ஊர்வன
உட்பட
அனைத்து உயிரினங்களும்
அறிந்து வைத்துள்ள
ஒப்பற்ற உடல் மொழி!

பாசாங்கு பற்றிய
எளிய குறிப்பு

இதோ…..
‘மனைவியிடம் குடிகாரக் கணவன்’
‘கணவனை ஏமாற்றும்
மனைவி’

கற்பனைக் குதிரையைத்
தட்டி விட்டுப் பாருங்கள்,

குடிகாரர்…
மற்றும்
ஏமாற்றும் பெண்கள்!
மிக அற்புதமாக
நடிப்பார்கள்!
ஆம்;
அதுதான் பாசாங்கு!

எவராலும்
உண்மை எது
பாசாங்கு எது
என்று
கண்டு பிடிக்கவே முடியாத
நடிக இமயம்;
‘திருடன்!

அவன்
வேறு யாருமல்ல
நான், நீ, அவன்!

– பாங்கைத் தமிழன்…