Fear is death Article By Surulivel. இல. சுருளிவேலின் அச்சமே மரணம் கட்டுரை

அச்சமே மரணம் – இல. சுருளிவேல்




இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மக்களிடையே அச்சமும் பெருகி வருவதை மறுக்க இயலாது. எங்கோ ஒரு நாட்டில் நிகழும் பிரச்சனைகளால் நாமும் பாதிக்கப்படுவோமோ என்றெண்ணி அச்சம் கொள்கிறோம். இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் இனி எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

துணிவே துணை என்பதற்கு உதாரணமாக பல்வேறு அறிஞர்கள், தலைவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் நிறுபித்துள்ளனர். முக்கியமாக சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கவிஞர் கண்ணதாசன், அச்சமே மரணம் நூல் ஆசிரியர் வாஸ்வானி போன்ற பலர் தங்களின் படைப்புக்கள் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளனர். மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளைப் பற்றிப் பயப்படுகின்றனர். படிப்பு முடிந்த பின்பும் நேர்முகத் தேர்வின்போதும் நெஞ்சம் நடுங்கி நிலைகுலைகின்றனர். அதே போன்று வேலையில் சேருவதற்கும், சேர்ந்த பின்பு, ஓய்வு பெரும் வரையிலும், தொடந்து பயமும் வருகிறது. காதலர்களுக்கு திருமணம் நடக்குமோ நடக்காதோ என்ற பயம்.

ஆதே போன்று திருமணம், ஆன பின்பும், முதுமை வரையிலும்; தொழில் துவங்கும் வரை, தொழில் துவங்கிய பின்பும் என பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயமும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய கொள்ளை நோய்களும், பல்வேறு போராட்டங்களும், அண்டை நாடுகளிடைய அச்சுறுத்தல்களும், விலைவாசி உயர்வும் கூட அச்சத்தின் பிடியில் அரசை ஆட்டம் காணச்செய்து கொண்டிருக்கிறது. நிகழ்கால வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய பல விசயங்கள் இருக்கும் போது எதிர்கால வாழ்க்கையை எண்ணிப் பாமரர் முதல் படித்தவர் வரை, ஏழைகள் முதல் பணக்காரர் வரை ஒவ்வொருவரும் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பயம் மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

பயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்களில் நானும் ஒருவன். இந்த பயம்தான் எனது முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீண்ட காலம் ஆனது. பல நேர்காணலில் தோல்வியுற்றதற்கு முதல் காரணம் எனது பயமே. பயத்தினால் மறதி, கவலை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, பசியின்மை வருவதை உணர்ந்தேன். உணவு உடல் ஆரோக்கியத்தைத் தரலாம். ஆனால் மனதில் பயத்தை வளரவிட்டால், அது மனிதனை விரைவில் அழிந்து விடும். பயம் இருப்பவர்கள் விரும்பிய கல்வியை பெற முடியாது, விரும்பிய செல்வத்தை சேர்க்க முடியாது, விரும்பியதை அனுபவிக்க முடியாது. அறிவும், துணிச்சலும், முயற்சியும், பயிற்சியும் இருக்கும் ஒருவருக்கே தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது. சமூகத்தில் பின்தங்கிய நிலை தொடருவதற்கு முக்கியமான காரணமே பயம்தான்.

நமது கலாச்சாரம் குழந்தை பருவம் முதலே தைரியத்தை விட பயத்தையும் அதிகம் ஊட்டி வளர்க்கிறது. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியிலும் நம்மிடையே பல மூட பழக்கவழக்கங்களும் புரையோடிக் கிடக்கின்றன என்பதை பல்வேறு உயிர்பலி சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன. மனிதன் அறிவியலை விட ஜாதகங்கள், சம்பிரதாயங்களை அதிகம் நம்புகின்றான். பயம் கொள்கிறான், துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறான். மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளையும் கடந்தே வருகிறான். இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள், போர், பஞ்சம், பொருளாதாரப் பிரச்சனை போன்ற பல சூழ்நிலைகளை எதிர் கொண்டு மீண்டவர்களும் உண்டு அவற்றை எதிர்கொள்ளமுடியாமல் மாண்டவர்களும் உண்டு.

படித்ததில் பிடித்த அரேபியக் கதை ஒன்று: அறிவு நிரம்பிய ஒரு முதியவர் பாலைவனத்தில் வழியே பாக்தாத் நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், அவரையும் முந்திக்கொண்டு செல்லும் கொள்ளை நோயைச் சந்தித்தார்.

ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்? என்று அதைப்பார்த்து அப்பெரியவர் கேட்டார்.

“பாக்தாத் நகரில் ஐம்பது உயிர்களைப் பலிவாங்கப்போகிறேன்” என்று கொள்ளை நோய் கூறியது. பின்பொரு நாள் திரும்பி வரும் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது.

“என்னிடம் நீ பொய் சொல்லிவிட்டாய்” என்று பெரியவர் கொள்ளை நோயைக் கடிந்துரைத்தார்.

ஐம்பது உயிர்களைப் பலி வாங்கப்போகிறேன் என்று சொன்னாயே? இப்போது ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிவிட்டாயே? என்று கேட்டார் பெரியவர்.

“அதை நான் செய்யவில்லை. நான் ஐம்பது உயிர்களை மட்டுமே எடுத்தேன். அதற்கு மேல் ஒருவர்கூட என்னால் சாகவில்லை. எஞ்சியவர்களையெல்லாம் கொன்றது அவர்களின் அச்சம்தான்!” என்றது கொள்ளைநோய்.

ஆம்! உண்மையில் அச்சம்தான் நமது ஊக்கத்தையே உறிஞ்சி எடுத்துவிட்டு மனதில் மரணபயத்தை வேரூன்றச் செய்கிறது. வாழவும் பயப்படுகிறோம், சாகவும் பயப்படுகிறோம். ஏனென்றால் வாழ்க்கை அவ்வளவு குழப்பமானதாகவும் அஞ்சத் தக்கதாகவும்,  பாதுகாப்பற்றதாகவும் ஆகிவிட்டது இல்லையென்றால் நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு பயப்படக்கூடாது என்ற அறிவியல் சிந்தனை மக்களிடையே வளர வேண்டியுள்ளது. வள்ளுவர் சொன்னது போல

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”

அதாவது அறிவில்லாதவர்கள் அஞ்சக்கூடியதற்கு அஞ்சமாட்டர்கள். அறிவுடையவர்கள் அஞ்சவேண்டியதற்கு அஞ்சி நடப்பார்கள். சிலர் நல்ல செயல்களை செய்வதற்கும் அச்சம் கொள்கின்றனர். இதனால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம். நாளை ஏதாவது நடந்துவிடுமோ என்ற தேவையில்லாத கற்பனை. இது ஒருவகையான அறியாமையே விழிப்புணர்வு இன்மையே. வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். சில ஞானிகள், எழுத்தாளர்கள் தங்களின் கருத்துகளுக்காக சிறை சென்றுள்ளனர். சிலருக்கு மரணதண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அறிவு பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அன்றைய சமூக, பொருளாதார கட்டமைப்பு. ஆவற்றையும் கடந்த பல அறிவியல் சிந்தனை பதிவுகள் இன்றைய வரலாற்று சுவடுகள்.

சிலர் திரைப்படங்கள் எடுக்கவும், அதனை வெளியிடவும் அச்சம் கொள்கின்றனர். காரணம், அத்திரைப்படம் சமூகத்தில் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ணுமோ, இதனால் நஷ்டம் ஏற்படுமோ என்ற பயம். ஆனால் அதையும் தாண்டி எடுக்கப்பட்டு, பல விமர்சனங்களுக்கு ஆளாகி, இன்றும் வரலாற்று பதிவுகளாக இருக்க கூடிய சில நல்ல திரைப்படங்களும், அதில் நடித்த நடிகர்களும் அச்சத்தை வென்றவர்கள். இன்று சமூக ஊடகங்கள் சமூக மாற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் அச்சம் இன்மையே.

தேச விடுதலை, அனைவருக்கும் சமூக நீதி, பெண் விடுதலை, தொழிளாலர் உரிமை போன்ற பல விசயங்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டிருந்தால் இன்று இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமா? மாபெரும் வீரர், மானம் காத்தோர், மனித நலனுக்காக தன்னையே தியாகம் செய்தவர்கள் காலத்தை வென்றவர்கள். இந்த உலகம் நல்லவர்களால் மட்டும் இயங்கவில்லை நல்லவை நடப்பதற்காக துணிந்து முடிவெடுத்து செயலாற்றியவர்களால் மட்டுமே இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் பிரச்சனை, கடன் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை, தொழில் பிரச்சனை போன்ற பல காரணங்களாலும் பயம் கொள்கின்றனர். பிரச்சனைகள் வரும் போது அதைக்கண்டு ஓடிவிடுவதாலும், உறுகி விடுவதாலும், சண்டையிடுவதாலும் அதற்கான நிரந்தர தீர்வு ஏற்பட்டு விடாது. சிலர் தற்கொலைதான் தீர்வு என எண்ணி தவறான முடிவுக்கும் வருகின்றனர். சிலர் தேர்வு பயத்தால் தன்னையே மாய்த்து கொள்கின்றனர். இதனைப் போன்ற செயல்கள் மனித இனத்திற்கே அவமானமே தவிர வேறொன்றும் இல்லை. சாகத்துணிபவர்கள் ஏன் வாழத்துணிவதில்லை! பிரச்சனை வரும் போது பயந்து முடங்கி கிடந்தால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது.

கவிஞர் கவிதாசன் சொன்னது போல “முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைப் பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்”. எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் பிரச்சனைகள் வரும் போது அதைக் கண்டு அஞ்சாமல், பதற்றம் கொள்ளாமல் அதனை வெல்வதற்கு வழிகளை, தேவையான முயற்சிகளை மேற்கொள்வதே சிறந்த முடிவாகும்.  சுவாமி விவேகானந்தர் சொன்னது போல “உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப்பெரிய பாவம்” ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நம்மிடையேதான் இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு அமைதி தான் தீர்வு. சில பிரச்சனைகளுக்கு நம்மால் தான் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தீர்வுகான முடியும், சில பிரச்சனைக்கு நீதி மன்றம் தான் முடிவாக இருக்கும். எனவே பிரச்சனையின் தன்மையை பொருத்து நிதானமாகவும், அறிவுப்பூர்வராகவும், துணிவுடனும் தீர்வு காணப்பட வேண்டும். உணர்ச்சிவசத்தால் ஒரு போதும் முடிவு எடுக்கக் கூடாது.

அச்சத்திற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அச்சம் ஒரு வகையான அறியாமையே, சுய விழிப்புணர்வு இன்மையே, மன அமைதியின்மையே, மனித உடலில் ஏற்படும் ஒரு வகையான வேதியியல் மாற்றங்களே. இதனைச்சரியாக புரிந்துகொண்டால் அச்சம், கோபம், கவலை போன்ற பல எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் போய்விடும். மகான்களை மக்கள் அதிகம் தேடிச்செல்வதற்கு முக்கியமான காரணம் அவர்கள் பயம் இல்லாமல் மன அமைதியுடன் இருப்பதால்தான். அங்கு பிரச்சனைக்களுக்கு தீர்வு கிடைக்கும்மென நம்புகின்றனர்.

“தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல்” என்பார்கள். ஆம் நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானல் அச்சத்தை முதலில் வெல்ல வேண்டும். நாம் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விசம் கூட தன்மையற்றதாக விடும். கொரானா, ஓமைக்கிரான் போன்ற பல நோய்களை வெல்வதற்கு முதலில் விழிப்புணர்வு மட்டுமே தேவை. அதாவது பயத்தை தவிர்த்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது. நோய் வந்தால் அதற்கான காரணங்களையும், குணப்படுத்த தேவையான முயற்ச்சிகளையும் துணிச்சலுடன் மேற்கொள்ள வேண்டும். நோயினால் இறப்போரை விட பயத்தினால் இறப்போரே அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நோய் வந்தால் குடும்பத்திலும், சமூகத்தில் ஒதுக்கப்படுவோமோ என்ற பயத்தை தவிர்க்க வேண்டும். பயம் அதிகரிக்கம் போது நோயின் தீவிரம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

சில சமூகங்கள், சில நாடுகள் ஆளுமையுடன் இருப்பதற்கு பொருளாதாரம் மட்டும் காரணம் அல்ல, அவர்கள் அறிவுடனும், சரியான திட்டமிடுதலுடன், துணிவுடன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தான் தொடர்ந்து முன்னேற்றம் அடைகின்றனர். அதனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும். பயந்தால் எந்த ஒரு விசயத்தையும் நன்றாகக் செய்ய முடியாது. உதாரணமாக பயந்தால் வாகனங்கள் ஓட்ட முடியாது, மருத்துவம் பார்க்க முடியாது, நாட்டைப் பாதுக்காக்க முடியாது, தேர்தலில் வேட்பாளராக நிற்கமுடியாது, நாட்டை நிர்வகிக்க முடியாது. எனவே பயம் தேவையற்ற ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடியும்.

“கோழைகள் பலமுறை சாகின்றனர். வீரனோ ஒருமுறைதான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே வாய்ப்பு இந்த வாழ்க்கை. பிறப்பு மற்றும் இறப்பு ஒரு முறையே மனிதனுக்கு. ஆனால் அச்சத்தாலும் நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம். நூறு ஆண்டுகளுக்கு மேல் அச்சத்தோடும், மன அமைதியில்லாமலும் வாழ்ந்து மறைவதை விட, குறைவான ஆண்டுகள் வாழ்ந்தாலும் துணிச்சலுடன் ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழ்ந்து மடிய வேண்டும். இதுவரை நாம்அச்சத்திற்கு அடிமையாக இருந்திருந்தாலும், இனிவரக்கூடிய காலங்களில் அறிவுடனும் துணிச்சலுடனும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும். எனவே அச்சம் நம்மைக் கொல்லும் முன் நாம் அச்சத்தைக் கொன்று அச்சத்திற்கே அச்சத்தை கொடுத்து வாழ்ந்து காட்டவேண்டும்.

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம்
பொன்னேரி – 601 204