கால்பந்து போட்டியும் இனவெறியும் – அ.பாக்கியம்

கால்பந்து போட்டியும் இனவெறியும் – அ.பாக்கியம்




உலக கால்பந்து போட்டி முடிந்து விட்டது. ஆனால் சர்ச்சைகள் மட்டும் முடியவில்லை. இறுதிப்போட்டி பற்றிய சர்ச்சை, இனவெறி, அரசியல், வணிகம் என பல தளங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

1986க்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றது மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. ஆனாலும் இறுதிப் போட்டியை திரும்பி நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டில் இருப்பவர்கள் வலைதளங்களில் 2 லட்சம் கையெழுத்தை செலுத்தினர். பிரான்ஸ் தேசமே அழுவதை நிறுத்துங்கள் என்று அர்ஜென்டினா நாட்டில் ஏழரை லட்சம் கையெழுத்துக்களை வாங்கிக் கொடுத்தார்கள். அர்ஜென்டைனாவின் மூன்றாவது கோல் பற்றியும், கோல்கீப்பர் மார்டினஸ் செயல்கள் பற்றியும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த உலகம் கோப்பை போட்டி பல விதங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பல ஆச்சரியங்கள் நடந்தன. மொராக்கோ அரை இறுதிக்கு முன்னேறி அதிசயம் நிகழ்த்தியது. உலக கால்பந்து குழுவின் தரத்தில் முதலிடத்தில் இருக்கக்கூடிய பிரேசிலை காலிறுதியில் வெளியேற்றியது. ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற வலுவான கால்பந்தாட்ட குழுக்கள் குழு நிலைகளைக் கடக்கத் தவறியது. சவுதி அரேபியா முதல் சுற்றில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஜப்பான் ஜெர்மனியை தோற்கடித்தது.இவை அனைத்துக்கும் மேலாக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய அணிகளின் செயல்திறனை வெளிப்படுத்தியது.

கால்பந்தாட்டத்தின் பாரம்பரிய சக்திகளுக்கு வெளியே கால்பந்தாட்ட அணிகள் வலிமை பெற்று வருகின்றன என்பதற்கான அடையாளம் இந்த உலக கால்பந்தாட்ட போட்டியில் வெளிப்பட்டது.

இந்த ஆச்சரியங்களின் கூடவே கால்பந்தாட்டத்தில் நடைபெறகூடிய இனவெறியும், வணிகமும், அரசியலும் வெளிப்பட்டது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் இனவெறியை கிளப்புவதற்கான கிடைத்த எந்த வாய்ப்பையும் தவற விடாமல் செய்து முடித்தார்கள்.

கத்தார் ஒரு ஜனநாயக நாடு அல்ல. இங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால் மனித உரிமைமீறல்கள் பற்றி பேசுகிற மேற்கத்திய நாடுகள் அங்கு நடைபெறுகிற உழைப்பாளி மக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறார்கள். இது பற்றி தனியாகவே எழுத வேண்டும்.

முதல் முறையாக மத்திய கிழக்கு நாடு கத்தாரில் உலகின் மிகப்பெரிய நிகழ்வு நடைபெறுவதை மேற்கத்திய ஊடகங்கள் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த நாட்டிற்கு போட்டி நடத்த ஒதுக்கியதை எதிர்த்தார்கள். ஊழல் நடந்தது என்று தெரிவித்து ஐரோப்பாவில் சிலரை கைது செய்தார்கள்.

கத்தாரில் உலகக் கோப்பைக்கான கட்டுமானப் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதை இறந்ததை முக்கிய விஷயமாக விவாதித்தன.
ஜெர்மன் விளையாட்டு குழு தன்பாலின உரிமைக்காக அடையாளச் சின்னம் அணிந்து வருவதை தடுத்ததால் வாயை பொத்திக் கொண்டு விளையாடி கத்தார் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்பதை பெரிதாக மேற்கத்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தியது.

அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் மக்களுக்காக ஆதரவு கொடிபிடித்த மொராக்கோ விளையாட்டு குழுவையும், ஈரானில் பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக ஈரான் தேசிய கீதத்தை பாடமாட்டோம் என்று மறுத்த ஈரான் விளையாட்டு குழுவையும் இருட்டடிப்பு செய்தது மேற்கத்திய ஊடகங்கள்.

ஸ்டேடியத்தில் மதுவிலக்கு அமலில் இருந்ததால் குண்டர்கள் நடமாட்டம் இல்லை என்று பல ரசிகர்கள் நினைத்தனர். உலகக் கோப்பையை முழுவதுமாக பார்வையாளர்களால் ரசிக்க முடிந்தது. உலகளாவிய நிகழ்வின் போது இங்கிலாந்து ரசிகர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்து வெளியிட்டது. போக்கிரித்தனத்திற்கும்
மதுவுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் வன்முறைகள் நடைபெறாமல் இருக்க காரணமாக இருக்கலாம்.

மெஸ்ஸி கோப்பையைப் பெறுவதற்கு முன்பு, கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் பின் கலீஃபா, மெஸ்ஸியின் தோள்களில் “பிஷ்ட்” (Bisht) பாரம்பரிய அரபு உடையை போர்த்தினார். இது சிறப்பு நிகழ்வுகளில் அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களால் அணியப்படக்கூடியது. இது கௌரவப்படுத்தக் கூடிய ஒரு செயலாகும்.

உலகக் கோப்பையை நடத்தும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கும், நீண்ட நாள் கனவு நிறைவேறிய மெஸ்சிக்கும் இது ஒரு சிறப்பாக அம்சமாகும். மேற்கத்திய ஊடகங்களுக்கும், பல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இதை ஜீரணிப்பது கடினமாக இருந்தது.

தி மிரர் என்ற பத்திரிக்கை தரம் தாழ்ந்து எழுதியது. “கோப்பையை உயர்த்தும் போது லியோனல் மெஸ்ஸி ஏன் அர்ஜென்டினாவின் சட்டையை கட்டாரி பிஷ்ட்டுடன் மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றும் இது உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தை அழித்துவிட்டது என்றும் எழுதியது.

இதேபோல், தி அத்லெடிக் எஃப்சி என்ற பத்திரிகையில் நிருபர் ஜேம்ஸ் பியர்ஸ் ட்வீட் செய்தார்: “ஒரு டிராபி லிஃப்ட்டிற்காக (உயர்த்துவதற்காக) நீண்ட நேரம் காத்திருந்து, அதை அழிக்க அவர்கள்(அரேபியர்கள்) தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்”. என்ற இனவெறியை கிளப்பியது.

இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே நடந்த போட்டிகளில் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. அப்பொழுது தெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் கூச்சலிடவில்லை.

1970 மெக்சிகோ உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​பீலேவின் மூன்றாவது FIFA கோப்பையை வென்ற சில நிமிடங்களில் ஒரு சோம்ப்ரெரோ (Sombrero) அவரது தலையில் போடப்பட்டது. இதேபோல், ஏதென்ஸ் ஒலிம்பிக் 2004 வெற்றியாளர்கள் ஆலிவ் மாலைகளால் முடிசூட்டப் பட்டனர்.

மேற்கத்திய ஊடகங்கள் கிழக்கத்திய நாடுகளுக்கு எதிராக இனவெறியைக் காட்டுவதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை.

போர்ச்சுகலுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு மொராக்கோ வீரர்கள் தங்கள் தாய்மார்களுடன் கொண்டாடுவதை உலகமே பார்த்தது. இந்த நிகழ்வை டேனிஷ் நாடு TV2 செய்தியின் செய்தி தொகுப்பாளர் சோரன் லிப்பர்ட், குரங்குகள் ஒன்றை ஒன்று கட்டிப்பிடிக்கும் படத்துடன் ஒப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். “கத்தார் மற்றும் மொராக்கோவில் குடும்பக் கூட்டங்களில் இப்படித்தான் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் இணைந்திருக்கிறார்கள்.” என்று மோசமாக கிண்டல் அடித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் சீற்றத்திற்குப் பிறகு, சேனலும் தொகுப்பாளரும் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. தற்செயலாக நடந்தது என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.
ஐரோப்பிய சமூகத்தில் இனவெறி உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

2020 யூரோ கோப்பை இறுதி தோல்விக்குப் பிறகு, இங்கிலாந்தின் கறுப்பின வீரர்கள் (புகாயோ சாகா, சான்சோ மற்றும் ராஷ்ஃபோர்ட் போன்றவை) பெனால்டியை தவறவிட்டதற்காக இனவெறி நாகரீகமற்ற அவதூறுகளை எதிர்கொண்டனர்.

மனித உரிமைகள் பிரச்சினைகளுக்காக கத்தார் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் வியட்நாம், லாவோஸ், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் இனப்படுகொலை செய்து, லத்தீன் அமெரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கலைத்த வரலாறு இருந்தபோதிலும்,இதே மேற்கத்திய ஊடகங்கள் 2026 FIFA உலகக் கோப்பையை அமெரிக்கா நடத்துவதை கேள்வி கேட்கவில்லை.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் உலக அளவில் எதையாவது சாதிக்கும் போதெல்லாம் மேற்குலகில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த நாடுகள் விளையாட்டு எப்படி விரும்புகிறார்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் மேற்கத்திய ஊடகங்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கவலையில்லை. அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை திணிக்க முயலும் இனவெறி அரசியல் மேலோங்கி உள்ளது.

ஒரு பெரிய ஐரோப்பிய கால்பந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற அப்பாவி கனவுகளுடன் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க இளைஞர்கள், மோசடியான கால்பந்து முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டூ கைவிடப்பட்ட பிறகு, ஐரோப்பிய தலைநகரின் தெருக்களில் அவர்களது கனவு சிதைக்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் இருந்து இளம் கால்பந்து வீரர்கள் வருடத்திற்கு 6000 க்கு மேற்பட்டவர்கள் ஐரோப்பாவிற்கு கால்பந்து கிளப்பில் சேர்வதற்கு முகவர்கள் மூலம் செல்கிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள் என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புட்சாலிடர் என்ற தொண்டு நிறுவனம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
பெற்றோர்கள் செலவு செய்து அனுப்புகிறார்கள். அங்கு அவர்கள் முகவர்களால் கடினமான முறையில் நடத்தப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் தெருக்களிலே அலைந்து கொண்டிருக்கும் காட்சிகள் நடக்கிறது. மிகப்பெரிய வணிகமாக இன்று மாற்றம் பெற்று வருகிறது. மனித உரிமைகள் ஐரோப்பாவில் தெருக்களின் அன்றாடம் மீறப்படுவதை இந்த காட்சிகள் வெளிப்படுத்துகிறது.

உலக முதலாளிகள் பொருளாதாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்கு பிரம்மாண்ட போட்டிகளை நடத்துகிறார்கள். அந்த நேரங்களில் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிப்பதற்கும் இது போன்ற நிகழ்வுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலக மக்களால் ரசிக்கப்படும் போற்றப்படும் வீரர்களுடன் உறவு இருப்பதாக காட்டிக் கொண்டு ஆட்சியாளர்கள் அரசியல் லாபத்தை அடைகிறார்கள்.

கத்தாரின் அமீர் காலிஃபா மெஸ்ஸியை சுற்றி சுற்றி வந்ததும், மைதானத்தில் துவண்டு கிடந்த கிலியன் எம்பாப் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஆறுதல் சொன்ன விஷயம், பிரேசில் நாட்டு பிற்போக்கு ஜனாதிபதி ஆக இருந்த போலன்சரோ கால்பந்து சின்னத்துடன் மஞ்சள் கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் லாபத்திற்கும் மக்களின் கால் பந்தாட்ட உணர்வை பயன்படுத்தும் நிலைக்கு சென்று இருக்கின்றனர்.

உலகளாவிய மக்களின் அழகிய விளையாட்டான கால்பந்து விளையாட்டை இனவெறி,தேசிய வெறி , வணிகம், அரசியல் லாபம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து மக்களின் அழகிய விளையாட்டாக நிலை நிறுத்த வேண்டும்

அ.பாக்கியம்