மலர்வளைய ரோஜாக்கள் கவிதை – நா. ஞானபாரதி
இன்றும் என்றும் போல்
மூன்று மலர் வளையங்கள்
முடித்து வைத்தான்
பூக்கடை செந்தில்
புதிதாய்த் தொடங்கிய பூக்கடையில்
போனமாதம் பூமாலை
பற்றாமல் போயிற்று.
மாலை கேட்போரைப் பார்த்து
கல்யாண மாலையா
சாவு மாலையா
என்றெதுவும் கேட்காமல்
மாலை கேட்கும் முகம் பார்த்தே
மாலை கொடுக்கும்
வித்தை கற்றான் செந்தில்.
போன புதனன்று திடீரென்று
போன் செய்து பதினைந்து
மலர் வளையங்கள்
மதியத்திற்குள் வேண்டும் என்றார்கள்.
மலர் வளையங்கள் மளமளவென
விற்கத் தொடங்கின.
அன்றொரு நாள் பன்னிரண்டு
பிறகொரு நாள் பதினைந்து
பிறகொரு நாள் பத்து
நேற்று முன்தினம் நான்கைந்து
இன்றும் என்றும் போல்
மூன்று மலர் வளையங்கள்
முடித்து வைத்தான்
பூக்கடை செந்தில்.
இன்னும் இன்னும் கேட்டால்
இரண்டு மணி நேரத்தில்
மளமள வென பூ முடித்து
மலர்வளைய விற்பனையில்
முன்னேற வழிவகுத்தான்.
மாலை ஆறு மணி ஆயிற்று
மலர் வளையம் விற்கவில்லை
ஒன்று கூட விற்கவில்லை.
ஒருவர் கூடவா இறக்கவில்லை
இல்லை இறந்தவர்க்கு
இருநூறு ரூபாய்க்கு
மலர்வளையம் வாங்க
மனமில்லையா என்றெண்ணி
மலர்வளைய ரோஜாக்களை பிரித்து
மறுநாள் கல்யாண மாலையில்
முடித்து விட்டான் செந்தில்.