நகராத மணித்துளிகள் கவிதை – இரா. கலையரசி

நகராத மணித்துளிகள் கவிதை – இரா. கலையரசி




விட்டுப் பிரியும்
மரங்களை ரசித்தவாறு
தொடர் வண்டியின்
“கூச் கூச்”சத்தத்தில்
நகராத மணித்துளிகள்.

ஓடிப் பிடித்தும்
பறந்து விட்ட
பேருந்தின் முதுகுப்புறத்தில்
“நினைத்தது நடக்கும்”
வாசகத்தில் தோய்ந்தன
நகராத மணித்துளிகள்.

மணி கணக்கில்
ஒற்றைப் பெஞ்சில்
நடை பயில்வோரைப்
பார்த்தபடி அமர
அசைவற்ற கால்களில்
தேங்கி இருந்தன
நகராத மணித்துளிகள்.

எங்கோ இருந்து
விழுந்த “ஒற்றைக்கல்”
குளத்தின் மௌனத்தைக்
கலைத்து விட
வளைகோடுகளில் அதிரும்
வட்டங்களின் பார்வையில்
நகராத மணித்துளிகள்.

எப்பொழுதோ வந்து போகும்
ரெட்டைவால் குருவி
சாளரத்தில் நலம்
விசாரித்து உண்ணும்
கம்பந் தட்டையில்
நகராத மணித்துளிகள்.

கடந்து சென்ற
பேருந்தில் தெரிந்த
பழகிய முகத்தில்
தோன்றி மறைந்த
நினைவுகளின் கோடுகன்
நகராத மணித்துளிகள்.

தீவாளி பொங்கலுக்கு
அம்மா சுடும்
கல் இட்டலியைப்
பிய்த்து எடுக்கும்
முயற்சியில்
நகராத மணித்துளிகள்.

வசை பாடி
விட்டு சென்ற
அப்பாவின் கோபத்தில்
முட்டியுடன் பேசும்
முகவாயில் தங்கியபடி
நகராத மணித்துளிகள்.

நேற்று பேசிய தோழி
மணமேடை செல்லாது
தகன மேடையில்
மாலையும் கழுத்துமாய்
நகராத மணித்துளிகள்.

இரா.கலையரசி.