“முதிர்ந்த அகத்தின் படைப்பூக்கப் பதிவுகள்” – துரை. அறிவழகன்
பெரியவர்களான நாம் அனைவரும் ஒரு காலத்தில் சிறுவர்களாக இருந்தவர்களே. வளர்ந்த பிறகும் தங்கள் குழந்தைமையை காப்பாற்றி வைத்திருக்கும் மூத்த சிறார்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய குழந்தைமையை தக்க வைத்திருக்கும் படைப்பூக்க பொக்கிஷமாக இந்நூலின் ஆசிரியர் நம்முன் உருக்கொண்டு காட்சியளிக்கிறார். இத்தகைய எழுத்தாளரின் முதிர்ந்த சிறகுகளில் இருந்து உதிர்ந்த இறகுகளின் வண்ணத் தெறிப்புகளாக விரிகிறது இவரது சிறார் கதைகள்.
பூக்காத, கனி தராத மரங்களையோ, செடிகளையோ தேடிச் செல்லாத சிறுபறவைகளைப் போன்றவர்கள் சிறார்கள். ஒரு கனிந்த மனதின் படைப்பூக்கத்தில் மலரும் படைப்புகளை நோக்கித்தான் சிறார்களின் வாசிப்பு மனம் பயணிக்கும். அத்தகைய படைப்புகள்தான் சிறார்களுக்குள் உணர்வெழுச்சியைக் கடத்தும்.
‘குட்டி இளவரசன்’ சிறார் நாவலை எழுதிய ஆசிரியர் ‘ அந்த்வர்ன் து செந்த் எக்சுபரி’ அந்த நூலை தனது நெருங்கிய நண்பருக்குச் சமர்ப்பணம் செய்திருப்பார்.
அவ்வாறு சமர்ப்பணம் செய்யும் போது அதற்கான காரணமாக, “எல்லா பெரியவர்களும் ஒருமுறை குழந்தையாக இருந்தவர்கள் தான்; பலரும் அதனை நினைவு கொள்வதில்லை; ஆனால் அந்தக் குழந்தை உலகை காப்பாற்றி வாழும் வயது முதிர்ந்தவர்” என்று தனது நண்பர் குறித்துக் குறிப்பிடுவார் எக்சுபெரி.
உண்மையில் கால ஓட்டத்தின் நெருக்கடி மிகுந்த பல் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு தாங்கள் பெரியவர்களாக வளரும் போது தங்களின் குழந்தைமையின் சிறகுகளை தொலைத்திருப்பார்கள் பெரும்பாலானவர்கள். இத்தகைய துரதிருஷ்டம் எதுவும் நேர்ந்துவிடாத ஒரு முதிர்ந்த கனி மரமாக எழுத்தாளர் “அலெக்சாந்தர் ரஸ்கின்” அவர்களை இத்தொகுப்பு நூலின் கதைகள் வழியாக நாம் பார்க்க முடிகிறது.
“நீங்கள் மனந்திருந்தி குழந்தைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” ; “ஆகையால் இந்தக் குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவனாயிருப்பான்”. இவ்வாறு விவிலியத்தில் ஒரு வசனம் வரும். இதன் சாரத்தை உணர்ந்தால் இவ்வசனத்துக்குள் பொதிந்துள்ள சிறார் அறத்தை நாம் உணர முடியும். இத்தகைய அறம் வாய்க்கப் பெற்ற முதிர்ந்த மரத்தில்தான் சிறார் உலகுக்கான கதைகள் பூக்களும், கனிக்ளுமாக பூத்தும், காய்த்தும் குலுங்க முடியும். இத்தகைய கதை மரம்தான் “அப்பா சிறுவனாக இருந்த போது…” எனும் ‘ரஸ்கின்’ அவர்களின் புகழ்பெற்ற தொகுப்பு நூல்.
மொழி ஆற்றலும், உணர்வாற்றலும் நுணுக்கமாக வெளிப்பட வேண்டிய வடிவம் சிறார் இலக்கியம். அலெக்சாந்தர் ரஸ்கின் அவர்களின் கதைகளை மொழிபெயர்ப்பின் வழி வாசித்து அந்த எழுத்துக்களின் வேரையும், கிளையையும் உள்வாங்கிக் கொண்டு மறுவரைவு செய்துள்ளார் ‘ஈஸ்வர சந்தான மூர்த்தி’ அவர்கள். தனித்த மொழியாக்கம், நீரோட்டமான எழுத்து நடை, அனுபவ முதிர்ச்சியின் பரவசம் என எண்ணற்ற சிறார் கதைகளுக்கான அடிப்படை இலக்கணங்களை இவரின் மறுவரைவாக்கத்தில் காண முடிகிறது.
சிறார் படைப்பாளியின் படைப்புகளுக்குள் படர்ந்து கிடக்கும் புறவய நிகழ்வுகளின் அகவயப்பட்ட உணர்வு இழையோட்டத்தின் உன்னதத்தை இத்தொகுப்பில் உள்ள கதைகளின் வாசிப்பு நமக்கு உணர்த்துகிறது. இயற்கையை நெருங்கிப் பேசுவதும், இயற்கைக்குள் தங்களைக் கரைத்துக் கொண்டவர்களுமான குழந்தைகளின் மொழியை புரிந்து கொள்வதும், அக்குழந்தைகள் நேசிப்பவற்றை சொல்ல முயல்வதுமே சிறார் உலகுக்கான திறவுகோல். இத்தகைய சிறார் உலகிற்கான திறவுகோலாக அமைந்துள்ளது இத்தொகுப்பிலுள்ள கதைகள்.
‘ஜென்’ தியான நிலை கொண்டவர்கள் குழந்தைகள்; நிகழ் கணமாக மாறிவிடும் அற்புதம் அவர்களுடையது.
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பூக்கள் பூக்கின்றன; அனைத்திலுமான பிரகாசமாய் ஒளிர்கிறது குழந்தைகளின் இதயம். பனி, நிலவு, பூக்கள் ஆகியவைகள் குழந்தைகளின் மொழியில் மலைகள், ஆறுகள், புற்கள், மரங்களின் சித்திரமாக காட்சி பெறுகின்றன. இத்தகைய உளவியல் வாய்க்கப் பெற்ற சிறார்களின் அக தரிசன உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டும் கதைப் பரப்பினைக் கொண்ட நூல் இது. தர்க்க சிந்தனை, அறிவகங்காரம், நீதி போதனை ஆகிய முட்கள் இல்லாத கருத்தியல் புனைவுகள் இந்த நூலிலுள்ள கதைகள்.
சிறார் கதைகளின் அசல் தன்மையை தனக்குள் நீர்ப்பொதியாகச் சுமந்து, ‘ஈஸ்வர சந்தான மூர்த்தி’ அவர்களின் மறுவரைவு மொழியில் கலை மேன்மையுடன் மலர்ந்துள்ளது ” அப்பா சிறுவனாக இருந்த போது …” எனும் இத்தொகுப்பு நூல்.
சிறு சிறு ஒளிகளைக் கோர்த்து ‘இருபத்தியொரு’ கதைகளின் படலாக விரிந்து நிற்கிறது இந்நூல். தொகுப்பிலுள்ள கதைகளின் வாசிப்பு நம்மை நம் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. சிறார்கள் இந்நூலை வாசிப்பதன் வழியாக அவர்கள் தங்களின் பருவத்தைப் புரிந்துகொள்வதுடன் எளிதான அறிதலுடன் கடந்து செல்லவும் முடியும்.
குழந்தைகளின் அக மலர்ச்சியைப் புறக்கணித்த அறிவூட்டல் எவ்வித வளமையையும் குழந்தைகளுக்குச் சேர்க்காது என்பதை உணர்ந்து எழுதப்பட்ட கதைகளைத் தொகுப்பில் காண முடிகிறது. குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் படைக்கிற அனைத்துப் படைப்புகளுமே “நாங்கள் எங்களுக்குள் வாழ்கின்ற குழந்தைமையை இழந்துவிடவில்லை” என்பதைச் சொல்லும் வெளிப்பாடுகள்தான். இதனால்தான் குழந்தைமையைத் தீண்டிய படைப்புகள் காலத்தால் உச்சம் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகைய மனமுதிர்வு பெற்ற ஆளுமை பெற்றவராக இத்தொகுப்பின் கதைகள் மூலம் காட்சி பெறுகிறார் “அலெக்சாந்தர் ரஸ்கின்”.
யதார்த்தத்திற்கும், கனவு நிலைக்கும் இடைப்பட்ட கதவினைத் திறக்கும் திறவுகோலாகச் செயல்படுகிறது ரஸ்கின் அவர்களின் கதைகள். அதீத புனைவு எதுவும் இல்லாமல் முற்றிலும் யதார்த்த தளத்தில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு “அப்பா சிறுவனாக இருந்தபோது…” எனும் இக்கதை நூல். கதைகளால் நிரம்பிய ஒரு பன்முக ஆளுமையாக முதிர்ந்து நிற்கும் ஒரு எழுத்துக் கலைஞரின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது இந்த நூல்.
மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவும் போது ஏற்படும் வானவில்லின் நிறங்கள் கொண்ட கதைகள் ரஸ்கின் அவர்களின் கதைகள். “சிறார்
கதைகள் சிறார்களுக்கு மட்டுமேயானதல்ல; பெரியவர்களும் வாசிக்கலாம்; அவ்வாசிப்பின் வழி தங்கள் குழந்தைமையை மீட்டெடுக்கலாம்” எனும் உண்மையை உணர்த்தும் வகையில் மலர்ந்துள்ளது இச்சிறார் கதைத் தொகுப்பு.
– துரை. அறிவழகன்
நூல் : “அப்பா சிறுவனாக இருந்தபோது…”
வகை : கதைகள்
மூலம் : “அலெக்சாந்தர் ரஸ்கின்”
மொழிபெயர்ப்பு : “நா. முகம்மது செரீபு” / மறுவரைவு : “ஈஸ்வர சந்தான மூர்த்தி”
வெளியீடு : “புக்ஸ் ஃபார் சில்ரன்” (பாரதி புத்தகாலயம்)
விலை : ரூ.110.00 / பக்கங்கள் 128
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் தேவை தொடர்புக்கு : 044-24332424