Sattaikari Book By Karan Karki Bookreview By Karuppu Anbarasan நூல் மதிப்புரை: கரன் கார்க்கியின் சட்டைக்காரி - கருப்பு அன்பரசன்

நூல் மதிப்புரை: கரன் கார்க்கியின் சட்டைக்காரி – கருப்பு அன்பரசன்

சட்டைக்காரி என்ன சொல்வாள்.? காதலிக்கச் சொல்வாள் போராடச் சொல்வாள் நேர்மையான அன்பைச் சொல்வாள்.

புலர் காலைப் பொழுதொன்றில் சென்னையின் வங்கக் கடற்கரையோரம் நின்று பாருங்கள்.. அமைதியும் இரைச்சலுமாக, பெரிய அலையின் பின்னால் சின்ன அலையும்; சின்ன அலையின் பின்னால் பெரியதொரு அலையும், ஒன்றைத் துரத்தி ஒன்று வந்து, ஒன்றின் மீது மற்றொன்று ஏறி கட்டித்தழுவி காதல் புரிந்து சண்டையிட்டு ஊடலில் தனித்தனியாக பிரிந்து வந்து நம் கால்களில் முத்தமிட்டு, பாதத்திற்கு கீழ் கிச்சுகிச்சு மூட்டியும் , மணலை உருவி வாரியணைத்து இழுத்துச் செல்லும்.. நிலை தப்பினால் நம்மையும் சேர்த்தே.

கடல் சூடியிருக்கும் மொத்த இருட்டையும் கீரி, பொன் நிறத்தையும் செந்நிறத்தையும் வாரி அடிவானம் எங்கும் பூசிக்கொண்டே தன் உச்சந்தலையை மட்டும் கடலைப் பிளந்து மேலெழும்பி வரும் கதிரவனை, அவன் செய்து வரும் ஜாலத்தால் தகதகவென மின்னும் கடலையும்.., கடல் மேற்பரப்பின் வெகுதூரத்தில் அலையின் வாட்டத்தில் ஏறியும் இறங்கியும், நடைபயிலும் குழந்தையைப் போன்று ஆடி அசைந்து, கடலின் உவர்ப்பும் தோற்று ஓடும் அளவிற்கு சில்லென்று வீசும் குளிர் காற்றிலும் உரமேறிய.. நரம்புகள் முறுக்கி கிடக்கும் உடம்பெங்கிலும் உப்பைச் சுமந்து நிற்கும் வியர்வை துளியின் வாசம் மணக்க, குரலெடுத்து பேசி உழைப்பின் மொத்தமாக இருக்கும் மீனவ மக்களையும்..

துள்ளி அலையும் மீன்களை, நீரில் பறந்து திரியும் விதவிதமான நண்டுகளை இன்றைய மகிழ்ச்சியான வாழ்க்கையினை அள்ளி வருவார்கள் என அவர்களின் வருகைக்காக கரையில் அலுமினியக் கூடைகளோடு கவிச்சி மணம் கடல் காற்றெல்லாம் பூசிக் கொண்டு காத்து நிற்கும் பெண்களும் குழந்தைகளுமாக.. இயற்கையின், உழைப்பின் பேரழகு எல்லாம் நம் மனதை கிளர்ச்சியூட்டும்.. வாழ்தலின் அவசியத்தை சொல்லி ஒவ்வொரு நிமிடத்தையும் நமதாக்கும்.

மெய்யான நாட்டு நடப்பை உற்று நோக்கினால்.. கபடமில்லாத கண்கள் கொண்டு பார்த்தோமென்றால் பெரும் துயரம் மிகுந்த நம்பிக்கை இல்லா நிகழ்வுகளாகவே அனுதினமும் நடந்து வருகின்றன. இயற்கையின் அத்தனை வளங்களும்..அத்தனை ரகசியங்களும்.. வளம் மிகுந்து நீர் ஆதாரங்களும்.. அதில் வந்தமர்ந்து பேரன்பின் அழகினை குரலெடுத்து சொல்லிச் செல்லும் தூரதேசத்தின் வண்ணவண்ணப் பறவைகளை..

வனப்பின் ரகசியத்தை தன்னை தழுவிச் செல்லும் மேகக் கூட்டத்தின் காதுகளுக்கு மட்டும் சொல்லிக் காதல் மொழி பேசும் மலை முகடுகளை.. பச்சைப்பட்டுத்தி பாங்காய் காட்சிதரும் காட்டு மரங்கள் பலதை.. அச்சமின்றி சுதந்திரமாய் சுற்றித்திரியும் காட்டு விலங்குகளை.. இவைகளோடு நேசம் மிகுந்த வாழ்வினை இயற்கையாகவே வாழ்ந்தும் அவைகளின் அரணாய் விளங்கி நிற்கும் மலை மக்களை, விரட்டியும் விஞ்ஞானத்தின் பெயரால் வளங்கள் அனைத்தையும் சூறையாடி வருவதும் நிதம் வந்து கண்களை இருட்டாக்கி சென்று கொண்டிருக்கிறது.

சென்னைக்கு அருகாமையில் இதோ பழவேற்காடு நம் கண்ணெதிரே சாட்சியாகிக்கொண்டு தற்போது.. கடல் நீரையும் தனதாக்கிக் கொள்ளும் நவீன வியாபாரத்தின் தந்திரம் லாப வெறியாக மாறி கடல் கிராமத்தையும் பெருங்காடுகளையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அதற்கு உறுதுணையாக.. இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, நவீன இந்தியா, டிஜிட்டல் இந்தியா, அதனைத் தொடர்ந்து அழகிய இந்தியாவின் ஒரு பகுதியாக 2047 ஆண்டிற்குள் வரலாற்று சிறப்புமிக்க மெரினா கடற்கரை..

அதை வடிவாகக் காட்டிடும் வங்கக்கடலையும் சென்னை நகர மக்களின் பார்வையிலிருந்து மறைத்திட வானுயர்ந்து தடுப்பு ஒன்றினை நீளும் கரையெங்கும் எழுப்பப்படலாம்.. அறிவியல் துணைக்கொண்டு பொறியியல் தொழில் நுட்பத்தால் உலகத்தின் செல்வச் சீமான்கள் சீமாட்டிகள் என அனைவரும் அதிகாரத்தின் துணைகொண்டு கடல் பரப்பையும், எல்லை அளவிட்டு அடையாள நங்கூரம் நிறுத்தி, தங்களின் உல்லாச சொர்க்க மாளிகைகள் பலதை எழுப்பலாம்.. தீங்கு ஏதும் சென்னை வாழ் மக்களால் ஏற்பட்டு விடாமல் இருக்க நிரந்தரச் சிறப்பு ராணுவமும் இவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கலாம்.. விளை நிலங்களிலும் மேய்ச்சல் நிலங்களிலும் மலைகளிலும் நிலங்கள் தாங்கி நிற்கும் நீர் ஆதாரங்களிலும் இயற்கை வளங்கள் அனைத்தையும் மொத்தமாய் சூறையாடியவர்கள் நாளை கடல் வளங்களையும் தனதாக்கிக் கொள்வார்களோ என்கிற நியாயமான பேரச்சத்தை எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் “சட்டைக்காரி” வாசித்து முடித்தவுடன் என் அடி மனசுக்குள் அழுகையோடு கொட்டிச்சென்றாள்.

சக்தி மிகுந்த நீராதாரம் சூழ்ந்த.. வனப்பின் வடிவாகத் திகழ்ந்த.. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள்.. குன்றுகள் மிகுந்த அழகானதொரு நிலப்பரப்பாக.. அதன் அத்தனை ரகசியங்கள் அறிந்த பேரன்பு கொண்ட மனிதர்களாக பகைகொண்ட இருதயம் இல்லாதவர்களாக.. இருக்கும் வளங்கள் அனைத்தும் நாளை நம் சந்ததியினரும் பார்ப்பார்கள் புழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தாங்கியவர்களாக.. ரசனை மிகுந்த எதிர்பார்ப்பற்ற வாழ்வினை வாழ்ந்து மகிழ்ந்தார்கள் சென்னையின் பூர்வகுடி மக்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து சென்னை நகருக்குள். சென்னையின் பூர்வகுடிகளாக சென்னையை வடிவாக்கியவர்களாக.. சென்னை நிலப்பரப்பு அனைத்திற்கும் உரிமையானவர்களாக இருந்தவர்கள் இன்றும் இருப்பவர்கள்.

சட்டைக்காரி சொல்லியிருக்கும்.. சட்டைக்காரி பேசியிருக்கும் எதுவுமே இல்லாத சென்னையாக.. இயற்கை வாரிக் கொடுத்த அத்தனை வளங்களையும் நவீனத்தின் பெயரால் நாகரிகத்தின் பெயரால் அரசாங்கத்தின் துணைகொண்டு பல சக்திவாய்ந்த பெரும் முதலாளிகளால் முழுவதுமாக சூறையாடப்பட்டு; நீர் ஆதாரத்தின்..

பசுமை வெளிகளின் மீது அதன் உயிர் அணுக்களின் மீது சிமெண்ட்டையும் கருங்கல் ஜல்லிகளையும் கொட்டி இரும்பு கம்பிகளை நட்டு வானுயர்ந்த கட்டிடங்களை தாங்கி நிற்கும் மலட்டு நிலமாக இப்போது. மனிதர்களுக்கும் இயந்திரத்திற்குமான வித்தியாசம் அறியாமல் தன்னை பழக்கப் படுத்திக்கொண்டு, சதைப் பிண்டங்களாக காலத்தை அவர்கள் நகர்த்திக்கொண்டும் காலம் அவர்களை இழுத்துக் கொண்டும்.. கண்களிலும் இருதயத்திலும் சக உயிர்கள் மனிதர்கள் இடம் கொடுத்தும் பெற்றும் அனுபவிக்க வேண்டிய பேரன்பினை தொலைத்தவர்களாக.. பிரியத்தை திருடக் கொடுத்தவர்களாக
சென்னையும் அதன் மக்களும் தற்போது.

நாவலின் பிரதான கதாபாத்திரங்களாக கருணா,ஜெயா, மூசா வித்தை தெரிந்த கால்பந்தாட்ட வீரர்களாக நாவலுக்குள் முழுவதுமாக.. இன்றைய வடசென்னையின் அன்றைய சென்னையின் முக்கிய வீதிகள் எங்கும் நடந்தும் ஓடியும் வருகிறார்கள் தங்களின் வலுவான கறுத்தப் பாதங்களால். இவர்கள் இளைப்பாறிய அல்லிமலர் குளங்களும் தாமரை பூத்திருந்த தடாகங்களும், குளித்து.. குடித்த நீரோடைகளும்..

கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற போதும், தோல்வியுற்ற போதும் சமநிலையில் இருந்து வாழ்வினை மகிழ்வுடன் சப்பியும், சாராயமும், ஜிஞ்சருமாக குடித்து, இளம் கன்று குட்டியின் தொடை கறி வறுவலோடு கொண்டாடிய அடர் மரங்கள் சூழ்ந்த காடுகளும்.. காதலும் காமமும் கொண்ட புலிகளின் உறுமலும் சிங்கங்களின் கர்ஜனையும் குயில்களின் கூவல்களும் பலவகை பறவைகளின் சத்தங்களும் இன்னும் பல காட்டு விலங்குகளின் இரைச்சலும்.. இரவுப்பனியை பூமியில் சிந்தாமல் மொத்தமாய் முத்துமுத்தான முத்தங்களாக பெற்று அப்படியே அதை விடியற்காலை சூரியனுக்கு அனுப்பி வைக்கும் அடர்ந்த புல்வெளிக் கூட்டங்களின் சமவெளியும்..

நகர மக்கள்.. உழைப்பாளிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நாகரிகத்தின் பெயரால் பெருநகர வளர்ச்சி என்ற முகமூடியை அணிந்து அரசின் ஐந்தாண்டு திட்டங்கள், நவநாகரீக சென்னை, திட்டமிட்ட நகர் என்கிற வஞ்சகமான முழக்கங்களால், இயற்கையின் அதிசயங்களை அற்புதங்களை வளங்களை காத்து நிற்க வேண்டிய ஒன்றிய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு பெரு முதலாளிகளின் ஏவல் ஆட்களாக மாறி சென்னையின் நினைவுகள் அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கி நீர் ஆதாரங்களையும் சமவெளிகளையும் மண் தின்னிகளாக உருகொண்டு வானுயர்ந்த சமாதிகளை கட்டிடங்களாக இப்பொழுது நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்கள்.. அன்றைய சென்னையும் இருக்கிற சென்னையும் ஒப்பிட்டு நாளையே சென்னை எப்படி இருக்கும்.? யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்று யோசிக்கும் பொழுது வருங்கால சென்னை உழைப்பாளி மக்களுக்கானது என்கிற நினைப்பே வர மறுக்கிறது கரண் கார்க்கி அவரின் சட்டைக் காரியை வாசிக்கும் பொழுது.

உலகெங்கிலுமிருந்து பல வண்ண வண்ண பறவைகள் வந்து சென்ற வாழ்ந்து சென்ற பலநூறு மீன் வகைகள் துள்ளி விளையாடிய ஆளுயர புல்வெளிகளை கொண்ட 4000 ஏக்கர் அளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இப்பொழுது 400 ஏக்கராக சுருங்கிப் போய் கிடக்கும் பெரும் சோகத்திற்கு மண் தின்னி அரசியல்வாதிகளும் ஆட்சி அதிகாரமும் தவிர்த்து வேறு எவர் காரணமாக இருக்க முடியும். அந்தச் சதுப்புநிலக் காட்டில் ஒரு நாள் முழுதும் தங்கி மகிழ்வோடு தங்களின் இருப்பை கொண்டாடிய ஜெயா, மூசா, பிலிப் மாமா, மைக்கேல் இவர்களோடு நம்மையும் விரல் பிடித்து அழைத்து போய் குதூகலிக்க செய்வார்.. நாவலுக்குள் கிண்டி ராஜாஜி பவன் இடப்புறத்தில் நுழைந்ததும் எழுத்தாளரின் விவரணையானது, மணக்கும் சாராயத்தை ஒரு கிளாஸ் கொடுத்து வாசகனையும் சதுப்புநிலம் புல்வெளி காட்டில் சுகமாக படுக்க வைப்பது போன்றல்லவா இருக்கிறது. செம.

இந்தியாவில் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு கருப்பின மக்களும் வெள்ளையர்களும் காதலால் இணைந்த ஒரு புதிய சமூகம் ஆங்கில இந்தியர்களாக உருவாகிறது.. அப்படி உருவான ஒரு புதிய சமூகத்திற்கு பொதுவெளியில் வெள்ளையர்களால் உயர்ந்ததொரு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.. ஏழை எளிய இந்திய மக்களை அடக்கியாளும் அந்தஸ்தாக அந்த அதிகாரம் உருப்பெறுகிறது. அதிகாரம் பெற்ற அந்தஸ்தில் வாழ்ந்த ஆங்கிலேயே இந்தியர்கள் என்கிற ஒரு சமூகம் வெள்ளைக்காரர்கள் வெளியேறிய பிறகு வெளிநாட்டில் வாழ முடியாமலும் இந்தியாவிற்குள் அதே அந்தஸ்தோடு இருக்க முடியாமலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, இன்றைக்கு அப்படியான ஒரு சமூகம் இல்லாமல் போனதின் வரலாற்றினை ஒரு சமூகம் அழிந்து போன நிஜத்தை நாவலுக்குள் ஐசாக் என்கிற ஆங்கிலேயே இந்திய சமூகத்தின் அடையாளமாக உரையாடலை நிகழ்த்தச் செய்து நமக்குள் சில நியாயமான கேள்விகளை எழுப்பி இருப்பார். நிற வேறுபாட்டின் காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் இந்தியாவில் இருக்கக்கூடிய சனாதனக் கொடுமைகளின் காரணமாக இங்கேயும் வாழ முடியாமல் எதிர்கால வாழ்வினை கேள்விக்குறியோடு வாழ்ந்து மறைந்த ஒரு சமூகத்தின் மனசாட்சியாக நாவலுக்குள் விவாதத்திற்கு உள்ளாக்கி இருப்பார் ஆசிரியர் கரன் கார்க்கி.

கை ரிக்ஷா இழுக்கும் கூலித்தொழிலாளி இயேசுவுக்கும்.. கணவனை இழந்து இளமை வாழ்வினை தொலைத்த லிண்டாவுக்குமான காதல்.. எதிர்கொள்ளும் சவால்கள்.. பெரும் எதிர்ப்பிற்கு பிறகு இருவரும் வாழும் புரிதல் கொண்ட நேர்மை மிகுந்த வாழ்வினை வாழ்வதும்.. இந்தக் காதலர்களுக்காக முழுமையாக தன்னுடைய வயது வாழ்க்கை அத்தனையும் ஒப்புக்கொடுத்து அவர்களோடு கடைசிவரை இருந்து வரும் அய்யாக்கண்ணு மெச்சத் தகுந்த மனிதன் ஆவார். இரு உதடு குவித்து ராகத்தோடு இசைக்கும் விசில் சத்தம் இரண்டு நண்பர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலின் சாராம்சத்தை அதில் இருக்கும் கேலி கிண்டலை அது சொல்லும் ரகசிய சமிக்ஞையை இயேசுவும், அய்யாக்கண்ணுவையும் தவிர்த்து ரிக்ஷாவில் சவாரி போகும் லிண்டாவும் உணர்ந்து காதலில் தன் மனதை ஒப்புவிக்கும் வரிகளை எழுத்தாளர் காட்சிப்படுத்தும் பொழுது நம்மையும் அந்த விசிலுக்குள் இழுத்துக் கொள்வார்.
அடி தூள் கார்க்கி.

ஸ்லெட்டா-மூசா இருவருக்குமான காதலை அறிந்திருந்த ஸ்லெட்டாவின் அப்பா ஐசக் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய உயிர் பிரியும் தருணத்தில் மூஸாவின் அம்மாவை வரவழைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் என்று நான் இங்கே எழுதும்போது எல்லா சினிமாவிலும் பார்த்துதானே இது என்று எண்ணத் தோன்றும்.. ஆனால் நீங்கள் நாவலை வாசிக்கும்போது காதலுக்குள் தன்னை கொடுத்திட்ட இருவர், அதில் படும் பெரும் துயரங்கள், பாடுகள், சின்ன சின்ன ஆசைகள், மனங்களுக்குள் நிகழ்ந்திடும் போராட்டங்கள், உடலுக்குள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள், இருவரும் இருவேறு சமூகமாக இருந்திடும் பொழுது குடும்பத்தில் ஏற்படும் சூழல்கள், அதனால் குடும்ப உறுப்பினர்கள் இடையே நிகழ்ந்திடும் உரையாடல்கள், பெற்றவர்கள் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசம், அக்கறை இவைகள் எல்லாவற்றையும் மீறி காதலர்கள் அனைவரின் சம்மதத்தோடு இணைவது, இதில் நண்பர்களின் உதவி அம்மாவின் ஆதரவு.. இவைகளை காட்சிப்படுத்தி எழுதிய ஆசிரியரின் கைகளுக்கு அன்பு முத்தங்கள்.

நாவலில் இரண்டு ஜோடிகளின் கொண்டாட்ட மனங்களின் விவரணைகள் நம்மை மீண்டும் காதலிக்கச் சொல்லும்.. காதலியின் கரம் கோர்த்து கடற்கரை மணலில் மெல்ல நடை போடச் சொல்லும்.. காதல் உணர்வுகளை.. மனித மனங்களுக்குள் நிகழ்த்தும் மாற்றங்களை.. சந்திக்காத பொழுதுகளில் விழிகள் தாங்கி நிற்கும் வலிகளை.. இதயம் கனத்து நிற்கும் சுமைகளை மென்மையான வலிமிகுந்த சுகம் தாங்கிய வார்த்தைகளால் புனைவுக்குள் காதலை வடிவாக்கி இருக்கிறார் புதினத்தின் ஆசிரியர் கரன் கார்க்கி. சட்டைக்காரிகள் இருவருமே பாசக்காரிகளாக, பேரன்பு கொண்டவர்களாக, நினைத்ததை செய்து முடிக்கும், சாதிக்கும் மன உறுதி கொண்டவர்களாக, நேர் வரும் சவால்களை சந்திக்க எதிர்க்கத் துணிந்து நிற்கும் நெஞ்சுரம் மிக்கவர்களாக இருவரையும் நாவலுக்குள் நடை போட வைத்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.

கர்ணன், மூசா, ஜெயராம், நிகோலஸ், பயிற்சியாளர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட கால்பந்தாட்ட வீரர்கள் மைதானத்தில் இவர்கள் பந்துகளை துரத்தி ஓடும் போதும் எதிரிகளிடமிருந்து பந்தினை இலாவகமாக உதைத்து ஏமாற்றி இழுத்துச் செல்லும் பொழுதும் நாமும் அந்த பந்தாக மாறி இருப்போம்.. அவர்களின் கால்களாக மாறி இருப்போம்.. அங்கே நிமிர்ந்து இருக்கும் கோல் போஸ்ட் ஆக மாறி இருப்போம்.. ஆரவாரம் செய்து ஆர்ப்பரிக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவராக மாறி இருப்போம், அப்படி மாற்றி காட்டுவார் சட்டை காரியை வாசிக்கும் பொழுதினில் நாவலாசிரியர். கால்பந்தாட்ட மைதானத்தில் வெற்றி தோல்விகளை மீறி அன்பு கொண்ட நண்பர்களாக, பாசம் கொண்டவர்களாக மனிதர்களாக எப்படி அவர்களை நம் சமூகம் கொண்டிருந்திக்கிறது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் நாவலுக்குள்.

ஒவ்வொரு படைப்பாளிக்கும்.. அவர் பேசிடும் வார்த்தைக்கும்.. எழுதிடும் எழுத்திற்கும் அரசியல் பின்புலம் உண்டு.. அரசியலே வேண்டாம் என்பவர்களுக்கும், அரசியலே மோசம் என்பவர்களுக்கும், அரசியலிலிருந்தும்பொது வாழ்விலிருந்தும் மக்களை ஒதுக்கி வைப்பதுவென்பதுவே அவர்களின் நோக்க அரசியலாகும்.. சட்டைக் காரி நாவலுக்குள் தனக்குள் இருக்கும் உள்ளார்ந்த அரசியலை மிகவும் தெளிவாக பேசியிருக்கிறார். உழைக்கும் எளிய மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியல்தான் என்னுடையது என்று, பார்ப்பனியத்திற்கு எதிரான அரசியல்தான் என்னுடையது என்று, சனாதானத்திற்கு எதிரான எழுத்துக்கள்தான் என்னுடையது என்று படைத்திட்ட கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக நேர்த்தியாக எளிமையாக அரசியலை தெளிவாகப் பேசி இருக்கிறார் நாவலாசிரியர்.

மதங்களை மீறிய மனிதநேயமும் காதலும் பாசமும் அன்னியோன்யமும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது என்பதனை குர்ஷித் அப்பா இறந்த போதும்.. குர்ஷித்தை மணமுடித்த கணவன் எதிர்பாராத விபத்தில் இறந்த போதும் மிகவும் காத்திரமாக நாவலுக்குள் பதிவு செய்திருக்கிறார்.

ஒரே அத்தியாயத்திற்குள் சிறுமி குர்ஷித்தின் அப்பாவை அறிமுகப்படுத்தி அவளுக்கான காதலனை வேறு ஒரு சமூகத்திலிருந்து அழைத்து வந்து அவளின் அப்பாவை மரணிக்கச் செய்து, அவளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து அவளுக்கு ஒரு மகனையும் பிறக்க வைத்து கணவனையும் விபத்தொன்றில் இழக்கச் செய்து கணவனையும் அப்பாவையும் இழந்த அந்த இளம்பெண், பெரும் சமூகத்தில் அவள் எதிர்கொள்ளும் துயரம் மிகுந்த பிரச்சனைகளை வலிமிகுந்த வார்த்தைகளால் பேசி இருக்கிறார். உழைக்கும் எளிய மக்களின் பேரன்பையும் மனிதநேயத்தையும் சக மனிதர்கள் மேல் அவர்களின் எதிர்கால வாழ்வின் மேல் அக்கறை மானுட அழகு கொண்ட மனிதர்களாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிலப்பரப்பெங்கும் மழை கொடுக்கும் கருத்த மேகத்தைப் போன்றே மானுடத்தின் வெள்ளமொன்று அவ்வத்தியாயம் முழுக்க ஓடிக் கொண்டே இருக்கும்.

தான் பொதுவெளியில் கொண்டு சேர்க்க நினைக்கும் கருத்தினை புனைவாக மாற்றி கொடுக்க முற்படும் பொழுது அந்த புனைவுக்குள் பிரதான கருத்திருக்கு வலு சேர்ப்பதற்காக எதிர்கருத்து கொண்ட கதாபாத்திரத்தை காத்திரமாக உருவகப்படுத்துவது.. இப்படியான கதாபாத்திரங்களுக்கு ஆதரவாகவும் நேர் எதிர்மறையாகவும் துணைக் கதாபாத்திரங்களை அமைத்து நாவலுக்குள் பேசவைத்து சொல்லவந்தத கருத்தினை விரிவாக சொல்லி முடிப்பதென்பது நாவலாசிரியர்க்கு ஒரு வகையான உத்தி.

ஆனால் சட்டைக்காரி நாவலுக்குள் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் பிரதான கதாபாத்திரங்களும் அதற்கு சற்றும் குறையாமல் படைத்திருக்கும் துணைக் கதாபாத்திரங்களும் பேரன்பாளர்களாக , மனித இருப்பின் மீது நேசம் கொண்டவர்களாக, உயிர்கள் மீது உச்சம் கொண்ட காதலர்களாக.. இயற்கையை கொண்டாடுபவர்களாக, மனிதர்கள் துயர் கொள்ளும் பொழுதினில் அவர்களுக்கு துணையாக இருந்து மீட்டெடுக்கும் மனிதநேயம் மிகுந்தவர்களாக மனிதத்தின் அடையாளமாகவே படைத்திருக்கிறார்.

அனைவருமே கால்பந்தாட்ட வீரர்களாக, கை ரிக்ஷா இழுப்பவர்களாக ,கூலி வேலை செய்பவர்களாக, கமர்கட் விற்பவராக, மில் தொழிலாளியாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஆசிரியராக, பட்டறையில் உழைப்பவராக, உடல் உழைக்கும் எளியவர்களாக எல்லாவற்றிலும், காதலிலும் நேர்மை மிகுந்தவர்களாக நிஜம் பேசுபவர்களாக, உரிமைக்காக உரத்து குரல் எழுப்புபவர்களாக போராட்டக் குணம் படைத்தவர்களாக படைத்திருக்கிறார். நாவல் முழுவதிலும் மனித சமுத்திரத்தில் நிறைந்து கிடக்கும் பேரன்பும் காதலும் பிரியமும் மனிதநேயமும் மீன் கவிச்சையோடும் மாட்டின் வறுத்த தொடைகறியின் காரத்தோடும் மணம் வீசும் சாராயத்தோடும் கூரையில் படர்ந்து மலர்ந்து கிடக்கும் மத்தியமல்லியின் வாசத்தோடும் பேசப்பட்டிருக்கிறது.

சென்னை நகர உழைப்பாளி ஏழை எளிய மக்களின் வாழ்வியலை அவர்களின் வார்த்தைகளில் அவர்களின் மொழியில் அப்படியே நாவல் முழுக்க பேசி தொய்வின்றி எழுதியும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார் தான் சொல்ல வந்த செய்தியினை கதாபாத்திரங்களின் வழியாக நாவல் முழுவதிலும். “உலகில் இயற்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எத்தனையோ நாடகங்களை நடத்துகிறது. விதவிதமாக பாசாங்காய், பொய்யாய், உண்மையாய், உயிராய், மோதலாய், காதலாய், காமமாய், ஆயிரமாயிரம் பாவனைகள் ஆயிரமாயிரம் நாடகங்கள் அழகிய அங்கங்களில், பேச்சில், நடையில், உடையில், பாவனையில், அறிவில், அவமானத்தில், ஆத்திரத்தில், ஏமாற்றத்தில், உடல் மயக்கத்தில், உள்ளக்கிளர்ச்சியில், உடல்பதட்டத்தில், பணத்தில் இன்னும் எத்தனையோ எத்தனையோ ஆணையும் பெண்ணையும் ஒன்றிணைக்கிறது. இதெல்லாம் எதற்கு.. இரண்டு ஒன்றாகி ஒன்று மூன்றாக முப்பதாக பல்கிப் பெருக இயற்கை நடத்தும் கூத்து.

இதில் வெள்ளை, கருப்பு, பழுப்பு, மஞ்சள், நெட்டை,குட்டை, செல்வம், வறுமை, மேல், கீழ் என்று அது பார்ப்பதில்லை உயிர்கள் தழைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன. ஆனால் மனிதன் நிதானமாக சிலவேளைகளில் ஒரு கவிதையைப் போல அதை மகிமைப்படுத்த நினைக்கிறான் அதற்காக தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறான்.” காதல் மன உணர்வுகள்.. சூழல்.. நிஜம் நிறைந்த எதார்த்தம் குறித்து நேர்த்தியாக அழகாக தன்னுடைய சட்டைக்காரியில் பேசியிருக்கிறார் ஆசிரியர். பேரன்பும் பிரியங்களும் தோழர்.

சட்டை காரியை முழுவதுமாக வாசித்து முடித்தவுடன் உடனடியாக தோழர் கார்க்கி தொடர்பு கொண்டேன்.. “தோழர் உங்களுக்கு வயது என்ன என்றேன்.. ஐம்பத்தி மூன்று தோழர் என்றார்..” எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னையை அன்றைய மக்களின் வாழ்நிலையை அவர்களின் வாழ்வியல் முறையை இந்த புதினத்தில் கொண்டுவர எது உங்களை சாத்தியப்படுத்தியது என்றேன். இருக்கும் எங்களின் முன்னோடியின் வாய்மொழிதான் தோழர் என்றார்.

அது அவரின் பெருந்தன்மையை காட்டியது. ஆனால் இத்தனை அழகாக இவ்வளவு காத்திரமாக 70 ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே சென்னையை வார்த்தைகளில் கொண்டுவர வாய்மொழி அனுபவம் மட்டும் போதாது என்பது வாசிக்கும் நாம் அனைவரும் உணர்வோம். அந்த வாய்மொழியோடு நிஜங்களைத் தேடி அவர் நடத்தியிருக்கும் விடாமுயற்சிகளும் மெனக்கெடலுமே இந்தப் புதினத்தின் உயிராகும். அவர் சென்னையின் வரலாறு தெரிந்த ஒரு ஆவணம். அவர் சென்னை நகர மக்களின் வாழ்வியல் முறையை தனக்குள் பதிவு செய்து வைத்திருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பத்திரத்தாள். அவர் கொண்டாடப்பட வேண்டிய சென்னை. அவரை பத்திரமாக தமிழ்ச்சமூகம் பாதுகாக்க வேண்டும்.

ஒருமுறையேனும் முந்தைய கால சென்னைக்குள் இன்றைய சென்னைவாசிகள் நுழைய வேண்டுமென்றால் இந்தச் சட்டைக்காரியின் விரல் பிடித்து மெல்ல நடந்து வருவோம். அவள் நிறைய விஷயங்களை நம்மோடு பேசுவாள். காடும் குன்றும் குளமும் நிறைந்த சென்னைக்குள் நம்மை அழைத்துச் சென்று நம் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்து நம்மை வாழ்த்திடுவாள். சிறப்பான முறையில் அட்டையினை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள் நீலம் பதிப்பகத்தார். வாழ்த்துகள்.

ஆசிரியர் கரன் கார்க்கி.. பேரன்பு முத்தங்கள். தோளில் சுமந்து கொண்டாடப்பட வேண்டியவர் நீங்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

கருப்பு அன்பரசன்

நூல்: சட்டைக்காரி
ஆசிரியர்: கரன் கார்க்கி
வெளியீடு: நீலம் வெளியீடு
விலை: ₹.375/-
பக்கம்: 313.

நூல் அறிமுகம்: கறுப்பர் நகரம் -‘பரிவை’ சே.குமார்.

நூல் அறிமுகம்: கறுப்பர் நகரம் -‘பரிவை’ சே.குமார்.

மரப்பாலம் வாசித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவலை வாசித்தேன். மரப்பாலம் உலகப்போரைப் பற்றிப் பேசியது என்றால் கறுப்பர் நகரம் முழுக்க முழுக்க விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது... அதுவும் அதீத காதலோடும் கொஞ்சம் காமத்தோடும் மிகுந்த…