நூல் அறிமுகம்: புயலிலே ஒரு தோணி – ராதிகா விஜய் பாபு
புயலிலே ஒரு தோணி
ப. சிங்காரம்
புலம் வெளியீடு
பொதுவாக நாவலாசிரியர்கள் வாசகர்களை கைபிடித்து நாவல்களில் வரும் காட்சியையும் நபர்களையும் அறிமுகப்படுத்தி ஒரு பூங்காவில் வருவது போல எழுதுவார்கள் என்றால், பா சிங்காரம் அவர்களின் நாவல் தலைப்பை போலவே நடுக்கடலில் வாசகர்களை தூக்கி போட்டு விடுகிறார். அதில் நீந்தி சிரமப்படுபவர்களுக்கு பல முத்துக்கள் கிடைப்பது உறுதி.
கடலில் தோன்றும் அலையை போலவே பல கதாபாத்திரங்கள் தோன்றி மறைந்து மறைந்து தோன்றி மங்கி போகின்றன. சிங்காரம் அவர்களின் எழுத்து நடையும் வார்த்தைகளின் கோர்க்கும் முறையும் வியப்பாக உள்ளது. ஒரு சண்டைக்காட்சியை விளக்கியிருக்கிறார் என்றால், நாம் இரண்டு முறை படிக்கும் பொழுது அந்த காட்சியை ஸ்லோமோஷனில் தோன்றும் ஒரு புயலில் சிக்கிய தோணி பற்றி கூறுகிறார் என்றால், நாம் மீண்டும் படிக்கும் பொழுதுதான் நடந்ததை யூகிக்க முடியும் மிகவும் ஒரு சாராம்சம் மிக்க நாவல்.
இரண்டாம் உலகப் போரைப் பற்றி பல நூல்கள் வந்திருந்தாலும் ஒரு சாமானியன் பார்வையிலும் ஒரு படை வீரன் பார்வையிலும் இந்த நாவல் நகர்கிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த தலைவர்கள் போர் வீரர்கள் படைத்தலைவர்கள் உண்மையான நிகழ்வு இந்த நாவல் புனையப்பட்டு இருக்கிறது ஒரு கிளாசிக் படம் பார்த்தது போல இந்த நாவல் அமைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பொழுது இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வை மலாய்மொழி கலந்து நமக்கு கொடுத்திருக்கிறா.ர் படிக்க சிரமமாக இருந்தாலும் அதற்கான அர்த்தம் முன்பே கொடுத்து விடுகிறார்.
50 ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட நாவல் அது கூறும் கதை. அதிலிருந்து 30 ஆண்டுக்கு முன் நடந்த கதை. ஆனால் இப்பொழுது உள்ள வாழ்க்கை முறைக்கு மிகவும் பொருந்திப் போகிறது. எங்க காலத்தில் எல்லாம் எங்க அப்பா பேச்சை மீற மாட்டோம் சொன்னதை அப்படியே கேட்போம் என்ற வசை பாட்டை இப்பொழுது உள்ள பெற்றோர்கள் கூறுவதுதான் அப்படி என்றால் எல்லா காலங்களிலும் தந்தை மகன் உறவு அப்படியேதான் உள்ளது.
ஒரு சோப்பு நிறுவனத்தின் விளம்பரத்தை பற்றி கூறும்பொழுது மஞ்சள் வேண்டாம் ஸ்கின் கிஸ் போட்டு குளியுங்கள் என்று கூறுவதும் இன்றைய விளம்பரங்கள் இன்னும் கறியையும் உப்பையும் வைத்து பல் துலக்கு கிறீர்களா என்று கேட்டுவிட்டு இப்பொழுது உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கா என்று கேட்பதோடு ஒத்துப்போகிறது. பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவது அந்த காலத்திலிருந்தே ஆங்கிலம் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விளங்குகிறது.
உலகம் வியக்க வாழ்ந்த தமிழன் உலகெங்கும் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்று அங்கலாய்ப்பு உடைய நண்பர்களிடம் பண்டைய நாள் பெருமை பேசும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமை மிகுந்திருக்கும் என்ற முற்போக்கு சிந்தனை உடையவன் கதாநாயகன் பாண்டியன் அழகான உடல் கட்டமைப்பை உடையவன் வீர சாகசங்கள் புரிவதில் கெட்டிக்காரன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நேதாஜியை சந்தித்து அவரது அபிமானத்தை பெறும் காட்சிகள் அருமை.
1940ஆம் ஆண்டு மதுரை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த நாவலை படிக்கலாம் அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எட்டு பிள்ளையை கொடுத்துட்டு ஒரு செட்டு பிள்ளையை வாங்கலாம் என்ற ஒரு சொல்லாடல் இருக்கும் அதற்கு ஏற்றார்போல செட்டியார்களின் வாழ்க்கையும் அவர்கள் பணத்தை கையாளும் விதமும் அழகாக விளக்கியுள்ளார்.
நாணயமா பித்தலாட்டமா என்பது தேவைகளின் நெருக்குதலை பொறுத்தே முடிவாகிறது ஆகவே தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது போன்ற பல வாழ்க்கைத் தத்துவங்களை நாவல் முழுவதும் அங்கங்கே சிதறிக் கிடக்கிறது.
நாவல் முடிவு எதிர்பாராதவிதமாக முடிந்துள்ளது. சாராம்சம் நிறைந்த நாவலை படைத்த சிங்காரம் அவர்களுக்கு வீரவணக்கம்.