நேமிசந்த்ரா (Nemichandra)-வின் "யாத்வஷேம்" (Yaadvashem) தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் - நூல் அறிமுகம் | Tamil Novel

நேமிசந்த்ரா-வின் “யாத்வஷேம்” – நூல் அறிமுகம்

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம்.  இப்போது இங்கே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் நான் அனீது என்கிற அனிதாவாக மாறி இருக்கும் தருணம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் புத்தகத்தின் பாதி பக்கங்கள் வரை தான் . அதற்கு பின்பு…
Yaad Vashem யாத் வஷேம்

நேமி சந்த்ரா எழுதிய “யாத் வஷேம் ” (நாவல் ) – நூலறிமுகம்

சக மனிதனை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாத மதம் , கடவுள் இவ்வுலகில் இல்லை. எல்லா மதமும் வலியுறுத்துவது அன்பு , இரக்கம் , கருணை , சகோதரத்துவம் , அமைதி , மத நல்லிணக்கம் , சமாதானம். இருந்தபோதும் உலகெங்கும்…
நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்




உண்மைக்கு மிக நெருக்கமாக நின்று, நேமிசந்த்ரா அவர்கள் எழுதிய யாத்வஷேம் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படைக்கு பலியான யூதர்களின் நினைவிடம் இஸ்ரேலில் அமைந்திருக்கின்றது. அந்தக் கொடும் நினைவலைக்கு காலம் சூட்டிய பெயர்தான் யாத்வஷேம். நாவலெனும் பெயரில் மனிதம் தொடர்பான கேள்விகளை, உரையாடல்களை நமக்குள் எழுப்பிச் சென்றிருக்கின்றது. பொதுவாக ஒரு நாவலென்றால் ஏராளமான கதாபாத்திரங்கள் கதையில் உலவும். இங்கே மிகச்சில நபர்களே கதைக்குள் நின்று காத்திரமான உரையாடல்களை நிகழ்த்துகிறார்கள்.

சமீபத்தில் இம்மாதிரியான உணர்வுப்பூர்வமான நாவலை வாசித்ததேயில்லை என்று வாசித்த எவரும் ஒரே குரலில் சொல்வார்கள்.அவ்வளவு செய்திகள் கொட்டிக்கிடக்கின்றது. ஒரு புனைவில் வரலாற்றையும் சேர்த்து பிசைந்து வாசகர்களுக்கு தந்திருக்கின்றார் நாவலாசிரியர்.வாசிக்க வாசிக்க அவர் ஏற்படுத்தும் பிரமிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் முன்வைக்கும் தரவுகளும் அதில் நமக்கிருக்கும் போதாமைகளும் புலனாகின்றன. நாவலெனும் பெயரில் மிகப்பெரிய ஆய்வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றார்.

எட்டு ஆண்டுகால உழைப்பென்றால் சாதாரணமானதா நிகழ்விடங்களை தேடித்தேடி வரலாற்றுச்சுவடுகளை படியெடுத்திருக்கின்றார். கதைக்கு நெருக்கமான கதைமாந்தர்களை சந்தித்து உரையாடியிருக்கின்றார். ஜெர்மனி அமெரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீன் என நாடுகள் தோறும் மெனக்கெட்டு பயணித்திருக்கின்றார். சேகரித்த அத்தனையையும் எழுத்தாக்கிவிடாமல் சாறு பிழிந்து சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பானதொரு நாவலை கவித்துவமான மொழிநடையில் தந்திருக்கின்றார். இந்த நாவலை வாசிப்பவர்கள் இத்துடன் நின்றுவிட முடியாது யூதர்கள் என்றால் யார் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை இஸ்லாமியர்களின் பாலஸ்தீனம் ஹிட்லர்கள் பாசிச வெளி குறித்தும் தேடி வாசிக்கத் துவங்குவார்கள். இந்த நாவலை முடிக்கும்போது வாசிப்புலகின் அடுத்தகட்டம் நோக்கி தானே நகர்வீர்கள.

33 அத்தியாயங்களில் அப்படி என்ன தான் பேசுகிறது நாவல் வாருங்கள் நாவலிற்குள் நுழைவோம். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நரவேட்டையிலிருந்து தப்பிய யூத குடும்பமொன்று சிதறி தெறித்து ஓடுகின்றது. தகப்பனும் மகளும் இந்தியாவில் தஞ்சமடைய தாய் தம்பி தங்கை அக்கா பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பார்வையிலிருந்து கதை விரிகிறது. பறவையின் பார்வையாய் உலகெங்கும் தன் உறவுகளை தேடுகிறது தேடிக் கண்டடைந்த தன் உறவிற்கும் தனக்கும் நிகழும் உரையாடல்கள் யாவும் மனிதகுலம் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய மானுடகுலத்திற்கான மனிதநேய விசாரணைகள்.

யூதர்கள் மேல் ஒரு தேசமே வெறுப்புற்று கொன்றுகுவிக்க காரணமென்ன எல்லாப் பழிகளையும் ஹிட்லர் ஒருவனே சுமந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் யூத வெறுப்புணர்வில் ஹிட்லராய் இருந்திருக்கின்றார்கள். வெறுப்பரசியலில் தீப்பற்றி எரிந்த தேசமிது. ஒரு மொழிக்கெதிராகவோ இனத்திற்கெதிராகவோ மதத்திற்கெதிராகவோ மனிதர்கள் அணிதிரள்வதென்பது மானுடத்திற்கு வைக்கப்படும் கொள்ளியாகிவிடும். இந்திய அரசியலிலும் இந்துத்துவ மதவெறியர்கள் சிறுபான்மையினருக்கெதிராக தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள் கோயபல்ஸ் பிரச்சாரங்களாய் வலுப்பெறும் அபாயமிருக்கின்றன .

ஜெர்மனியின் நாஜிக்களும் இந்திய மதவெறியர்களும் வெறுப்பரசியலின் ஒரே பாதையில் பயணிக்கின்றனர்.
யூதர்களின் பொருளாதார வளர்ச்சி கல்வி கேள்வி என அறிவுலகத்தின் அவர்கள் எடுத்த விஸ்வரூப அவதாரங்கள் இயேசுவை காட்டி கொடுத்து கொன்ற பழி இவையாவும் ஏதோ ஒருவகையில் ஹிட்லரை உளவியலாக சுரண்டியிருக்கின்றது. அதிகாரம் கையில் குவிந்த பின் யூதர்களுக்கெதிரான நரவேட்டையை தேசமெங்கும் விதைத்து யூதர்களின் உயிரை அறுவடை செய்திருக்கின்றான்.

யூதர்கள் எப்போதும் ஒருவகையில் தனித்துவமாகவே இயங்கி வந்திருக்கின்றார்கள். இயேசுநாதர், காரல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் என பிரபலமானவர்களை பட்டியலிட்டால் ஏராளமானவர்கள் வருகின்றார்கள் இது ஆய்வுக்குரிய ஒன்றாக இருக்கின்றது அறிவுப்புலத்தில் ஓரினம் மட்டும் எப்படி உயர்நிலையை எய்த முடியும். இதுவொரு விடைதேடும் கேள்வி நாஜிகளின் வதை கூடத்தில் சிக்கி சீரழிந்த நூலிழையில் உயிர் பிழைத்த அனிதாவின் அக்கா ரெபக்காவின் பாலஸ்தீனர்களின் மீதான வெறுப்புணர்வை எவ்விதம் எடுத்துக்கொள்வது, ஒரு பாசிசத்திற்கு பலியானவர் இன்னொரு பாசிசத்தை வழிமொழிவது எப்படி சரியாகும். நாடற்ற நாடோடிகளாய் புலம்பெயர்ந்தவண்ணம் ஒடித்திரிந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை சூழ்ச்சிகளால் வளைத்து இஸ்ரேல் எனும் நாட்டை கட்டி எழுப்புகிறார்கள். சொந்த நாட்டை இழந்து இன்று தனது தேசத்திற்குள்ளே பாலஸ்தீனர்கள் அகதிகளாய் அலைகின்றனர். கையகல நாட்டை வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு அமெரிக்கா இன்று பின்புலமாய் நிற்பதால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகிப்போனது.

உலகில் முதலில் தோன்றியது யூத மதம் அதை எதிர்த்து கலகக்குரல் எழுப்பி உருவானது கிறிஸ்தவ மதம் இரண்டையும் உள்வாங்கி பிறந்தது இஸ்லாம் இன்று உலகின் மிகப்பெரிய மதங்கள் உருவானது அரேபியா கண்டத்தில் ஒரே நிலப்பரப்புகளில் ஆகவே ஜெருசலேம் இம்மூன்று மதங்களின் புனிதத்தலமும் ஒரே இடத்தில் அமைந்துபோனது, பாசிச சிந்தனை என்பது தனது சுயநலத்திற்காக எதுமாதிரியும் உருமாறும் என்பதற்கு சாட்சி ஜெர்மன் கிறித்தவர்கள் கொன்றொழித்த யூதர்களை இன்று அமெரிக்க கிறித்தவர்கள் பாதுகாக்கின்றனர். நாஜிகளால் கொடும் சித்ரவதைக்குட்படுத்தப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனம் என்ற நாட்டையே கபளீகரம் செய்யப் பார்க்கின்றார்கள். இங்கேதான் அனிதாவின் மனசாட்சி கேள்வி எழுப்பத் துவங்குகிறது சக மனிதனை வெறுக்க கற்றுக்கொடுக்கும் எந்த மதத்தையும் நாட்டையும் தத்துவங்களையும் கேள்விக்குட்படுத்துகிறாள்.

மனிதநேயம் ஒன்று தான் மானுடகுலத்திற்கான தீர்வு என்று கண்டுகொண்டு சகிப்புத்தன்மையும் அன்பும் நிரம்பிவழியும் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்வரும் காலத்தில் இத்தகைய அபாயம் நேர்ந்துவிடக்கூடாதென்று எண்ணி இந்தியா திரும்பி குஜராத் மதக்கலவரத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து களப்போராளியாக பங்குபெறுகிறாள். குஜராத் கலவரத்தில் நிர்க்கதியாக தாய் தகப்பனை இழந்த பெண்ணை தனது மகனுக்கு மணம் முடித்து வைக்கின்றாள். என்று கதை முடிகின்றது.

இந்திய மதங்களும் தத்துவமரபும் அன்புவயப்பட்டது என்பதனை தனது வாழ்வியல் வழியாக உணர்கிறார் அது எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடக்கூடாது என்பதில் உறுதிகொண்டு போராட்ட களத்திற்கு பங்குகொண்டு வீதிக்கு வருகிறார். ஹிட்லர் பெயரால் நாஜிப்படைகள் நிகழ்த்திய சக மனிதர்களுக்கு எதிரான உலகஞ்சும் படுகொலைகளை இனி பூமிபந்தில் எவரும் இனமொழி மதம் சாதி என்று எதற்கொன்றாகவும் நிகழ்த்திவிடக்கூடாது அன்பொன்று மட்டுமே மனிதகுலம் தழைக்கும் அழகிய விதை என்பதை தனது நாவல் மூலம் எழுதிச் செல்கின்றார் நாவலாசிரியர். கன்னட மொழியில் எழுதப்பட்ட நாவலை மிகச்சிறப்பான கவித்துவம் பொங்கும் அடர்த்தியான மொழியில் மொழியாக்கம் செய்து வாசிப்புச் சுகத்தை நமக்கு தந்திருக்கின்றார் எழுத்தாளர் கே. நல்லதம்பி அவருக்கு பாராட்டுக்கள்.

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பியின் – Dr. இரா. செந்தில்

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பியின் – Dr. இரா. செந்தில்




முன்னணி கன்னட எழுத்தாளர்களில் ஒருவரான நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான 2022 ஆம் ஆண்டின் சாகித்திய அகடமி விருதினைப் பெற்ற நூல்.

யாத் வஷேம் என்ற இடம் ஜெரூசலத்தில் இருக்கின்றது. நாஜிக்களால் கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம் அது.

1943 ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனியிலிருந்து ஒரு யூதத் தந்தையும், மகளும் பெங்களூருக்கு அகதியாக வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளிலேயே தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். தனித்து விடப்பட்ட ஹ்யானா என்ற அந்த யூதச் சிறுமியை பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒக்கலிகா குடும்பமொன்று வளர்க்கிறது.‌ காலப்போக்கில் ஹ்யானா அனிதாவாகி அந்தக் குடும்பத்தோடு இரண்டறக் கலந்து விடுகிறாள். அக்குடும்பத்தின் விவேக் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான்.

வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அனிதாவின் வாழ்க்கை பெங்களூரில் வேர் விட்டு வளர்கின்றது. ஆனாலும் அனிதாவால் அவளுடைய குடும்பத்தின் நினைவுகளை அழிக்க முடியவில்லை. அவளுடைய குடும்பம் பிரிக்கப்பட்ட 1942 ஆம் ஆண்டின் அந்த கருப்பு இரவை மறக்க முடியவில்லை.‌ நாஜிக்களால் கொல்லப்படும் ஆபத்து உள்ளதை அறிந்து ‌ இரவோடு இரவாக தந்தை, தாய், ஹ்யானா, அவளுடைய மூத்த சகோதரி ரெபக்கா, தம்பி ஐசக் ஆகியோர் நள்ளிரவில் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து தப்ப முயற்சிக்கிறார்கள்.‌ ஹ்யானாவும் அவளுடைய தந்தையும் ஒரு சந்தில் திரும்பும்போது ஜீப் சத்தம் கேட்கின்றது. ஜீப்பில் இருந்த நாஜி எஸ்.எஸ்கள்‌ ஹ்யானாவின் தாய், சகோதரி, சகோதரன் ஆகியோரை ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். அம்மாவின் கதறலும், சகோதரியின் கூச்சலும் வாழ்நாள் முழுவதும் ஹ்யானாவின் மனதை பிசைந்து கொண்டே இருக்கின்றன.

தன்னுடைய கதையை தன் கணவரிடம் கூட அனிதா கூறியதில்லை. அவள் மனம் காயப்பட்டு விடுமோ என்று அவளுடைய கணவன் விவேக்கும் அவளைக் கேட்டதில்லை. அனிதாவின் மகனுக்கும் அனிதாவின் பின்புலம் தெரியாது.

தன் தாயும், அக்காவும், தம்பியும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அனிதாவுக்கு இருந்தது.‌ அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற ஆசையை அடி மனதில் புதைத்து வைத்து விட்டாள் அனிதா. ஒரு பள்ளிக்கூட ஆசிரியரான விவேக்குக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது எட்டாக்கனி.

அனிதா பெங்களூருக்கு வந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. வெள்ளை வெளேரென்றிருந்த தோல் மங்கி விட்டது. நெற்றியில் பொட்டும், கழுத்தில் கருகமணித் தாலியுமாக கன்னடப் பெண்ணாகி விட்டாள் அனிதா. அனிதாவின் மகன் ஐஐடியில் படித்து மென்பொருள் பொறியாளராகி நிறைய பொருளீட்டுகிறான். அவளுடைய வெளிநாட்டுப் பயணத்துக்கு செலவு செய்வது மகனுக்கு பெரிய சிரமமல்ல.‌அவள் ஒளித்து வைத்திருந்த கனவுகள் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது.

தன்னுடைய 72 ஆவது வயதில் கணவரோடு பெர்லின் செல்கிறாள். அங்கே அவளுடைய குடும்பத்தைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து ஆர்ம்ஸ்டர்டாம் செல்கிறாள். தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டு விடுகிறாள். ஆனாலும் அவளுடைய குடும்பத்தைப் பற்றிய தகவலெதுவும் கிடைக்கவில்லை. அங்கிருந்து கடத்தப்பட்டவர்கள் டகாவ் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சிறிய தகவல் மட்டும் கிடைக்கிறது. டகாவும் செல்கிறாள். அங்கேயும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அடி மனதில் கொழுந்து விட்டெரியும் தேடலின் வேட்கையோடு மிகுந்த சிரமப்பட்டு கணவருடன் அமெரிக்கா செல்கிறாள். சிகாகோ நகரிலுள்ள ‘மியூசியம் ஆஃப் டாலரென்ஸ்’ செல்கிறாள். துருப்பெதுவும் கிடைக்கவில்லை. வாஷிங்டனில் உள்ள ஹோலோ காஸ்ட் மியூசியத்திலும் அவள் தேடிய பெயர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.‌ ஆனாலும் அவள் நினைவில் பதிந்திருந்த அக்காவின் செருப்பைக் கண்டுபிடித்து விடுகிறாள்.

யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின்படி ஜெருசலேமுக்குச் செல்கிறாள்.‌ அங்குள்ள யாத் வஷேம் இந்த இடத்தில் 65 லட்சம் யூதர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.‌ யாத் வஷேமில் அக்காவைப் பற்றிய தகவல் கிடைக்கின்றது. 60 ஆண்டுகளின் தேடலுக்கான விடை கிடைக்கின்றது.‌ அக்காவைச் சந்தித்து விடுகிறாள்.

டகாவ் வதை முகாமில் அக்கா சந்தித்த கொடுமைகளைக் கேட்டுக் கதறி அழுகிறாள் அனிதா. முகாமுக்கு வந்த முதல் நாளே வேலை செய்யப் பயனற்றவர்களாகக் கருதப்பட்ட ரெபக்காவின் தாயும், கைக்குழந்தை ஐசுக்கும் பிரிக்கப்படுகிறார்கள். வதை முகாமின் சட்டப்படி வேலை செய்யப் பயனற்றவர்கள் அழிக்கப்படுவார்கள். முகாமுக்குச் சென்ற அடுத்த நாள் காலையில் முகாமின் மறுபக்கத்தில் எழுந்த கரும்புகையில் வந்த மனித வாடை தன் தாயுக்கும், சகோதரனுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை ரெபக்காவுக்கு தெரிவித்தது. வெறும் மனித உடலாக மட்டும் பார்க்கப்பட்ட ரெபக்கா பலமுறை சூறையாடப்படுகிறாள். அந்த மரணக் குழியில் இருந்து தப்பி வந்த தன் கதையை அனிதாவுக்குச் சொல்லுகிறாள்.

மனித வரலாற்றின் மிகப்பெரிய இனப்படுகொலையான ஹிட்லரின் யூத அழிப்பை ஒரு கொடுங்கோலனின் கொடூரம் என்பதாகப் பார்க்காமல், உலகம் முழுவதும் மதம், நிறம், சாதி என்ற பல்வேறு வேற்றுமைகளின் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே நிலவும் வெறுப்பு; அந்த வெறுப்பினால் உண்டாகும் போர்கள்; படுகொலைகள் என்பதாக அனிதாவின் வாயிலாக தத்துவார்த்தமாகப் பார்க்கிறார் நூலாசிரியர்.

‘எல்லா மதங்களின் அடிப்படையும் அன்பு, கருணை, தயை, மன்னிப்புத் தான். இருந்தாலும் எல்லா மதங்களின் காலங்களிலும் போர்கள் இருந்தன. தாக்குதல்கள் இருந்தன. கிளர்ச்சிகள் இருந்தன. தோற்றவர்கள் மீது கொடூரமான செயல்கள் நடந்தன. மற்றொரு மதத்தை நிராகரிக்கும், தடை விதிக்கும், ‘என் மதமே புனிதமானது. என் கடவுள் ஒருவனே உண்மை’ என்ற விபரீத எண்ணங்கள் இருந்தன.’

என்று எழுதுகிறார் நூலாசிரியர்.

‘எல்லா மதங்களும் அறத்தை நிலை நிறுத்தும் பெயரில் ரத்த வெள்ளத்தையே ஓட விட்டன. அது குருசேத்திரத்தில் ஓடிய ரத்தமாக இருக்கலாம். ஜெரூசலேம் க்ருசேடர்கள் சிந்திய ரத்தமாக இருக்கலாம். இஸ்லாமைப் பரப்பும் உற்சாகப் போர்களாக இருக்கலாம். பத்ரில், உகுத் மலையில், கைபரில். அனைவரையும் படைத்த கடவுளை வெவ்வேறு சாதி, மதங்களின் பெயரில் பிரித்து சின்னா பின்னம் ஆக்கினோம்’ என்று கூறுகிறார் நேமிச்சந்த்ரா.

மதத்தின் அடிப்படையிலான அரசியல் உலகம் முழுவதும் மேலெழும்பி வரும் இன்றையச் சூழலில் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய நூலாக இருக்கின்றது இந்நூல். ஹிட்லர்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவார்கள் என்ற எச்சரிக்கையைத் தருகிறது இந்நூல்.

நாஜிக்கள் செய்த யூத இனப்படுகொலையை பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. பல மேலை நாட்டுத் திரைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.‌ ஆனால் ஒரு இந்திய மொழியில் அந்த இனப்படுகொலை நடந்த சூழலில் இவ்வளவு ஆழமான ஒரு புனைவு வெளிவந்திருப்பது இதுவே முதல் முறை.‌

இந்த நூலை எழுதுவதற்காக 12 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் நேமிச்சந்த்ரா. கோரிப்பாளையத்தில் பார்த்த ஒரு யூதக் கல்லறை தான் இந்த தேடலுக்கான தொடக்கப்பள்ளி. ஹோலோகாஸ்ட் காலத்தில் தன் குடும்பத்தைப் பிரிந்த ஒரு யூதப் பெண்மணி, தன்னுடைய 72 ஆம் வயதில் 81 வயதான தன் அண்ணனை தேடிக் கண்டுபிடித்த உண்மை நிகழ்வு இக்கதைக்குத் தூண்டுதல்.‌ டகாவ் வதை முகாமுக்கும், சிகாகோவில் உள்ள மியூசியம் ஆஃப் டாலரன்ஸுக்கும், வாஷிங்டனில் உள்ள ஹோலோகாஸ்ட் மியூசியத்துக்கும் நேமிச்சந்த்ரா நேரில் சென்று வருகிறார். அனிதா தன்னுடைய சகோதரி ரெபக்காவை சந்திக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுப்பதற்காக ஜெரூசலேத்திற்குச் சென்று யாத் வஷேமையும் பார்க்கிறார். 12 ஆண்டுகள் கால உழைப்பினால் உருவான இந்நூல் அரிய தகவல்களைத் தாங்கி வருகின்றது.‌

கே. நல்லதம்பி மொழிபெயர்ப்பு என்ற உணர்வு வராத அளவுக்கு மொழி பெயர்த்திருக்கிறார்.‌

வீட்டு நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்.

நூல் : யாத்வஷேம்
ஆசிரியர் : நேமிசந்த்ரா
தமிழில்: கே.நல்லதம்பி

விலை : ரூ.₹399
வெளியீடு : எதிர் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

மருத்துவர். இரா. செந்தில்

“நெஞ்சில் நிலைக்கும் முற்றம்” (யாத்வஷேம் நாவல் குறித்து) – ந. ஜெகதீசன்

“நெஞ்சில் நிலைக்கும் முற்றம்” (யாத்வஷேம் நாவல் குறித்து) – ந. ஜெகதீசன்

யாத்வஷேம் என்ற நாவலின் பெயருக்கு அர்த்தம் தெரியாமலேயே நாவலை வாசிக்க தொடங்கினேன். யாத்வஷேம் என்பது ஆயிரம் ஆயிரம் உயிர்களின் வலியை தாங்கி நிற்கும் காலத்தின் சாட்சியம் என்பதை பாதி நாவலை கடக்கையில் அறிந்து கொண்டேன். இந்த நாவலை எழுத மேற்கொண்ட பயணங்களையும்…
நூல் அறிமுகம்: ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை – தேனிசீருடையான்

நூல்: யாத்வஷேம் ஆசிரியர்: கன்னட மூலம் நேமிச்சந்திரா|  தமிழில் கே. நல்லதம்பி. பதிப்பகம்: எதிர் வெளியீடு பக்: 358 விலை ரூ 399. புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/ ஹிட்லர் இறந்துவிட்டான்………அழியவிலை. உலக வாழ்வியல் மற்றும் அரசியல் முன்னேற்றத்தின் தடை அரணாக மாறியிருந்தது ஜெர்மானிய சர்வாதிகாரி…
நூல் அறிமுகம்: காந்தி மண்ணில் பிறக்கும் ஹிட்லர்கள் *“யாத்வஷேம்”* நாவலை முன்வைத்து. . . – அ.உமர் பாரூக்

நூல் அறிமுகம்: காந்தி மண்ணில் பிறக்கும் ஹிட்லர்கள் *“யாத்வஷேம்”* நாவலை முன்வைத்து. . . – அ.உமர் பாரூக்

நூல்: யாத்வஷேம் (நாவல்)  ஆசிரியர்: நேமி சந்த்ரா தமிழில்: கே.நல்லதம்பி வெளியீடு: எதிர் வெளியீடு 358 பக்கங்கள் விலை: ரூ.399/ புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்தித்த போது ஒரு நாவலைக் கையில் வைத்துக் கொண்டு நேரம்…