நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி

நூல் விமர்சனம்: இரா. நாறும்பூநாதனின் யானைச் சொப்பனம் – விஜிரவி




திருநெல்வேலி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தாமிரபரணி ஆறு, பாரதி மணிமண்டபம், இருட்டுக்கடை அல்வா போன்ற பொதுவான சில விஷயங்களே… அதைத் தாண்டி நெல்லையின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்று மனிதர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களை முகநூலில் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் எழுதியதை ‘’யானைச் சொப்பனம்’’ என்ற நூலாக ஆக்கியிருக்கிறார்கள் நூல்வனம் பதிப்பகத்தார். மிக எளிய விஷயங்களை கூட கட்டுரையாக்கி இருப்பது சுவாரஸ்யம் தருகிறது. நாம் தினமும் உபயோகிக்கும் ஊக்கு, மருதாணி, தலைக்கு தேய்க்கும் சீயக்காய், வாழ்த்து அட்டைகள், பிள்ளையார் எறும்பு, பவுண்டன் பேனா, பந்திசாப்பாடு போன்றவற்றை சில கட்டுரைகளில் பாடுபொருளாக்கியிருக்கிறார் ஆசிரியர். புதுமைப்பித்தனைப் பற்றி அறியாத பல விஷயங்கள், ஜோல்னா பையில் அம்சங்கள் என சுவாராயம் கூட்டுகிறது புத்தகம்.

சில கட்டுரைகள் சிறுகதை வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. தமிழ் வார இதழ்களில் வெளிவரும் தொடர் கதைகளை அழகாக பைண்டு செய்து வைத்து ஒரு நூலகம் போல உருவாக்கி, கேட்பவர்களுக்கு படிக்கத் தந்து, ‘’புத்தகம் படிக்கப் படிக்கத்தான் உயிர்பெறும். வெறுமனே அலமாரியில் இருந்தால் உயிரற்று தான் இருக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் எழுதிய ஆசிரியரும் உயிர் பெறுவார்’’ என்று சொல்லும் பாடலிங்கம் அண்ணாச்சி ஓர் அழகிய கதாபாத்திரமாக மிளிர்கிறார் இந்த புத்தகத்தில் மட்டுமல்ல…. நிஜ வாழ்விலும் கூடத்தான். அதிலும் புத்தகத்தை திருப்பித் தரும் வாசகர்களிடம் அதிலிருந்து சில கேள்விகளை கேட்பார் என்ற தகவலும் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

தன் கணவன் ஆசை ஆசையாய் வாங்கி போட்ட நான்கு பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து மீட்க முடியாமல், அது ஏலத்துக்கு வரும்போது ‘’ஒரே ஒரு தடவ அந்த வளையலை கண்ணுல காட்டுங்க… தொட்டுப் பாத்துக்குறேன். அதை என்னால மீட்க முடியாது. ஆனால் அதைப் பார்க்கிறப்போ என்னுடைய செத்துப்போன புருஷனின் ஆசை முகம் அதுல தெரியும்’’ என்று சொல்லும் போது அங்கயற்கண்ணி யோடு சேர்ந்து நமது கண்களும் கலங்கும். ஒரு அருமையான சிறுகதையை படைத்திருக்கிறார்.

அதைப்போல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட ‘’ஒரு இந்திய குடிமகனின் கதை’’யும் தரமான ஒரு சிறுகதை என்பதில் ஆச்சரியமில்லை. கதை சொல்லியும் அந்த ரகம் தான். கேரளா எழுத்தாளர்களுக்கு அம்மண்ணில் கிடைக்கும் மரியாதையும், வரவேற்பும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இங்கு இல்லை என்ற ஏக்கத்தை ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கி ராஜநாராயணனின் புகழ்பெற்ற சிறுகதையான ‘’கதவு’’, கோவில்பட்டி, நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி வீட்டில் நடந்த ஜப்தி சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது என்கிற விஷயமும் தெரிய வருகிறது.

நெல்லையின் பெருமிதமாய் வாழ்ந்து, பலரால் அறியப்படாமலேயே மறைந்து போன தொல்லியல் ஆய்வாளர் செந்தில் சிவகுமாரன், அயோத்திதாச பண்டிதர், ஆப்ரஹாம் பண்டிதர், பேராசிரியர் டேவிட் பாக்கியமுத்து பற்றிய ஆசிரியரின் ஆதங்கம் சுமந்து சில கட்டுரைகள். எட்டயபுரத்தின் அருகே பிதப்புரம் கிராமத்தில் மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரால் ஒரு நூற்பாலை கட்டத் திட்டமிடப்பட்டு, எட்டயபுரம் மன்னரால் ஆதரவு அளிக்கப்பட்டு, கட்டிட வேலையும் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேய அரசால் தடுக்கப்பட்ட வரலாற்றை ‘’ வெள்ளையனை எதிர்க்க வித்தூன்றிய இடம் ‘’ கட்டுரையில் காண முடிகிறது. நொடித்துப் போன தன் தந்தையை எண்ணி,

‘’ ஈங்கு இதற்கிடை எந்தை பெருந்துயர்
எய்தி நின்றனன் தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெரும்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்’’

என அந்த மகாகவி மனம் நொந்து பாடுகிறான். வறிய நிலைக்கு குடும்பம் செல்ல, படிப்பைக் கூட தொடர முடியாமல் உள்ளம் வெதும்பி,

‘’எந்த மார்க்கமும் தோற்றிலது: என்செய்வேன்
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே’’
என்ற பாரதி தன் இளம் வயதிலேயே ஆங்கிலேயரை விஷம் போல வெறுத்தான். ஒருவேளை நூற்பாலை துவக்கப்பட்டு, பாரதியும் மேற்படிப்பு படித்திருந்தால், தமிழகத்திற்கு ஒரு கவிஞன் கிடைத்திருப்பான். ஆனால் உணர்ச்சி கொப்பளிக்கும் ஒரு தேசியக் கவி கிடைக்காமலேயே கூடப் போயிருக்கலாம் என்ற ஆசிரியரின் வரிகளின் யோசிக்க வைக்கின்றன.

மொத்தம் ஐம்பத்தி ஒன்பது கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில்.முகநூல் பதிவுகள் என்பதால் சிலது சிறியனவாகவும், சிலது பெரிதாகவும் இருக்கின்றன. நெல்லைத் தமிழில் வாசிப்புக்கு சுவை கூட்டி , நெல்லை வரலாற்றின் ஆவணங்களை உள்ளடக்கிய படைப்பு இது.

நூல் : யானைச் சொப்பனம்
ஆசிரியர் ; இரா. நாறும்பூநாதன்,
பதிப்பகம்; நூல் வனம்
விலை; 120