Yathumaginai Poem By PriyaJeyakanth யாதுமாகினாய் கவிதை - பிரியா ஜெயகாந்த்

யாதுமாகினாய் கவிதை – பிரியா ஜெயகாந்த்

தீபச்சுடராய் ஒளிர்விட்ட உனை கண்டு பிரகாசித்த வேளையில் எரிமலையாய் தகித்து வெதும்பினாய்
நெருப்பென்று நினைத்தேன் !

விதைத்ததை முளைக்கவைத்த உனை விளைநிலமாய் பார்த்த வேளையில்
பாலைவனமாய் வரண்டு போனாய்
நிலமென்று நினைத்தேன் !

தென்றலென படர்ந்த உனை இன்பமென ரசித்த வேளையில்
புயலாய் மாறி நிலைகுலைய வைத்தாய்
காற்றென நினைத்தேன் !

ஒடையாய் நடனித்த உனை ஒவியமாய் உருவகித்த வேளையில் காட்டாற்று வெள்ளமாய் தறிகெட்டுத் தலும்பினாய்
நீரென்று நினைத்தேன் !

நீலக் குடையென உனை தொட்டுவிடத் துடித்த வேளையில்
முடிவற்ற வெற்றிடமாய் ஊடுருவினாய்
ஆகாயமென்று நினைத்தேன் !

நீ யாரென்று கூறாது
ஒரு நிலையில்லா உருகொண்டு எனை

பல நேரம் அழ வைத்தாய்
சில நேரம் மகிழ வைத்தாய்
துயர் வரும் தருணம் துணிவை அளித்தாய்
அச்சத்தை அகற்றி அடியெடுக்க வைத்தாய்
சினம் கொண்ட சூழலில் நிதானிக்க செய்தாய்

உனை எதிர்கொள்ள போராடி
தோற்று துவண்டு

கட்டி இழுக்காமலும் வெட்டித் தள்ளாமலும் அமர்ந்த போது,
நான் நெருப்பல்ல நிலமல்ல காற்றல்ல நீரல்ல ஆகாயமல்ல
உன் மனம் என உணர்த்தி அமைதியை அளித்தாய் !!!.