சிறுகதைச் சுருக்கம் 82: கி.நடராசனின் ஒய்யாரக் கொண்டை சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
அனுபவங்களும் அவற்றைச் சொல்லும் பகட்டில்லாத சொற்களும் வாழ்க்கை ஒரு போராட்டம் எனப் பார்க்கும் பார்வையும். . . .
ஒய்யாரக் கொண்டை
– கி.நடராசன்
சிங்காரச் சென்னையில் விடிந்தால் கல்யாணம். மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் சுசீலாவிற்குத் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் கலர் கலராய் கனவுகள் வருகின்றன. நியான் விளக்குகளில் சொலிக்கும் கனவு நகரம். வழவழச் சாலைகளில் வழுக்கியபடி விரையும் கார்கள். மாட மாளிகைகள். சுகந்தம் வீசும் கடற்கரைக் காற்று. புரண்டு புரண்டு படுத்தாள். சிறிது கண் அயர்ந்திருப்பாள். அதற்குள் அம்மா எழுப்பிவிட்டாள்.
மணப் பெண்ணை அலங்காரம் செய்ய வேண்டும். காலைக்கடன்களை முடிக்க அவசரப்படுத்தினாள். முழுநிலா பிரகாசமாய் ஒளி வீசியது. மரம் செடி கொடிகளில் வெண்ணொலி பட்டு பசும் ஒளியாகச் சிதறித் தெறித்து மனோரஞ்சிதமான சூழலை உருவாக்கியது. அதிகாலைக் கடன்களை நடுநிசியில் முடிக்க அவசரப்படுத்தினால் முடியுமா? இருப்பினும் அம்மாவின் அவசரம் புரிந்து நடந்தாள்.
அதிகாலை நான்கு மணிக்கு பேருந்தைப் பிடித்தால்தான் வடபழனி முருகன் கோவிலுக்கு ஏழு மணிக்கு செல்ல முடியும். உறவுகள் சூழ புதுப்பெண் அலங்காரத்துடன் சென்னையை அடைந்தாள்.
திருமணம் இனிது நடந்தேறியது. சரவண பவனில் திருமண விருந்து. புதுத் தம்பதிகள் அருகருகே வைத்து விருந்து பரிமாறப்பட்டது. மாப்பிள்ளைத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். விருந்துண்டு உறவினர்கள் மொய்யெழுதி விடைபெற்றுச் சென்றனர்.
சுசீலாவின் வயிறு கனமாகி கடகடக்கும் உணர்வு ஏற்பட்டது. மாப்பிள்ளை ஆட்டோவில் மணப்பெண்ணையும் அவள் பெற்றோரையும் வைத்து ஓட்டிச் சென்றார். சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல, மாப்பிள்ளை ஆட்டோவை லாவகமாக வளைத்து வளைத்து ஓட்டினார். கணவனின் திறமை சுசீலாவிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் ஆட்டோ குலுங்கிய குலுக்கலில் வயிற்று கடபுடா அதிகமாகியது. வயிற்றின் இறுக்க உணர்வு உடலெங்கும் படிப்படியாகப் பரவியது. அடிவயிற்றில் இலேசான வலி பரவியது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் கூவம் ஆற்றங்கரை எனப்படும் சாக்கடை ஓடையின் கரையின் அமைந்த குடிசைப் பகுதியில், சிறிய சந்து பொந்துகளில் ஆட்டோ சர்க்கஸ் லாவகத்தில் சென்றது. மணமகளை ஆரத்தி எடுத்து வரவேற்க மகளிர் கூட்டம் கூடி இருந்தது. அவர்களின் சிநேகப் பார்வை சுசீலாவிற்கு உற்சாகத்தைத் தந்தது.
மாமியார், பள்ளியில் பயிலும் நாத்தனார், கணவன் என்ற சிறிய தொகுப்புதான் அவளின் புது வீட்டின் அங்கங்கள்.. சொந்தங்கள்.
மதிய உணவு ஓட்டலில் இருந்து ஆட்டோவில் வந்து இறங்கியது, பெற்றோரைப் பிரிவது சுசீலாவிற்குத் துயரத்தைத் தந்தது. கண்களில் கண்ணீர் மல்கியது.
மாமியார் மணகளைச் சாப்பிட வற்புறுத்தினார். சுசீலாவிற்கு அடிவயிற்றுக் கனத்தை கீழிறக்க வேண்டும் என்ற உணர்வு மேலிட்டது. நாத்தனாரிடம் ஒன்றுக்குப் போக வேண்டும் என்றாள். குடிசைக்குப் பக்கத்தில் புதிதாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓலைத் தடுப்பிற்கு வழிகாட்டினாள். வாழ்வு, கழிவு என்று அனைத்தும் அருகருகே இருந்தது. கிராமத்துப் பெண்ணிற்கு இச்சூழல் கூச்சத்தை ஏற்படுத்தியது. சளசளவெனப் பக்கத்தில் பேச்சுக்குரல்கள் காதில் கேட்பது மாதிரி இருந்தது. முழுமையாகச் சிறுநீர் கழிக்க முடியவில்லை.
கூப்பிடும் தூரத்தில் குடிசைகளைத் தாண்டி கூவம் ஆற்றங்கரையில் அப்பெண்கள் அதையே அவர்கள் மிக இயல்பாக எந்த சங்கடமற்ற செயலாகச் செய்து கொண்டிருந்தனர். அருவருப்புப் புழு சுசீலாவின் உடலெங்கும் ஊர்ந்து சென்றது.
மதிய சாப்பாடு சுவையாய் இருந்தும் வயிற்றினுள் இறங்க மறுத்தது. மாமியார் உடனிருந்து அன்பாகப் பரிமாறி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். வயிறு உப்பிசமாகி குடலைப் பிழிவது போல் இருந்தது. சிறிது நேரத்தில் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உந்தித்தள்ள தொடங்கியது. நாத்தனாரிடம் இரண்டுக்குப் போக வேண்டும் என்று சங்கடத்துடன் சொன்னாள்.
மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த குடிசைப் பகுதியின் குறுகலான சந்துகளில் நடந்து சென்றாள். முடிவில் கூவமும் மின்சார ரயிலின் தண்டவாளங்களும் இருக்கும் பகுதியை அடைந்தனர். உருண்டு திரண்ட கறுப்புப் பன்றிகளும் அதன் அழகிய குட்டிகளும், கோழிகளும் அதன் வண்ணக் குஞ்சுகளும் குப்பைகளையும் கழிவுகளையும் கிளறிக் கொண்டிருந்தன.
கடகடவென்ற மின்சார ரயில் ஒடியது. இரண்டு பெண்கள் டக்கென்று எழுந்த நின்றனர். ஒரு வயதான அம்மாள் கவலையின்றி குந்திக் கொண்டிருந்தாள். ரயில் சென்றவுடன் மீண்டும் குத்துக் காலிட்டு குந்திக் கொண்டனர். இதைக் கண்ட சுசீலாவிற்கு மலம் கழிக்கும் உணர்வே போய்விட்டது. இரயிலும் தண்டவாளங்களும் மரவட்டைகளாய் உடம்பினுள் ஊரும் எரிச்சலான அருவருப்பை உண்டாக்கின.
“வா வீட்டுக்குப் போகலாம்.”
“இன்னா அண்ணிய், அவுட்சய்டு போலயா?”
“வர மாதிரி இருந்தது.. இப்ப வரல்ல.”
தடதடவென மின்சார ரயில் சென்றது. ஆயிரமாயிரம் கண்கள் தனது அந்தரங்கத்திற்குள் எட்டிப்பார்க்கும் அவமானமும் கூச்சமும் மேலிட்டன. மன உளைச்சலுடன் சுசீலா வீட்டிற்கு திரும்பினாள்.
மாப்பிளை ஆசை ஆசையாய் புதுப்பெண்ணிடம் ஜாலியாகப் பேச முனைந்தார். அவளுக்கும் தன் கணவனிடம் ஆசையுடன் பேசி சிரிக்க வேண்டுமென்று நினைத்தாள். வயிறு கடபுடா சத்தம் போட்டு கலாட்டா செய்து அதைத் தடுத்தது.
முதல் இரவிற்கான சில ஏற்பாடுகளை அந்தக் குடிசையில் உள்ளவர்கள் செய்யத் துவங்கினர். புதுத்தம்பதிகள் அந்த குடிசையிலும் மற்றவர்கள் பக்கத்து குடிசையிலும் தங்க ஏற்பாடு நடந்தது. அதைவிட இரவு எப்பொழுது வரும் என்று சுசீலா காத்திருந்தாள்.
மலத்தை அடக்க அடக்க லேசாக வயிறு வலிக்க ஆரம்பித்தது. அடி வயிறு உப்பிசம் கண்டு முறுக்க ஆரம்பித்தது. நாத்தனார் கலந்து தந்த காப்பியைக்கூடத் தொட மனமில்லை. தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் இருந்தாள். நாக்கு வரண்டு போனது. அவளின் நிலைமை அங்கு உள்ளவர்களுக்குப் புரியத்தான் செய்தது. இந்தச் சூழ்நிலைக்கு அவள் பழகித்தான் தீரவேண்டும். வேறுவழி கிடையாது. இந்த விசயத்தில் கிராமத்து சேரியை விட நகரத்து காலனி மோசமாக இருந்தது.
கதிரவன் மறைந்து காரிருள் கவிழ்ந்தது. மணப் பெண்ணை மீண்டும் ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துக் கொண்டு நாத்தானார் சென்றாள். முழுநிலவு தகதகவெனப் பொன்னிறத்தில் வானில் உதித்து ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சவும் சரியாக இருந்தது. ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளும், ஜிகினா காகிதங்களும் அந்த ஒளியில் மின்னி அருவருப்பைத் தந்தன. நேற்று மகிழ்வையும் பரவசத்தையும் தந்த நிலவு இன்று எரிச்சலையும் துன்பத்தையும் தந்தது. அப்பகுதிப் பெண்கள் இதெயெல்லாம் பொருட்டாகவே கருதாமல் சாதாரணமாக இயங்கித் தங்கள் கடனை முடித்துக்கொண்டு சென்றனர். சுசீலாவால் அவ்வாறு செய்ய இயலவில்லை.
திடுமென்று பிரகாசமான ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டு மின்சார ரயில் கடக் கடக் கடக் என்று அவளின் உடலினுள் புகுந்து கடந்த சென்றது. இரயிலின் ஆயிரம் சன்னல்களும் பெரிய முட்டை முட்டை கண்களாக கண் கொட்டாமல் விழித்து விழித்துப் பார்த்தது. சுசீலா நிலைகுலைந்து போனாள்.
மறுநாள் மாப்பிள்ளை அவளை மெரீனா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். தலைக்கு மேலே சாலைகளில் மெட்ரோ இரயிலுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நல்ல வேளை கூவம் ஆற்றினுள் இந்த மெட்ரோ ரயில் போடப்படவில்லை. வானம் பிளந்த ஓலைத்தடுப்புக் குளியலறைகளும் ஏராளமான குடிசைப் பகுதிகளின் அந்தரங்கங்களும் வானத்தில் இருந்து பார்க்கும் வேடிக்கைப் பொருள்களாகி விட்டிருக்கும் என்று அவன் மனம் புழுங்கினாள்.
பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.