எதனாலே எதனாலே? கட்டுரை – இரா. கோமதி

எதனாலே எதனாலே? கட்டுரை – இரா. கோமதி




கேள்வி: பெண் குழந்தைகளுக்கு  இரண்டு முறை ‘பங்க்ஷன்’ செய்வது எதனாலே?
ச. வைஷ்ணவி, விவேகானந்தா பள்ளி, புதுவை.

‘எங்க கிளாஸ்ல கூட படிக்கிற பசங்களுக்கு இரண்டு தடவை பங்க்ஷன் பண்றாங்க. ஏன் எனக்கு மட்டும் வைக்கல?’ என்று என் மகள் என்னை பார்த்து கேட்டாள். நான் அவரிடம் பேச துவங்குகினேன். இங்கு பங்க்ஷன் என்று அவள் குறிப்பிடுவது ‘மஞ்சள் நீர் சடங்கைதான்’ என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக பெண் குழந்தைகள் பூப்பெய்தவுடன் ‘தண்ணீர் ஊற்றுவது’ என்றும் சில மாதங்கள் கழித்து ஐயர் வைத்து தீட்டு கழிப்பதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற பெயரிலும் கொண்டாடுவது வழக்கமாகும். என் மகளுக்கு இதில் முதல் சடங்கு மட்டும் செய்தோம். இதை மனதில் வைத்து தான் என் மகள் என்னிடம் கேட்கிறாள். அதுவும் தற்போதெல்லாம் மஞ்சள் நீர் என்பது ஆடம்பர விழாவாக கொண்டாடப்படுவதை சமுதாயத்தில் அவள் பார்க்கிறாள். பெரிய மண்டபம், பத்திரிக்கை, பட்டுப்புடவை, ஒப்பனை, அலங்காரம், சீர்வரிசை என்று ஆடம்பரத்தின் உச்சம் தொடும் செயல்கள் அரங்கேரி வருகின்றன. இவற்றை கேள்விப்படும் குழந்தை நமக்கு ஏன் இதெல்லாம் செய்யவில்லை என்று கேட்கிறாள். அவளுக்கு விளக்குவது எனது கடமை அல்லவா! விளக்கினேன்.

“அப்படி சடங்குகள் எல்லாம் வைக்க கூடாதுமா’, என்றேன். அவள் ஏன் என்று கேட்டாள். ‘ஏனென்றால் இவ்வாறு பங்க்ஷன் வைப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அறியாமை, மற்றொன்று பணம். ஆனால் பாவம் ஏழை மக்களிடம் பணம் இல்லை என்றாலும் கடனை வாங்கி பெரிய அளவில் மஞ்சள் நீராட்டு விழா நடத்துவதை பார்க்கும் போது பாவமாக உள்ளது.

“இவை இரண்டும் தான் காரணம் என்றால் எப்படிமா” என்று கேட்டாள். “ஆமாம் டா!  அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் உடனே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். எனவே இம்மாதிரி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து தங்கள் சாதி சனங்களை அழைத்து, எங்கள் மகள் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள் நீங்கள் யாரேனும் எங்கள் மகளைப் பெண் கேட்டு அணுகலாம் என்று சொல்லும் சடங்கு தான் இந்த மஞ்சள் நீர் சடங்கு. அந்த சடங்கின்போது பெண் குழந்தைக்கு சிறப்பான முறையில் ஆடை அலங்காரம், ஒப்பனை நகை எல்லாம் உடுத்தி ஊர் முன் அமர வைத்து நலங்கு வைப்பர். ஊர்  பெண்கள் இக்குழந்தைகளின் அருகில் வந்து நலங்கு வைத்து தங்கள் குடும்பத்திற்கு இப்பெண்  பொருத்தமானவளா என்று முடிவு செய்வர். அதோடு அப்பெண்ணின் பெற்றோர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் விதம், சொந்த பந்தங்கள் செய்யும் சீர்வரிசை முறைகள் போன்றவற்றை வைத்து இக் குடும்பத்தின் பொருளாதார நிலையையும் எடை போடுவர். இது தான் சடங்கு செய்வதன் அடிப்படையாகும்.

இப்போது நீயே சொல் இன்று நம் நாட்டின் சட்டப்படி பெண்களில் திருமண வயது என்ன? ‘என்று கேட்டேன். ’21’ என்றாள். சட்டமே ஒப்புக்கொண்டாலும் தற்போது பெற்றோர்கள் யாரேனும் தங்கள் குழந்தைகளை 11,12 வயதில் திருமணம் செய்து கொடுப்பார்களா? இல்லை தானே பின் ஏன் இந்த காலத்திற்கு பொருந்தாத சடங்கை இன்னும் நாம் செய்ய வேண்டும். அதிலும் நம் பிள்ளை என்ன கடையில் ஜோடித்து வைக்கப்படும் அலங்கார காட்சி பொருளா? அல்லது சந்தையில் விற்பனைக்காக வைக்கப்படும் விற்பனை பொருளா? என்ன செய்கிறோம் என்பது புரியாமலேயே காலம் காலமாக இதுதான் பழக்க வழக்கம் என்று பேசுவதும், செய்வதும் சரிதானா என்று பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். நம் பிள்ளையை நாலுபேர் ரசிக்கும் வகையில் அலங்காரம் செய்து காட்சிப்படுத்துவது சரியா? இல்லை கல்வியில் அவர்கள் சிந்தனையை சீர்படுத்தி செலுத்த வழிவகை செய்வது சரியா என்று பெற்றோர்கள் தான் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் என் மகளிடம் கூறினேன்.

‘அதிலும் இந்த விழாவை ஆடம்பரமாக செய்வது பெரும் முட்டாள்தனம். இவ்வாறு கடுமையான வார்த்தையை பயன்படுத்த காரணம் உண்டு. ஏனென்றால் சடங்கு செய்வதே அர்த்தமற்றது என்று இருக்கும் போது அதில் பெரும் தொகையை செலவழிப்பது என்பது ஒரு சமூக சீரழிவாகவே நான் பார்க்கிறேன். சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும், களியாட்டம் போடுவதும் எல்லாம் சமூகத்திற்கு எந்த பயனும் தராமல் சமூகத்தை சீரழிக்கின்றன என்றால் இவ்வாறு பெரும் செலவழித்து செய்யப்படும் ஆடம்பர மஞ்சள் நீராட்டும் சீர்கேட்டை தான் செய்கிறது. இவை அனைத்தும் கேட்ட என் மகள் கடைசியாக என்னிடம் கேட்டாள், ‘நம்மகிட்ட அவ்வளவு பணம் இல்லாததால் தான் இதை நாம செய்யலயா மா? ‘ என்று. ‘இல்லை நமக்கு கொஞ்சம் அறிவு இருப்பதால் தான் நாம் இதை செய்யவில்லை என்று சொல்லி முடித்தேன்.

– இரா. கோமதி, ஆசிரியர்
சவராயலு நாயகர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி, புதுச்சேரி.