தன்வியின் பிறந்தநாள் – நூல் அறிமுகம்
தன்வியின் பிறந்தநாள் – நூல் அறிமுகம்
“தூயமனதின் கவித்துவ பூக்கள்” – துரை. அறிவழகன்
குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட நித்ய சைதன்ய யதி அவர்கள் கேரளாவின் ஞான மரபான “நடராஜ குரு” அவர்களின் சீடராவார். கவிஞர், ஓவியர் மற்றும் எழுத்தாளருமான ‘யதி’ அவர்கள், இந்திய மற்றும் மேற்கத்திய சிந்தனை மரபுகளை இலக்கியத்துடன் இணைத்துப் பார்க்கும் பார்வை கொண்டவர். 1924-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கேரளத்தின் ‘பத்தனம் திட்டா’ எனும் நகருக்கு அருகில் அமைந்துள்ள ‘முறிஞ்ஞல்’ எனும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயது முதலே மகாத்மா காந்தி மற்றும் நாராயண குரு ஆகிய ஆளுமைகளால் ஆட்கொள்ளப்பட்டவர் ‘யதி’ அவர்கள்.
‘யூமா வாசுகி‘ அவர்களின் ‘பூப்புணர்ச்சி’ எனும் கவிதையொன்றில்,
“…
கிளர்ச்சி மீதுற நடுங்கும் விரல்களில்
முத்தம் என
மணத்தை மட்டுமே கனிந்தளித்து
அக்கணமே மறைந்தன கொடி பிரிந்த பூக்கள்
…”
எனும் வரிகள் இடம் பெற்றிருக்கும். இக்கவிதையின் பூக்களின் மணம் போல் புற உலக நிகழ்வுகள், உரையாடல்கள் நம் அகத்தில் தைல பூச்சாக படிந்துவிடுகிறது. இத்தகைய படிவுகளே ‘நித்ய சைதன்ய யதி’ அவர்களின் ‘சின்னச் சின்ன ஞானங்கள்’ நூலாகும்.
ஓவியர், கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான ‘யூமா வாசுகி’ அவர்களின் மொழிபெயர்ப்பில் மலர்ந்துள்ளது இந்த அழகியல் நிறைவுகளுடனான தொகுப்பு நூல். கனிவான, நெகிழ்வான தனக்கே உரித்தான மொழிநடையில் ஆன்ம ஒலியைக் கரைத்து மூலநூலின் அடர்த்தியை சிதைக்காமல் தமிழ் இலக்கிய அற உலகிற்குக் கொடையாகத் தந்துள்ளார் இம்மொழிபெயர்ப்பாளர். ஓ.வி.விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ எனும் மலையாள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக 2017-ஆம் ஆண்டில் ‘சாகித்ய அகாதெமி’ விருது பெற்றவர் யூமா வாசுகி அவர்கள். மூல எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என குழந்தைகளின் மீது நேசம் கொண்ட ஒத்திசைவான இருவரின் இணைவில் நிகழ்ந்துள்ள அற்புதம் “சின்னச் சின்ன ஞானங்கள்” எனும் பொக்கிஷமாகும். “தன்னறம்” நூல்வெளியின் கலை அழகியல் உச்சத்துடனான முன்னெடுப்பால் இந்நிகழ்வு சாத்தியம் பெற்றுள்ளது.
“தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும் போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. “மானுட ஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் குழந்தை மொழியைக் கற்றுக் கொள்ளும் போது உணரலாம்” எனும் யதியின் கருத்தியல் சாரத்தை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு பயணிப்பவர் யூமா வாசுகி அவர்கள். “எல்லா குழந்தைகளும் மேதைகள்தான்” எனும் சொற்றொடரை அடி மன வேராகக் கொண்ட படைப்பாளுமை இவர்.

பிற மொழி சிறார் இலக்கிய வளங்களை தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்திய ‘அண்டரண்டப் பட்சி’ யூமா வாசுகி அவர்கள். 1966-ல் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூரில் பிறந்தவர் இவர். சிறார் உலகத்துக்கே உரித்தான தர்க்க நிலையற்ற, அறிவகங்காரமற்ற பேரன்பின் சிறகசைப்பை தமிழிலக்கிய சிறார் படைப்புலகுக்குள் மொழிப்படுத்தியவர் யூமா வாசுகி அவர்கள். மலையாளத்தில் வெளிவந்த ‘யதி’ அவர்களின் மூல நூலின் வடிவமைப்பு வசீகர அழகியலில் தன்னை இழந்த இவரின் அக ஈடுபாட்டில் தமிழ் மொழியில் “சின்னச் சின்ன ஞானங்கள்” தன்னை மலர்த்திக் கொண்டிருப்பது ஒரு அற்புத நிகழ்வாகும்.
“ஞானம் என்பது பழமையிலிருந்தோ, மரபு வழிகளிலிருந்தோ, புத்தகங்களில் இருந்தோ பெறப்படுவது அல்ல; ஆழ்ந்த சுய தரிசனத்திலிருந்து பிரபஞ்சம் தழுவிய ஒருமையுணர்விலிருந்து பெறப்படுவது” எனும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் எளிய வாழ்வியல் நிகழ்வுகளைக் கட்டமைத்து அந்நிகழ்வுகள் வழியாக தனக்குள் ஏற்பட்ட விழிப்புணர்வு கணங்களை ‘யதி’ அவர்கள் எழுத்து வடிவில் உருக்கொள்ளச் செய்திருப்பதே இந்நூல். இந்நூலின் வழி காட்சிபெறும் ஞானம் என்பது ஒழுக்க நெறியல்ல; வாழ்வியல் ஒளிக்கீற்றுகளின் அழகியல்; ஒரு அபூர்வ மலரின் மலர்வு; அனுபவ தரிசனம். “தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் சுடர் தெறிக்கும் கணத்தில் மனம் விழிப்புணர்ச்சி அடைகிறது” என்பது பெளத்த மதத்தின் “ஜென்” தத்துவமாகும். இச்சிறு நூலில் நாழி ஓடுகள் போல் அடுக்கப்பட்டு காட்சி கொடுக்கும் வாழ்வியல் தெறிப்பு நிகழ்வுகள் அத்தகைய தன்மை கொண்டவைகளே.
குழந்தைகளுக்கான தரிசன ஒளித்தெறிப்புகள் குழந்தைகளுக்கு மட்டுமேயானதல்ல. இளையோர், பெரியோர் என அனைவரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டியவைகள்.. அத்தரிசன ஒளித்தெறிப்புகளில் விழிப்புறும் மனவெளி ஞான கருத்தாக்கங்களை குழந்தைகளுக்குக் கடத்தும் பொறுப்பு, பெற்றோர், ஆசிரியர்கள் ஆகிய பெரியோர்களையே சாரும். அத்தகைய ஞான விழிப்புணர்வு தூண்டுதல் சுடர்களை கோர்வையாகக் கோர்த்து உருவெடுத்துள்ள அழகிய நூல் இது. ஒரு மறை நூல் போன்ற வசீகர அழகியல் வடிவமைப்பில் நம் கைக்கூட்டுக்குள் ஒரு பூவாக விரிகிறது “சின்னச் சின்ன ஞானங்கள்” தொகுப்பு நூல். மனவெளிக்குள் அடைபட்டுக் கிடக்கும் சகல குப்பைகளையும் துடைத்தெறிந்து பரிபூர்ண விடுதலை அளித்து வாசிப்பு மனதை இறகை விடவும் லேசாக்குகிறது இந்நூல். இங்கு விடுதலை என்பது தன்னியல்பில் மலர்வது; ‘ஞானம்’ என்ற சொல், தத்துவத்தையோ, எந்தவொரு கொள்கையையோ, கோட்பாட்டையோ குறிப்பது அல்ல. விவரிப்புக்கள் அடங்காத இயல்பும், இயற்கையுமானது. இந்த நூலில் குறிப்பிடப்படும் ஞானத் திறப்புகளுக்கு வாழ்வின் எளிய நிகழ்வுகளே அடித்தளம்.

மைனா மற்றும் குழந்தைகளின் பேரன்புப் பாடல்களால் நிறைந்த ஈர நகரத்தின் நிலத்தில் வசந்த தோட்டமாக மலரும் பேரழகுப் பூக்கள்; புத்தக அலமாரிகளை நிறைத்து நிற்கும் வாழ்வியல் தோட்டத்திற்கு வளம் சேர்க்கும் நூல்கள்; நூல்களை இனம் காண உதவும் குறிப்புகள்; நூல்களுக்குள் பயணிக்கும் முறைகள்; மரணம் குறித்த குழந்தையின் கேள்விக்கு “பிஸ்கட்” மூலம் விரியும் விளக்கம், என சின்ன சின்ன ஞான தெறிப்புகள் இந்த நூலில் நம் அகக்கண் காட்சிகளாகப் பூத்துக் குலுங்குகிறது. நூலினை மேலும் மெருகூட்டும் விதத்தில், உலக சிறார் நூல்கள் குறித்த பதிவுகளையும், வாசிக்கப்பட வேண்டிய படைப்பாளிகளையும் குறித்து மொழிபெயர்ப்பாளர் யூமா வாசுகி தன் வளமிக்க அனுபவத்திலிருந்து கொடுத்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் தான் பெற்ற அனுபவங்களை நம் தேசத்துச் சூழலுக்கு அறிமுகப்படுத்துகிறார் ‘நித்ய சைதன்ய யதி’ அவர்கள். நாராயண குருகுலம் நிறுவியிருக்கும் “ஈஸ்ட் வெஸ்ட் பல்கலைக்கழகம்” குறித்து இந்நூல் வழி அறியும் போது நம் கல்வியாளர்களுக்கு அது புதுத் திறப்பைக் காட்டும் என்று உறுதியாகச் சொல்லலாம். “குழந்தைகளின் படைப்பாற்றல்” குறித்து ‘ஈஸ்ட் வெஸ்ட்’ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் ‘சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில்’ ஆய்வு செய்த “ஜோஸி” எனும் “ஜோஸலைன் வாரன்ஸரஸீனோ” சொல்வது நூலில் மிக முக்கிய பதிவாகும். “கதை சொல்வது, கதை உருவாக்குவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது ஆகிய திறமையெல்லாம் பெரும்பான்மையான குழந்தைகளிடம் உள்ளது. ஊக்கப்படுத்தினால் பெரும்பான்மையான குழந்தைகளிடம் இருந்து இது போன்ற திறன்களை வெளிக்கொணராம்”. ஒரு ஆய்வு ஆசிரியரின் இக்கருத்து நம் தேசத்து கல்வியியல் அறிஞர்களின் கருத்தோட்ட அடித்தளத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி. அதற்கான முன்னெடுப்பை இந்நூல் வெளியீட்டின் மூலம் “தன்னறம்” நூல்வெளி செய்துள்ளது. பரவலாக நூல் சென்று சேர்கையில் சிறார் உலகிற்கான புதிய கல்விமுறை மாற்றம் சிறுமலர்வாக மலரும் என எதிர்பார்க்கலாம்.
மாஸ்கோ நகரத்தில் நடத்தப்படும் கிளாசிக்கல் நாடகங்கள் உலக இலக்கியத்தைத் திறந்து காட்டும் வாயில்களாகக் குழந்தைகளுக்கு அமைந்திருப்பது போன்ற நிகழ்வுகள் தமிழக் சூழலில் அரங்கேற “சின்னச் சின்ன ஞானங்கள்” மறை நூல் வழி அமைக்கும் என்று நம்புவோம். பெரும் ஞானிகள் சொல்லக்கூடிய விஷயங்களை பிஞ்சுக் குழந்தைகள் சொல்லிக் கேட்ட “யதி”யின் அனுபவக் கனிவை நாமும் பெறுவோம். “கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க விரும்புபவர்கள் எல்லாம் குழந்தைகளைப் போல் ஆக வேண்டும்” எனும் கிறிஸ்துவின் உபதேசத்தை உச்சமானதொரு உண்மையாக அகத்தில் ஏற்று குழந்தைமை உலகு நோக்கி பயணிப்போம். அதற்கான மாபெரும் திறப்பை “யதி” அவர்களின் “சின்னச் சின்ன ஞானங்கள்” நிகழ்த்துவதை அனுபவ வாசிப்பு வழி கண்டடைவோம்.
நூல் : “சின்னச் சின்ன ஞானங்கள்”
மூலம்: நித்ய சைதன்ய யதி / தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு : தன்னறம் நூல்வெளி / தொடர்புக்கு : 9843870059
விலை : ரூ.120/- / பக்கங்கள் : 136