கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தினை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் நூறு நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (மன்ரேகா – 100 நாள் வேலைத் திட்டம்) என்பது கிராமப்புற இந்தியாவின் ஏழை உழைப்பாளி மக்களுக்கு உயிர் காக்கும் வாழ்வாதாரமாக உள்ளது என்பது மீண்டும் ஊரடங்குகால அனுபவத்தால் உணர்த்தப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் ஒரு பகுதியிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் கிராமப்புற துயரங்களை அதிகரிக்கச் செய்தது.

நாடு தழுவிய அளவிலான ஊரடங்கு நிலை அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பின்னரே ஊரடங்கு நிலைக்கான விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்தது.  அதன்படி, ஏப்ரல் 20ம் தேதியிலிருந்துதான் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய அனுமதித்தது.  மேலும், இத்திட்டத்திற்கான நிதியை மிகவும் காலதாமதமாகவே அளித்தது.

ஆனால், இந்நிதி மாநிலங்களை சென்று சேர்ந்தவுடன், அதன் பயனை தெளிவாகக் காண முடிந்தது.  ஏப்ரல் 2020ல் இத்திட்டத்தின் கீழ் 95 லட்சம் குடும்பங்களுக்கே வேலை கிடைத்தது.  கடந்த பல ஆண்டுகளில் இதுவே மிகக் குறைவான அளவாகும்.  மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 3.05 கோடியாக அதிகரித்தது.

ஜுன் மாதத்தின் மூன்றாவது வாரம் வரை 2.84 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்தது.  இது கடந்த ஆண்டின் இதே மாதங்களில் வேலைவாய்ப்பைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மிகக் கூடுதலாகும். நாளொன்றுக்கு 200 ரூபாய் கூலியோடு சராசரியாக 23 நாட்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்த குடும்பங்களுக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் கூலியாகக் கிடைத்துள்ளது.  இது சொற்பத் தொகையே என்றபோதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, நிவாரணத்தை அளிக்கவல்லதாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

கரோனா ஊரடங்குநிலை – ஏப்ரல் மாதத்தில் 30 லட்சம் பேர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலைத்திட்டத்தில் வாய்ப்பு

Utilise MGNREGA to the fullest capacity - The Hindu

100 நாள் வேலைத்திட்டத்திற்கு என 38,000 கோடி ரூபாய்களை மத்திய அரசு அளித்துள்ளது.  இதில் 70 சதவீதத் தொகை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.  புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி, இதில் கணிசமான எண்ணிக்கையிலானோர் தனிமைப்பட்டு இருக்க வேண்டிய கால அளவை முடித்துள்ள நிலையில், வேலை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.

மாநிலங்களிடம் மீதமுள்ள 8000 கோடி ரூபாய்கள் போதுமானதல்ல.  எனவே, இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு தாமதம் எதுவுமின்றி அளித்திட வேண்டும்.

குறைவானவர்களுக்கே வேலை அளிக்கப்பட்டுள்ளது

இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த மாதங்களில் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.  எனினும், இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை கோரியவர்களில் கிட்டத்தட்ட 1.82 கோடி தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.

இந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பைக் கோரிய 8.07 கோடி தொழிலாளர்களில் 6.25 கோடி தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டது என மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு வேலை அளிக்கப்பட்டு உத்திரப்பிரதேச மாநிலம் சாதனை படைத்திருப்பதாக சமீபத்தில் பிரதமரும், அம்மாநில முதலமைச்சரும் தம்பட்டம் அடித்ததைக் கேட்டோம்.

புள்ளிவிவரத்திற்கு நூதனமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கம் இதுவாகும்.  வேலையின் தன்மை எத்தகையதாக இருந்தது?  அவை நிரந்தரமான வேலைகளா?  100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைதளத்தில் அளிக்கப்படுவதைப் போன்று ஒரு நாளுக்கான வேலைகளா?  உத்திரப்பிரதேச மாநிலத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை கோரி விண்ணப்பித்திருந்தனர்.  ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலானோர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

அதேபோன்று, ஊர் திரும்பியுள்ள அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ள பீகார் மாநிலத்திலும் வேலை கோரி விண்ணப்பித்த 41 லட்சம் தொழிலாளர்களில் 12 லட்சம் பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.  வேலையில்லாக் காலத்தில் நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், ஒரு ரூபாய் கூட இழப்பீடாக அளிக்கப்படவில்லை.

தற்போது பருவமழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், இப்பிரச்சனை மிகவும் பொருத்தமான ஒன்றாக ஆகியுள்ளது.  மழைக் காலத்தில் வேலை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதும், குறைவான எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.  எனவே, வேலை கோரும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலையில்லாக் கால நிவாரணத் தொகையை மாநில அரசுகள் அளிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உத்திரவாதம் செய்வது அவசியமாகும்.

100 நாள் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ள இத்தகைய சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட 116 மாவட்டங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்திட ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.

Retaining MGNREGA's core - The Hindu

முதலாவதாக, மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் பயனடைய மாநிலங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன?  உதாரணமாக, சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஏன் விடுபட்டுள்ளன?

ஜுன் 20 முதல் ஜுன் 28ம் தேதி வரையிலான காலத்தில் செலவிடப்பட்ட 4,794 கோடி ரூபாய்களில், 50 சதவீதத்திற்கும் கூடுதலான தொகை பீகாருக்குக் கிடைத்துள்ளது.  ஏற்கனவே குறிப்பிட்டபடி, 100 நாள் வேலைத்திட்டத்தை மோசமாக செயல்படுத்தும் மாநிலமாக பீகார் இருந்து வந்துள்ளது.  இந்த ஆண்டின் இறுதியில் பீகார் மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  மிகக் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது எனில், அது ஒரு கேலிக்கூத்தாகும்.

இரண்டாவதாக, “இத்திட்டத்தின்” கீழ் செயல்படுத்தப்படக் கூடிய வேலைகளுக்கான பட்டியலில் 25 வகையான வேலைகள் இடம் பெற்றுள்ளன.  ஆனால், இந்த 25 வகையான வேலைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ள வேலைகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  இவ்வேலைகள் எல்லாம் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கையில் இப்புதிய திட்டத்திற்கான அவசியம் என்ன?

இப்புதிய திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வேலையின் தன்மை உடலுழைப்பு சார்ந்ததாகவே, கேபிள்களை இடுவது உள்ளிட்ட கட்டுமானம் மற்றும் மண் வெட்டு வேலைகள் போன்றவையாகவே உள்ளது.  கிராமப்புற பகுதிகளுக்கு இணையதள இணைப்புகளை கொண்டு செல்வது என்ற பெயரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மறைமுகமாக பயனளிக்கவே இவை மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தில் எத்தகைய தாக்கத்தை இப்புதிய திட்டம் ஏற்படுத்திடும்?  இத்திட்டத்தை செயல்படுத்துகிற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் இந்த முக்கியமான அம்சம் குறித்து தெளிவில்லாது உள்ளது.

கடந்த ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 116 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக வெறும் 43.7 நாட்களே வேலை அளிக்கப்பட்டன.  இது தேசிய சராசரியான 50 நாட்களை விட குறைவானதாகும்.  இத்தகைய குறைந்த அளவிலான வேலை இம்மாவட்டங்களில் அளிக்கப்படுவது இம்மாவட்டங்களிலிருந்து மிக அதிக அளவில் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்திட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  புதிய திட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலையை அளிக்கும் வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஏன் விரிவுபடுத்தக் கூடாது?

100 நாள் வேலைத்திட்டம் ஓர் சட்டபூர்வமான உரிமையாகும்.  கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் இத்தகைய சட்டபூர்வமான நிர்ப்பந்தம் அரசு நிர்வாகத்திற்குக் கிடையாது.

எந்தெந்த மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25000த்திற்கும் கூடுதலாக உள்ளதோ அந்த மாவட்டங்களுக்காக இத்திட்டம் பிரதானமாக உருவாக்கப்பட்டுள்ளது.  அப்படியானால், இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களில் மிகச் சிறிய சதவீதத்தினராக உள்ள பெண்கள் பெரும்பாலும் இதிலிருந்து விலக்கப்பட்டிருப்பார்கள் என்பதே பொருளாகும்.

எனினும், பெண்கள் வேலைவாய்ப்புகளைக் கோருவது இம்மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.  கடந்த ஆண்டு இம்மாவட்டங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்த பெண்களின் எண்ணிக்கை சராசரியாக 53.5 சதவீதமாக இருந்துள்ளது.  இது இந்தியாவின் இதர பகுதிகளில் காணப்படும் சராசரி அளவை விட கூடுதலாகும்.

எனவே, இந்த 116 மாவட்டங்களின் 100 நாள் வேலைத்திட்டத்தோடு கூடுதலாக இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படவில்லை எனில், பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாவர்.

100 நாள் வேலைத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள்

100 days of employment Archives - RealTimes

கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் பெயரால் 100 நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது.  கிராமப்புற இந்தியாவின் துயரத்திற்கு நிவாரணம் அளிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தின் முழுத்திறனும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் வேலை கிடைக்கச் செய்திட, ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்குத்தான் வேலை என்ற கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்.  நூறு நாள் என்ற வரம்பும் நீக்கப்பட்டு, குறைந்தபட்சம் 200 நாட்கள் என்றாவது விரிவுபடுத்தப்பட வேண்டும்.  இத்திட்டத்தின் கீழ் வேலை கோரி விண்ணப்பித்து அதற்கான வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி மிக முக்கியமாக இதற்கான நிதி அவசர அடிப்படையில் அளிக்கப்படுவதை அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும்.

நன்றி – ‘தி இந்து’ ஆங்கில நாளேடு

தமிழில் – எம் கிரிஜா

——————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *