தமிழ் அழகியல் (Tamil Azhakiyal) – நூல் அறிமுகம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. வானத்தின் சூரியனும், சந்திரனும் நாம் பிறந்து வாழும் இந்த மண்ணுமே பிரபஞ்சத்தின் உலகின் முதல் அழகியல் எனலாம்..இயற்கையே உண்மையான, அடிப்படையான, நிலையான அழகு, என்பார்கள்.திரு வி. க.,முருகு என்ற சொல் இளமை, அழகு, மனம், கடவுள் தன்மை, என்பதை குறிக்கும் என்கிறார்.
காண்போர் கண்களைப் பொறுத்தே அழகின் ஆராதனையை நாம் ரசிக்க முடியும். திருக்குறளில் தமிழ் என்ற சொல் இல்லாதது போலவே அழகு என்று சொல்லும் இல்லையெனலாம். அழகுக்கு இணையான கவின், எழில்,அணி,என்பது போன்ற சொற்கள் திருவள்ளுவர் கையாண்டுள்ளார்.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று (407) நுண்மாட்சியும், கூரறிவும்,
இல்லான் பொலிவு மண்பாவை போன்றது என்கிறார். 19ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு நாவலாசிரியர் ஸ்டென்டால்.. அழகு என்பது மகிழ்வூட்டக்கூடியது என்றும், கீட்ஸ் என்பார் அழகினை…உண்மையே அழகு, என்றும் கூறுகின்றார். மேலும் தாமஸ் அக்கினாஸ் என்பவர் புலன்கள் அல்லது மனத்தை இன்புறுத்துவது அழகு என்கிறார்.
எத்தனை அறிஞர்கள் அழகு குறித்து அரிய கருத்துக்கள் சொன்னாலும் பார்த்தல் எனும் கண்களின் வழி ஊடகத்தோடு சம்பந்தப்பட்டதே அழகு என அர்த்தச் செறிவு மிக்க சொல்லுக்கு இலக்கணம் என்றால் அது மிகையல்ல.
இந்நூல் ஆசிரியர் இந்திரன் கவிஞர், எழுத்தாளர், இலக்கியம், சிற்பம், ஓவியம்,சினிமா, மொழிபெயர்ப்பாளர் என பல்துறை வித்தகராகவும் கலை இலக்கிய விமர்சகராகவும், புதுச்சேரி பெல்காம் வீதியில் பிறந்து. சென்னை போயஸ் கார்டனில் வளர்ந்து, வங்கியில் பணியாற்றி,சென்னையில் வாழும் முக்கால் நூற்றாண்டைக் கடந்த தமிழின, தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் எனலாம். கவிதையின் அரசியல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் எனும் பெருமைக்குரியவர்.
எளிய மக்களின் இலக்கியத்திற்கும் எளிய மக்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கவும் அவரின் தமிழ்ப் பணி தொடர்கிறது. இவர் மின் துகள் பரப்பு கவிதைத் தொகுப்பின் மூலமாக அதிரடிப் பார்வைப் பண்பாட்டைப் பேசும் பரிசோதனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.’ வெளிச்சம் ‘த லிவிங் ஆர்ட் நுண்கலை ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். குறும்படங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரித்தவர் என்று பதிப்பாசிரியர் இந்நூல் ஆசிரியர் கவிஞர் இந்திரன் குறித்தும் மேலும் புகழுரை சூட்டுகிறார்.
தமிழ் அழகியல் எனும் இந்நூலுக்கான தோற்றுவாயாக ஆசிரியரின் நோக்கத்தை.. இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அறிய முடிகிறது. ” நம் கலையின் மீது மேலைநாட்டு அறிஞர்களின் தவறான கண்ணோட்டம், அருவறுப்பான விமர்சனங்களை முறியடித்து, தமிழ் அழகியலை முன்னெடுத்து..உலக வரலாறு படைக்கும்..தனது விருப்பத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமல்ல தமிழர் கலை பண்பாட்டு வெளியில், வெளிப்புற உட்புற அழகினை உலகறியச் செய்கிற நாம் கலை அழகியலுக்கான பணியை ஒவ்வொரு தமிழ்க் கலைஞனும் அறமாகக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் அழகியல் நூல் வெளிப்படுத்துகிறது எனலாம்.
தொல்காப்பியர் காலம் தொட்டு தமிழின் இக்காலம் வரையிலும் உள்ள சிலைகள், கோவில், எழுத்து ஓவியங்கள், சிற்பங்கள், கோட்டோவியங்கள், செப்புத் திருமேனிகளின் நாட்டுப்புற கலைகள், அழகியல், மாமல்லபுரம் தொடங்கி தஞ்சை பெரிய கோபுரம் வரையிலான குகை ஓவியங்கள் எனத் தான் நேரில் பார்க்க நேர்ந்த கலை அழகின் பொக்கிஷங்களை இந்நூல் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
மேலும் ஐந்திணைக் கோட்பாடு உலக அளவில் மானுடவியல் பகுப்பாய்வு முறைகளோடு ஒப்பிடப்பட்டு புது உருவம் பெற்றால் இன்றைய அமைப்பியல் தரவுகளுடன் இணைக்கப்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளது சிறப்பு.
தமிழ் அழகியலை ஐந்து பகுதிகளாக உள்ளடக்கி…கலை, அழகியல்,கோடு, வண்ணம், வெளி,கலைஅடையாளம், குறியீடு, கலைப் பார்வை முதல் பகுதியாகவும்: நமக்கென்று ஒரு அழகியல், தமிழ் அழகியல் : ஏன்? எதற்காக?யாருக்காக?, தமிழ் அழகியல்: சில வினாக்கள், ஓவியக் கலையின் அக மரபுகள், திணைக் கோட்பாடு: தமிழ் அழகியலுக்கான விதை இரண்டாவது பகுதியாகவும், மாமல்லபுரத்தில் கொற்றவையின் போர்,திருப்பருத்திக் குன்ற ஓவியத்தில் இயக்கம், கைலாசநாதர் கோயில் கிளிகள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை: 1 ஒரு கலை வரலாறு, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை : 2 ஒரு கலை பார்வை, நிழலாகத் தேயும் தோற்பாவைக் கூத்து,ஆதி மூலமும் மக்கள் கலைகளின் உருமாற்றமும், சந்துருவின் எருதுகள்,மூக்கையாவின் சுடுமண் சிற்பங்கள், பி வி ஜானகிராமின் உலோக சிற்பங்கள், மூன்றாவது பகுதியாகவும், எம்.கே.முத்துசாமி : கிராமிய உலகம், வீர சந்தனம் :சமூகக் கலைஞன்,விந்தை மலரும் மருதுவின் உலகம், பி பெருமாள் -வானமும் மண்ணும் ஒரே நிறம், இந்திரன் – பெண் உருத்திரிபுகள் ஒரு சுய வாக்குமூலம் நான்காவது பகுதியாகவும், நவீன கலையில் மக்கள் பண்பாடு, பாம்படம் -ஒரு நவீன சிற்பம், புலி ஆட்டம், சில நடனம் : ஒரு சிற்பத்தின் வாழ்க்கை வரலாறு,தமிழனின் மனக்குகை ஓவியங்கள், தமிழகத்து செப்புத் திருமேனிகள்,அச்சுப்பதிவுக் கலை, முதல் கோலம் போட்ட தமிழச்சி யார்? என இறுதிப் பகுதியாகவும் 36 தலைப்புகளில் சமூகம் சமயம் தனிநபர் என அனைத்து கலை நுட்ப அழகிகளையும் படங்களுடன் விவரிக்கிறது தமிழ் அழகியல்.
“தமிழ் அழகியலை ஒரு இயக்கமாகவே வளர்த்தெடுக்க நான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். சாகித்திய அகாடமியும்- சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் அழகியல் என்ற பொருளில் ஒருநாள் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினேன்” என்று முன்னுரையில் நூல் ஆசிரியர் தனது முயற்சிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
தனக்குச் சொந்தமான பண்பாட்டு அடையாளங்களுடன் நாடகங்களைத் தயாரிக்கும்..வோ சொயின்கா விலிருந்து ஐசக் பெஷ்விஷ் சிங்கர், ஜான் ரஸ்கின், அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்,, எனும் மேலைநாட்டு அறிஞர்களின் போதை அழகியல் மற்றும் இவர்களின் இந்திய அழகிகளை வெறுக்கும் கொச்சைப்படுத்தும் போக்கையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
அதே நேரம் முதல் உலகப்போருக்குப் பின்னான நவீன, கலை அழகியலை,செழிப்பான விமர்சனங்களோடு வளர்த்தவர்கள் என்ற முறையில் தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டாட்டில்,பெனடெட்டோக்ரோஸ், ஐ. ஏ. ரிச்சர்டல், வைட் ஹைட், சுசான் லேங்கர் இவர்கள் குறித்தும் குறிப்பிடுகிறார்.
உலகப் புகழ்பெற்ற ஜெர்மானியத் தத்துவமேதை ஹெகல் இந்தியக் கலைப் படைப்புகளை ” அதீத கற்பனைகள் கொண்ட பகுத்தறிவுக்கு ஒத்து வராத வடிவங்கள் “என்கிறார்.
இதை நூல் ஆசிரியர் கண்டிக்கும் விதமாக,” நமது கலை அழகை நிர்ணயிக்க மேற்குலக நாடுகளின் தராசும் எடைக்கற்களும் வேண்டாம் “என்கிறார். அழகியல் எல்லாமே ஆதி எழுத்தில் துவங்குகிறது. அது பேசாத எழுத்து. அந்த எழுத்து கோடு என விரிந்து, வட்டம், சதுரம்,முக்கோணம், என பல நுண் கலைகளின் ஆரம்பத்திற்கும் வளர்ச்சிக்கும் பிரம்மாண்டத்திற்கும் நம்மை இட்டுச் சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல..
எது அழகு? எது பேரழகு? என்பதையும் ஆசிரியர் தமிழ் அழகியலில் விவரணப் படுத்தியுள்ளார். . அழகியல் என்பது கலை விமர்சனத்திற்குப் பயன்படுவது என்பதைக் கடந்து, வாழ்க்கை குறித்த விமர்சனத்திற்கும். பயன்படக்கூடியதாக விரிகிறது. இதைப் பேரழகியல் என்கிறார். நகரும் ஒரு புள்ளியின் இசை லயமான வெளிப்பாடுதான் சித்திரம் என்கிறார் ஓவியர் கே கே ஹெப்பர். கோடு கலையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.
மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களைப் புரிந்து கொள்வதற்காகக் கண்டெடுத்த மிகப்பெரிய கருவிகள் தாம் கோடுகள்…அதிர்வுகளை உண்டாக்குகின்றன.. என்று முன்னோர்கள் நம்பினார்கள்.மந்திர, தந்திர, சடங்குகள் மூலம் மனித சிந்தனைகளை மாற்ற முடியும் என்றும் நம்பினார்கள். செப்புத் தகடுகளில் சக்கரங்களை எழுதி அதன் மூலம் நல்ல, தீய,விளைவுகளை ஏற்படுத்த முனைந்தார்கள். கிபி ஆறாம் நூற்றாண்டு சித்தன்னவாசல் குகை ஓவியம் தொடங்கி, தென்னார்க்காடு மாவட்டம் ஆனந்தபுரம் அருகே கீழ்வாலை ரத்தக் குடைக்கல் குகைக் கோயில் வரை மேலும் மேலும் அழகியலைப் பேசுகிறது இந்நூல்.
சாந்தி நிகேதனின் மூத்த ஓவியராகவும், கலை விமர்சகராகவும் திகழ்ந்த கே.ஜி. சுப்பிரமணியம் வார்த்தைகளில் சொல்வதானால், “நவீன இந்திய ஓவியர்கள் தங்கள் மரபுகளோடு உண்மையான இணக்கம் கொள்வார்களே யானால், அவர்களது மரபு பல தலைகள் கொண்ட அசுரனைப் போல உயிர் பெற்று எழுந்து பல வாய்களின் மூலமாகப் பேசத் தொடங்கி விடும் என்கிறார்.
தமிழ்ப் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் மேனி எழுத்து என்பது சிறப்பிடம் பெற்று இருந்தது. அதை இயற்கையோடும், இறையோடும், அவர்கள் கொண்டிருந்த உறவு குறித்ததாக இருந்தது என்றும் ராபர்ட் ப்ரெய்ன் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார். இதனை ”தொய்யில் எழுதுதல் ‘என சங்க இலக்கியம் பேசுகிறது. தொய்யில் குழம்பு என்பது சந்தனம், தேவதாரு, அகில் குங்குமம் ஆகியவற்றால் செய்யப்படுவது ஆகும். மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள் பல்லவர் காலத்தினுடைய படைப்பு என்கிறார் தமிழக ஆராய்ச்சியாளர் இரா நாகசாமி அவர்கள். 1456-ல் ஜெர்மனி கூடன் பர்க்கில் உலகின் முதல் அச்சுப் புத்தகமான பைபிள் அச்சிடப்பட்டது. இதன் பின் 100 ஆண்டுகள் கழித்து அச்சுக்கலை இந்தியாவிற்கு வந்தது என்கிறார்.
ஊரின் அமைப்பு ஒரு பூவின் இதழ்கள் அமைக்கப்பட்டு இருப்பது போன்று இருந்ததாகத் தமிழ்ச் செய்யுள் குறிப்பிடுவதை, “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் /பூவொடு புரையும். சீருர் :/பூவின் இதழகத்து அனைய தெருவம்” அழகியலோடு சம்பந்தப்படுத்தி இலக்கியச் செழுமையும் கூட்டியுள்ளார்.
சிலைகளை, ஓவியர்களை, வர்ணிக்கும் நூல் ஆசிரியர் இந்திரன் கலை அழகே தனி எனலாம். கூற்றுக்காக ஒன்றைச் சொல்லலாம்… “கைலாச நாதர் கோயில்..உள்ளிருக்கும் வில்வ மரத்தில் ஏராளமான கிளிகள்..அட்டகாசத்திற்குக் குறைச்சல் இல்லை.. பசிய இலைகளும், பசுங்கிளிகளும் கலந்து விளையாடும் கும்மாளம், மணல் கல் என்று அழைக்கப்படும் ஒருவகைக் கருங்கல்லில் நிர்மாணிக்கப்பட்டு காலத்தின் உராய்வில் கரைந்து போய்க் கொண்டிருக்கும் கோயிலை மீண்டும் உயிர்த் துடிப்புடன் எழுந்து வரச் சொல்கின்றன கிளிகள்… ”
சிலைகள் மீதான தனது கற்பனையில் சிறகினை விரித்துப் பறக்கிறார் கவிஞர் நூல் ஆசிரியர் இந்திரன்.
இப்படித் தமிழ் இலக்கியத்தோடும்,பழங்குடி இன வாழ்வியல்..தமிழர்களோடும்,இணைந்த தமிழ் அழகியலை உலகுக்கு உணர்த்த, இயக்கமாக்கிட தமிழ் இனத்தை, தமிழ் இலக்கியம் கற்றோரை,..இந் நூல் கூவி அழைக்கிறது எனலாம் கரம் கோர்ப்போம் தமிழ் அழகியல் சிகரம் தொடட்டும்…!
நூலின் தகவல்கள் :
நூல்: தமிழ் அழகியல்
ஆசிரியர்: இந்திரன்
பதிப்பகம்: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்:208
விலை :₹230/-
தொடர்புக்கு : 9840738224
நூல் அறிமுகம் எழுதியவர் :
-ஆரிசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.