அயல் நாடுகளில் தமிழ் வகுப்புகள்
உலகில் பழமையான மொழிகள் என்று தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கியம், ஹீப்ரு, சைனீஸ், அராமைக், பெர்ஷியன் என்று ஏழு மொழிகளைக் கூறுவார்கள். இவற்றில் தமிழ் மொழியின் வயது 5000 ஆண்டுகளுக்கும் மேல். “கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்தக் குடி” என்கிறது, புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூல்.
சற்றேறக்குறைய 50 நாடுகளில் தமிழர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில், 23 நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தமிழ் ஆட்சி மொழி. இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளில், மற்ற மொழிகளுடன் தமிழும் ஆட்சி மொழி. மலேஷியா, மொரீஷியஸ், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ் சிறுபான்மை மொழி என்ற தகுதியைப் பெற்றுள்ளது.
இந்தியாவில், 2004ஆம் வருடம் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய மொழிகளில் செம்மொழி என்ற சிறப்பைப் பெற்ற முதல் மொழி தமிழ். இந்திய அரசாங்கத்தால் அதிகார பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழும் ஒன்று.
தமிழ் எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் மாறுபடுகிறது. சங்கத் தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற வேறுபாடுகளைத் தவிர, பல இடங்களில் வட்டாரத் தமிழ் என்று அங்கு வசிப்பவர்களின் பேச்சு வழக்கில் மாறுபாட்டைக் காணலாம். எழுத்து வழக்கில் பெரும்பாலும் செந்தமிழே கோலூச்சுகிறது.
உலக ஜனத் தொகையில், 1.06% சதவிகித மக்கள் தமிழ் பேசுபவர்கள். பல அயல் நாடுகளில், தமிழ் இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. அயல் நாடுகளில் வசிக்கின்ற தமிழ் மக்கள், மொழியில் நல்ல புலமை பெற்று, வாசித்தல், எழுதுதல், பேசுதல், கேட்டல் ஆகிய நான்கிலும் திறமை அடைவதற்காக, பிரித்தானிய தமிழ் மொழி பரீட்சைச் சபை, ஆரம்ப நிலை முதல் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசான் நிலை வரை எல்லாப் பிரிவினர்க்கும் பரீட்சைகள் நடத்தி வருகிறது.
இவர்கள் நடத்தும் பரீட்சை விவரங்கள் :
மழலையர் 5 வயது முதல் 11 வயது வரை இளநிலை, முதுநிலை,
முதன்மை 11 வயது முதல் 14 வயது வரை தரம் 1, தரம் 2, தரம் 3
இடைநிலை 14 வயது முதல் 16 வயது வரை தரம் 4, தரம் 5, தரம் 6
கடைநிலை 16 வயது முதல் 19 வயது வரை தரம் 7, தரம் 8, தரம் 9
முன்னர் பிரிட்டன், 25 மொழிகளுக்கு, ஆங்கிலத்துடன் சேர்ந்து கற்பிப்பதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது. அதன்படி ஆக்ஸ்ஃபர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் இந்த மொழிகளுக்கான தகுதித் தேர்வுகளை நடத்தி வந்தன. ஆனால் 2014 முதல், பிரிட்டன் அரசு, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், மற்றும் மாண்டரின் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மட்டும் அங்கீகாரம் அளித்து, மற்ற மொழிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
அரசின் இந்த கொள்கை மாற்றத்தால், ஆக்ஸ்ஃபர்ட், கேம்பிரிட்ஜ் பல்களைக் கழகங்கள் நடத்தி வந்த தமிழ் தகுதித் தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இதனால், அயல் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், தங்களுடைய தாய் மொழியை குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கும், அதில் தேர்ச்சி பெறுவதற்கும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தக் குறையைப் போக்குவதற்கு, பிரித்தானிய தமிழ் மொழி பரீட்சை சபை 2014 வருடம் ஆரம்பிக்கப்பட்டது. 2015ஆம் வருடம் முதல் தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.
இந்தத் தேர்வுகளில் முழுமையான தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ் வகுப்புகள் நடத்துவதற்கு நியமிக்கப்படுகிறார்கள். பல மேற்கத்திய நாடுகளில் அரசு உதவியுடன் வார விடுமுறை நாட்களில் மற்ற மொழிகள் கற்றுக் கொள்ள வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு உதவியுடன் நடத்தப்படும் இந்த வகுப்புகளுக்கு கட்டணங்களும் குறைவு.
தமிழ் மொழி கற்றுக் கொள்ள வடிவமைத்துள்ள பாடப் புத்தகங்களின் பெயர் “தமிழறிவு”. இந்த பாடப் புத்தகத் தொடர் பத்து நிலைகளுக்கான புத்தகங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் அங்கீகாரம் அளித்துள்ளது.
வேலை நிமித்தம் அயல் நாட்டில் வாசம் செய்யும் தமிழர்கள், தங்களின் மழலைகள் தமிழ் மொழியுடனான தொடர்பை விடாமல் வைத்திருக்க இதைப் போன்ற வகுப்புகளும், தேர்வுகளும் உதவுகின்றன.
மேலும் விவரங்களுக்கு www.bteb.org.uk இணைய தளம் மூலமாகவும் தமிழ் கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. உதாரணம் WWW.ILEARNTAMILNOW.COM.
மத்திய அரசின் இணைய தளத்தில் ஒன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். cart.ebalbharati.in
கட்டுரையாளர் :
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.